Thursday, October 15, 2015

திருவேங்கடம் அம்மாள்



அவள் பெயர் திருவேங்கடம் அம்மாள். குட்டையாக உருண்டு இருப்பதால் செண்டு என்று யாரோ பெயர் வைக்கப்போக, அதுவே நிலைத்துவிட்டது. செண்டு அம்மாள் மிகவும் ஆசாரம்.
"கடங்காரா, எத்தனை தடவை சொல்றது? குளிக்காம திருப்பள்ளிக்குள்ள வராதேன்னு?” செண்டு அம்மாவின் திட்டுகளை காலங்காத்தாலேயே வாங்கிக்கொண்டு, அசட்டுச் சிரிப்புடன் சமையலறையிலிருந்து வெளிவராத ஆண்கள் அந்தவீட்டில் இல்லை.
அவள் சமையலறையில் இருக்கிறாள் என்றால் குளிக்காமல் உள்ளே போகக்கூடாது. காபியைக் கொண்டு அவள் வெளியே வருவாள்.. மரியாதையாக , அவள் மேல் படாமல் வாங்கிக் கொள்ளவேண்டும்.. எப்போதும் மடிசாரில்தான் இருப்பாள். அவளது புடவையை மேலே ஒரு கொடியில் உலர்த்தியிருப்பாள். குள்ளமாக இருப்பவளால் அதை எடுக்க முடியாது என்பதால் நீண்ட ஒரு மூங்கில் கழியை மூலையில் சார்த்தி வைத்திருப்பாள். அதைக்கொண்டு, கழுத்தை வளைத்து அண்ணாந்து பார்த்து, புடவையை கீழே எடுப்பதற்குள் ஒரு வழியாகிவிடும். அதுவும் நாங்கள் எடுத்துத் தரக்கூடாது. கீழே விழும்போதும் எங்கள் மீது பட்டுவிடக்கூடாது.
”சனியனே, தெரியறதோல்லியோ? நான் புடவையை எடுத்துண்டிருக்கேன்னு. அதுக்குள்ள எதுக்கு இங்க வந்து புடவைல  படறே? குளிக்காம கொள்ளாம...தெருநாய்க்குக்கூட தீட்டு தெரிஞ்சுருக்கும்...தடிமாடு மாரி இருக்கற உனக்குத் தெரியலை இன்னும்”
வெங்காயம், உருளைக்கிழங்கு எல்லாம் சமைத்துத் தருவாள். ஆனால் சாப்பிடமாட்டாள். எல்லாரும் சாப்பிட்டுவிட்டுப் போனபின்பு, என்ன அவளுக்கு மிச்சம் இருக்கும் எனத் தெரியாது. குறுகலான சமையலறையில் சுவற்றில் சாய்ந்து கொண்டு, உதட்டில் படாமல் சோற்றை வாய்க்குள் போட்டுக்கொள்வாள். “ உதட்டுல பட்டா எச்சில்டா.”
ஆனால் இந்த ஆசாரக் கெடுபிடியெல்லாம் வளர்ந்தவர்களிடம் மட்டும்தான். பேரன் பேத்திகள், மேலே தவழ்ந்து சேட்டை செய்யும்போது, அவள் புடவையை நனைக்கும்போது  “ போட்டும் விடு. எறும்புக்குத் தெரியுமோ எச்சிலும், பத்தும்?”
” எதிர்வீட்டுல டாக்டருக்கு வலி எடுத்தாச்சாம். ஆஸ்பிட்டல் போப்போறாங்க” அவசரமா யோரோ  சொன்னபோது, செண்டுமாமி கீதை படித்துக் கொண்டிருந்தாள்.
“அதுக்குள்ளயா? இன்னும் நாளிருக்கே? ” என்றாள் காலண்டரைப் பார்த்தபடி.
எதிர்வீட்டு வாசலில் ஆம்புலன்ஸ் நின்றிருந்தது. மேல்வீடு, கீழ்வீடு என்று அக்கம்பக்கத்திலீருந்து பெண்கள் அவ்வீட்டின் வாசலில் நின்றிருந்தனர்.
எதிர்வீட்டு டாக்டர் எங்கள் குடும்பத்தில் சட்டென பழக்கமானவர். மிகத் திறமைசாலி, கை ராசியானவர். கர்ப்பம் தரித்ததுமுதல் அவருக்கு பல சிக்கல்கள். முக்கியமாக வீட்டில் பல இடர்கள். அம்மாவீட்டிலும், மாமியார் வீட்டிலும் உறவுகள் சுமுகமாக இல்லை. இத்தனை  முதிர்ந்த கர்ப்ப நிலையில்கூட அவர் அம்மாவீட்டிலிருந்து யாரும் உதவிக்கு வரவில்லை.
“காம்ப்ளிகேஷன் ரொம்பவே இருக்கு. நம்ம ஆஸ்பத்ரியில பாத்துக்க முடியாது. டவுணுக்கு கொண்டு போயிடுங்க” குடியிருப்பு வளாகத்தின் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ஆம்புலன்ஸ் அருகிலிருந்தே சொன்னார்.
யார் கூடப் போவது?
”அமெரிக்கன் ஆஸ்பத்திரி கொண்டு போறீங்கன்னா, நான் போன்ல சொல்லிடறேன். கேஸ் ஷீட் ஒரு காப்பி வைச்சுக்குங்க. துணைக்கு யார் போறாங்க? “ கேஸ் ஷீட் பைலை வைத்துக்கொண்டு அவர் கேட்க, சூழ்நிலை அப்போதுதான் அனைவருக்கும் உறைத்தது.
யாருமில்லை. அவர் கணவரும் ஒரு டாக்டர். “ நான் இருக்கேம்மா..ஆனா..” அவர் குரல் தேய்ந்தது.  தான்  என்னதான் மருத்துவம் படித்திருந்தாலும், இது முழுக்க முழுக்க பெண்களின் சமாச்சாரம். உணர்வுகள் பொங்கி, உயிருடன் பனிக்குடம் உடைந்து வரும் நேரம். அதை புரிந்துகொண்டவர்கள் வேண்டும்..
வாசலில் நின்றிருந்த பெண்களிடம் தயக்கம் தெளிவாகத் தெரிந்தது. கிட்டத்தட்ட 15 கி.மீட்டர் தூரம் பயணம் போவது கடற்கரை சாலையில். ஒரு புறம் கடல், மறுபுறம் உப்பளம்.. வழி நடுவே பிரசவம் ஆனால், ஒரு உதவியும் கிடையாது... அதோடு சிக்கலான கேஸ் வேறு.. யார் பதில் சொல்வது?
அதைவிட, அதைவிட ஒரு தயக்கம் இருளில் மறைந்து தேங்கி நின்றது.. அந்த மருத்துவரின் ஜாதி...
“இப்பவே கிளம்பினாத்தான் பதினோரு மணிக்காச்சும் அங்க போய்ச்சேர முடியும். அவங்களுக்கும் சொல்லணும்ல.. எமர்ஜென்ஸி..” தலைமை மருத்துவ அதிகாரி இருட்டில், கண்களை இடுக்கி, சாலைவிளக்கொளியில் மணிக்கட்டில் நேரம் பார்த்தார்.
. ”அவங்க அம்மா இல்ல, இந்த நேரத்தில இருக்கணும்?” கூட்டம் முணுமுணுத்து தன் நியாயங்களை சொல்லிக்கொண்டது.
“யார் வர்றீங்க?” அந்த கணவரின் பதட்டம் தெளிவாகத் தெரிந்தது.
வீட்டுவாசலில் நின்றிருந்த செண்டுமாமி முன்னே நடந்து வந்தாள். “ நான் வர்றேன். தலைச்சன் பாருங்கோ, படுத்தும்.”
“ஆங். மாமிதான் சரி. அவங்களுக்கு அனுபவம் இருக்கு” தன்மீது வராது பொறுப்பு நீங்கியதில் கூட்டத்தில் ஒரு நிம்மதி.
“ சீக்கிரம் கிளம்புங்கோ. டீ. என் செருப்பை எடுத்துப் போடு”
மஞ்சளாக ஹெட்லைட் மங்கி எரிய, அந்த மட்டடோர் வேன் கிளம்பியது.
மறுநாள் காலை ஏழு மணிக்கு  வழக்கமான வசவு இல்லாத வீடு வெறிச்சோடியிருக்க,  வாசலில் சென்றபோது, செண்டுமாமி வந்துகொண்டிருந்தாள்.
“ஐ. என்னம்மா ஆச்சு?”
“மேல படாதே. நாம்போய் குளிக்கணும். சுகப் ப்ரசவம்தான். பொண்ணு. முடி அடர்த்தியா இருக்கு தெரியுமோ?”
வாசலிலிருந்தே ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு, வீட்டைச் சுற்றி நடந்துபோய் பின் பக்கக் கதவு வழியே வந்தாள்.
“டீ, இவளே,  இன்னிக்கு கோலம் போடவேண்டாம்.” என்றாள் உள்ளே வந்தவாறே.
“ஏம்மா?”
“ பொண்ணுக்கு ப்ரசவம் ஆனாலும் சீதகம் உண்டு.”
“உம் பொண்ணா அவள்?” அவள் கணவர் சிரித்துக்கொண்டே கேட்டார்.
செண்டுமாமி ஒரு முறை ஏறிட்டுப் பார்த்தாள் “ ஆஸ்பத்திரியிலே கேட்டா. ஆமான்னு சொன்னேன். என்ன இப்போ? நாலு பொண்ணோட சேத்து அவளும் அஞ்சாவது பொண்ணு நேக்கு. உமக்கென்ன வந்தது.?.போம்”
இரண்டு மணி நேரம் கழித்து டாக்டர் கணவர் முகமெங்கும் சிரிப்புடன் இனிப்பு பெட்டியுடன் வந்தார்.
“அம்மா” என்றார் நெகிழ்வுடன். “ உங்க உதவி... என் பொண்டாட்டியும்  பொண்ணும் பிழைச்சாங்க” கையெடுத்துக் கும்பிட்டார். கண்களில் நீர் வழிய. செண்டு அம்மாள் பதிலே பேசாமல், உள்ளிருந்து காபி டம்ளரை நீட்டினாள் “ டேய்  அவருக்கு இந்த டம்ளரைக் கொடு. பாவம் மனுசன் அலையா அலைஞ்சிருக்கார்”
காபியை அருந்தியபடி மெல்ல விவரித்தார் அவர்.
அமெரிக்கன் ஆஸ்பத்திரி என்று நாங்கள் சொன்னாலும் அதற்கும் அமெரிக்காவுக்கும் ஒரு தொடர்பும் கிடையாது. என்றோ சுவிஸ் நாட்டு பாதிரிகள் தொடங்கிய ஆஸ்பத்திரி அது. வெள்ளைக்காரர்கள் எல்லாரூம் அமெரிக்கர்கள் என்ற தூத்துக்குடி அறிவில் அது அமெரிக்கன் ஆஸ்பத்திரியானது.
இவர்கள் அங்கு போய்ச் சேர்ந்தபோது மணி பன்னிரெண்டு. குழந்தை கொடி சுற்றிக்கொண்டுவிட, ரத்த அழுத்தம் தாய்க்கு அதிகரிக்க, பெரிய கேஸாகிப் போனது.
பிரசவ அறையின் வாசலில் ஒரு பெஞ்சில் அம்மா அமர்ந்திருந்தாள். “நீங்க  படுத்துக்குங்கம்மா.  வேணும்னா கூப்பிடறோம்” என்ற செவிலியருக்கு “பரவாயில்ல,ஒக்காந்திருக்கேன்” என்றாள் அவள்..
இரண்டு மணியளவில் செவிலியரில் ஒருவர் வெளிவந்தார். “பெண் குழந்தை. சி.செக்‌ஷன் தான். ரெண்டு பேரும் நல்லாயிருக்காங்க. கவலைப்படாதீங்க. அம்மா, நீங்க தூங்கலாம்” என்றார்.
செண்டுமாமி  கைகுவித்தாள் “எல்லாம் சீவரமங்கைத் தாயார் அனுக்ரஹம்.”
செவிலி தயங்கி நின்றார் “ குழந்தைய யார் வாங்க வர்றாங்க? குளிப்பாட்டக் கொண்டு போயிருக்காங்க. அவங்க அம்மா எங்க? டாக்டர்?”
”எஸ்?” என்றார் டாக்டர் கணவர் எக்கச்சக்கமாய் உணர்வில் அழுந்தி..
“உங்கம்மா, அல்லது அவங்க அம்மா. யாரு ரிலேட்டிவ்? குழந்தைய வாங்கணும்ல?” 
டாக்டர் கணவரைத்தவிர அவர் குடும்பத்தில் யாருமில்லை.
” நான் வாங்கறேன்.”
செவிலி சந்தேகமாக செண்டு அம்மாவைப் பார்த்தார் “ நீங்க.. நீங்க யாரு அவங்களுக்கு?”
“அவ என் பொண்ணு”
செவிலி மேலும் சந்தேகமாகப் பார்த்தார் “ அவங்க வீட்டுக்காரங்க இருந்தா வரச்சொல்லுங்க,சீக்கிரமா. குழந்தைய  நாங்க வராம குடுத்திட்டீங்கன்னு நாளைக்கு எங்க கிட்ட சண்டைக்கு வரப்போறாங்க”
“ அவ என் பொண்ணு” என்றாள் அம்மா மீண்டும் திடமாக. உள்ளே போய் துவாலையில் பொதிந்து கொண்டுவரப்பட்ட சிசுவை, தன் முந்தானையில் வைத்து வாங்கினாள்.
சொல்லும்போது டாக்டர் அழுதுவிட்டார். “எம்பொண்ணு இந்த உலகத்துல வந்து காத்திகிட்டிருக்கா. யாருமே அவளை ஏந்தறதுக்கு இல்லை சார். இவங்க, தெய்வமா, பாட்டியா நின்னு வாங்கினாங்க”
செண்டு அம்மா வெளியே வந்தாள் “ இதோ பாருங்கோ. ஒரு உயிர் உலகத்துக்கு வர்றது பெரிய விஷயம். அதை வா-ன்னு வாங்கறது, அன்பைக்காட்டறதுதான் மனுஷத்தனம். இதுதான் சாஸ்த்ரம்.. அந்தகாலத்துல  உபன்யாசம் தொடங்கறப்போ சொல்லுவாளாம்.. ”இதைக் கேக்கறதுக்கு வந்திருக்கும்  பெண்ணின் கர்ப்பத்திலே இருக்கும் சிசுவுக்கும் எனது வணக்கங்கள்’ன்னு. சிசுவுக்கு அத்தனை மரியாதை உண்டு. எனக்குத் தெரிஞ்சதை நான் செஞ்சேன். அவ்வளவுதான். மத்ததெல்லாம் பெருமாள் தாயார் விட்ட வழி. சந்தோஷமா இருங்கோ”
வாசலில் துணி காயப்போட போனபோது, ஒரு பெண் கேட்டார் “ஏன் மாமி.. இத்தனை ஆசாரம் பாப்பீங்க. அவங்க சாதி தெரிஞ்சும் எப்படி போனீங்க?”
அம்மா துணியை உலர்த்தியபடியே சொன்னாள் “ ஆசாரம்னா எனக்குத் தெரிஞ்சு சுத்தம், சுகாதாரம். சாஸ்த்ரம் இப்படித்தான் சொல்றது. தாய்ப்பாலுக்கும், சிசுவுக்கும், தண்ணிக்கும் ஜாதி கிடையாது. இதைப்புரிஞ்சுக்கோங்கோ. ஒரு உயிர் அல்லாடறப்போ ஜாதியோ ஆசாரமோ தடுக்கணும்னு எந்த சாஸ்த்ரமும் சொல்லலை.”
“ அப்ப வந்த உடனே சீதகம்னு ஆரம்பிச்சியே?” என்றேன் பிற்பாடு.
“ஆமாடா, அவள் என் பொண்ணுன்னு சொல்லிட்டேனே? அப்புறம் எல்லா ஆசாரமும் நியமப்படி நடக்கணுமே?”
அந்த டாக்டர் குடும்பம் அதன்பின் கோயமுத்தூர் சென்றுவிட்டனர். 1989ல் செண்டு அம்மாள் பெங்களூரில் திடீரென இறந்து போனாள்.

2004ல் அண்ணன் வீட்டிற்கு அந்த டாக்டர் , ஒரு பெண்ணை அழைத்து வந்தார். வரவேற்பறையில் மாட்டியிருந்த அம்மாவின் போட்டோவைக் காட்டி “ சொன்னேன்ல? இதுதான் உன் பாட்டி” என்றார். அந்தப் பெண் எம்.பி.பி.எஸ் இறுதியாண்டு படித்துக் கொண்டிருப்பதாக சொன்னார். அனைவரும் பழைய கதைகள் பேசுவதை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த அந்தப் பெண், விடைபெற்றுக் கிளம்பும்போது, படத்திற்குக் கீழே விழுந்து நமஸ்கரித்தாள்.
பின் அண்ணியிடம் “ பாட்டியோட போட்டோ ஒண்ணு எனக்குக் கிடைக்குமா?” என்றாள்.
செண்டு மாமி என்ற திருவேங்கடம் அம்மாளான எனது அம்மாவின்  சிரார்த்த தினம் இன்று.  

Thursday, October 08, 2015

ஹோத்தா ஹை சார்...

காலையில் கிளம்பும் போதே நேரமாகிவிட்டது. சாலை நெருக்கடியில் அவனவன் தான் எப்படிப் போவது என்பது பற்றி மட்டும் யோசிக்கிறானே தவிர மற்றவரைப் பற்றி சிந்திப்பதே கிடையாது. என்ன ஊர் இது? என்று கொதித்தபடி சிக்னலில் நின்றிருந்தேன்.
'அங்கிள், ஹெல்மெட் போட்டிருக்கறதுக்கு நன்றி. ப்ளீஸ் இதை வச்சுக்குங்க' என்றது ஒரு கீச்சுக்க்குரல். திரும்புவதற்குள் சீருடை அணிந்திருந்த அந்த குண்டு பையன், என் கையில் ஒரு அட்டையைத் திணித்தான். கேட்பதற்குள் அருகிலிருந்த காரில் சீட் பெல்ட் அணிந்திருந்தவரிடம் ஒரு அட்டையைக் கொடுத்துவிட்டு ஓடிவிட்டான்.


கிட்டத்தட்ட பத்து மாணவ மாணவியர்கள், சிக்னலில் ஹார்ன் அடிக்காது நிற்பவர்கள், ஹெல்மட் போட்டிருப்பவர்கள் என்று சாலை விதிகளை மதிப்பவரகளுக்கு அட்டைகளையும் ஒரு சாக்லேட்டையும் வழங்கிக் கொண்டிருந்தார்கள். அருகிலிருக்கும் கோகுல்தாம் பள்ளி மாணவர்கள் என அறிந்தேன்.
இதைப் பெருமையுடன் குத்திக்கொள்ள வேண்டுமென நினைத்தி அடுத்த சிக்னலைக் கடந்திருப்பேன்...
திடீரெனத் திரும்பிய அக்ஸெண்ட் காரினால் நிலைகுலைந்து வண்டியோடு விழுந்தேன். கீச் கீச் என அடுத்தடுத்து. வண்டிகள் நின்றதன் ஒலிகள். சிறு சிராய்ப்புகளின் எரிச்சலோடு சற்றெ உடல் நடுக்கம். இருவர் அவசரமாக பைக்களை ஒரம் கட்டி என்னை நோக்கி விரைந்து வந்தனர். வண்டியை ஒருவர் எடுக்க , மற்றொருவர் மெல்ல கை பிடித்து தூக்கிவிட்டார். சாலை ஓரமாக நிறுத்தி " ஒண்ணுமில்ல. நிதானமா மூச்சை இழுத்து விடுங்க. தண்ணி இருக்கா? குடிங்க' என்றனர்.
எனக்கு ஒன்றுமில்லை எனத் தெரிந்ததும், லாப்டாப் பையை முன்னால் வைத்துவிட்டு,' ஹோத்தா ஹை..நடக்கும் .இது சகஜம் ' என்பதாகச் சொல்லிப் போனார்கள்.

ஹோத்தா ஹை...இது சகஜம் , வாழ்வில் வரும் சிறு இடர்களை 'என்னமோ எனக்குத்தான் வந்திருக்கு பாரு' என்பதாக நினைக்கக்கூடாது, போய்க்கொண்டே இருக்கணும். நல்ல சிந்தனை என்று நினைத்துக் கொண்டு வண்டியைச் செலுத்தினேன். ஓவர்டேக் செய்த பைக் ஒன்றில் இருந்தவர் 'முன் விளக்கு எரிகிறது' என்பதாக சைகை காட்டினார். அடுத்த சிக்னலில் அவருக்கு நன்றி என்பதாக கை தூக்கினேன். அவரும் , பேஸ்புக் லைக் போல கை காட்டி விரைந்தார்.

இதே சிக்னலில், காரில் அடிபட்டு ரத்தம் வழிய ஒருவர் தடுமாறி எழுந்து செல்போனில் பேசியபடியே அடுத்த டாக்ஸியைப் பிடித்து வேலைக்குப் போனதையும், அவருடன் காயம்பட்ட டிரைவரை அம்போவென விட்டுப் போனதையும் நண்பர்கள் வி கே எஸ், ஆர் வி எஸ் ஸிடம் சொல்லியிருக்கிறேன். முமபையில் மனிதாபிமானம் மறைந்துவிட்டது என்று புலம்பியிருக்கிறேன்.

ஆரே காலனியில் செல்லும்போதுதான் கவனித்தேன். வெட்டப்பட்டுக் கிடந்த பெரிய மரத்தண்டின்மீது, புதிதாகக் கிளைகள் மெல்லிதாக முளைத்திருந்தன.

ஹோத்தா ஹை..

Sunday, October 04, 2015

பார்க்கில் ஒரு நடை


”உங்க கிட்ட ஒரு விஷயம் பேசணும்”

 யாரையோ சொல்கிறார் போலும் என முன்னே நடந்தேன். “உங்களைத்தான்.” என்றபோது சற்றே வியப்படைந்தேன். ’எங்கிட்டயா? இன்று காலைச் சொற்பொழிவில் எதாவது விளக்கம் கேட்கிறாரோ?’
 எனது பயத்தில் நியாயம் இருக்கிறது.

டாக்டர்.ரஜத் குப்தா  நானோ தொழில்நுட்பத்தின் மூலம் உணவு தயாரிப்பு, சத்து மேம்படுத்துதல், செறிவடையச் செய்தலில் நுண்ணுயிரிகளைப் பயன்படுத்துவது என்பதில் பெரும்புகழ் வாய்ந்தவர். ஆறு வருடங்களாக அவரோடு பழக்கம். பல கான்ஃபரன்ஸ்களில் சந்தித்திருக்கிறோம்.

பிரபலமான தொழில்நுட்பக் கல்லூரி ஒன்றில் மூன்று நாட்கள் நடக்கும் பயிற்சி முகாமுக்கு கம்பெனி என்னை அனுப்பியிருந்தது. தொழிற்சாலைகள், கல்லூரிகள், ஆய்வகங்களிலிருந்து பலர் வந்திருந்தார்கள். அன்று இரண்டாம் நாள் முடிந்ததால் ஒரு விருந்து ஏற்பாடு செய்திருந்தார்கள்.

“வாங்க , மெயின் கேட் வரை நடந்துட்டு திரும்பி வரலாம்” என்றவரை மறுக்க முடியாமல், “ நீங்க போங்க. நான் கொஞ்சம் நடந்துட்டு வர்றேன்” என்று கூடவே வந்தவர்களை ரூமுக்கு அனுப்பிவிட்டு அவரோடு நடந்தேன்.

’மழை பெஞ்சிருக்குல்ல? கொஞ்சம் வழுக்கும், பாத்து” என்றார் . மெயின் ரோடு மழையில் கொஞ்சம் மோசமாயிருந்தது. ”வாங்க, பேசாம பூங்காவுக்குள்ள நடக்கலாம். அட்லீஸ்ட் அங்க இருட்டா இல்லாம இருக்கு”

இரு நிமிட மவுனத்தின் பின் ரஜத் ” கொஞ்சம் பெர்சனலான விசயம். உங்ககிட்ட பேசி ஆராயலாம்னு நினைச்சேன்” என்றார். நான் மவுனமாக நடந்தேன்.

“ஏன், இதை ஒரு கேஸ் ஸ்டடியாகக் கூட வச்சுக்கலாம். பேரு மட்டும் மாத்திரலாம். எட்டு மாசம் முன்னாடி, நீரஜாவை டெல்லியில சந்திச்சேன். ஒரு ஜாயிண்ட் ப்ராஜெக்ட் எடுத்திருக்கோம்”

“நீர்ஜா? டாக்டர் நீர்ஜா ,  **** லிமிடெட்-லேர்ந்து வந்திருக்காங்களே, அவங்களா?”

“யெஸ்” என்றவர் அர்த்தபுஷ்டியாகச் சிரித்தார்.
“அவளுக்கு வீடு சரியில்ல. புருஷன் எப்பவும் பிஸினஸ்னு அலையறான். இவகூட அன்பா நடந்துக்கறதில்ல. ஆபீஸ்ல மன அழுத்தம், அரசியல்...எதாவது ப்ராஜெக்ட்ல புது ஃபார்முலா வெற்றியடைஞ்சா வேலை இருக்கும். இல்லன்னா,அவ பாடு கஷ்டம்தான்”

“அவங்க கம்பெனி வைஸ் ப்ரெஸிடெண்ட் என்னோட நண்பர். நான் ஒரு வார்த்தை சொன்னால், இவ வேலைக்குப் பாதுகாப்பு. அதோட , இந்த ப்ராஜெக்ட்ல என்னோட ஒரு சோதனை முடிவு வெற்றிகரமா வந்திருக்கு., அதை நான் பகிர்ந்துகிட்டா, நல்ல பேப்பரா, பன்னாட்டு ஆராய்ச்சி இதழ்கள்ல வரும். ஏன், அது  அவளுக்கு ப்ரோமஷனுக்கே சாதகமா அமையும்”


அவர் சற்றே நிதானமாக நடந்தார். நானும் வேகத்தைக் குறைத்தேன். பார்க்கின் ட்யூப்லைட் வெளிச்சத்தில் அவர் முகத்தில் ஒரு புன்னகை கீற்று.

“ இங்கதான் நான் சொன்ன கேஸ் ஸ்டடி வருது  இந்த எட்டு மாச கூட்டு வேலையில, அவகிட்ட கொஞ்சம் நெருங்கிப் பழகிட்டேன். அவளுக்கும் கொஞ்சம் சாய்வு இருக்கு. அதோட, அந்த சோதனை முடிவுகள் வெளியிடப்படுவதற்கு எனது அனுமதி தேவை. என்னோட ஒத்துப்போறது, அவளுக்கு நல்லதும்கூட”

திகைத்தேன். “இத ஏன் எங்கிட்ட சொல்றீங்க, ரஜத்ஜி? உங்க சொந்த விசயம்”

என்  தோளை லேசாகத் தட்டிச் சிரித்தார் “ எங்க பெயர் , அடையாளம் என்பது இரண்டாவது விசயம். அதை உதாசீனப்படுத்தும் பக்குவம் உங்களுக்கு இருக்குன்னு நினைக்கிறேன். என்ன சவால்னு கேட்டீங்கன்னா. சமூக நெறிகள், மதம் கோட்பாடுகள்னு சிக்கிற ஆளு நான் இல்ல. ஓரளவுக்கு சமூக விதிகளைப் பின்பற்றணும்னு சொல்றவந்தான் நான். ஆனா, ,பொறுப்பான இரு பெரியவர்கள் பரஸ்பரம் ஆசையுள்ளவர்களாக இருந்தால், அவர்கள் தங்கள் வாழ்வினை மாற்றிக்கொள்வதில் என்ன தவறு? அவள் தயங்குகிறாள். ஏன்?”

சற்றே சிந்தனை வயப்பட்டேன். இது விஷப்பரீட்சை. ஏதாவது சொல்லப்போனால் ஏடகூடமாக எங்கள் உறவில் விரிசல் வருமோ என்ற தயக்கம், அதோடு, வெகு குறைவாகவே பரியச்சப்பட்ட ஒரு பெண்ணைக்குறித்துப் பேசுவது எனக்கு ஒப்புதலில்லை.

“விடுங்க. வேற பேசுவோம்”என்றேன். “ஹா ஹா. நழுவுகிறீர்கள். மூன்றாம் மனிதராக இருந்து இதன் சிக்கலை யோசியுங்கள். நான் சற்றே முயற்சி எடுத்தால், மணவாழ்விலிருந்து மாறுபட்ட ஒரு தொடர்பு கிடைக்கலாம். கிடைக்கும். போரடிக்கும் வழக்கமான தனிவாழ்வில் ஒரு மாற்றம். நன்றாகவும் இருக்கும். அவள் மறுக்க வாய்ப்பில்லை” என்றவர் குறுகுறுவெனப் பார்த்தார்

“என்னை வில்லன் என நினைக்கிறீர்களோ?”

“இது உங்கள் சொந்த விஷயம். நான் என்ன்ன சொல்வதற்கு இருக்கிறது?”

“சரி, நானே தொடங்குகிறேன். படித்த , அனுபவமிக்க பெரியவர்கள் நன்மை தீமைகளை அறிந்து அதன்பின் எடுக்கும் முடிவு இது. ஆனால்,  மூகத்தில் இது அதிர்ச்சியாக இருக்கலாம். ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் இன்று மதியம் கருத்தரங்கில், “ சமூக விதிகள், மத சாத்திரங்கள் என்பதெல்லாம் கேள்விக்குட்பட்டவை. மரபணுக்கள் தாங்கள் வளர்வதைத் தீர்மானிக்கின்றன” என்றபோது சற்றே சிரித்தவர்களில் நீங்களும் ஒருவர். இப்படி மனம் ஒத்த இருவர் தங்கள் வழிகளை, தங்கள் நலனுக்காக இணைத்துக்கொள்வதில் என்ன சிக்கல் வந்துவிடப்போகிறது?”

“மரபணுக்கள் இங்கு எங்கிருந்து வந்தன? “ என்றேன் வியந்து.

“ மரபணுக்கள் கூட இல்லை, அவற்றின் மூலக்கூறுகளான அமினோ அமிலங்கள், புரதங்கள், வேதியற்பொருட்கள். இவை தமக்குத் தேவையான , தாங்கள் இருக்க சாதகமான புறச்சூழலைக் காணுகையில் , அவற்றிற்கு சாதகமாக இருந்துகொள்கின்றன. பரிமாண வளர்ச்சியில் இதுவும் ஒரு அங்கம். எனவே, வரும் நாட்களில், தனக்குப் பிடித்த ஒருவருடன் மற்றொருவர் , சமூகவிதிகளை மீறி நடப்பது இயல்பாகிப்போகும். தனக்கு ஒவ்வாத ஒருவரிடமிருந்து விலகுவதும் எளிதாக இருக்கும். இல்லையா? எனவே சமூக விதிகள், நெறிகள் இவற்றிற்கு கடவுள் நிலை அளிப்பது கேலிக்கூத்து”.

மவுனமானேன் “ என்ன , நின்றுவிட்டீர்கள்? நான் ஒன்றும் புதிதாகச் சொல்லவில்லை. டாக்கின்ஸ் எழுதிய Selfish Genes என்ற  புத்தகத்தின் தருக்க நீட்டல்தான் இந்த சிந்தனைக் கோணம். மூன்று வருடமுன்பு, நாம் டாக்கின்ஸ் பற்றி ஹைதராபாத் ஓட்டலில் பேசினோம். நினைவிருக்கிறதா?”

‘ஆஹா’ , மனுசன் இங்கேர்ந்து வர்றாரா? ”ரஜத்ஜி” என்றேன் முன்னே பார்த்தவாறே. பார்க்க்கின் நடைபாதை, நான்கு நிறத்தில் டைல்ஸ் பதிக்கப்பட்டிருந்தது. இரண்டு டைல்ஸ்கள் போகும் பாதையையும், மற்ற இரண்டு நிறங்கள் , வரும் பாதையையும் ,  அம்புக்குறியிட்டப்பட்டு காட்டியிருந்தன. ட்யூப்லைட் வெளிச்சத்தில் அனைத்து நிறங்களும் ஏதோ அதீத கருப்பாகத் தெரிய, க்றுப்பு நிறம் மட்டும் தன் நிறத்தில் அடர்வாகத் தெரிந்தது.

“இந்த நடைபாதையில் நீங்கள் கறுப்பு டைல்ஸ் பாதையிலும், நான் காவிநிறப் பாதையிலும் நடப்போமா? நேராக நடக்கவேண்டும். வேறு டைல்ஸ்களில் கால் வைத்துவிடக்கூடாது.”
“ரைட்” என்றார் .”வேறு டைல்ஸில் கால் மாற்றிவைத்தால் தோல்வி, அப்படியா?”
“வெற்றி தோல்வி பற்றி அப்புறம் சொல்கிறேன். நடங்கள்” . இருவரும் நேரா நடந்தோம். சுவர்க்கோழிகளின் சத்தமும், மழையால், சில தவளைகளின் சப்தமும் தவிர வேறொன்றும் இல்லாத நிலையில், எங்கள் பாதணிகள் தரையில் உரசும் ஒலி மட்டும் கேட்டது.

“இப்போது, கண்களை மூடிக்கொண்டு முன்னால் நடங்க” என்றேன். அவர் கண்களை அழுத்தி மூடிக்கொண்டதிலும், விளையாட்டின் சிரிப்பிலும், பற்கள் வெளியே தெரிய நடந்தார். இரு அடிகள் எடுத்து வைத்திருப்பார், இடது கால் என் பாதையில் வந்தது.

“பாத்து, பாத்து, உங்க பாதையில் நடங்க”
“அங்?” என்றவர் லேசாக கண் திறந்து பார்த்து, நேராக நடந்தார். “ ம். இன்னும் கண் மூடி நடங்க”.  நான்கு அடிகளில் மறுபுறம் அவரது வலது கால் நீண்டது.

“ஹலோ. அந்தப்பக்கம்...” அவர் மீண்டும் கண் திறந்து நேராக சரிப்படுத்தினார். “ என்ன விளையாட்டு இது? சுதாகர்?”

“நாப்பது வருசமாக நீங்களும் நடக்கறீங்க. நடை நன்றாகவே தெரிந்தாலும், கண் மூடினால் ஓரிரு அடிகளில் கோணம் தவறிவிடுகிறது. கால் எப்போதும்போல முன்னால்தான் நடக்கிறது என்று நம்புகிறோம். உண்மையில் கண்கள் மற்றும் பிற புலன்களால் ஒவ்வொரு மைக்ரோ வினாடிகளிலும், நம் மூளை நமது நடையைச் சரிப்படுத்துகிறது. இது உள்மறையாக நடக்கும் இயல்பான திருத்தம். இல்லையா?”

“வெல், வாட்ஸ் தி பாயிண்ட்?” என்றார், சற்றே எரிச்சலடைந்து.

“பாயிண்ட் இஸ்... சமூக நெறிகள் நம்முள் உள்வாங்கப்பட்டு, நாம் வாழ்க்கையில் நடப்பதை, ஒவ்வொரு நொடியிலும் சரிப்படுத்துகிறது. கன்னாபின்னாவென நாம் நடந்தால் எப்படியிருக்கும்? அத்தனை பேரும் இடித்துக்கொண்டு, கீழே விழுந்து, முன்னே போகவே மாட்டோம். சற்றே சீர்ப்படுத்தப்பட்ட, ஒழுங்கான நடை , அனைவருக்கும் நன்மை தரும், ஒரு பார்க்கில் நடக்கிறதுக்கே இப்படி இருக்கிறதென்றால், வாழ்க்கையில் நடக்க, மூளை எத்தனை ஒழுங்கு நெறிகளை வைத்துக்கொண்டு நம்மை திருத்தவேண்டும்? நீங்கள் ஒரு மூலையில் தாறுமாறாக ஓடுவது, நடைபாதை விதிகளை மீறுவது, பிறரை முதலில் பாதிக்காது இருக்கலாம். ஆனால் அந்த இடத்தில் நடக்க வருபவர்கள் உங்களை ‘கோட்டி பிடிச்சவன் போல” என்றுதான் நினைப்பார்கள். உங்களை விலக்கத்தான் நினைப்பார்கள்”

“ஹா, இது ஒரு உவமையா? இது யதார்த்த விதி மட்டும் தழுவிய பேச்சு, நான் அடிப்படையை கேள்விகேட்கிறேன். பார்க்கில் நடக்க அல்ல, பெரும் நிலத்தில், கோடிடப்படாத பெரு வெளியில் தன் வழியை ஏற்படுத்திக்கொண்டு ஓடச் சொல்கிறேன். குறுகியதாகச் சிந்திக்காதீர்கள்”

“ஓடுகளத்தில் விதிகள் வேறு, நடக்கும் பாதையில் விதிகள் வேறு. காட்டில் செல்ல விதிகள் வேறு. அனைத்தும் பாதுகாப்பு என்பதை முதலில் வரையறுக்கின்றன. டாக்கின்ஸுக்கு வர்றேன். நீங்கள் சொன்ன மரபணு கெமிக்கல்கள் பல்வழியில் தம்மில் கலந்து புதுப்புது பரிணாம படிவங்களை ஏற்படுத்திக்கொண்டேதான் இருக்கின்றன. ஆப்பிரிக்காவின் மேற்குக்கரையில், அட்லாண்டிக் கடலில்கூட சிங்கத்தின் பண்பைக்கொண்ட உயிரினத்தை உருவாக்க கெமிக்கல்கள் என்றோ இணைந்திருக்கக்கூடும். ஆனால் அது வெற்றிபெறாது அவ்வுருவம் பிறக்குமுன்னே மடிந்திருக்கும். கெமிக்கல்கல்களின் கலவை உருவாக்கிய மீன் உருவங்கள் வெற்றி பெற்றன. அந்த மரபணுக்கள் அடிப்படையில் மீன் உருவை உருவாக்கி அதன்மீது மாறுபட்ட பண்புடைய உருவங்களை படைத்தன. அதிலும் பல தோற்றிருக்கும், இதேபோல் மண்ணில் மீன் உருவம் தோன்ற, இணைந்த கெமிக்கல் கலவை தோற்றிருக்கும். ஒரு உயிரினம் வளர மட்டுமல்ல, வாழ்வதற்கு அதன் சூழ்நிலை அமையவேண்டும். தமிழ்ல் சொல்லவேண்டுமானால் ‘நொந்தது சாகும்’ “

“நொந்தது சாகும்’ .. நல்லாயிருக்கே? “ என்றார் ரஜத் வியந்து.

“சொன்னது ஒரு கவிஞன். ரெண்டு வார்த்தையில் பரிணாம வளர்ச்சியை சொல்லிப் போய்விட்டான், அந்தக் கிறுக்குப் பார்ப்பான். அதை விடுங்க, சமூகம் தரும் சூழ்நிலையில் தவறும்  சிந்தனைச் சேர்க்கைகைகள், புதியதோர் உலகம் செய்யாது. தருக்கமற்ற சேர்க்கையான விபரீத விளைவுகளைத்தான் கொடுக்கும், எதிர்வினைகளைச் சமாளிக்க முடியாமல் , அது மடிந்து போகும். நீங்கள் கடலில் பலவீனமாக உருவான சிங்கமாக இருக்கவிரும்புகிறீர்களா, சரியான சிறு மீனாக இருக்கவிரும்புகிறீர்களா, என்பதை உங்கள் எண்ண மரபணுக்கள் தீர்மானிக்கட்டும்.”

ரஜத் சிரித்தார். “ நீங்கள் , சமூக,மத நெறிகளுக்குக் கொடி பிடிக்கிறீர்கள். டாக்கின்ஸை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. அவர் நாத்திகத்தை முன்னிறுத்தினார். விதிகள் நாம் செய்வது. பல்லாண் சேர்க்கை என்பது பல குழுக்களில் உள்ள பழக்கம், ஓராண் சேர்க்கை என்பது பிற்பாடு , ஆண் தனக்காக உருவாக்கிக்கொண்ட ஒரு நெறி. நீங்கள் சொல்லும் நெறிகள் காலம்காலமாக பிறழ்ந்து, மாறி வந்திருக்கின்றன.”

“உண்மைதான்” என்றேன் “ அவை மாறுவது அதன் பரிணாம வளர்ச்சி. சூழ்நிலைகள் மாறும்போது, தன் சமூகம் வாழவும், வளரவும் வகையில் சமூக நெறிகளை மனிதன் அமைக்கிறான். நெறிகள் பிறழ்ந்து, சமூகக் கட்டு உடையும்போது, புதிய நெறிகளை, புது சமுதாயத்தை அவன் உருவாக்குகிறான்.”

“அப்படி வாருங்கள் வழிக்கு! இதெல்லாம் ஐம்பது ஆண்டுகால சமூக விடுதலை உணர்வில் வந்த வார்த்தைகள். பழைய நெறிகள் இப்படிச் சொல்லியிருக்காது”

சிரித்தேன் “ பழையன கழிதலும், புதியன புகுதலும் வழுவில, கால வகையினனானே’ - இதனை எனது முப்பாட்டனுக்கு முப்பாட்டன் காலத்தில் கணியன் பூங்குன்றனார் சொல்லிப்போயிருக்கிறான். வளர் சிதை மாற்றத்தை அவர்கள் என்றோ அறிந்திருக்கிறார்கள்.  டாக்கின்ஸ் சொல்லும் மரபணு மாற்றங்கள் நிகழ சூழ்நிலைகள் சாதகமாக அமைகின்றன. அவர், கடவுள் உன்னை உருவாக்கவில்லை; சூழ்நிலை சாதகமாக அமையும்போது, மரபணுக்கள் தோற்றுவித்த உரு நீ’ என்கிறார். இது சரியான தருக்கமாக ஏற்றுக்கொள்ள நான் தயங்கவில்லை”

“சரி, எங்கள் கதைக்கு வாருங்கள். என்ன சொல்கிறீர்கள்?”

“ ரஜத் ஜி. இதில் நான் சொல்ல ஒன்றுமில்லை. நேராக நடக்க உங்களூக்கும் தெரியும். கண் மூடி நடந்தால் பாதை மாறினால், கீழே விழுந்தால் என்ன நடக்கும் என்பதும் உங்களுக்குத் தெரியும்.”

மழை வலுத்தது.

இருவரும் தடுமாறாது  நடந்தோம் - நான் காவி டைல்ஸ் மேலும், அவர் கறுப்பு டைல்ஸ் மேலும்,