Thursday, April 26, 2018

மகவு


வெளிச்சம் இன்னும் வராத காலை ஆறுமணிக்கு செந்தில் போன்செய்தார் பூனாவுக்குக் கிளம்பிக்கொண்டிருக்கிறேன் என்றதும் வியந்தார்.

“ நானும் அங்கதான் போயிட்டிருக்கேன். இன்னும் வண்டியை கூப்பிடலைன்னா, 15 நிமிசத்துல ஓபராய் மால் பக்கம் வந்து நில்லுங்க. நான் பிக்கப் பண்ணிக்கறேன்.” என்றார்.
கார் டிரைவர் ஆறுமுகம் என்று பெயர்ப்பட்டை அணிந்திருந்தார் “ நம்மூருதான். சேலம் பக்கம் ஊரு. ட்ராவல்ஸ்ல இவர்தான் வேணும்னு சொல்லிருவேன். ஆறுமுகம்,  டோல் கேட் தாண்டினதும், ப்ரேக்ஃபாஸ்ட்டுக்கு நிறுத்துங்க.”

செந்தில் சட்டென தோளில் தட்டினார். “ என்ன வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள்? நாவல்?” எட்டி, என் கையிலிருந்த டேப்லெட்டைப் பார்த்தவர் முகம் மாறினார்.

“ திருவாசகம்? எப்ப இப்படிப் பழமா ஆனீங்க?”

“பொழுதுபோகணும். திருவாசகம் படிச்சுக்கணும்னு ஒரு ஆசை.”

“திரும்பித் திரும்பி கடவுளை ஏத்திப்பாடற பாட்டுகள்.. அலுக்கலையா? ஸாரி. உங்க மத உணர்வை மதிக்கிறேன். ஆனா, கொஞ்சம் சமூகச் சிந்தனையோட பாடல்களாயிருந்தா நல்லாயிருக்கும்”

“பெர்ஸனலான உணர்வுகளை இப்பாடல்களிலும் பார்க்கலாம் செந்தில். நமக்குக் கொஞ்சம் பொறுமையும், அந்த இறைத்தாகத்தைப் புரிந்துகொள்ளூம் பக்குவமும் தேவை.”
“நான் பார்த்தவரை இல்லை. ஆல் தி பெஸ்ட்” கண்ணில் ஒரு பட்டையை இறக்கி விட்டுக்கொண்டு, கழுத்தைப் பின்னால் சாய்த்து உறங்கிப்போனார்.

டோல் தாண்டியவுடன் , இடதுபுறமாக ஓட்டலில் நிறுத்தினார். காராசாரமாக மிஸல் பாவ், டீ என அடித்துவிட்டு வந்தபோது,கவுண்டர் அருகே  ஆறுமுகம் ஒரு சிறுபெண்ணின் கையைப் பிடித்துக்கொண்டு நின்றிருந்தார். அருகே நின்றிருந்த காவலாளியிடம் தமிழ்ச்சாயலில் மராட்டியில் கத்திக்கொண்டிருந்தார்

”மைக்ல சொல்லுய்யா. இந்தப் பொண்ணோட பெற்றோர், எங்கிருந்தாலும் கவுண்ட்டர் பக்கமா வரணும்னு சொல்லு. பொண்ணு பேரு அக்‌சயா, அக்‌சயாதானேம்மா?”

அந்தப் பெண் தலையாட்டி ம் என்றது. முகத்தில் கலவரம்.

“அப்பா பேரு,அம்மா பேரு சொல்லும்மா”

ஒலிபெருக்கியில் யாருக்கும் விளங்காத குரலில் காவலாளி அறிவிக்க, ஆறுமுகம் “ கொண்டா” என்றார். தானே நிறுத்தி நிதானமாக மராட்டியில் அறிவித்தார்.

எங்களைப் பார்த்த்தும் “ ஒரு நிமிஷம் சார். இந்தக் குழந்தையை அவங்க  ஆட்கள்கிட்ட ஒப்படைச்சுட்டு வந்துடறேன்.”

டீ ஷர்ட்டும், முக்கால் டவுசருமாக ஒருத்தர் பதட்டமாக ஓடிவந்து “ அக்‌ஷயா “என்றார்.
“ஒன்பேரு என்ன? ஆதார் கார்டு / ட்ரைவிங் லைசன்ஸ் காமி” என்றார் ஆறுமுகம்.

சரிபார்த்து பெண்ணை அவரிடம் ஒப்படைத்த்தும் ஆறுமுகம் அவரது நன்றியை ஏற்காத கோப முகத்துடன் விலகி நடந்தார்.

மலைப்பாதையில் ஏறுகையில் “ யாரு அது, ஆறுமுகம்?” என்றார் செந்தில், அவர் இதனைச் சரியாகக் கவனிக்கவில்லை.

“தெரியாது சார். அந்தப் பெண் பீதியோட அங்கே இங்கே பாத்துக்கொண்டிருந்த்து. எனக்குச் சந்தேகம். கவுண்ட்டர்ல “ அவங்க பெற்றோர் வந்து கூப்பிட்டுப்பாங்க:ன்னு அலட்சியமாச் சொன்னான். அதான் நானே நின்னு கூப்பிட்டுட்டேன்”

“பாராட்டணும் ஆறுமுகம்” என்றேன் “ யார் பெத்த பிள்ளைய்யோ இப்படிக் கரிசனமா நின்னு அவங்க குடும்பத்தோடு சேர்த்து வைச்சிருக்கீங்களே..”

“தவற விட்டவனுக்குத்தான் சார், அதனோட வலி தெரியும்” என்றார் சில நிமிடங்களின் பின்.

“ஓ” என்றேன் பொதுவாக. என்ன விஷயம், எவ்வளவு ஆழம் என்பது தெரியாமல் உளறிவிடக்கூடாது.

“அஞ்சு வருஷம் இருக்கும். எனக்கு கொஞ்சம் லேட்டாத்தான் கலியாணம் ஆச்சு. சென்னையில ஒரு ட்ராவல்ஸ வண்டியோட்டிக்கிட்டிருந்தேன். எனக்கு ஒரேயொரு பொண்ணு. மல்லிகான்னு பெயர். ஊர்ல ஒரு விசேஷம்னு  குடும்பதோட போயிட்டு, மதுரைல ட்ரெயின் ஏர்றோம்.

’பிள்ளைக்கு பால் வாங்கிட்டு வாங்க’ன்னா என் பொண்டாட்டி. நான் அப்படியே பிஸ்கட் பாக்கெட்டு,தண்ணி பாட்டில் வாங்கிட்டு வர்றப்போ பாக்கறேன், அவ சாய்ஞ்சு, அசந்து போய்த் தூங்கிட்டிருக்கா… மடி வெறுமையா இருக்கு.

“பிள்ளை எங்கடி?”ன்னு கேக்கறேன். விலுக்குனு எந்திச்சு, ’அய்யோ எம்பிள்ளை’ன்னு அலர்றா. பக்கத்துல இருந்தவங்க ‘ அங்க ஒரு வயசான பொம்பளை, ஒரு பிள்ளையை தூக்கிட்டுப் போறதைப் பாத்தேன், இங்க பாத்தேன்’ன்னாங்க. போலீஸ் தேடிச்சு.. கிடைக்கல”

ஆறுமுகம் முகம் இறுகியிருந்தது. முன்னே புகை கக்கிச் சென்றுகொண்டிருந்த டாங்க்கர் லாரியை லாகவமாக வலதுபுறமாகக் கடந்து, குகையில் நுழைந்து, பிளிங்க்கர் இட்டபடி ஓட்டினார்.

என்ன சொல்வதென்று தெரியாது மவுனித்திருந்தேன். குகை ஒரு சாக்காக அமைந்தது. மறுபுறம் வந்தும் ஆறுமுகம் அமைதியாக இருந்தார்.

“கி..கிடைச்சாளா?” என்றேன், ஒரு முட்டாள்தனமான எதிர்பார்ப்பில்.

“இல்ல” என்றார் சலனமின்றி. ”எங்கெல்லாமோ தேடினோம். வழக்கமா இந்த பிள்ளைபிடிச்சுப் போகிற கூட்ட்த்தில் இருந்த ஒருத்தனை, என் நண்பர் மூலமாத் தொடர்பு கொண்டோம். பத்தாயிரம் செலவாச்சு. நாலைஞ்சு பிள்ளைகளைக் காட்டினான். எதுவும் எம்பிள்ளை இல்ல.

பைத்தியமே பிடிச்சிருச்சு சார்” என்றார் சற்றே உடைந்து, சமாளித்துக்கொண்டே 
“ ரோட்டுல எங்கேயாச்சும் ஒரு வயசுக்குழந்தையைப் பாத்தாலே கை பரபரக்க்கும். இது என்பிள்ளையா இருந்துராதா?ன்னு ஒரு நைப்பாசை. இல்லன்னு தெரிஞ்சதும் கடவுளே இதாச்சும் நல்லா இருக்கணும்னு வேண்டிக்கிட்டே நடந்துருவேன்.

எனக்காச்சும் வண்டி ஓட்டறதுன்னு ஒரு வேலை இருந்துச்சு.என் பொண்டாட்டி….    ஒரு தடவ,  கோயில் வாசல்ல, மொட்டையடிச்சு, சந்தனம் அப்பியிருந்த குழந்தை வீறிட்டு அழுதுகிட்டிருந்துச்சு. இவ, ஓடிப்போய் அத எடுத்துப் பால்கொடுக்கப் போயிட்டா. அக்கம்பக்கத்துல இருந்தவங்க கத்தி, பிள்ளையோட அம்மா அடிக்க வந்து… இவ தலைவிரிச்சுப் போட்டு நிக்கறா

“கூறுகெட்டவளே, பிள்ளை பாலுக்கு அழுவுது. நீ சிரிச்சா பேசிட்டிருக்க?”ன்னு அவளை அறையப் போனா. தடுத்து நிறுத்தி வைக்கறேன்.. மத்தவங்ககிட்ட மன்னிப்பு கேட்டுகிட்டே, அவளைப்பிடிக்கறேன்..

சட்டுனு ப்ளவுஸை கிழிச்சிகிட்டா “ பிள்ளைக்குப் பால் தராத இந்த முலை எதுக்குங்க எனக்கு?ன்னுகிட்டே கையால பிச்சு எறியப் பாக்கறா.நகம்பட்டு ரத்த விளாறா அவ மார்பு…
முட்டாப்பயலுக அங்க பத்து பேரு பல்லை இளீச்சுகிட்டு வேடிக்கை பாக்க நிக்கறான். நான் என்ன செய்வேன் சார்? இவளைப் பிடிப்பேனா, கொதிச்சுகிட்டு நிக்கிற அந்த குடும்பத்துக்கு மன்னிப்பு சொல்லி விளக்குவேனா? அல்லது இந்தக் காலிப்பயலுக கூட்டத்தை விரட்டுவேனா?

அதுக்கப்புறம் அவளை டாக்டர்ட்ட கூட்டிட்டுப் போயி, பால் சுரக்காம இருக்க ஊசி போட்டு, தூக்க மருந்து கொடுத்து.. கார் ஓட்டறப்போவெல்லாம் இன்னிக்கு என்ன செஞ்சிருக்காளோ?ன்னு நினைப்பே ஓடும். செல்போன்ல ஒரு கால் வந்தாலே ‘பக்’ன்னு நெஞ்சு அடைக்கும்.

இடம் மாறினா சரியா இருக்கும்னுதான் மும்பை வந்தேன். இப்பவும் பக்கத்துவீட்டுக்காரங்க அவளைப் பாத்துக்கறாங்கன்னு ஒரு தைரியத்துலதான் பூனா வரை ஓட்டறேன். ராத்திரி தங்கற ஊரா இருந்தா , ஒத்துக்கிட மாட்டேன். காசு கொஞ்சமா வந்தாலும் சரி”

“நீங்க மனசத் தளரவிடாதீங்க ஆறுமுகம். எப்படியும் கிடைச்சிருவா. போலீஸ்ல தொடர்ந்து கேட்டுக்கிட்டே இருக்கீங்களா?”

“எப்படிங்க தேடாம இருக்கமுடியும்? காலம் பூராத் தேடுவேன். அதுக்குத்தானே அலையறேன்?”

”காணாமல் போனவர்களின் தகவல்னு அரசோட ஒரு டேட்டாபேஸ் இருக்கு ஆறுமுகம். நான் வேணா அதுபத்தி விவரம் கேட்டுச் சொல்றேன்”

“நல்லா இருப்பீங்க” என்றார் ஆறுமுகம் கண்ணீர் கோத்த கண்களோடு. “   மல்லி, தொலைஞ்சு போறதுக்குக்  கொஞ்சநாள் முன்னாடி, என் கார் சத்தம் வந்தாலே, ப்ப்பா…ப்ப்ப்பான்னு அவசரம அவசரமா வாசல் பாத்து வேகமா முட்டி போட்டு தவழ்ந்து வரும். மல்லி, அப்பா எங்க?ன்னு யாராச்சும் கேட்டா, கையைக் காட்டும். இல்ல, கண்ணை ஒரு மாரி பக்கவாட்டுல சிரிச்சிகிட்டே பாக்கும். இப்ப  எவனை அப்பான்னு கூப்பிடுதோ ?  அவனுக்குக் கொடுத்து வைச்சிருக்கு. எனக்கு இல்ல. அவன் நல்லாயிருக்கட்டும்”
சட்டென வெடித்து அழுதார். எச்சில் தெறித்து, ஸ்டீரிங் வீலில் தெறிக்க, அநிச்சையாக்த் துடைத்தார்.

செந்தில் கைகளை நெஞ்சின் குறுக்கே இறுகக் கட்டியபடி குனிந்திருந்தார். பேச முடியாத கனத்தில், எனது டேப்லட்டில் கவனமின்றி விரல்களை இயக்கினேன்.

நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் பி டி எஃப் விரிந்த்து. வெறுமே முலை சுமந்து.. எங்கோ வாசித்திருக்கிறேன். சில நிமிட்த் தேடலின் பின் பாசுரம் கிட்டியது. குலசேகராழ்வாரின் பெருமாள் திருமொழியில் 7- ஆம் திருமொழி.

தேவகி, கண்ணனின் வளர்ப்பினைத் தான் பெறாத வருத்தத்தில் புலம்புகிறாள்.

கஞ்சன் நாள்கவர் கருமுகில் எந்தாய்! கடைப்பட்டேன் வெறிதே முலைசுமந்து
தஞ்சம் மேலொன்றிலேன் உய்ந்திருந்தேன் தக்கதே நல்ல தாயைப்பெற்றாயே

”வெறிதே முலை சுமந்து” -  தன் மகவிற்குப் பாலூட்டாத முலை வெறிது என்கிறாள் தாய். தன் நிலையைத் தாயெனச் சொல்லவும் எள்ளுகிறாள்.”நல்ல ஒரு தாயைப் பெற்றாயே,மகனே” என்கிறாள்.

மற்றொரு பாசுரம்…,படித்ததும், செந்திலின் தோளைத் தொட்டேன்.  “என்ன?” என்பது போல் அவர் புருவங்கள் சுருங்கின.

பதில் சொல்லாமல் அவரிடம் டாப்லெட்டை நீட்டினேன். அவர் அப்பாசுரத்தை வாசித்திருக்க வேண்டும். சன்னலின் வழியே வெளியே பார்க்கத் தொடங்கினார்.

எந்தையே என்றன்குலப் பெருஞ்சுடரே எழுமுகில் கணத்தெழில் கவரேறே
உந்தை யாவன்?” என்றுரைப்ப, நின்செங்கேழ் விரலினும்
கடைக் கண்ணினும் காட்ட நந்தன் பெற்றனன்
நல்வினை யில்லா நங்கள்கோன் வசுதேவன் பெற்றிலனே

”பெண்கள், கண்ணனைத் தூக்கிக்கொண்டு, உன் தந்தை யார் காட்டு? எனக் கண்ணன், தன் சிறுகைகளாலும், கடைக்கண்ணாலும் காட்டும் அதிர்ஷ்டத்தை நந்தகோபன் பெற்றான்; எங்கள் தலைவன் வசுதேவனுக்கு அது கிடைக்கவில்லையே”

மகவு மறைந்த  வலி , வசுதேவன் தொட்டு ஆறுமுகங்கள் தாண்டி நீளும்.

கார் உறுமியபடி லோனாவாலா மலைப்பகுதியில் ஏறிக்கொண்டிருக்க, செந்தில் வெளியே பார்த்தபடியே வந்தார்.

Friday, April 20, 2018

கடவுளின் ஐஸ்க்ரீம்

”மூவர்  நீ முதல்வநீ, முற்றுநீ, மற்றுநீ, பாவநீ, தருமநீ, பகையுநீ, உறவுநீ”

இறக்குமுன் வாலி இராமனைப் பார்த்துச் சொல்கிறான் இப்படிச் சொல்றான்,  நல்லது சொல்றான் சரி; எதுக்கு  நீயே பாவம், நீயே பகை எல்லாம் இராமன் மீது அடுக்குகிறான்? நல்லது மட்டுமே இறைவன் என்றால் போதாதா? ”  சுதீர்குமார் கேட்டார்.

எப்போதோ சென்னை போகியிருக்கையில், உமா பதிப்பகத்தில் கம்பராமாயணம் - வைமுகோ வின் உரை ஒரு செட்டு தூக்கிக்கொண்டுவந்துவிட்டார். நிதானமாக வாசிக்கிறார்.

”அப்படி இல்லாவிட்டால் , இறைவன் இல்லாத ஒன்று இருப்பதாக ஆகிவிடுமே?” என்றார் சுனில் , அவரது தம்பி. அவருக்குத் தமிழ் வாசிக்கத் தெரியாது.

அவர்களது வீட்டில் ஒரு நாள் தங்கியிருக்க வேண்டிய அவசியம் சில மாதங்கள் முன்பு. கலியாண சீசனோ என்னமோ,  போபால் நகரில்  ஓட்டல் ஒன்றுமே கிடைக்கவில்லை.

இரவு சாப்பாட்டின் பிறகு இந்த அரட்டை சில நிமிடங்களே நீடித்தது. ஸ்டாக் மார்க்கெட், மோடி, கார் வகைகள் எனப் பேச்சு விரிந்தது.

திடீரென சுனிலின் சிறு குழந்தை வீறிட்டது. லேசான மூச்சிழுப்பு வீட்டில் அனைவரும் அதனை தூக்கிவைத்து சமாதானப்படுத்தியும் அடங்கவில்லை. இரவு 10 மணிக்குமேல். ஆஸ்பத்திரியெல்லாம் அடைத்திருப்பார்கள்.

இருவீடுகள் தாண்டி இருந்த ஒரு நர்ஸ், வந்து பரிசோதித்தார்.

”என்னத்தையோ தின்னிருக்கு. அலர்ஜியோ?”

”ஐஸ்க்ரீம்தான். திங்காதே, திங்காதேன்னு எத்தனை தடவை பின்னாடியே நிக்கிறது? கேட்டாத்தானே?” சுனிலின் அம்மா புலம்பினார்.

“அதுக்கு ரெண்டு வயசு. நீ சொன்னாக் கேக்குமா?”   சுனிலின் அப்பா , அதட்டினார். “ரெண்டுங்கெட்டான் வயசு. கொஞ்சநாள் நாமதான் பாத்துக்கணும்”

சுனிலின் மனைவி அமைதியாயிருந்தாள். ’நீ எதுக்கு குழந்தைக்கு ஐஸ்க்ரீம் கொடுத்தே?” என்று சுனில் கண்டிக்க, அவள் ஒன்றுமே சொல்லாமல் ,குழந்தையுடன் உள்ளே சென்றாள்.

அடுத்தநாள் காலையில்,  நாங்கள் ஏரி வரை சென்று திரும்பிய பொழுது, குழந்தையை வாசலில் நிறுத்திப் பேசிக்கொண்டிருந்தாள்். “நெஞ்சு வலிக்கிறதா பாப்பா?”
“உம்” என்று தலையாட்டியது.
ஐஸ்க்ரீமைக் காட்டினாள் தாய் “ இத வாயில போட்டேல்ல? அதுல பூச்சி இருக்கு. அதான் வயிறு வலிக்கிறது. இன்னும் ஜில் ஐஸ்க்ரீம் வேணுமா?”
அது பீதியில் பார்த்தது. அவள் ஐஸ்க்ரீம் கிண்ணத்தைக் கையிலெடுத்து வாயருகே கொண்டு வந்தாள்
“ஐஸ்க்ரீம் திங்கணுமா? வயிறு வலிக்கணுமா உனக்கு?”
அது, தலையை வேகமாக ஆட்டி மறுத்து, அம்மாவின் கால்களைக் கட்டிக்கொண்டது.

”இனிமே ஜில் தண்ணீர் சாப்பிடுவாயாடி, தங்கம்?”

”ஊஹூம்” என்றது அது.

சுதீரிடம் இதனைக் காட்டிச் சொன்னேன் “ இதுதான் கடவுளும் செய்யறான். நமக்கே அறிவு வந்து தீயதை விலக்கணும்னுதான், சொற்புத்திக்கு சாத்திரங்களைக் கொடுத்தான். அது புரியாம தீமைகளை நாடிப்போறோம்; சரி, படட்டும், பட்டறிவு வந்தா விலகி வருவான்” என்று நம்மைத் தீமையில் பட வைக்கிறான். இது அதீத அன்பினால் செய்கிறான். சொற்புத்தி இல்லாதவனுக்கு சுயபுத்தியாச்சும் வேணுமே?”

”சும்மா நீங்களா ஒண்ணு இட்டுக் கட்டப்படாது. இதெல்லாம் எந்த சாஸ்திரத்துல இருக்கு?”

“ஆச்சார்ய ஹ்ருதயம்னு ஒரு புத்தகம் , 12ம் நூற்றாண்டுல , நம்மாழ்வாரின் புகழ் பாடி எழுதப்பட்ட சூர்ணைகள் கொண்ட நூல். அழகிய மணவாளப்பெருமாள் நாயனார்னு ஒரு ஆச்சாரியார் எழுதியது. அதுல சொல்கிறார்.
சாத்திரங்களைக் கொடுத்து, அதற்கு மாறாக பிற இந்திரிய நுகர்வு அனுப்வஙக்ளையும் கொடுத்தது ஏன் எனில்?
வாத்ஸல்யமான தாய், பிள்ளை மனம் பேகணியாமல்,  மண் தின்ன விட்டுப் பின் ஒளஷதம் இடுமாப்போலே, எவ்வுயிருக்கும் தாயிருக்கும் வண்ணமான இவனும், ருசீகேடாகப் பந்தமும் அதனை அறுப்பதோர் மருந்தும்  காட்டுமிறே”

குறிப்பா இதில் வாத்ஸல்யமான தாய் என்பதைக் கவனியுங்கள். அதீதக் கருணை கொண்ட தாய், , ரும வினையால் நாம் படாதபாடு பட்டுவிடக்கூடாதே என்பதற்காகவே, கொஞ்சமாகப் பற்றைக் கொடுத்து,  அவதியுறச் செய்து,  பட்டறிவினால் புத்தி வரச்செய்கிறான். இதற்குத்தான் மூளையே அவன் கொடுத்திருக்கிறான்.”

சுதீர் மெல்லத் தலையாட்டினார். புன்னகையுடன் நிமிர்ந்தவர் “ புக் பேரு என்ன சொன்னீங்க?”
சட்டெனக் கவலை வந்தது.  சுதீரின் அடுத்த சென்னைப் படையெடுப்பில்  ஆச்சார்ய ஹ்ருதயம் பி.ஆர். புருஷோத்தம நாயுடு விளக்கவுரை இருக்கிறது. சென்னைப் பல்கலை அதனை மீண்டும் ப்ரசுரிக்க வேண்டுமே? பிரதிகள் அங்குக்  கரையான் அரித்து அல்லவா கிடக்கிறது?

Saturday, April 14, 2018

தேர்ச்சியெனும் பொறி


தினமணி.காம்-ல் வரும் “நேரா யோசி” கட்டுரைத்தொடரின் 15வது அத்தியாயம். 


எதிரி 15 தேர்ச்சியெனும் பொறி



விஷூவல் பேஸிக்- சுனிதாவை அடிக்க ஆளே கிடையாது”;  நீதாம்ப்பா அந்த கண்ட்ரோல்ரூம்ல ராஜா. எத்தனை ஆபீஸர் வந்தா என்ன? ஆப்பரேட்டர் நீ இல்லாம ஃபாக்டரியே நின்னு போயிரும்

கேட்கையில் மிதமிஞ்சிய கிறக்கத்தைத் தரும் சொற்கள். எனது பணியை , என் தேர்ச்சியை, திறமையை பிறர் பாராட்டும் தருணம் பெரியது. என்னை நானே அடையாளம் கண்டுகொண்டு, ’சபாஷ்டாஎன்று முதுகில் தட்டிக்கொண்டு புத்துணர்வுடன் வேலை பார்க்க்க் கிளம்பும் தருணம்.

இதுவரை எல்லாம் நல்லாத்தான் போயிட்டிருக்கு. ஆனால், நாம் நம்மை அறியாமலேயே ஒரு பொறியை நம் காலில் மாட்டிக்கொள்கிறோம் என்பது கசப்பான உண்மை.
ஒரு துறையில் தேர்ச்சி பெறுவதற்கு 10000 மணி நேரப் பயிற்சி தேவை என்று ஒரு யதார்த்த நிகழ்வுகளின் தொகுப்பு, அதன் அடிப்படையிலான புள்ளியியல் விவரம் சொல்கிறது. உடல், மனம், மூளை இவற்றின் இணைந்த நிகழ்வுகளின் அடிப்படையில் வரும் திறமை, மெருகேற்றம் 10000 மணி நேரப்பயிற்சியில் நிச்சயமாக மேலோங்கி நிற்கும். எனவே, ஒருவருக்கு ஒரு துறையில் ஆர்வத்தின் மூலமாக, அல்லது அவரது இயல்பான திறமையின் மூலமாக தேர்ச்சி எளிதில் வந்துவிட்டால்,அதற்குக் கிடைக்கிற நேர்மறைப் பின்னூட்டம், பாராட்டுக்கள் அவரை மேலும் திறம்படச் செய்ய உந்துகின்றன. பத்தாயிரம் மணிநேரப் பயிற்சி இன்றி, ஒரு மாதப் பயிற்சியிலேயே அவர் தேவைப்பட்ட தேர்ச்சியை அடைந்து விடுகிறார் என்றால், அவரை மேற்சொன்னவாறு புகழ்கிறது உலகு.

இதில்தான் மறைமுகமாகப் பொறி வருகிறது. எனக்கு விஷூவல் பேஸிக் என்ற கம்ப்யூட்டர் மொழி தெரியுமென்றால், அதில் எனது தேர்ச்சி புகழப்பட்ட்து என்றால், அதனையே மேலும் மேலும் செய்யத் தோன்றும். மூளை, அதிகமாக அலட்டிக்காமல், அதிகப் பயனைப் பெற முயல்கின்ற சோம்பேறி என முன்னே பார்த்திருக்கிறோம். தேர்ச்சி பெற்ற ஒரு துறையில் அதிக முயற்சி தேவையில்லை. தேவைப்பட்ட பரிசு, பாராட்டு கிடைத்துவிடும். ஏன், புதிதாக மற்றொன்றைக் கற்கவேண்டும். விடு, விஷுவல் பேஸிக்ல அடுத்த ப்ராஜெக்ட் எடுத்துக்கோ.

இப்படித்தான் சுனிதா இன்று ஒரு டைனோசார் ஆக மாறியிருக்கிறாள். உலகு, அந்தப் ப்ரோக்ராமிங் மொழியை விடுத்து அடுத்த லெவலுக்குப் போனதை அவள் கண்டாலும், கவனிக்கவில்லை. விளைவு? இரண்டு வருடங்களுக்கு மேல் அவளது கம்பெனிநீ மிக்க் கடினமான உழைப்பாளி. உனது திறமை, விசுவாசம் மிக அதிகமாகவே பாராட்டப்படவேண்டியவை. ஆனால், சுனிதா…”  

இரண்டு மாதம் நோட்டீஸ் கொடுத்தார்கள். அவள் வாங்கியிருந்த சம்பளத்திற்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. பெங்களூர் வீட்டிற்கு மாதத்தவணை கட்டுவதில் மூச்சடைத்துப் போனது.

இருவத்து நாலாம் வயதில் , ஒரு கம்பெனியில் கண்ட்ரோலர் ரூம் ஆபரேட்டராக ஜெயந்த் சேர்ந்தபோது கிடைத்த சம்பளம் அன்று போதுமானதாக இருந்த்து. இரு முறை ,  இரவெல்லாம் கண்விழித்து, பெரும் இடர்களைச் சமாளித்து பாராட்டுப் பெற்றான். உன்னை விட்டா அந்த கண்ட்ரோலரை இயக்க யாராலும் முடியாதுஎன்ற அதிகாரிகளின் சொற்கள், கண்ணை மறைக்க,  அவன் அடுத்த்தாக என்ன செய்தால், ஆபீஸராக முன்னேறலாம்? என்ற எண்ணமே இன்றி திறம்பட்ட ஆபரேட்டராக இருந்தான்.

ஐந்து வருடத்தில் தொழில் நுட்பம் மாறியது. கம்பெனி, வேறு கண்ட்ரோலரை வாங்கியது.  அதிகமான   திருகுமானிகளோ, இயக்கும் லீவர்களோ இன்றி , ஒரு கீ போர்டு, ஸ்கிரீன், ஜாவாவில் எழுதப்பட்ட மென்பொருள் என அடக்கமாக வந்த கண்ட்ரோலரை இயக்க ஜெயந்த் தடுமாறினான். “ தம்பி, நீ வீட்டுக்குப் போகலாம்என்று ஒரு மாலை நேரத்தில், சமோசா, டீ, பூங்கொத்து எனக் கொடுக்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டான். புதிதாகச் சேர்ந்திருந்த இளைஞனின் சம்பளம் ஜெயந்த்தின் சம்பளத்தில் நேர் பாதி.

ஒரு துறையில், ஒரு காலகட்டத்தில் இருக்கும் தேர்ச்சி எப்போதும் பாராட்டப்படாது. ’மாறுதல்  ஒன்றே நிலைத்திருக்கும்என்ற சொல் கவர்ச்சியான சொற்கட்டு மட்டுமல்ல, வலிமிகுந்த யதார்த்தம். இதனை அறியாது அப்படியே நின்றவர்கள் , நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்படுகிறார்கள்.

தனிமனிதர்கள் என்றல்ல, பல பெரிய கம்பெனிகளுக்கும் இதுதான் நிலை. ப்ளாக்பெர்ரி , பத்து வருடங்களுக்கு முன் பெருமளவில் அலுவலகத் தொடர்புக்காகப் ப்யனபடுத்தப்பட்ட்து. எனது கம்பெனியின் உலகளவில் நடக்கும் கூட்டத்தில்ப்ளாக் பெர்ரி எப்படி நம் வியாபாரத்தை வலுப்படுத்தும்?” என்பதாக ஒரு தனிக் குழு ஆலோசனையே நடைபெற்றது. ஸ்மார்ட் ஃபோன்களின் வரவைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் , மாறாமல் இருந்த ப்ளாக்பெர்ரி, இப்போது  எங்கே?

ஏழு வருடமுன்பு வரை, மிக அதிக அளவில் விற்ற அலைபேசிகளைத் தயாரித்து முன் நின்ற நிறுவனம் நோக்கியா. “ உலகில் அதிக அளவில் காமெராக்களைத் தயாரிக்கும் நிறுவனம் எது? என்ற புகழ் பெற்ற கேள்வியின் விடைநோக்கியா.  (செல்போன்களில் காமெராக்களைப் பதித்து விற்றதில் உலக சாதனை புரிந்த்து நோக்கியா). இதெல்லாம் 4 வருடங்கள் முன்பு. இன்று நோக்கியா?  மைக்ரோஸாஃப்ட்-ஆல் வாங்கப்பட்டுச் சிதைந்து போனது.

110 வருடங்களாகத் தொழில் நுட்பத்தில் கண்டுபிடிப்பும், அதன் பயன்பாட்டுத் தயாரிப்புமாக முன்னணியில் இருந்த நிறுவனம் ஜெராக்ஸ். ஒளிநகலென்பதை உலகிற்கு அறிமுகப்படுத்திய ஜெராக்ஸின் பெயர், ஓளிநகலெடுப்பதின் வினைச்சொல்லாகவே மாறியது. ஜப்பானிய போட்டியாளர்களுடன் சந்தையைச் சந்திக்கத் தடுமாறிய ஜெராக்ஸ், மாறும் உலகைன் இயல்பைப் புரிந்துகொள்ளாமல், பின் தங்கி,  இறுதியில் அதன் ஒளிநகல் துறையை, ஃபுஜி ஃபிலிம் கம்பெனிக்கு விற்றது.

மேற்சொன்ன அனைத்திலும் பொதுவானது என்ன? உலகம் மாறுவதைப் புரிந்துகொள்ளாமை; அறிந்திருந்தாலும், தனது நிலையில் மாற்றம் ஏற்படுத்தாமை. “எனது துறையில் நான் பாதுகாப்பாக இருக்கிறேன்என்ற பொய்யான பாதுகாப்புணர்வு, நாளை வரவிருக்கும் அபாயத்தை உணர முடியாமல் தடுத்துவிடுகிறது. நிகழ்வு முன்னே நிற்கையில், அதிர்ச்சியில் தடுமாறுகையில், முன்னேற்பாடில்லாமையால் முழுகிப் போகிறார்கள்.

நாமிருக்கும் நிறுவனங்களே புதிய மாற்றத்திற்குத் தயாராகலாம். அந்த நேரத்தில், மாற்றத்தை எதிர்க்காமல், “நாம் வாழ அல்லது முன்னேற என்ன செய்யணும்?” என்ற கேள்வியைக் கேட்டுக்கொள்வது நலம். நம்மால் கேட்க முடியவில்லை என்றால், துறையறிந்த ஒரு விற்பன்னரிடம், தகவலைக் கொடுத்து, ஆலோசனை கேட்கலாம். பாதுகாப்பற்ற உணர்வு, அச்சத்தை விளைவித்து, மாற்றங்களை எதிர்க்கத் தூண்டும். அது பரிமாற்றப் பகுப்பாய்வின்படி, நம் பெர்ஸனாலிட்டியில்சைல்ட்எனப்படும்  உணர்வு பூர்வமாக இயங்கும் குழந்தை நிலையைக் குறிக்கும். ஒரு எதிர்வினை, குழந்தை நிலையிலிருந்து வருவது வரவேற்கத்தக்க ஒன்றல்ல.

இந்த மாய பாதுகாப்புணர்வினை, தேர்ச்சியினால் கிடைக்கும் நிறைவினை competency trap தேர்ச்சியெனும் பொறி எனலாம். இதில் மாட்டிக்கொள்ளாமல், “ரைட்டு, இன்னிக்கு பாராட்டு கிடைத்திருக்கிறது. நல்லது. ஆனால், இப்ப நம்ம துறை எப்படி மாறிகிட்டிருக்கு. நாம என்ன செஞ்சா முன்னேறலாம்?” என்ற கேள்வியை அடிக்கடி நம்முள்ளே சிந்தையில் கேட்பது நேரா யோசிப்பதன் ஒரு அடையாளம்.