Thursday, April 26, 2018

மகவு


வெளிச்சம் இன்னும் வராத காலை ஆறுமணிக்கு செந்தில் போன்செய்தார் பூனாவுக்குக் கிளம்பிக்கொண்டிருக்கிறேன் என்றதும் வியந்தார்.

“ நானும் அங்கதான் போயிட்டிருக்கேன். இன்னும் வண்டியை கூப்பிடலைன்னா, 15 நிமிசத்துல ஓபராய் மால் பக்கம் வந்து நில்லுங்க. நான் பிக்கப் பண்ணிக்கறேன்.” என்றார்.
கார் டிரைவர் ஆறுமுகம் என்று பெயர்ப்பட்டை அணிந்திருந்தார் “ நம்மூருதான். சேலம் பக்கம் ஊரு. ட்ராவல்ஸ்ல இவர்தான் வேணும்னு சொல்லிருவேன். ஆறுமுகம்,  டோல் கேட் தாண்டினதும், ப்ரேக்ஃபாஸ்ட்டுக்கு நிறுத்துங்க.”

செந்தில் சட்டென தோளில் தட்டினார். “ என்ன வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள்? நாவல்?” எட்டி, என் கையிலிருந்த டேப்லெட்டைப் பார்த்தவர் முகம் மாறினார்.

“ திருவாசகம்? எப்ப இப்படிப் பழமா ஆனீங்க?”

“பொழுதுபோகணும். திருவாசகம் படிச்சுக்கணும்னு ஒரு ஆசை.”

“திரும்பித் திரும்பி கடவுளை ஏத்திப்பாடற பாட்டுகள்.. அலுக்கலையா? ஸாரி. உங்க மத உணர்வை மதிக்கிறேன். ஆனா, கொஞ்சம் சமூகச் சிந்தனையோட பாடல்களாயிருந்தா நல்லாயிருக்கும்”

“பெர்ஸனலான உணர்வுகளை இப்பாடல்களிலும் பார்க்கலாம் செந்தில். நமக்குக் கொஞ்சம் பொறுமையும், அந்த இறைத்தாகத்தைப் புரிந்துகொள்ளூம் பக்குவமும் தேவை.”
“நான் பார்த்தவரை இல்லை. ஆல் தி பெஸ்ட்” கண்ணில் ஒரு பட்டையை இறக்கி விட்டுக்கொண்டு, கழுத்தைப் பின்னால் சாய்த்து உறங்கிப்போனார்.

டோல் தாண்டியவுடன் , இடதுபுறமாக ஓட்டலில் நிறுத்தினார். காராசாரமாக மிஸல் பாவ், டீ என அடித்துவிட்டு வந்தபோது,கவுண்டர் அருகே  ஆறுமுகம் ஒரு சிறுபெண்ணின் கையைப் பிடித்துக்கொண்டு நின்றிருந்தார். அருகே நின்றிருந்த காவலாளியிடம் தமிழ்ச்சாயலில் மராட்டியில் கத்திக்கொண்டிருந்தார்

”மைக்ல சொல்லுய்யா. இந்தப் பொண்ணோட பெற்றோர், எங்கிருந்தாலும் கவுண்ட்டர் பக்கமா வரணும்னு சொல்லு. பொண்ணு பேரு அக்‌சயா, அக்‌சயாதானேம்மா?”

அந்தப் பெண் தலையாட்டி ம் என்றது. முகத்தில் கலவரம்.

“அப்பா பேரு,அம்மா பேரு சொல்லும்மா”

ஒலிபெருக்கியில் யாருக்கும் விளங்காத குரலில் காவலாளி அறிவிக்க, ஆறுமுகம் “ கொண்டா” என்றார். தானே நிறுத்தி நிதானமாக மராட்டியில் அறிவித்தார்.

எங்களைப் பார்த்த்தும் “ ஒரு நிமிஷம் சார். இந்தக் குழந்தையை அவங்க  ஆட்கள்கிட்ட ஒப்படைச்சுட்டு வந்துடறேன்.”

டீ ஷர்ட்டும், முக்கால் டவுசருமாக ஒருத்தர் பதட்டமாக ஓடிவந்து “ அக்‌ஷயா “என்றார்.
“ஒன்பேரு என்ன? ஆதார் கார்டு / ட்ரைவிங் லைசன்ஸ் காமி” என்றார் ஆறுமுகம்.

சரிபார்த்து பெண்ணை அவரிடம் ஒப்படைத்த்தும் ஆறுமுகம் அவரது நன்றியை ஏற்காத கோப முகத்துடன் விலகி நடந்தார்.

மலைப்பாதையில் ஏறுகையில் “ யாரு அது, ஆறுமுகம்?” என்றார் செந்தில், அவர் இதனைச் சரியாகக் கவனிக்கவில்லை.

“தெரியாது சார். அந்தப் பெண் பீதியோட அங்கே இங்கே பாத்துக்கொண்டிருந்த்து. எனக்குச் சந்தேகம். கவுண்ட்டர்ல “ அவங்க பெற்றோர் வந்து கூப்பிட்டுப்பாங்க:ன்னு அலட்சியமாச் சொன்னான். அதான் நானே நின்னு கூப்பிட்டுட்டேன்”

“பாராட்டணும் ஆறுமுகம்” என்றேன் “ யார் பெத்த பிள்ளைய்யோ இப்படிக் கரிசனமா நின்னு அவங்க குடும்பத்தோடு சேர்த்து வைச்சிருக்கீங்களே..”

“தவற விட்டவனுக்குத்தான் சார், அதனோட வலி தெரியும்” என்றார் சில நிமிடங்களின் பின்.

“ஓ” என்றேன் பொதுவாக. என்ன விஷயம், எவ்வளவு ஆழம் என்பது தெரியாமல் உளறிவிடக்கூடாது.

“அஞ்சு வருஷம் இருக்கும். எனக்கு கொஞ்சம் லேட்டாத்தான் கலியாணம் ஆச்சு. சென்னையில ஒரு ட்ராவல்ஸ வண்டியோட்டிக்கிட்டிருந்தேன். எனக்கு ஒரேயொரு பொண்ணு. மல்லிகான்னு பெயர். ஊர்ல ஒரு விசேஷம்னு  குடும்பதோட போயிட்டு, மதுரைல ட்ரெயின் ஏர்றோம்.

’பிள்ளைக்கு பால் வாங்கிட்டு வாங்க’ன்னா என் பொண்டாட்டி. நான் அப்படியே பிஸ்கட் பாக்கெட்டு,தண்ணி பாட்டில் வாங்கிட்டு வர்றப்போ பாக்கறேன், அவ சாய்ஞ்சு, அசந்து போய்த் தூங்கிட்டிருக்கா… மடி வெறுமையா இருக்கு.

“பிள்ளை எங்கடி?”ன்னு கேக்கறேன். விலுக்குனு எந்திச்சு, ’அய்யோ எம்பிள்ளை’ன்னு அலர்றா. பக்கத்துல இருந்தவங்க ‘ அங்க ஒரு வயசான பொம்பளை, ஒரு பிள்ளையை தூக்கிட்டுப் போறதைப் பாத்தேன், இங்க பாத்தேன்’ன்னாங்க. போலீஸ் தேடிச்சு.. கிடைக்கல”

ஆறுமுகம் முகம் இறுகியிருந்தது. முன்னே புகை கக்கிச் சென்றுகொண்டிருந்த டாங்க்கர் லாரியை லாகவமாக வலதுபுறமாகக் கடந்து, குகையில் நுழைந்து, பிளிங்க்கர் இட்டபடி ஓட்டினார்.

என்ன சொல்வதென்று தெரியாது மவுனித்திருந்தேன். குகை ஒரு சாக்காக அமைந்தது. மறுபுறம் வந்தும் ஆறுமுகம் அமைதியாக இருந்தார்.

“கி..கிடைச்சாளா?” என்றேன், ஒரு முட்டாள்தனமான எதிர்பார்ப்பில்.

“இல்ல” என்றார் சலனமின்றி. ”எங்கெல்லாமோ தேடினோம். வழக்கமா இந்த பிள்ளைபிடிச்சுப் போகிற கூட்ட்த்தில் இருந்த ஒருத்தனை, என் நண்பர் மூலமாத் தொடர்பு கொண்டோம். பத்தாயிரம் செலவாச்சு. நாலைஞ்சு பிள்ளைகளைக் காட்டினான். எதுவும் எம்பிள்ளை இல்ல.

பைத்தியமே பிடிச்சிருச்சு சார்” என்றார் சற்றே உடைந்து, சமாளித்துக்கொண்டே 
“ ரோட்டுல எங்கேயாச்சும் ஒரு வயசுக்குழந்தையைப் பாத்தாலே கை பரபரக்க்கும். இது என்பிள்ளையா இருந்துராதா?ன்னு ஒரு நைப்பாசை. இல்லன்னு தெரிஞ்சதும் கடவுளே இதாச்சும் நல்லா இருக்கணும்னு வேண்டிக்கிட்டே நடந்துருவேன்.

எனக்காச்சும் வண்டி ஓட்டறதுன்னு ஒரு வேலை இருந்துச்சு.என் பொண்டாட்டி….    ஒரு தடவ,  கோயில் வாசல்ல, மொட்டையடிச்சு, சந்தனம் அப்பியிருந்த குழந்தை வீறிட்டு அழுதுகிட்டிருந்துச்சு. இவ, ஓடிப்போய் அத எடுத்துப் பால்கொடுக்கப் போயிட்டா. அக்கம்பக்கத்துல இருந்தவங்க கத்தி, பிள்ளையோட அம்மா அடிக்க வந்து… இவ தலைவிரிச்சுப் போட்டு நிக்கறா

“கூறுகெட்டவளே, பிள்ளை பாலுக்கு அழுவுது. நீ சிரிச்சா பேசிட்டிருக்க?”ன்னு அவளை அறையப் போனா. தடுத்து நிறுத்தி வைக்கறேன்.. மத்தவங்ககிட்ட மன்னிப்பு கேட்டுகிட்டே, அவளைப்பிடிக்கறேன்..

சட்டுனு ப்ளவுஸை கிழிச்சிகிட்டா “ பிள்ளைக்குப் பால் தராத இந்த முலை எதுக்குங்க எனக்கு?ன்னுகிட்டே கையால பிச்சு எறியப் பாக்கறா.நகம்பட்டு ரத்த விளாறா அவ மார்பு…
முட்டாப்பயலுக அங்க பத்து பேரு பல்லை இளீச்சுகிட்டு வேடிக்கை பாக்க நிக்கறான். நான் என்ன செய்வேன் சார்? இவளைப் பிடிப்பேனா, கொதிச்சுகிட்டு நிக்கிற அந்த குடும்பத்துக்கு மன்னிப்பு சொல்லி விளக்குவேனா? அல்லது இந்தக் காலிப்பயலுக கூட்டத்தை விரட்டுவேனா?

அதுக்கப்புறம் அவளை டாக்டர்ட்ட கூட்டிட்டுப் போயி, பால் சுரக்காம இருக்க ஊசி போட்டு, தூக்க மருந்து கொடுத்து.. கார் ஓட்டறப்போவெல்லாம் இன்னிக்கு என்ன செஞ்சிருக்காளோ?ன்னு நினைப்பே ஓடும். செல்போன்ல ஒரு கால் வந்தாலே ‘பக்’ன்னு நெஞ்சு அடைக்கும்.

இடம் மாறினா சரியா இருக்கும்னுதான் மும்பை வந்தேன். இப்பவும் பக்கத்துவீட்டுக்காரங்க அவளைப் பாத்துக்கறாங்கன்னு ஒரு தைரியத்துலதான் பூனா வரை ஓட்டறேன். ராத்திரி தங்கற ஊரா இருந்தா , ஒத்துக்கிட மாட்டேன். காசு கொஞ்சமா வந்தாலும் சரி”

“நீங்க மனசத் தளரவிடாதீங்க ஆறுமுகம். எப்படியும் கிடைச்சிருவா. போலீஸ்ல தொடர்ந்து கேட்டுக்கிட்டே இருக்கீங்களா?”

“எப்படிங்க தேடாம இருக்கமுடியும்? காலம் பூராத் தேடுவேன். அதுக்குத்தானே அலையறேன்?”

”காணாமல் போனவர்களின் தகவல்னு அரசோட ஒரு டேட்டாபேஸ் இருக்கு ஆறுமுகம். நான் வேணா அதுபத்தி விவரம் கேட்டுச் சொல்றேன்”

“நல்லா இருப்பீங்க” என்றார் ஆறுமுகம் கண்ணீர் கோத்த கண்களோடு. “   மல்லி, தொலைஞ்சு போறதுக்குக்  கொஞ்சநாள் முன்னாடி, என் கார் சத்தம் வந்தாலே, ப்ப்பா…ப்ப்ப்பான்னு அவசரம அவசரமா வாசல் பாத்து வேகமா முட்டி போட்டு தவழ்ந்து வரும். மல்லி, அப்பா எங்க?ன்னு யாராச்சும் கேட்டா, கையைக் காட்டும். இல்ல, கண்ணை ஒரு மாரி பக்கவாட்டுல சிரிச்சிகிட்டே பாக்கும். இப்ப  எவனை அப்பான்னு கூப்பிடுதோ ?  அவனுக்குக் கொடுத்து வைச்சிருக்கு. எனக்கு இல்ல. அவன் நல்லாயிருக்கட்டும்”
சட்டென வெடித்து அழுதார். எச்சில் தெறித்து, ஸ்டீரிங் வீலில் தெறிக்க, அநிச்சையாக்த் துடைத்தார்.

செந்தில் கைகளை நெஞ்சின் குறுக்கே இறுகக் கட்டியபடி குனிந்திருந்தார். பேச முடியாத கனத்தில், எனது டேப்லட்டில் கவனமின்றி விரல்களை இயக்கினேன்.

நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் பி டி எஃப் விரிந்த்து. வெறுமே முலை சுமந்து.. எங்கோ வாசித்திருக்கிறேன். சில நிமிட்த் தேடலின் பின் பாசுரம் கிட்டியது. குலசேகராழ்வாரின் பெருமாள் திருமொழியில் 7- ஆம் திருமொழி.

தேவகி, கண்ணனின் வளர்ப்பினைத் தான் பெறாத வருத்தத்தில் புலம்புகிறாள்.

கஞ்சன் நாள்கவர் கருமுகில் எந்தாய்! கடைப்பட்டேன் வெறிதே முலைசுமந்து
தஞ்சம் மேலொன்றிலேன் உய்ந்திருந்தேன் தக்கதே நல்ல தாயைப்பெற்றாயே

”வெறிதே முலை சுமந்து” -  தன் மகவிற்குப் பாலூட்டாத முலை வெறிது என்கிறாள் தாய். தன் நிலையைத் தாயெனச் சொல்லவும் எள்ளுகிறாள்.”நல்ல ஒரு தாயைப் பெற்றாயே,மகனே” என்கிறாள்.

மற்றொரு பாசுரம்…,படித்ததும், செந்திலின் தோளைத் தொட்டேன்.  “என்ன?” என்பது போல் அவர் புருவங்கள் சுருங்கின.

பதில் சொல்லாமல் அவரிடம் டாப்லெட்டை நீட்டினேன். அவர் அப்பாசுரத்தை வாசித்திருக்க வேண்டும். சன்னலின் வழியே வெளியே பார்க்கத் தொடங்கினார்.

எந்தையே என்றன்குலப் பெருஞ்சுடரே எழுமுகில் கணத்தெழில் கவரேறே
உந்தை யாவன்?” என்றுரைப்ப, நின்செங்கேழ் விரலினும்
கடைக் கண்ணினும் காட்ட நந்தன் பெற்றனன்
நல்வினை யில்லா நங்கள்கோன் வசுதேவன் பெற்றிலனே

”பெண்கள், கண்ணனைத் தூக்கிக்கொண்டு, உன் தந்தை யார் காட்டு? எனக் கண்ணன், தன் சிறுகைகளாலும், கடைக்கண்ணாலும் காட்டும் அதிர்ஷ்டத்தை நந்தகோபன் பெற்றான்; எங்கள் தலைவன் வசுதேவனுக்கு அது கிடைக்கவில்லையே”

மகவு மறைந்த  வலி , வசுதேவன் தொட்டு ஆறுமுகங்கள் தாண்டி நீளும்.

கார் உறுமியபடி லோனாவாலா மலைப்பகுதியில் ஏறிக்கொண்டிருக்க, செந்தில் வெளியே பார்த்தபடியே வந்தார்.

2 comments:

  1. புத்திர சோகத்திற்கு ஆறுமுகமும் விலக்கல்ல, வசுதேவரும் விலக்கல்ல! கண்களில் கண்ணீருடன் ஆறுமுகத்தின் குழந்தை கிடைக்க வேண்டுகிறேன்!

    ReplyDelete
  2. படிக்க துவங்கி ஒரு சில நிமிடங்களில் முடிக்குமுன் ஒரு விசும்பல் .....அது என்னிடமிருந்தே என்பதை உணர சில நிமிடங்கள் பிடித்தது. வாழ்த்துக்கள் சுதா.

    ReplyDelete