“அப்பா, ஒரு கொஸ்டின்”
பரோடா ரயில்வே நிலையத்தில் ஷதாப்திக்கு காத்திருக்கையில், அருகில் தமிழ்க்குரல் கேட்கத் திரும்பினேன்.
“ப்ரணவ், பேசலாம். நீ மொதல்ல அந்தக் கடையில ஸி 6 கோச் எங்க வரும்னு கேட்டுண்டு வா. ரன்” சொன்னவருக்கு நாற்பது வயதிருக்கும். முன் தலையில் வேகமாக வழுக்கை விழுந்திருந்தது. அவர் பையன் பதின்மவயதினன். வயதுக்கு அதிகமாக மீசை தாடி வளர்ந்திருந்தது. ஒரு பையைத் தோளுக்குக் குறுக்கே அணிந்திருந்தான்.
”அவன் பேசறப்போ ஏன் இப்படி கட் பண்ணறீங்க?” சிடுசிடுத்தப் பெண்மணியின் கையைப்பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்தது ஒரு சிறு பெண்.
“ அறுக்கறாண்டி. ஏதோ பிசிக்ஸ்ல கேள்வியா இருக்கும். இல்ல, பயாலஜில... நான் படிச்சு எத்தனை வருஷமாச்சு? இப்பவும் அவன் என்னமோ அவன் கிளாஸ் டீச்சர்னு நினைச்சுகிட்டிருக்கான்”
சுவாரஸ்யமாக இருக்கவே காதைத் தீட்டினேன். .
”அப்பா, ஸி 6 இங்கதான் வருமாம்.. இப்ப கேக்கட்டுமா?”
“சரி” என்றார் அவர் பெருமூச்செறிநதவாறே.
“ ஹைஸன்பர்க் அன்செர்டனிடி ப்ரின்ஸிபிள்னு படிச்சேன். நாம ஒரு எலக்ட்ரானோட இடத்தைச் சரியா கணக்குப் போட்டோம்னா, அதுனோட சக்தி எவ்வளவு இருக்கும்னு தெரியாதாம். சக்தியைக் கண்டுபிடிச்சா, இடம் சரியா தெரியாதாம். எப்படிப்பா?”
“ம்... அது..அப்படித்தாண்டா. அதுக்குப் பின்னாடி பெரிய கால்குலஸ் கால்குலேஷன்லாம் இருக்கும் தெரியுமோ? சும்மா, இந்த வாழைப்பழம் ஒரு ரூபாய்ங்கற மாதிரி சிம்பிளா சொல்லிட முடியாது.”
“நோ. அப்பா, டெல் மீ! ஏன் எலக்ட்ரான் இந்த இடத்துலதான் இருக்கும்னு சரியா சொல்லமுடியாது? ஒரு பஸ் 60 கிமீ வேகத்துல வந்தா, ஒரு மணி நேரத்துல 60 கிமீ தூரத்துல அதை பாக்க முடியுமே? அதுமாதிரி...”
அவர் பரிதவித்தார். புன்னகையுடன் அவனை ஏறிட்டேன் “ நான் முயற்சிக்கட்டுமா?”
அவர்கள் இதனை எதிர்பார்க்கவில்லை போலும். அவன் சந்தேகமாக என்னைப் பார்த்தான். வந்துகொண்டிருந்த ஷதாப்தி க்றீச்சிட்டு வேகம் குறைந்தது.
“ஸி 6 இங்க நிக்கும்னு போர்டு போட்டுருக்கான் பாரு. அது எங்க சரியா நிக்கறதுன்னு சொல்லு.” என்றவாறே, என் சூட்கேஸை எடுத்தேன்..
கொஞ்சம் முன்னாடி சென்று எஸ் 6 நிற்க, சற்றே ஓடிப்போய் ஏறினோம். நான் பின்னால் இருக்கும் ஸீட்டில் அமர்ந்தேன். இருக்கைகள் காலியாக இருந்தன. .
இரு நிமிடத்தில் அந்தப் பையனும் அவன் அப்பாவும் என் அருகே இருந்த ஸீட்டில் வந்து அமர்ந்தனர்.
“ஸாரி. ஒரேடியாப் படுத்தறான். நீங்க என்னமோ கேட்டுட்டு விட்டுட்டீங்க. அவன் “ அந்த அங்கிள்ட கேக்கணும். நீயும் வான்னு இழுத்துண்டு..”
”ஓகே” என்றேன் “ எங்க நின்னது?”
“கொஞ்சம் முன்னாடிப் போய். சரியா போர்டு போட்ட இடத்துல இல்லை”
“போர்டு சொல்றது, தோராயமா இங்க நிக்கும்னு மட்டும்தான். துல்லியமா ,மில்லிமீட்டர் அளவுக்கு இடத்தை அளவிட முடியாது. கொஞ்சம் வேகம் குறைந்தா, சரியா அந்த இடத்துக்குப் பக்கத்துல நிப்பாட்ட முடியும். வேகமா வந்தா?”
“இன்னும் முன்னாடிப் போய் நிக்கும். கரெக்ட் இடத்துல நிக்காது”
“ஸோ, சக்தி அதிகமா இருந்தா, அதனோட இடத்துல சரியா கவனிக்க முடீயாது. இடத்தை விட்டுட்டு, சக்தியைப் பார்த்தோம்னா, அது போற ஸ்பீட்ல , ஆற்றலை மதிப்பிட முடியாது. இப்ப நாம சந்திரன்லேர்ந்து பாக்கறோம்னு வை. எஸ் 6 போர்டு பக்கத்துல இருக்கிறதை, சரியா அங்கே நிக்கிறதாத்தான் நினைப்போம். துல்லியமாக் கணக்கிடப் போனாப் பலதும் சரியா இருக்காது”
“இதுதான் ஹைஸன்பர்க்....” அவன் இழுத்ததும் இடைமறித்தேன் “ இல்லை. ஒரு உவமையாச் சொன்னேன். இப்ப சந்திரனுக்கும் நமக்குமுள்ள தூரம், சைஸை , நமக்கும் எலக்ட்ரானுக்குமா நீட்டிப் பாரு. ஏதோ புரியற மாதிரி இருக்கும். ஆனா, இது புரிய நீ பலதும் படிக்கணும்”
அவன் ஒரு திருப்தியுடன் சீட்டின் சாய்ந்தான். புன்னகையுடன் அவனப்பாவைப் பார்த்தான்.
“சார், நான் கெமிக்கல் எஞ்சினீயர். அந்த காலத்துல..”
“என்னை விடச் சின்னவர்தான் நீங்க” என்றேன். ”எனக்கு வேற பொழுது போக்கில்லை. ஸ்கூல, காலேஜ்ல புரியாததை வேற விதமாப் படிச்சுப் பாக்கறேன். நான் சயண்டிஸ்ட் இல்லை. சயன்ஸ் ஆர்வலன் அவ்வளவுதான்”
” ரொம்ப அறுத்துட்டானோ? ரொம்ப அதிகமாப் படிக்கறான். பயமா இருக்கு. லூசாயிருவானோன்னு.”
“பெருமைப்படுங்கள்” என்றேன் “ புத்தகம் தேடிப் படிக்கறானே? அதுவே பெருசு”
“அங்கிள். Can you recommend some books in physics?" என்றான் அந்தப் பையன் ‘Feynman லெக்சர்ஸ் படிக்கலாம் “ என்றேன் சற்றே யோசித்து.
இரு நிமிடங்களில் ஐ பேடில் எங்கோ அது கிடைக்குமிடமும், விலையும் ப்டித்து விட்டான் “ அப்பா, என் பர்த்டே கிஃப்ட் இது வாங்கிக்கொடு. ப்ளீஸ்”
அவர் ”சரி”என்றார். அவன் அம்மா அழைக்க எழுந்து போனான்.
“சொல்றேனேன்னு நினைக்காதீங்க. இந்த வறட்டு அறிவியலால் என்ன பயன்? இதுக்கு python,ஜாவான்னு கோடிங் படிச்சா பயன்படும். . H1B ஈஸியா இருக்கும்லயா?” சொன்னவரை ஆயாசத்துடன் பார்த்தேன்.
”அறிவியல் பயன்பாடு எல்லாமே டாலரில் பார்க்கவேண்டாம் என்பது என் கருத்து. அறிவை விட அறிவுத் தாகம் பெரிது: அறிவியலை விட அறிவியல் உணர்வு பெரிது. Quest for knowledge is greater than knowledge itself: Scientific temperament is greater than science. இந்த தேடுதல் அவனைப் புதுவிதமாகச் சிந்திக்க வைக்கும். ஒவ்வொரு சவாலையும் அறிவுபூர்வமாகச் சிந்திப்பான். வாழ்வுத்தரம் வளம்பெறும். அவன் தேடுவதைத் தடுக்காதீர்கள்” அவர் முகம் மாறியது. பிடிக்கவில்லை போலும்.
அவர்கள் அனைவரும் எனது இருக்கையின் பக்கத்து வரிசையில் அமர்ந்தனர்.
மடியில் எதுவே தட்டுப்பட்டது. அவனது தங்கை அருகில் நின்றிருந்தாள். ஒரு ட்ராயிங் புக்கை என் மடியில் வைத்து, சற்றே அசைத்தாள்.
“என்னம்மா?” என்றேன். அது ஒன்றும் பேசாமல் என் கையில் கொடுத்துவிட்டு, ஓடிப்போய் அம்மாவின் மடியில் சாய்ந்து படுத்துக்கொண்டு, வாயைத் திறந்தபடியே, என்னைப் பார்த்துக்கொணிட்ருந்தாள்.
“அவளுக்கு வெக்கம். உங்ககிட்ட அவளும் பேசணுமாம்” என்றார் அவள் தாய்.
பேப்பரில் நீலநிறத்தில் ஒரு சிங்கம் வரைந்திருந்தாள். அதனருகே ஒரு மனித உரு.கண்ணாடியும், தாடியுமாய்.
அவள் என்னைப் பார்த்துக் கைகாட்டினாள்
:அடேயப்பா!, நீலச் சிங்கம் பக்கத்துல அங்கிள் நிக்கறேனா?”
“இல்லை”என்பதாகத் தலையசைத்தது. மீண்டும் என்னை நோக்கிக் கைகாட்டியது.
“நீங்கதான் அந்த ப்ளூ சிங்கமாம். அவளூக்கு பிடிச்ச மிருகம் லயன். பிடிச்ச கலர் ப்ளூ.”
சட்டென நெகிழ்ந்து போனேன். குழந்தைகளிடம் எனக்கு மிக இயல்பாகப் பழக வராது. உள்ளுணர்வு சட்டெனத் தோன்றி ஒரு திரையை இட்டுவிடும். மவுனமாக இருப்பேன் அல்லது விலகிப் போய்விடுவேன். ஒன்றுமே தெரியாத ஒருவனை தனக்குப்பிடித்த லயன், நீலக்கலரில் தோய்ப்பது களங்கமற்ற உள்ளத்திற்கே சாத்தியம். இவளுக்கு எப்படி நன்றிசொல்வது?
“She is seeking your attention.” சிரித்தார் அவளது தந்தை. “ கொஞ்சம் ஷை டைப். நீங்க அவனைப் பாராட்டியதும் தன்னையும் ரெண்டு வார்த்தை பாராட்டிச் சொல்லணும்னு தோணியிருக்கு” என்றார் அவளது தாய்.
எனக்குப் புரிந்தது. தனது மற்றொரு மகவும் கவனிக்கப்படவேண்டும்/ பாராட்டப்படவேண்டுமென்பது தாயின் ஆசை.
“ரொம்ப நல்லா வரைஞ்சிருக்கியே? எனக்கும் லயன் பிடிக்கும். என் வீட்டுல அபிஜித்னு உனக்கு ஒரு அண்ணா இருக்கான். அவனுக்கும் லயன் பிடிக்கும்”
அந்தப் பெண் ஒன்றும் பேசவில்லை. முகமெல்லாம் சிரிப்பாக அம்மாவீன் மடியில் தலை புதைத்துக்கொண்டது.
சிறிது நேரத்தில் உறங்கிப் போனேன். போரிவில்லியில் அவர்கள் முன் புறம் இறங்கிப் போக, அவசரமாக பின்கதவின் வழியே இறங்கி, வெளியே ஆட்டோ பிடிக்கையில் அந்த நீலச் சிங்க ஓவியம் நினைவில் வந்தது. எடுக்காமல் வந்துவிட்டேனே?
அந்தப் பெண் ட்ராயிங் புக்கை எடுத்துச் சென்றிருக்க வேண்டும் என வேண்டினேன். குப்பையில் போகக்கூடாது.
யதார்த்த உலகில் குவாண்டம் பிசிக்ஸ் அறிய முயலும் ஆர்வமும், அன்பை ஈர்க்க முயலும் சிறு முயற்சிகளும் அற்பமாகத்தான் படும்.
https://srimangai.blogspot.in/2018/04/blog-post.html?m=1
https://srimangai.blogspot.in/2018/04/blog-post.html?m=1
No comments:
Post a Comment