Wednesday, October 12, 2005

மெளனத்தின் நாவுகள் -3

யாரோ அழைத்தான ஞாபகத்தில்..

அபியின் சுயம் தேடலும் , சுயம் சார்ந்த வினாக்களும், தேடல் முயற்சிகளும் பற்றிய கவிதைகள், ஆழமிக்க சொற்கள் கொண்டவை. படிமங்களை அவர் தேர்ந்தெடுத்திருக்கிற விதம், ப்ரமிக்க வைக்கிறது.

யாரோ அழைத்தான ஞாபகத்தில் - என்ற கவிதை இதைப்பற்றியதுதான் என இறுதியிட்டுக் கூற முடியாது. நான் உணர்ந்த அளவில்,இது மனிதம் என்னும் பண்புகளின் கலவையினை உருவாகக் கொண்ட ஓர் உயிர் -( அது கடவுளின் தூதனாகவும் இருக்கலாம்..) , சமுதாயத்தால் எதிர்க்கப்பட்டும், புறக்கணிக்கப்பட்டபின்னும் அயராது, எவரோ ஒரிடத்தில் தனது தேவையிருப்பதாக, நம்பிக்கையின் ஊற்றை தன்னில் புதுப்பித்துக்கொண்டு, அதனையே அருந்திக்கொண்டு, புத்துணர்வோடு புறப்படும் ஒரு பயணத்தின் சாராம்சம். அது சந்தித்த சவால்களையும், அதன் முயற்சிகளையும் பற்றிய இக்கவிதையின் சில வரிகளைப் பாருங்கள்.

அதன் தற்சமய நிலை குறித்துச் சொல்லுகையில்
" இறந்த காலத்தின் நிமிஷங்களைக்
கம்பி நீட்டி
எதிர்காலத்தின் ராகங்களை
வாசித்துக்கொண்டே
......
மாரிக்காலத்து ஏதோவொரு இரவில்
யாரோ கிசுகிசுத்து அழைத்தான
ஞாபகத்தில்
என் பயணம் தொடர்கிறது "
என பயணத்தினைக் குறித்துச் சொல்கிறார்.

இதுவரை அனுபவித்த இடர்களோவெனில்..

"எந்தெந்த காற்றையெல்லாமோ
சுவாச ருசி கண்டு
எந்தெந்த மூட்டங்க்களில் எல்லாமோ
மூச்சுத்திணறி

சோகத்தின் சுகக்கருவில்
மறுபடி நுழைந்து வளர்ந்து
மறுபடி வெளியேறி..."

சூரியன் மலைகளிடையே மறைவது என்ற நிகழ்வை,

மேற்குத்தேசத்தின் பொன்மாளிகையில்
வாய்பிளந்து நின்ற
விட்டிலின் வாயில்போய்
விளக்கு விழுந்தபின் "
என்னும் வரிகளில், மானிட வாழ்வில் விளக்குகள்( வழிகாட்டிகள்) விட்டில்களால்( சாமானிய மானிடப்பதர்களால்) அணைக்கப்படுவதை "ரிவர்ஸ் மெட்டஃபர் ( reverse metaphore) கொண்டும் அற்புதமாகக் காட்டியிருக்கிறார். எங்கும் படிமம் கலையவில்லை. எங்கும் வார்த்தைகளின் ப்ரயோகத்தால் கவிதையோட்டம், கரு நீர்க்கப்படவில்லை.

தனது வழிகாட்டுதல் யாருக்கோ தேவைபட்டிருப்பதாக "யாரோ அழைத்த ஞாபகத்தில்" நன்னம்பிக்கை கொண்டதினைக் காரணிக்கிறார் இவ்வாறு.

அடித்தளத்து கண்ணீரைப்
ப்ரகாசமிக்க சிரிப்புகளாக
மாற்றிவரும் இந்தத்திரி
யாருக்கோ தேவைப்பட்டிருக்கிறது.

இதுவே அதன் raison de etre.

இதுவரை தனது வழிகாட்டல்களை சரியாகக் கொள்ளாதாரைப் பற்றிச் சொல்கிறார்.
" உழாமல் விதைத்தும்
விதையின்றியே உழுதும்
ஏமாந்தவர் பிரிந்தபின்.."

தன்னைநோக்கி வருகின்ற எவரையோ ஆவலுடன் தான் காத்திருப்பதை
" இந்த வளமான பூமியைத் தேடி
விழிகளில் மேகங்கள் திரட்டி
இதயக்கூடை நிறைய விதைகளோடு
பரிசுத்தமான நோக்கங்கள் வழிகாட்ட
யாரோ வரும் காலடியோசை!"
ஏசுநாதர் பிறந்தபோது நட்சத்திரங்கள் வழிகாட்ட மன்னர்கள் வந்தது போலவே, இந்தக்காட்சி!

தன்னை இதுவரை அடையாளம் கண்டுகொள்ளாதாரைப் பற்றி வெதும்பிச் சொல்லும் வரிகளைப் பாருங்கள். ஏசுநாதரும், கலீல் கிப்ரானும், "நாம் இவர்களுக்கு எவ்வளவு நன்மை செய்தாலும், இவர்கள் அறியாமல் இருக்கிறார்களே " என இப்படி நினைத்திருப்பார்களோ என ஒரு நிமிடம் சிந்திக்க வைத்துவிடுகிறது.

"
சிலர்
சேற்றில் புதைந்த
என் வேர்களை முகர்ந்துவிட்டு
ஏக்கத்தோடு விரிந்த என் மலர்களை
நாடாது நடந்தனர்

என் சுவடுகளை
என் கைவிரல்களால் பதிக்கிறேன்
என்பதை அறியாமல்
என் பாதங்களின் பழுதுகளைப்
பரிகசித்துப் போனார்கள்"

எத்தனை அழுத்தமான வார்த்தைகள்.!

No comments:

Post a Comment