Wednesday, March 29, 2006

நெஞ்சு பொறுக்குதில்லையே....

பாரதி பற்றிய இந்த கட்டுரை திண்ணையில் கிடைத்தது.
அறிவியல் கட்டுரை/ஆய்வுக்கட்டுரை எழுதுபவர்கள் முதலிலேயே ஒரு முடிவுக்கு வந்துவிட்டு, பின் அவர்கள் முடிவுக்கு சாதகமாக வரலாற்று/அறிவியல் நிரூபணங்களைத் திரித்து பயன்படுத்துவதென்பது வழக்கமாகிவிட்டது. பாரதியையும் இவர்கள் விட்டுவைக்கவில்லை போலும்.
உங்கள் கருத்துகளை திண்ணையிலும் பிற ஊடகங்களிலும் தெரிவியுங்கள். பாரதியைக் குறித்து எவ்வளவோ நல்லது சொல்லுவதற்கு இருக்க, "விருப்பு வெறுப்பின்றி" நடுநிலையாக எழுதுவது போல அமைக்கப்பட்டிருக்கும் இதுபோன்ற கட்டுரைகள் வருவது வருத்தற்குரியது. தமிழகம் தந்த ஒரு மானுடம்பாடியின் வாழ்க்கை வலியறியாது அலட்சியப்படுத்துவது இதுவே இறுதியாக இருக்கட்டும்.

8 comments:

  1. சுதாகர் அவர்களே,

    வ.உ.சி.க்கு இருந்த "தெளிவு" பாரதிக்கு இல்லை என்பது மிகத் தெளிவு.

    பின்நவீனத்துவ-வாதம் பாரதியின் உன்னத ஒளிவட்டத்தை உடைக்கவே செய்யும்!

    அந்தக் கட்டுரையின் அதே கடுமையோடு பாரதியை எல்லோரும் பார்க்க வேண்டிய அவசியம் இல்லைதான். அவருடைய முழுப் பின்புலத்தையும் பார்த்து அதன் பிறகு அவருடைய 'அரசியல்-சமூக' நடவடிக்கைகளைப் பார்க்க வேண்டுமே ஒழிய, மிகக் கறாராகப் பார்ப்பது சரிவருமா எனத் தெரியவில்லை.

    அவருடைய 'இந்து தேசியம்' சாவர்க்கரினின்றும் வேறுபட்டது என்பதும் தெளிவே; அவர் தன்னுடைய 'சமய நம்பிகைகளின்' உரத்தின் மூலம் இந்திய தேசியம் என்கிற உன்னதக் கனவை கட்டியெழுப்பி விட முடியும் என்று 'நம்பிக்' கொண்டிருந்தார். ஆனால் - 'பெரியார்' போல அவர் ஒரு சமூக விஞ்ஞானி அல்லர்.

    உணர்வு பூர்வமாக அவர் சமத்துவத்தை விரும்பினாலும், அவர் தன்னுடைய சமூக-அரசியல் நடவடிக்கைக்காக பற்றிக் கொண்டிருந்த 'சமய நம்பிக்கைகள்' அவருக்கு முழுத் தெளிவைத் தரவில்லை. அது அவரது குற்றமும் இல்லை.

    அவர் நோக்கங்கள் உன்னதமாக இருந்தாலும், அவருடைய 'நடைமுறைச் சூழல்' அவரைப் பள்ளத்தை நோக்கியே இழுத்திருக்கின்றன.

    "மறவன் பாட்டின்" அவர் பல 'முக்கிய' உண்மைகளைச் சொல்லுகிறார்! எனவே முழுவதுமாக அவரை ஒரு சனாதனியாகவும் சித்தரித்து விட முடியாது.

    "சூத்திரனுக்கு ஒரு நீதி - தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி
    என்று சாத்திரம் சொல்லிடுமாயின் அது சாத்திரமன்று சதி என்றும் கண்டோம்"

    என்று சரியாகவே கண்டறிந்திருந்தார் பாரதி.

    ஆனால் பிந்நவீனத்துவம் மூலம் அவரை எடைபோட்டால் அது அவரை "சூழ்நிலைக் கைதி" என்று காட்டத்தான் செய்யும் சில சமயங்களில்.

    மறைமலை அடிகள், அயோத்திதாசர் - போன்றோர் மீதும் 'சாதீயவாதிகள்' என்கிற குற்றச்சாட்டு உள்ளதைக் கணக்கில் கொள்ளவேண்டும்.

    எனவே - contextual ஆகத்தான் இந்தக் குற்றச்சாட்டுகளைப் பார்க்க வேண்டும். மேலும் இது குறித்து சிந்திக்கவும் ,பேசவும் நிறைய உள்ளது.

    பி.கு :

    நீங்கள் 'சுட்டி' குறிப்பிட்டிருக்கும் 'மன்ற மையமான' Forumhub-இல் இந்தத் திரியைப் பாருங்கள் :

    http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?t=969&postdays=0&postorder=asc&start=0

    (from Post dated : Tue Apr 26, 2005 12:34 pm post by Sudhaama)

    அங்கே ஒரு பயனர் பாரதியின் "சூத்திரனுக்கொரு நீதி...." வாசகத்தை Quote ஆக வைத்திருந்ததை ஆட்சேபித்து நீக்கியதையும், அதை(அந்த பாரதியின் வரிகளை)ஒரு பார்ப்பனர் - நாற்ற்மெடுத்த மீன் னென்றும் இன்னும் பல வசவு வைவதையும் பார்க்கலாம்!

    ஏன் - பாரதியின் வரிகளை பார்ப்பனர் மற்றும்தான் குற்றம் சொல்லலாமா? பாப்பானுக்குப் பிடிக்காவிட்டல் அதை மறைத்து விடலாமா?

    இதை 'அங்கே' யார் கேட்பது???

    ReplyDelete
  2. neo ( merpheus!)
    வந்ததற்கும் , தங்கள் கருத்தை இட்டதற்கும் நன்றி. பாரதியை இக்கட்டுரையின் கோணம் கொண்டு மட்டுமே நோக்க முயன்றேன். கட்டுரையின் அடியோடும் எண்ணம், கோணம் இவையில்தான் என் மறுத்தல்கள். எழுதுவது அவரவர் சுதந்திரம். அதிலல்ல எனது கருத்து...என்ன எழுதவருகிறோம் என்பதை முன்கூட்டியே தீர்மானித்தபின் அதன் சார்பாக சில வரிகளை மட்டும் எடுத்துக்கையாண்டிருப்பது வேதனைக்குரியது. இது நவீனத்துவமல்ல என்பதை நீங்களும் அறிவீர்கள்.
    பாரதியை அவன் வாழ்ந்த காலத்தில், அவன்பட்ட இடர்களுக்கும் இன்னல்களூக்கும் இடையே நம்மையும் நிறுத்திப்பார்க்கவேண்டும். One needs to be emphatic to the situation. வரலாறு இன்றும் அவ்வாறுதான் எழுதப்படுகிறது.
    இன்று சுலபமாக எழுதலாம்... தனியொரு மனிதனுக்கு உணவில்லையேல் ஜெகத்தினை எரித்திடுவோம் என... வயிறு பசியில் சுருளும்போது மற்ற தனியொரு மனிதனை நினைப்பதும், ஜெகத்தை எரிக்கும் ஆவேசம் கொள்வதும் சாதாரணக் கவிஞர்களால் இயலாத காரியம். வேல்ஸ் இளவரசருக்கு வரவேற்பு என எழுதுவதும், வெள்ளைப்பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே எனப் பள்ளுப்பாடுவதும் ஒரே ஆளால் முடியுமானால் அது பாரதியாகத்தான் இருக்கமுடியும். இது கோழைத்தனமல்ல. ஒரு கவிஞனின் பரந்த இதயத்தின் வெளிப்பாடு என அறிதல் அவசியம்.
    நீங்கள் சொன்னது சரி. பார்ப்பனவாதமல்ல பாரதி கொண்டது. ஆயின் வ உ சியின் பலம் வேறு பலவீனம் வேறு. அவரையும் பாரதியையும் ஒரே தராசில் வைத்துப்பார்ப்பது சரியல்ல என்பது எனது எண்ணம். ஒரு கவிஞனின் வேகமும், வீச்சும் வேறு. ஒரு சிந்தனையாளரின், வழக்கறிஞரின் விவேகமும் வேகமும் வேறு. இதுவும் நீங்கள் அறியாததல்ல. பாரதியை ஒரு பார்ப்பன ஆதிக்கவெறி கொண்டவனாக அக்கட்டுரை சித்தரிப்பது சரியல்ல என்பது என் எண்ணம்.
    எழுதுபவர்கள் முதலில் சரியாக சிந்திக்கட்டும். பின் எழுதட்டும். படிக்க ஆயிரம் பேர் காத்திருக்கிறோம். ஆரோக்கியமான சிந்தனைகள் பரிமாறப்படட்டும். தனிமனித குற்றச்சாட்டுகள், விஷ விதைகள், வெறுப்புக் குமிழிகள் வேண்டாமே?
    ஒவ்வொரு காலத்திலும் மனிதன் மனம் மாறக்கூடும். நான் ஒரு காலத்தில் கடவுள் நிந்தனையிலிருந்து இப்போது agnostic என்னுமளவில் மாறியிருக்கிறேன். இது சரியா தவறா என்பதல்ல கேள்வி. காலக்காற்று நம்மில் பல மாற்றங்களைத் தோற்றுவிப்பது இயல்பு. பாரதி எழுதியதையும் அவனது காலம், அனுபவித்த இடர்கள் குறித்து தெளிவாக அறிந்தபின் அவன்மேல் நமது அனுமானங்களைச் சொல்லலாம்.

    பாரதியை வெறுத்தவர்கள் பலர் உண்டு.. பார்ப்பனரும் அவரல்லாதவரும்.. அவன் வாழ்ந்த காலத்திலேயே எதிர்ப்பு பலவகையிலும் பாரதிக்கு இருந்ததுண்டு. ஆயின் இதுபோல எழுதப்படுவது புதிதாக இருக்கிறது எனக்கு. மன்ற மையத்தில் வந்த கருத்துகளை அங்கு எதிர்க்கலாமே? நாம் முன்பு பலதும் எழுதி வளர்ந்த மடிதானே அது?

    எழுதுங்கள். உங்கள் பேனாக்களின் உரசல்களாவது கேட்கட்டும்" என்றார் ஆத்மாநாம். பேனா உரசல்கள் நாராசமாய் ஒலிக்க வேண்டாம் என்பதே எனது தாழ்மையான கருத்து. உரக்கச் சொல்லவேண்டிய விடயங்கள் பல உண்டு. அவற்றைச் சத்தமாகவே சொல்லுவோம். பாரதி பற்றி இது மட்டும்தானா எழுதமுடிந்தது? "பாரதி பார்ப்பான்" என ஜாதி ஏன் நாம் இன்னும் பார்க்கிறோம்? வ.உ.சியையும், சிவாவையும் இதுபோல எத்தனைபேர் நடுநிலையாக எழுதுவார்களோ?

    ReplyDelete
  3. அன்பின் சுதாகர்,

    பொதுவாக பாரதியார் வாழ்ந்த சூழ்நிலைகளை வைத்தே இதை எடை போட வேண்டும் என்று கூறி உள்ளீர்கள்.இது பொதுபடையான ஒரு வாதம்தான்.

    கற்பகவிநாயகத்தின் அந்த கட்டுரையில் உள்ள பல தகவல்கள் எனக்கு புதிய தகவல்கள். ஒரு படைப்பாளியின் எழுத்து வேறு.வாழ்க்கை வேறு என்றெல்லாம் பார்க்கமுடியாது.

    இந்த கட்டுரையை முன்வைத்து நீங்கள் முரண்படும் விஷயங்களை எழுதலாம்.அவர் முன்முடிவுகளோடு எழுதினால் நீங்களும் முன்முடிவோடுதான் இதை அணுகுகிறீர்கள் எனலாமே.

    பாரதியார் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தார் என்ற தகவல் எனக்கு சிறுவயதிலே தெரிந்திருந்தாலும் என்னுடைய காமன் ஸென்ஸ் அதை தவறு என்று நினைக்கவில்லை.( கான்டெக்ஸ்டுவல்)

    ஆனால் இந்த கட்டுரையில் ஒரு பிள்ளை தன் மகளை தன் மகனுக்கு கல்யாணம் செய்ய கேட்ட தகவல்கள் உண்மையாயின் அங்கே பாரதி சரிகிறான் என்றே நான் சொல்லுவேன்.

    அவருடைய தடுமாற்றங்களுக்கிடையே அவர் மனம் இயங்கிய விதத்தை வைத்து நீங்கள் இதை கட்டுடைத்து பார்க்கலாம்.

    மற்றபடி புத்திசாலிகள் நேர்மையற்றவர்களாக இருப்பதற்கு நாம் வாழும் சூழலில் ஏகப்பட்ட உதாரணங்கள் உண்டு. (இது பாரதியார் மீது என் விமர்சனம் அல்ல)

    ReplyDelete
  4. அன்பின் முத்து
    பொதுப்படையான வாதமில்லை. பொதுவான நிலைப்பாடு வேண்டுமெனவும் சொல்லவில்லை. ஒரு கட்டுரை எழுதப்படும்போது ஒரு holistic approach( not necessarily neutral or generalistic) இருக்கவேண்டுமென்பது அவசியம். இல்லாது போனால் முன்முடிவுகள் இருக்க சாத்தியம்.
    எனக்கு என்ன முன்முடிவுகள் இருக்கக்கூடும் என நினைக்கிறீர்கள்? அக்கட்டுரை எழுதுபவருக்கு இருக்கலாம் இல்லாது இருக்கலாம். பாரதியாரை கடவுளாக்கும் எண்ணமோ அன்றி அவர் விமர்சனத்திற்குப் புறம்பானவர் என்றோ நான் சொல்லவில்லையே?
    நீங்கள் சொன்ன வாதம் குறித்து...
    இது குறித்து இணையக் குழுக்களில் நண்பர்கள் பலர் நன்று எழுதியுள்ளனர். நான் எழுதுவது அதன் அப்பட்டமான காப்பி அல்லது தரம் குறைந்த விவாதமாகவே இருக்கும். எனவே உங்களை அங்கு படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நான் முன்னே குறிப்பிட்டது போல நான் விவாதத்தில் ஈடுபட முடியாது. எனது அறிவு அதில் குறைவே. எனக்குத் தெரிந்ததை மட்டுமே எழுதுகிறேன். எழுதுவேன்.

    பாரதி சாதி பார்க்காதே என்று சொன்னதற்காக , தன் சாதியற்ற மற்ற எவர் கொடுத்த மண வேண்டுதலையும் ஏற்றுக்கொள்ள வேண்டுமா? கேட்டவரின் குடும்ப சூழ்நிலை அவருக்குப் பிடிக்காது போயிருக்கலாம் ( அக்கட்டுரையில் கீழே படியுங்கள். ஒரு காரணம் புரிபடலாம்). தன் மகளுக்கு யாரைத் திருமணம் செய்துவைக்கவேண்டுமென ஒரு தந்தை தீர்மானிக்க அவனதுவிருப்பு வெறுப்பும் காரணமே. இங்கு பாரதி என்ற தந்தையைப் பார்க்கவேண்டுகிறேன்.
    "எழுதுவதையும் வாழ்க்கையையும் வேறுபடுத்திப்பார்க்க முடியாது" எனச் சொல்வது சரியாகாது நண்பரே. எந்த தருணத்தில் வாழ்ந்த வாழ்க்கையையும் எதை எழுதினார் எப்போது எழுதினார் என்பதையும் சேர்த்துப் பார்க்கவேண்டும். வாழ்க்கை, சூழ்நிலை பொறுத்தும் அமைகிறது. சில படைப்புகளூக்கும் படைப்பாளியின் சில வாழ்க்கைக் கலைகளுக்கும் (phases) முரணாக இருக்கலாம்.. எதையும் எதையும் எப்போது முடிச்சுப் போடுகிறோம் என்று நோக்கவேண்டும்.

    இதைத்தான் "வேல்ஸ் இளவரசருக்கு நல்வரவு " என எழுதியதையும் " வெள்ளைப்பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே" என்று எழுதியதையும் அவர் எழுதிய நேரத்திற்கு பொருந்த வைத்துப் பார்க்கவேண்டும் என்கிறேன். நேராக வைத்தால் என்னமோ அவர் நடிக்கிறார் எனவே அறியாமல் நினைக்கத் தோன்றும். இது கட்டுரைகளுக்கும் பொருந்தும்.

    பரலி சு. நெல்லையப்பர் பாரதி எழுதிய சிலவற்றை தவிர்த்தார் எனப் படித்திருக்கிறோம். கவிஞர் தன் நிலையிலிருந்து கீழ் வந்து எழுதினாரா? எது அவரது "நிலை"? நெல்லையப்பர், சமுதாயத்தின் ஏற்றுக்கொள்ளுதல் என்னும் அளவுகோலில் சில பாடல்களைத் தொகுப்பிலிருந்து தவிர்த்தார் எனக் குற்றச்சாட்டு உண்டு. தவறென இன்று வாதிடுதல் எளிது. அன்றைய நிலையில் நம்மை நிறுத்திப்பார்த்து குற்றம் சாட்டவேண்டும்.
    நன்றி.

    ReplyDelete
  5. என்னிடம் முன்முடிவு கிடையாது என்று நீங்களே கூறும்போது நான் எதுவும் அதைப்பற்றி சொல்வதற்கில்லை.
    //பாரதி சாதி பார்க்காதே என்று சொன்னதற்காக , தன் சாதியற்ற மற்ற எவர் கொடுத்த மண வேண்டுதலையும் ஏற்றுக்கொள்ள வேண்டுமா? கேட்டவரின் குடும்ப சூழ்நிலை அவருக்குப் பிடிக்காது போயிருக்கலாம் //
    அவர் அந்த சம்பந்தத்தை மறுத்ததற்கு நீங்கள் புது காரணம் புனைவதாக தோன்றுகிறது.பாரதி அந்த காரணத்தை சொல்லவில்லை போல் தெரிகிறது...ஏனென்றால் இன்னொருவரை பாரதி அடிக்க கூறிய காரணம் இதிலிருந்து முரண்படுகிறதே...
    //"எழுதுவதையும் வாழ்க்கையையும் வேறுபடுத்திப்பார்க்க முடியாது" எனச் சொல்வது சரியாகாது நண்பரே. எந்த தருணத்தில் வாழ்ந்த வாழ்க்கையையும் எதை எழுதினார் எப்போது எழுதினார் என்பதையும் சேர்த்துப் பார்க்கவேண்டும்//
    எழுதுவதையும் வாழ்க்கையும் குறைந்தபட்சம் அவர்கள் எடுத்துக்கொண்ட அடிப்படை நெறிகளின் படியாவது நாம் கம்பேர் செய்யவேண்டும்..இதில் பாரதியாரின் phase ஐ ஆராய்ந்து எந்த காலத்தில் அவர் தவறாகவும் எப்போது அவர் திருந்தி எழுத ஆரம்பித்தார் என்றும் நீங்களோ யாராவதோ சொன்னால் நான் சந்தோஷப்படுவேன்.இது போன்ற விஷயங்களில் அன்றைய நிலை என்ன இன்றைய நிலை என்ன?

    //இதைத்தான் "வேல்ஸ் இளவரசருக்கு நல்வரவு " என எழுதியதையும் " வெள்ளைப்பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே" என்று எழுதியதையும் அவர் எழுதிய நேரத்திற்கு பொருந்த வைத்துப் பார்க்கவேண்டும் என்கிறேன்.//
    நீங்கள் சொன்ன phase concept இதற்கு பொருந்தலாம்.ஆனால் சாதி சம்பந்தப்பட்ட பிரச்சனைக்கு பொருந்தாது என்று தோன்றுகிறது.
    கட்டுரைகள் எழுதப்படும் முறையையே நீங்கள் கேள்விக்குட்படுத்துவது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. இப்படி பார்த்தால் யாருமே எந்த கட்டுரையும் எழுத முடியாதே என்று தோன்றுகிறது.

    ReplyDelete
  6. கட்டுரைகள் எழுதப்படும் விதத்தை கேட்பதில் என்ன தவறிருக்கிறது முத்து? கட்டுரைகள் என வரையறுக்கப்பட்ட வை சனநாயகப்போக்குடன் , holistic approach உடன் எழுதப்படவேண்டும் எனக் கூறுவது எப்படி தவறாகிறது?
    நீங்கள் சொன்ன இடத்தில் இரு கேள்விகள் உள்ளன.
    1. பாரதி மறுத்ததின் உண்மையான காரணம் என்ன? அவர் சொன்னதாக சொல்லப்படுவது உண்மைதானா? பாரதி வாழ்க்கையை ஆய்வு செய்தவர்கள் ஆதாரத்துடன் சொல்லவேண்டிய விடயம் இது. இது குறித்து முன்பே ஒரு விவாதம் வலையில் நடந்ததாகப் படித்த நினைவு. நேரம் கிடைக்கும்போது அதன் தகவல் தருகிறேன்.

    2. ஒரு ஒழுங்கீனம் நடக்கிற வீட்டில் தனது மகள் செல்ல வேண்டும் என எப்படி ஒரு தந்தை விரும்புவான்? ஒரு மனிதனாகவும் நாம் பாரதியைப் பார்க்கவேண்டுமல்லவா?

    வ.உ.சி வழக்கில் சாட்சி சொல்லச்சென்ற பாரதி தஞ்சாவூரின் பின் எங்கு சென்றார் என்னும் கேள்விக்கும் வலையில் ஒரு பாரதி அறிஞர் எழுதியதாக ஞாபகம்.
    நீங்களும் சற்று தேடுங்கள். கிடைத்தால் எனக்கும் சொல்லவும்.
    அன்புடன்
    க.சுதாகர்.

    ReplyDelete
  7. //பாரதி வாழ்க்கையை ஆய்வு செய்தவர்கள் ஆதாரத்துடன் சொல்லவேண்டிய விடயம் இது //

    i agree with this sudha

    //கட்டுரைகள் என வரையறுக்கப்பட்ட வை சனநாயகப்போக்குடன் , holistic approach உடன் எழுதப்படவேண்டும் //

    if that is so,what is the properties for such a article and in what way the said article lacks holistic approach?

    ReplyDelete
  8. Muthu,
    Will write on this a bit later - preferably offline.

    ReplyDelete