Sunday, January 06, 2008

சமூக இடைவெளி -1

சமூக இடைவெளி-1

ஒரு மாதம் முன் டிஜிட்டல் டிவைட் ( Digital Divide)குறித்து என் நண்பர்கள் விவாதித்துக்கொண்டிருந்தனர். " இதைவிட தீவிரமாக நாம் ஆலோசிக்கவேண்டிய இடைவெளி ஒன்று இருக்கிறது" என்றேன் நடுவில் புகுந்து. "தெளிவாக எனக்கு அதனைப் பெயரிடத் தெரியவில்லை. சமூக இடைவெளி என்பது பொருத்தமாக இருக்கலாம்" என்றேன் ஒரு முன்னுரையாக.

நவம்பர் மாதத்தில் ஒரு சனிக்கிழமை.. அலுவலக வேலைகலை முடித்துக் கிளம்பிக்கொண்டிருந்தேன். திடீரென செல்போன் சிணுங்கியது. நண்பன் ராகேஷ்.
" எப்படி இருக்கிறாய்? நான் அடுத்தவாரம் அமெரிக்கா போகிறேன். இன்று என் ஆபீஸ் வருகிறாயா?பார்த்து நாளாகிறது." அழைப்பைத் தட்டமுடியாமல் அவன் அலுவலகம் விரைந்தேன்.

சிலர் வரவேற்பறையில் அமர்ந்திருக்க, ராகேஷ் கான்ஃபெரன்ஸ் அறையில் இருந்தான். " இன்னும் அரைமணி நேரம் வேலை. ஒரு நேர்முகத்தேர்வு. நீயும் உட்கார். உனது தனிப்பட்ட அனுமானங்கள் எனக்கு உதவும்." நானும் அமர்ந்தேன். இளம்பொறியாளர்களுக்கான தேர்வு. ஒரு வருடம் , 2 வருடம் அனுபவம் கொண்ட இளைஞர்கள்....
ஒரு நபரின் தேர்வு முடிந்ததும், நானும் ராகேஷும் அவ்விளைஞனைக் குறித்து சிறிது பேசிக்கொண்டிருந்த போது, திடீரெனக் கதவு திறத்நது. அடுத்த நபர் நுழைந்தார்... சொல்லாமலே.
ராகேஷ் முகம் கோபத்தில் சிவந்தது. "வில் யூ ப்ளீஸ் கெட் அவுட்?". அவ்விளைஞன் தடுமாறிப்போனான். "சார்" என்றான் புரியாமல். ராகேஷ் இம்முறை கத்தினான்.."ஐ ஸே, கெட் அவுட்"
அவ்விளைஞன் அவமானத்தில் சிறுத்தான். "சாரி" என்றவாறே வெளியேறினான்.
" யார் இவன்?" ராகேஷ் கோபம் தணியவில்லை. " கதவைத் தட்டிவிட்டு நுழையவேண்டும் என்ற அடிப்படை நாகரீகம் கூடத் தெரியாதவர்கள்..."

நான் அவனது பயோடேட்டாவைக் கவனித்தேன். பெயர் தெரியாத சிற்றூரில் இருக்கும் பொறியியல் கல்லூரி, நாந்தேட் என்னுமிடம் அருகே, (மராத்வாடா பல்கலைக்கழகம்?)
"சரி விடு" என்றேன் ராகேஷிடம். "அவனை அழைத்து தேர்வு நடத்து". " முடியாது" என்றான் ராகேஷ் முறைத்தபடி. "இவனையெல்லாம் வைத்துக்கொண்டு என்னால் குப்பை கொட்ட முடியாது.வேலை பயிற்றிக்கலாம். எதெல்லாம் சொல்லித் தருவதென்று ஒரு அளவு இல்லையா?"
"அவன் அவனது சூழ்நிலையின் கைதி." என்றேன். " இது இம்மாணவர்களுக்கு புது அனுபவம். அவன் வாழும் ஊரில் யார் இதெல்லாம் சொல்லித்தருவர்கள்?"
ராகேஷ் ஒரு கணம் நிதானித்தான்.
"இது நீ படித்து வந்த காலம் இல்லை சுதாகர்" என்றான். அவனுக்கு எனது அனுபவம் தெரியும்..

தொடரும்

No comments:

Post a Comment