Saturday, August 27, 2005

காக்கைச்சிறகினிலே

அண்மையில் , அழகுசாதன மற்றும் நுகர்வோர் பொருட்கள் தயாரிக்கும் பிரபல பன்னாட்டு நிறுவனத்தின் மார்கெட்டிங் துறையின் மூத்த அதிகாரி ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன்."போன வருடத்திலிருந்து வருவாய் அதிகரித்திருக்கிறது. முக்கியமாக மூன்றாவது, நாலாவது குவாட்டர் மாதங்களில் நல்ல விற்பனை"என மகிழ்ச்சியாகச் சொன்னவர், ஒரு வார்த்தையில் கடுப்பாக்கினார்.
" தெரியுமோ, புதிய சிகப்பழகு சாதனங்களை இந்த முறை நாங்கள் அதிகமாக விளம்பரம் செய்தது தென்ன்னகத்தில். அதில்தான் வருமானம் கூடியது. முக்கியமாக கறுப்பாக மக்கள் இருக்கும் தமிழ்நாடு, ஆந்திராவில் தான் வியாபாரம் அதிகம்.." கடுப்பானேன் நான்."கறுப்பு சிகப்பு எல்லாம் ஜாதி பார்ப்பது போல. இதில் என்ன இருக்கிறது?வேறு காரணங்கள் இருக்கலாம். சும்மா சொல்லாதீர்கள்."
" வியாபாரமே நிறத்தில்தான் சார்" என்றார்.
"எத்தனை முறை நீங்கள் சிகப்பாக இல்லையா? எனக்கேட்கிறோமோ, அத்தனைக்கு மக்கள் எங்கள் விளம்பரத்தைப் பார்க்கிறார்கள். சிகப்பழககு கிரீம்,பவுடர் வாங்குகிறார்கள் "
ஓரளவு இதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது என்றாலும், மேலும் மறுத்தேன். " இது அநியாயம். மக்களுக்கு இல்லாத ஒரு தாழ்வு மனப்பாங்கை வளர்த்து உங்கள் பொருளை விற்கிறீர்கள். சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்"
சிரித்தார். "நாங்கள் வளர்க்கவில்லை. கண்டுபிடிக்கிறோம். முக்கியமாக ஒரு புள்ளிவிவரத்தைக் காட்டுகிறேன். வெளியே சொல்லக்கூடாது "என்றவர் ஒரு மார்கெட்டிங் நிறுவனத்தின் ஆய்வுக் கட்டுரையைக் காட்டினார் ( confidential என்பதால் கம்பெனியின் பெயரையும், அவரது பெயரையும் குறிப்பிடவில்லை)

தமிழ்நாட்டில்,ஆந்திராவில் 14-18 வயது மாணவர்கள் மாணவிகளிடம் கேள்விகள் கேட்கப்பட்டிருக்கிறது. நகரங்கள் வருமான,போக்குவரத்து, செய்தித் தொடர்பு, மக்கள் நெருக்கம், பள்ளி கல்லூரிகளின் எண்ணிக்கை போன்ற பல அளவுகளின் அடிப்படையில் மூன்றாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. அதில் மாணவர்கள், வேலைக்குச் செல்லும் கல்யாணமாகாத இளைஞர்/பெண்கள், ஒரு குழந்தை கொண்ட குடும்பங்கள் என தரம் பிரிக்கப்பட்டு, ஆய்வுக் கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றன.

உங்களுக்கு தாழ்வு மனப்பான்மை வளர்க்கிற, உங்களை தொய்யச் செய்கிற முக்கியமான காரணத்தைக் கூறுமாறு ஒரு கேள்வி. அதற்கு "ஆங்கிலத்தில் பேச இயலவில்லை " என 70% கூறியிருக்கின்றனர். "நான் கறுப்பாக இருக்கிறேன்" என்பதை 45% மாணவர்கள் குறையாகச் சொல்லியிருக்கின்றனர். ( சிலர் பல காரணங்களை வரிசைப்படுத்தியதால் இரு தரப்பிலும் அவர்களது காரணங்கள் சேர்க்க்பட்டிருகின்றன).
"சிகப்பாக இல்லை எனப் பெண்களைப்போலவே ஆண்களும் நினைக்கின்றனர். குறிப்பாக +2, கல்லூரி மாணவர்கள் இதில் அதிகம். " என்றார் நண்பர்.
"மாணவிகள் சிலர், தாங்கள் கறுப்பாக இருப்பதால் சில மாணவிகள் தங்களிடம் பேசுவதில்லை எனவும் , மேடைப்பேச்சு, நாடகம் போன்றவற்றில் ஆசிரியர்கள் தங்களைச் சேர்ப்பதில்லை எனவும் குறிப்பிட்டிருந்தனர்" என்கிறது அந்த ஆய்வு.
கிராமச்சூழ்நிலையில் உள்ள பள்ளி கல்லூரிகளில் இது அதிகமில்லை. நடுத்தரமான நகரங்கள், சென்னை, கோயமுத்தூர், விசாகப்பட்டினம், நெல்லூர் என வரும் நகரங்களில் இது அதிகம்.
"கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு பெயர்நத குடும்பத்தில் வளரும் மாணவர்கள், மாணவிகளிடம் இம்மனப்பாங்கு அதிகம் காணப்படுகிறது. "குடும்பச் சூழ்நிலையும் நகரச் சூழலும் மாறுபடும் போது உண்டாகும் தடுமாற்றம் இது " என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள்.
" முகப்பூச்சு பவுடர் உபயோகிக்கும் ஆண்கள் ( மாணவர்கள் ) தமிழ்நாட்டிலும் ஆந்திராவிலும் அதிகம் " என்கிறது ஆய்வு. "இது வாசனைக்கோ அன்றி வியர்வைக்கோ இல்லை. முகம் வெளுப்பாகத் தோன்றவேண்டும் என்ற அடிப்படை எண்ணமே இந்த உபயோகத்திற்குக் காரணம்" என்றார் நண்பர். விரைவில் ஆண்களுக்கு என விசேஷமாக முகப்பூச்சு பவுடர் கொண்டுவர சில கம்பெனிகள் யோசித்துக்கொண்டிருக்கின்றன. மார்க்கெட் அப்படி.

மேலும் வரும்...

No comments:

Post a Comment