Sunday, August 14, 2005

சுழன்றும் ஏர்ப்பின்னதுலகம்

சுழன்றும் ஏர்ப்பின்னதுலகம்
--------------------------------------

இன்றைய ஹிந்துஸ்தான் டைம்ஸ்-ஸில் ஆர்ப்பாட்டமில்லாமல் ஒரு கட்டுரை வந்திருக்கிறது. நமது 70 களின் பசுமைப்புரட்சி பற்றி இன்றும் மார்தட்டிக்கொள்வதின் அபாயத்தை விளக்கியிருக்கிறார் அதன் ஆசிரியர் சைக்கத் நியோகி. 70 களின் தீவிரம் இன்று இல்லை என்பது வருந்தத்தக்க நிதர்சனமான உண்மை. உணவுப் பொருட்கள் இந்தியாவில் பற்றாக்குறை ஏற்படும் காலம் வெகுதொலைவில் இல்லை என்கிறது அக்கட்டுரை.
CMIE -ன் உணவுப்பொருள் விளைச்சல் குறித்த 2004-05 -ன் புள்ளிவிவரங்கள் கவலைதருகிறது.
உதாரணமாக அரிச உற்பத்தி 1.3% குறைவாகவும், பருப்பு போன்றவைகளின் உற்பத்தி 1.4% குறைவாகவும் இருப்பது(2003-2004 உற்பத்தியுடன் நோக்கும்போது) குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஒரு சராசரி இந்தியனுக்கு கிடைத்த உணவுப்பொருள் 1990-ல் 510 க்ராம். இது 95-ல் 495 கிராம் ஆகவும், 2003-ல் 436 ஆகவும் குறைந்து வருகிரது. இதேபோல பருப்பு வகைகள் 91-ல் 41.6 கிராம் எனவும் 2003-ல் இது 29.1 கிராம் எனவும் குறைந்து வந்திருக்கிறது.
உணவுப்பொருட்களின் இறக்குமதி அதிகரித்திருக்கிறது. விளைநிலங்களின் அளவு கூடுவதில்லை எனவும், நிலங்களின் உற்பத்தித்திறன் குறைந்து வருகிறது எனவும் விவசாயத் துறை வல்லுநர்கள் கவலை தெரிவித்திருக்கின்றனர். விளைநிலங்கள் , ஒரு மனிதனுக்கு 1991 ல் 0.34 ஹெக்டேர்இருந்தது. இது 2001 -ல் 0.31 ஹெக்டேர் ஆகக் குறைந்திருக்கிறது. இருக்கும் நிலத்தில் அதிக மகசூல் தரும் விளை பயிர்களை வளர்ப்பதில் உள்ள பெரும் தடைகல் - விவசாயிகளுக்குத் தேவையான செய்திகள், சரியான ஊடகங்கள் வழியே சென்று சேருவதில்லை. விவசாயத் துறையில் வல்லுநர்கள் அளவில் தேக்கம் ஏற்பட்டிருக்கிறது (M.s.Swaminathanக்கு அடுத்த தள அமைப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கையில் குறைவு ). மேலும் ஊக்கத்தோடு புது முயற்சிகள் எடுப்பதில் உள்ள தயக்கம் ( இஸ்ரேலுடன் ஏற்பட்ட விவசாயத் தொழில் நுட்பப் பரிமாற்ற அமைப்புகளின் முயற்சிகள் என்னவாயிற்று?), உலக அளவில் பன்னாட்டு நிறுவனங்களின் சுயநலப்பாங்கும், அவற்றிற்கு எதிரான புரட்சிகளும் விவசாயத்துறையில் புதுக்காற்று வீசுவதற்கு நல்ல தளம் அமைக்கவில்லை.
இந்நிலையில், பண்பளவில் மாற்றப்பட்ட பயிர்கள் ( genetically modified குத் தமிழில் என்னவென தெரியவில்லை, மன்னிக்கவும்), பருத்தியைத் தாண்டி பிற பயிர் ரகங்களில் விவசாயிகளைக் கவரவில்லை. இதிலும் மோன்ஸோன்ண்டா நிறுவனத்தின் பண்புமாற்றப்பட்ட பயிர்களின் விதைகள் குறித்தான வாதங்கள் இன்னும் முற்றுப்பெறவில்லை.
நோய்களையும், புழுக்களையும் எதிர்க்கும் புதுப்பயிர் ரகங்கள் பல பயிர்களில் இந்தியாவில் வருவதில் உள்ள சிரமங்களைக் குறித்து அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டிய தருணம் இது.
நமது இளைய தலைமுறை, விவசாயத்திலும் ஈடுபாடு கொள்ள வேண்டிய தூண்டுதலை பள்ளிகளும், கல்லூரிகளும் அளிக்கக் கடமைப்பட்டிருக்கின்றன. கல்லூரி மாணவர்கள் பெரும்பாலும் "இஞ்சினீயர், டாக்டர், மென்பொருள் வல்லுநர் " என்னும் கனவுகளோடு மட்டுமே இருப்பதில் "ஒரு தலைமுறையே தவறு செய்துவிட்டதோ?' எனத் தோன்றுகிறது.
விவசாயம் குறித்து இளைய தலைமுறைக்கு புதிய கருத்துக்களையும், அதன் முக்கியத்துவத்தையும் விளக்குவற்கு இன்னும் நேரம் கடந்துவிடவில்லை. தொலைத்தொடர்புத் துறையில் ஏற்பட்ட புரட்சி வேண்டாத mms-ல் நின்றுவிடாமல், கிராமத்தில் வேளாண்மையின் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படுத்த முடியுமானால், நமது வளர்ச்சி சீராக அனைத்துத் துறைகளிலும் ஏற்பட வாய்ப்பு உண்டு.

No comments:

Post a Comment