Sunday, July 31, 2005

உயிர்களிடத்து அன்பு வேணும்

உயிர்களிடத்து அன்பு வேணும்
---------------------------

எனது பக்கத்து வீட்டுக்காரர் இந்திரநில் பாண்டே சொந்தத் தொழிற்சாலை வைத்து நடத்திவருபவர். செவ்வாய்க்கிழமை பெய்த மழையில் தொழிற்சாலையில் மிகச்சேதம். அன்று மதியம் கிளம்பி இரவு தடுமாறி வீட்டுக்கு வந்து சேர்ந்தார்(வீட்டிலிருந்து அலுவலகம் 3 கி,மீட்டர்தான். மூன்று கிமீ செல்வதற்கு பத்து மணிநேரம் ஆகியிருக்கிறது).

மனிதர் அடுத்த நாள் , அருகில் இருக்கும் ஆரே பால்பண்ணைப் பகுதியில் ( இது நமது ஆவின் போல மும்பைக்கு பால் வழங்கும் மிகமுக்கியமான நிறுவனம்) மாட்டியிருந்தவர்களை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றி நெடுஞ்சாலை வரை கொண்டு விட்டுவந்தார். ஆரே நிறுவனப் பகுதியில்தான் தொலைக்காட்சி நிறுவனங்கள் ( பாலாஜி டெலெபிலிம்ஸ் - ஏக்தா கபூர் புகழ்) ஸ்டூடியோக்கள் வைத்திருக்கின்றன. ராயல் பாம் ( Royal palm) போன்ற நவீனக் கட்டுமானங்கள் வந்துகொண்டிருக்கும் அழகிய இடம்.இது மலைக்காட்டுப் பகுதி. பால்பண்ணையில் ஆயிரக்கணக்கான மாடுகள் கட்டிவைக்கப்பட்டிருக்கும்.

அன்று, வெள்ளம் வருமுன்னரே மாடுகளையும் பாதுகாப்பான பகுதிகளுக்கு எடுத்துச்சென்றிருக்கவேண்டும். செய்யவில்லை. குறைந்தபட்சம், அவற்றைக் கட்டியிருக்கும் கயிறுகளையாவது அவிழ்த்துவிட்டிருக்கவேண்டும். அதுவும் செய்யவில்லை. விளைவு மிகப் பயங்கரம்.

"குறைந்தது 700 மாடுகள் செத்து மிதக்கின்றன" என்றார் பாண்டே, மூக்கில் கட்டியிருந்த கைக்குட்டையை அவிழ்த்தபடியே. அதிர்ந்துபோனோம்.
"இது பரவாயில்லை. மற்ற தபேலா ( தனியார் மாட்டுப் பண்ணை)க்களில் கூட்டம்கூட்டமாக மாடுகள் மரித்திருக்கின்றன. அவற்றை புதைப்பதற்குக்கூட யாரும் வரவில்லை. நாற்றம் அப்படி குடலைப்பிடுங்குகிறது" என்றார் பாண்டே, தோளைக்குலுக்கி அந்தக்காட்சியை நினத்து அதிர்ந்தபடி. தோல் உரிக்கக் கொண்டு போகும் வசாய் போன்ற இடங்களிலும்" இனிமே மேற்கொண்டு சடலங்களைக் கொண்டுவராதீர்கள்" எனச் சொல்லிவிட்டார்கள். சடலங்களின் நிலையும் , துர்நாற்றமும் அப்படி. இன்னும் உடல் ஊதிய நிலையில் ஆரே காட்டில் சிக்கிக் கிடக்கின்றன பல சடலங்கள். இதில் மனித சடலங்களும் அடக்கம். யார் போய் இக்காட்டில், இம்மழையில் எடுப்பது?

உயிர்வதைத் தடுப்பு தன்னார்வல நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் தபேலா உரிமையாளர்களை அணுகியபோது புகைப்படம் கூட எடுக்கவிடாமல் துரத்தப்பட்டார்கள். செய்தித்தாள்கள் மூன்றாம்பக்கத்தில் இச்செய்தியைப் பிரசுரித்தன.

முக்கியமாக , இச்சடலங்கள் அழுகுவதால், நோய்கள் பரவக்கூடிய அபாயம் இருக்கிறது ( பரவிவிட்டது என்கிறார்கள்). அழுகும் சடலங்களைத் தின்ன காட்டுவிலங்குகள் அருகிலிருக்கும் சஞ்சய் காந்தி தேசியப் பூங்கா, மலைக்காடுகளிலிருந்து வருவதற்கும் சாத்தியம் இருக்கிறது.

"போய்யா, அவனவன் உயிருக்குப் பயந்து ஓடிக்கிட்டிருக்கான். இதுல மாட்டை காப்பாத்தணுமாமில்ல?" என்று சொல்லிக்கொண்டிருந்தார் தமிழ்க்காரர் ஒருவர் , நேற்று காய்கறிக்கடையில்.
பாரதி இருந்திருந்தால் இன்னும் வருத்தப்பட்டிருப்பான்.

2 comments:

 1. படிக்கவே மனசுக்குக் கஷ்டமாப் போச்சுங்க.

  மாடா இருந்தாலும் பொறக்கற இடத்துக்குத் தகுந்தாப்புலேதான் மதிப்பு போல.

  இங்கே ஒரு பண்ணையிலே வெள்ளம் வந்தப்ப மாடுங்களைக் கவனிக்காம விட்டுட்டாங்கன்னு, எஸ்பிசிஏ வழக்குப் போட்டு உரிமையாளர் 20 ஆயிரம் டாலர் ஃபைன் கட்டினார்.

  ReplyDelete
 2. அன்பின் துளசி,
  நீங்கள் சொன்னது மிகச்சரியே. மாடுகள் செல்வம் என்பதால் வீட்டுக்கு வரும் மருமகளை " மாட்டுப்பெண்" எனப் பெயரிட்ட ஆயர் பண்பாடு எப்படி சீரழிந்திருக்கிறது? இந்த மாடுகளையே நம்பி வாழும் மக்கள் செய்யும் செயலல்ல இது....

  ReplyDelete