பேய்-யெனப் பெய்யும் மழை
-------------------------
குஜராத்தில் அங்கலேஷ்வரில் நேற்று அலுவலக மீட்டிங் -கில் இருந்தபோது வீட்டிலிருந்து செல்போனில் அவசரமாக அழைப்பு வந்தது. சாதாரணமாக இவ்வாறு வருவதில்லை.
" நீங்கள் இன்னும் மும்பைக்கு கிளம்பிவிவ்லையென்றால் அங்கேயே இருந்துவிடுங்கள். மும்பையில் பயங்கர மழை..நெடுஞ்சாலையில் போக்குவரத்து நின்றுவிட்டது.மின்சாரம் துண்டிக்கப் பட்டுவிட்டது." என்ற செய்தி அதிர்ச்சியாக இல்லையெனினும் கவலை தந்தது. எப்படிப் போயிச்சேரப்போகிறோம்? என்பதை விட, ஏங்கே, நடுவழியில் நின்று விடுவோமோ? என்ற பயம் தொத்திக்கொண்டது.
" ஒரு துளிக் கூடப் பெய்யலை சார். சும்மா பயமுறுத்தியிருக்காங்க" என்ற டிரைவர், விரார் என்ற இடம் வந்தபோது, மழையின் திடீர்த் தீவிரம் கண்டு பயந்துதான் போனான். " முன்னால ஒண்ணும் தெரியலை சார். நிறுத்திரலாமா? " என்றவனின் குரலில் அச்சம் தெரிந்தது. ராட்சத லாரிகள் பாறைகளில் முட்டிக்கொண்டு அங்கங்கே சுளுக்கி நின்றிருந்தன.
போரிவல்லி வந்தபோது நெடுஞ்சாலையில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை லாரிகளும், கார்களும் நிறுத்தப்பட்டிருந்தன. " சாயங்காலம் நாலு மணிக்கு இங்கே நிறுத்தினேன் " என்றார் ஒரு கார் ஓட்டுனர். நான் அவரிடம் கேட்டபோது இரவு பத்து மணி. ஓரமாக பல கார்கள் நிறுத்தப்பட்டு ப்லிங்கர்கள் அணைந்து எரிந்துகொண்டிருந்தன. உரிமையாளர்கள் வண்டிகளை அப்படியே போட்டுவிட்டு கால்நடையாகப் போயிருந்தார்கள். பேருந்துகள் மிகச்சிலவே இயங்கியிருந்தன. புறநகர் ரயில்கள் நின்றுவிட்டிருந்தன. மக்கள் அங்கங்கே இறங்கி சுமார் மூன்று நான்கு ரயில் நிலையங்கள் நிறுத்தத்திற்கான தொலைவு நடந்து வந்துகொண்டிருந்தார்கள் சாரை சாரையாய். ஒரு நபர் பத்து கிலோமீட்டர் தொலைவு நடந்திருக்கக் கூடும்- அதுவும் கொட்டுகிற மழையில்.
"இப்படி ஒரு மழை பத்து வருசமாகப் பார்த்ததில்லை" என்றார் எங்கள் காலனி இரவுக் காவலாளி." இங்க வீட்டுப் பக்கம் கழுத்தளவு தண்ணி. குழந்தைகளைக் கூட்டிகிட்டு என் பொஞ்சாதி எங்க போயிருக்குன்னு தெரியலை. விடிஞ்சதும் தேடப் போணும்" என்றார் கவலையிடன்.
அலுவலகங்களில் பலர் தங்கிவிட்டனர். இதில் மின்சாரம் வேறு துண்டிக்கப்பட்டுவிட்டது. பள்ளிக் குழந்தைகள் வகுப்புகளிலேயே தங்கியிருக்க, அம்மா ,அப்பாகள் அலுவலகங்களில்.
செல்போன்கள் வேலை செய்யவில்லை. மாட்டிக்கொண்ட மக்கள் வீடுகளுக்குத் தொடர்பு கொள்ள முயன்று வெறுப்புல் திட்டித் தீர்தார்கள். "அவசரத்துக்கு உதவலைன்னா இது எதுக்கு?" என்ற ஞனானோதயம் மழைச்சாரலின் அடியில் உதிக்க, பலரும் ஒரு ரூபாய் பி.சி.ஓ க்களைத் தேடிப் போனார்கள். ஆறுதலான செய்தி, எம்.டி.என்.எல் -இன் பொதுத் தொலைபேசிகள் இயங்கின என்பதுதான். வீடுகளில் கார்ட்லெஸ் போன் வைத்திருந்தவர்கள் மின்சாரம் இல்லாது , போன் இருந்தும் உபயோகமில்லாமல் தவித்தனர்.
ந்யூயார்க்கில் மின்சாரம் இல்லாது 2003-இல் மக்கள் தவித்தபோது, செல்போன்கள் நின்றூவிட, இதே நார்மல் தொலைபேசிகள் மட்டும் இயங்கின என்ற செய்தி ஞாபகத்திற்கு வருகிறது. எம்.டி.என்.எல், பி.ஏச். என்.எல் இதை விளம்பரத்திற்கு பயன்படுதலாம்.
21 மணி நேரத்திற்குள் சான்டாகுரூஸ் விமான தளத்தில் 833 மிமீ மழை பதிவாகியிருந்தது. புற நகர் கட்டுமானங்கள் தாங்கும் சக்திக்கு இது மிக மிக அதிகம். இருப்பினும், மக்கள் பீதியடையாமல் பொறுமையாக சாலையில் வரிசையாக்ச் சென்றனர் என்பதும், கார்கள், லாரிகள் சாலையில் நின்றுகொண்டிருந்த மக்களை யார் எவரென்ப் பார்க்காது செல்லும் அளவு தூரத்திற்கு ஏற்றிச் சென்றனர் என்பதும், சில கடைகளி, வெளியே போகமுடியாமல் மாட்டிக்கொண்ட நபர்களுக்கு டீ, ரொட்டி தந்து உதவினர் என்பதும் மும்பையில் இன்னும் மனிதம் வாழ்ந்துகொண்டிருக்கிறது என்பதற்கு சான்று.
இதையெல்லாம் விட, இன்று காலை ,இவ்வளவு மழைக்கும் பிறகும் அலுவலகம் செல்ல 5.30 பஸ்ஸிற்காகக் காத்துநின்ற பெண் பளீரெனக் கண்ணில் பட்டாள் - மும்பையில் மட்டுமே இது சாத்தியம்.
A very good narration - reporting Style.
ReplyDeletereminded me of the nightmare experience when I was caught unaware in a Goa Rain..
//இன்று காலை ,இவ்வளவு மழைக்கும் பிறகும் அலுவலகம் செல்ல 5.30 பஸ்ஸிற்காகக் காத்துநின்ற பெண் பளீரெனக் கண்ணில் பட்டாள் - மும்பையில் மட்டுமே இது சாத்தியம்.//
ReplyDeletevery true.
இது போன்ற நேரடி பதிவுகளால் வலைப்பதிவுகள் தனி சக்தி வாய்ந்த ஊடகமாகின்றன. நன்றி சுதாகர்!
ReplyDeleteமழையும் இவ்வளவு சீற்றத்துடன் பெய்யும் என யார் நினைத்திருப்பொம்? இத்தனை பேரை காவு வாங்கி விட்டதே..
மும்பையில் இருந்த வருடங்களில் மிகவும் அதிசயித்த விஷயம்.உழைப்பதற்கு தயங்காத மக்கள்!!.மும்பை விரைவில் மீண்டு விடும்!.
ReplyDelete..aadhi
இது தான் உங்கள் வலைப் பதிவிற்கு நான் வந்திருக்கின்ற முதல் தடவை. இந்தக் கட்டுரையை மிகவும் ரசித்தேன். பாராட்டுகள்.
ReplyDeleteலாஸ் ஏஞ்சல்ஸ் ராம்
விவரமான பதிவு. நீங்க அன்னைக்கே வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தீங்களா?
ReplyDeleteஎன்றும் அன்புடன்,
துளசி.
பின்னூட்டம் அளித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள். இரு நாட்களாக தொலைபேசித் தொடர்பும் இணையத் தொடர்பும் விட்டு விட்டு கிடைப்பதால் உடனடியாக எழுதவியலவில்லை. தாமதத்திற்கு மன்னிக்கவும்.
ReplyDeleteதுளசி அவர்களே, திண்டாடித் தடுமாறி ஒருவழியாக இர்வு 2 மணிக்கு வீடு போய்ச்சேர்ந்தேன்.