Saturday, September 17, 2005

காக்கைச் சிறகினிலே -2

காக்கைச் சிறகினிலே -2

நேற்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் பச்சி கர்க்காரியாவின் கட்டுரை

சிந்தனையைத் தூண்டுவதாக இருந்தது. அழகு சாதனப் பொருட்கள் விற்பனைக்காக நடத்தப்பட்ட ஒரு விழாவில் பெண்ணுரிமை இயக்கத்தின் தீவிர ஆதரவாளர்கள் கலந்துகொண்டதைக் கண்டித்து அமைந்திருந்த அக்கட்டுரையின் நியாயமான கோபங்கள் சம்பந்தப்பட்டவர்களை குற்ற உணர்வில் ஆழ்த்தியிருக்கும்.

கறுப்பாக இருப்பது ஏதோ குறைபாடு என்பது போலவும், அவ்வாறு இருப்பவர்கள் சிவப்பாக்கும் க்ரீம்கள் உபயோகிப்பதன் மூலம் வையத்தில் வாழ்வாங்கு வாழ்வர் என்பது போலவும் அமைந்து வரும் விஷமத்தனமான விளம்பரங்களின் சொந்தக்காரர்கள் நடத்தும் விழாக்களில் அதுவும் சிகப்பு மட்டுமே அழகு எனக்காட்டும் அழகுப்போட்டிகளில் பெண்ணியவாதிகள் கலந்துகொண்டு கைதட்டுவது எந்தவிதத்தில் அவர்களின் தார்மீகப் பொறுப்புணர்வைக் காட்டுகிறது?

'உழைத்துப்படித்து முன்னேறுவது என்பதைவிட சிகப்பாக இருந்தால் போதும்; அழகாக இருந்தால் போதும்; பேரும் புகழும் தானாகவே தேடிவரும்; சினிமாவில் வாய்ப்பு கிட்டும்' என்பது போல அமைந்து வரும் விளம்பரங்கள் பன்னாட்டு நிறுவனங்களால் பெருமளவில் பரப்பப்பட்டு வருகின்றன. (இது குறித்தான எனது வாதங்களை அண்மையில் எழுதினேன்). இதில் சினிமாக்காரர்களும் ( ப்ரியதர்ஷன் போன்ற இயக்குனர்களுக்கெல்லாம் இது வேணுமா?)அடக்கம்.

பள்ளி கல்லூரியில் பயிலும் மாணவிகளின் மனதைத் திசைதிருப்பும்படி அமையும் இவ்விளம்பரங்கள் ஒரு புறமென்றால், மற்றொரு சோப்பு விளம்பரம் ஒரு படி மேலே செல்கிறது. பெண்ணை சோப்பு வாங்க அனுப்பும் அம்மா, அய்யோ இவள் வேறெதாவது சோப்பு வாங்கிவந்துவிட்டால், சருமத்துக்கு கேடாகும்.. அப்புறம் அவளுக்கு கல்யாணமே நடக்காது ( எப்படி இருக்கிறது கதை? பெண்ணுக்கு வயது ஏழு இல்லை எட்டு இருக்கும்) என அல்லாடுவதாக அமைந்திருந்தது. யார் சொன்னார்களோ "கல்யாணமே நடக்காது" என்னும் வரிகள் இப்போது மாற்றப்பட்டிருக்கின்றன. என்ன செய்தாலும் விஷம் விஷம்தானே.

இது போன்ற விளம்பரங்களும் அவை விற்கும் விஷங்களும் முற்றிலும் புறக்கணிக்கப் படவேண்டும். ஒரு தலைமுறையின் சிந்தனையையே மாற்றும் கொடிய சக்திகள் இவை.

2 comments:

  1. "Times of India"ல் இப்படி ஒரு கட்டுரை வந்திருப்பது ஒரு முரண் நகை.
    சிவப்புத்தோல், அழகு பசை மற்றும் மூண்றாம் தர விழுமியங்களை வைத்து வியாபாரம் நட்த்தும் அந்நிறுவணம் ஏறக்குறைய ஒரு மஞ்சள் பத்திரிகை நிறுவணமே...

    சாத்தான் வேதம் ஓதுவது போலிருக்கிறது...

    ReplyDelete
  2. ஜேகே,
    டைம்ஸ் ஆப் இந்தியாவின் இரண்டு முகங்கள் குறித்து நீங்கள் சொல்வதை நான் முற்றிலும் ஒத்துக்கொள்கிறேன். நூறு பக்கங்கள் ஒரு நாளைக்கு படிக்கத் தருவதாக விளம்பரம் செய்யும் அப்பத்திரிகை அதில் எத்தனை பக்கங்கள் படிக்கக் கூடியதாக இருக்குமென்பதைச் சொல்லாது ( சொல்ல முடியாது). பாம்பே டைம்ஸ் என நாலு பக்கங்கள் வரும் பாருங்கள். கிட்டத்தட்ட மஞ்சள் பத்திரிகை ரகம்தான்.
    ஆயின், பச்சி கர்க்காரியாவின் இக்கட்டுரையை அச்சேற்றியதில் பத்திரிகை தர்மத்தை சற்றே வெளிக்காட்டியிருக்கிறது டைம்ஸ்.

    ReplyDelete