Monday, May 08, 2006

எந்தூரு உங்களுக்கு?!

என்னமோ எனக்கு ஒரு ESP இருக்கு என்பதில் என்னைவிட என் மனைவி மிக உறுதியாக நம்புகிறார். யாராவது தமிழ்க்காரர் போலத் தெரிந்தால் அவர் திருநெல்வேலி மாவட்டக்காரரா இல்லையா என்பதை அந்த மனிதர் பேசாமலேயே ஊகித்துவிடுகிறேன் என்பதில் அவருக்கு ஆச்சரியம். திருநெல்வேலிக்காரர்கள் பேசவே வேண்டாம். நான் பேசுவதைப் புரிந்துகொண்டாலே அவர் அந்த ஊர்க்காரர்தான் என்பது தெளிவாகத் தெரிந்துவிடும். பேந்தப் பேந்த முழித்து " என்ன சொன்னீர்கள்?" எனக் கேட்டால் தாமிரபரணித்தண்ணீர் குடித்தவரில்லை என்பது தெளிவு. இதுதான் ரகசியம்.

இரண்டு மாதம் முன்பு எங்கள் அபார்ட்மெண்ட் முன்னால் புதிய இட்லிக் கடை முளைத்திருந்தது. சக்கர வண்டியில் இட்டிலி, தோசை எனச் சுடச்சுடக் கிடைப்பதை ஜன்னலின் வழியே சமயம் கிடைக்கும்போது வேடிக்கை பார்த்திருப்பேன். உ.பி,பிஹார்க்காரர்களுக்கும் என்னமோ இப்பவெல்லாம் இட்லி ஒரு தினசரி உணவாகிவிட்டது போலும். அவர்கள்தான் நிறையப்பேர் வாங்கிச்செல்கின்றனர். வண்டியில் கிடைக்கும் சாப்பாடு என்றாலும் சுத்தமாக இருக்கும்.

போனவாரம், அக்கடையைத் தாண்டிச் செல்லவேண்டியதாயிற்று. "சரி ,இட்லி எப்படித்தான் இருக்கிறது எனப் பார்ப்போமே" என நினைத்து அருகில் சென்றபோது, அவர்கள் தமிழில் பேசிக்கொண்டது காதில்விழுந்தது. "ரெண்டு இட்லி கொடுங்க" என்றேன். தட்டு கழுவிக்கொண்டிருந்த சிறுவன் சட்டென நிமிர்ந்தான். "சரி.வேலையாவட்டும். சோவாறாதல" என்ற கடைக்காரர், சட்டென சுதாரித்துக்கொண்டு, "ரெண்டு நிமிசம் ஆகும் சார். சட்னி வருது" என்றார் அடையாளம் காட்டாத தமிழில். எனக்குப் புரிந்தது -தன் ஊர் தெரியாமல் இருக்க நினைக்கிறார் என்பது. ஏன் எனப்புரியவில்லை.
ச்ட்டென்று " உங்களுக்கு எந்தூரு?" என்றேன்.
"திருநவேலி" என்றார் இயல்பாக. மீண்டும் சுதாரிக்க எத்தனித்தார். சிரித்தேன்.
" நம்மூர்க்காரக பேச்சுதான் தெளிவா தெரிஞ்சிரும்லா? எதுக்கு இப்படி மாத்துதீரு?" என்றேன்.
மனிதருக்கு முகம் மகிழ்ச்சியும் பயமும் கலந்ததாக விகசித்தது.
"இல்லேண்ணாச்சி.. அது இங்க ஆளுகளுக்குத் தெரியவேண்டாம்னு முதலாளி சொன்னாருல்லா அதான்" என்றார் தயக்கமாக.
" என்ன பயம்? 'திருநவேலிக்காரன்னா யாராச்சும் சீவிருவம் வே-'ன்னாகளா?" நான் சுவாரசியாமானேன். இட்லி கிடக்குது. பிறவு பாப்பம்.
" இதுக்கு முன்னால கடை போட்டிருந்தான்லா.. களக்காட்டுக்காரன்... எக்கச்சக்கம் கடன் வாங்கிட்டு ஓடிட்டான். எங்க தொலைஞ்சான்-னு தெரியல. அதுலேந்து நம்மூர்க்காரன்-னு தெரிஞ்சா வியாபாரம் முடங்குது. ரெண்டு ஏடு இட்டிலி போவலைன்னு வைங்க.. நேரே அது வயித்துல அடிக்கி. அதான்"
"என்னவே.. சளம்புதீரு? பீஹார்க் காரனுக்கு திருநவேலின்னா தெரியுமா, திருவனந்தபுரம்னா தெரியுமா? அவனுக்கு மதறாசி-ன்னு மட்டும்தான் சொல்லத்தெரியும். சும்மா சொல்லாதீரும்" எனச் சீண்டினேன்.
"இல்லேண்ணே. இங்கன நம்ம ஊர்க்காரங்க இருக்காகல்லா... சேலம், தருமபுரிப்பக்கம் ஆளுங்க. எவனோ **யான் ஏமாத்திட்டு ஓடிட்டான் -னு சொன்னா அதுக்கு நானா கிடைச்சேன்? எவங்கிட்ட சொல்லமுடியும்? அதான் வேண்டாம்னு"
நியாயமாகப்பட்டது எனக்கு. இருந்தாலும் மண் வாடையடிக்காமல் ஒரு திருநெல்வேலிக்காரன் பேச்சா? ஆறவில்லை.
" விடுமய்யா. நான் வரும்போது நம்ம பாசைல பேசணும் நீரு. என்னா? " என்றேன்.
"சரி: என்றார் வெட்கத்துடன். " எப்படி கண்டுபிடிச்சீங்க?" என்றார் வெகுளியாய்.
" எந்தூரு?ன்னு கேட்டேம்லா? நீரு என்ன சொன்னீரு?" என்றேன்.
"திருநெவேலி-ன்னேன்" என்றார்.
" இந்த கேள்வி புரிஞ்சுதுன்னு வைச்சுக்கோரும்.. நீரு நம்மூரு ஆளாத்தான் இருக்கணும். எவனும் 'எந்தூரு?'-ங்க மாட்டான். 'எந்த ஊரு?' ன்னுதான் கேப்பான். நம்மூரு ஆளைத்தவிர" என்றேன்.
"ஆமா" என்றார் சிந்தனையில் ஆழ்ந்தபடி. எவன் எவனெல்லாம் இப்படி பிடிக்கப்போகிறானோ? என்ற கவலையாயிருக்கலாம்.
சரி.. நிசமாச் சொல்லும்..திருநவேலிக்கு பக்கத்துல எந்தூரு ?" என்றேன் விடப்பிடியாய்.
"வள்ளியூர்"
"வள்ளியூர் பக்கம் எந்தூரு?' என்றேன்.
மனிதர் நெளிந்தார். 'திருக்குறுங்குடி - ன்னு கேட்டிருக்கீயளா?' என்றார் தயங்கியபடி.. கிராமம் பேர் கேட்கிறானே என்ற வெட்கம் போலும்.
" வே.. என்ன அப்படி கேட்டுட்டீரு? நம்பி கோயில் இருக்குல்லா அதானே? கைசிக ஏகாதசி நடக்குமே? அதானவே?" என்றேன்.
மனிதருக்கு ஆச்சரியம் " தெரியுமா? நாங்க அந்தூர்க்காரங்கதான். அது எங்க கோயில்லா" என்றார் பெருமிதம் பொங்க.
"நல்லாவே தெரியும். மலை நம்பி கோயில் போயிருக்கிறீரா?" என்றேன்.
" எத்தன வாட்டி போயிருக்கம்? அடேங்கப்பா. என்ன அப்படி கேட்டுட்டீய? அரிசி, புளியெல்லாம் எடுத்துகிட்டு மேல ஏறுவம். காட்டாத்துல முங்கிட்டு, கூட்டாஞ்சோறு போட்டுத் திம்பம்லா?" மனிதர் அக்கால நினைவுகளூக்கு ஒரு நிமிடம் போய்விட்டார்.
சட்னி ஒரு தூக்குச் சட்டியில் வந்து விடவே, எங்கள் உரையாடல் கலைந்தது. சூடான இட்லியும், காரமான பூண்டு சற்றே அதிகமான சட்னியும்.. நெல்லை மேம்பாலத்து அடியில் ஒரு இட்லிக்கடை உண்டு அப்பவெல்லாம். பார்வதி தியேட்டரில் நைட் ஷோ படம் பார்த்துவிட்டு நடந்து வந்து , சூடான அந்த இட்லியை ஒரு கை பார்க்கும் அனுபவத்தின் வேண்டாத நினைப்பும் வந்துதொலைத்தது.
" இன்னும் சட்னி வேணும்னா கேளுங்க தயங்காம. . கேட்டியளா?" என்றார் உரிமையுடன்.
" சரிண்ணே. உங்க பாசைலேயே இனிமே பேசுங்க. பயப்படாதீங்க. என்னா?" என்றேன். சிரிப்புடன் தலையாட்டினார்.
"ராத்திரி பத்து மணி வர கடை திறந்திருப்பம். சொல்லிட்டீய-ன்னா பய வூட்டுல வந்து கொடுத்திருவான்." என்றவர் "லே, சாருக்கு சாம்பார் ஊத்தலயா இன்னும்? வெறிச்சிகிட்டிருக்கான் எங்கனெயோ.. முட்டா****தி. நீயெல்லாம் செவுடு பிஞ்சாத்தான் சரி வருவலே" என்றார் மனிதர் பயப்படாமல் தெள்ளத்தெளிவாகத் திருநெல்வேலித்தமிழில்..
சட்னி நாக்கில் மட்டுமே சுள்ளென உரைத்தது..இட்லியுடன் சுவையாக நெஞ்சுக்கருகில் இறங்கியபடி..
அந்தத் தமிழ்போலவே.

28 comments:

 1. நீரும் அப்பப்ப இப்டி எழுதும்வே!

  (சரிசரி இப்படி ஒருமைல விளிச்சிருக்கேன்னு சூடாயிராதீங்க. அதென்னமோ திருநெல்வேலித் தமிழைக் கேக்கும்போது மனசு சந்தோஷமாயிருது.)

  இப்படித்தான் ஒவ்வொரு வட்டாரவழக்குத் தமிழுக்கும் சொல்லுறேன்னு யாராவது வந்து சொன்னா, நம்பிராதீங்க. ;)

  ReplyDelete
 2. நன்றி மதி,
  சொல்லிட்டீயள்லா.. எழுதிருவம்.
  ஒருமைல எங்க விளிச்சிருக்கீங்க? நீர் , வே என்பது மரியாதை சொட்டுற வார்த்தைல்லா. ஆழ்வார்களையும் நாயன்மார்களையுமே நீர் என்றே விளித்த வட்டார வழக்குத்தமிழ் இது. ஓய் என்றும் வேய் என்றும் திரிந்து வே ஆன மரியாதையால்லா விளிச்சிரிக்கீங்க... திருநெல்வேலித் தமிழ்ல ஒண்ணு கெட்டவார்த்தை சொட்டும் இல்லேன்னா மரியாதை கொட்டும். வைச்சா குடுமி சிரைச்சா மொட்டைங்கற மாதிரி:)
  சுப்பிரமணிய சிவா , வ.உ.சிதம்பரம்பிள்ளையை "லே சிதம்பரம்" என பொதுக்கூட்டங்களிலேயே அழைத்ததாக வரலாறு உண்டு. லே என்பது எல்லே என ஆண்டாள் அவள் தோழிகளை திருப்பாவையில் அழைத்த தமிழ் அழைத்த தமிழ்-ல்லா?
  உங்க ஊருத் தமிழ் தூத்துக்குடிப்பக்கம் கொஞ்சம் அடிக்கும். ஆமா என்றோஆமாம் என்றோ சொல்லாமல் ஓம் என்றும் ஆம் என்றும் சொன்ன நண்பர்கள் இன்னும் நினைவில் இருக்கின்றனர்.(எல்லாம் கொழும்புக்கும் தலைமன்னாருக்கும் கள்ளத்தோணி அடிச்சு வாட்ச், டேப்ரிக்கார்டர், வீடியோ என கடத்திய பொருட்களுடன் வந்தது..) மீன் பிடிச்சப்போ வந்த வட்டார வழக்கு என்பது பம்மாத்து:)
  அன்புடன்
  க.சுதாகர்

  ReplyDelete
 3. இப்படிதானய்யா எனக்கும் எங்கூரு பாசயிலா பயபுள்ளைய எவனாச்சும் பேசினாய்ங்கன்னா பாசம் பிச்சுக்கிரும். எங்ஙனயோ ஊரு நாட்டுல சான்பிராஸிஸ்கோவில மீனு திங்கப் போகயில ஒரு மேலூருக்காரத் தம்பிக நமக்குன்னு நல்ல துண்டாப் பொறிச்சுப் போட்டாய்ங்க... அப்படியே கண்ணு கலங்கிருச்சப்பு... என்னமோ எங்காத்தா மீனாச்சி எல்லாத்தயும் நல்லா வச்சுருந்தாப் போதும்... உங்க பதிவு எல்லாத்தையும் நெஞ்சுக்குள்ளயிருந்து வெளிய கொண்டாந்துருச்சுல்ல... என்னாங்குறது?

  ReplyDelete
 4. சுதாகரு அண்ணாச்சி,

  அட்டகாசம் பண்ணிபுட்டியலே!

  நம்ம ஊர்க்காரவியலே இப்படி போட்டு வாங்கீருக்கிய.

  படிக்க ரொம்ப நல்லா இருக்குது. நமக்கும் தான், இங்கே நம்ம ஊர்க்காரவியல கண்டுபுட்டாலே கொண்டாட்டம் தாம்.

  எங்க கம்பெனியில கூட ஒரு வள்ளியூரு பார்ட்டி இருக்காரு, அவர் பேசுற பேச்சை கேட்க எல்லோரும் அவரை நோண்ட, அவர் நம்ம பாசையில் நல்ல வைவாரு, அது கேட்க காதில் தேனா ஓடுற மாதிரி இருக்குமுல்ல :)

  ReplyDelete
 5. ஏலே பிரதீப்பு,

  உமக்கு மருத தாம்லே, ஏம்லே ஒம்ம ஊரு பாசையில ஒரு பதிவு போடும்ல

  ReplyDelete
 6. அன்பின் பிரதீப்,
  நன்றி.
  மதுரக் காரவுளா? கோயில்பட்டி ரூட்டுல அருப்புக்கோட்ட தாண்டிட்டா ஒங்க ஊரு பாச வந்துரும்லா. அவிங்க-பாசைக்கு தனி அழகுதான். அதென்னமோ பாத்தீயளா.. சாப்பாடும் சொல்லுந்தான் கூடவே வருது:) நம்மூர்க்காரகன்னு தெரிஞ்சா "கூட கொஞ்சம் சாப்புடுதீயளா?" என்னும் வார்த்தையும் , ஒரு எக்ஸ்ட்டரா கவனிப்பும்...
  அன்புடன்
  க.சுதாகர்

  ReplyDelete
 7. Anonymous12:12 AM

  தாமிரபரணித்தண்ணீர் குடித்த திருநெல்வேலித் தமிழ்ல ஒண்ணு கெட்டவார்த்தை சொட்டும் இல்லேன்னா மரியாதை கொட்டும். வைச்சா குடுமி சிரைச்சா மொட்டைங்கற மாதிரி:)
  Correctaa Sonniya Annachi!!!!

  நெல்லை மேம்பாலத்து அடியில் ஒரு இட்லிக்கடை உண்டு அப்பவெல்லாம். பார்வதி தியேட்டரில் நைட் ஷோ படம் பார்த்துவிட்டு நடந்து வந்து , சூடான அந்த இட்லியை ஒரு கை பார்க்கும் அனுபவத்தின் வேண்டாத நினைப்பும் வந்துதொலைத்தது.

  Ellam Sari.Annachi, " உங்களுக்கு எந்தூரு?".

  Dubai Raja.

  ReplyDelete
 8. இப்படி எல்லாரும் வட்டார வழக்குப் பேசுனா நான் எங்கே போவேன்? எனக்கு சொந்த ஊரும் இல்லே, சொந்த பாஷையும்
  இல்லையே(-:

  ReplyDelete
 9. உம்ம்..வட்டார வழக்கு மொழிகள் ஏற்படுத்தும் பந்தமே தனிதான். அதுவும் வெளிமாநிலத்திலும் நாட்டிலும் இருக்கும்போது மதம், சாதி, வர்க்கங்களைத் தாண்டி ஒரு பிணைப்பு ஏற்படுகிறது.

  ReplyDelete
 10. நான் கோயமுத்தூர்க்காரன். ஆனால் 12 வருசம் தூத்துக்குடி-ல் உரக்கம்பனி-ல் வேலை பார்த்ததால், அதன் அழகு தமிழ் நடை மிக பரிச்சயம்.

  சென்னை வந்து 4 வருடம் ஆனபின்னும், அதன் தாக்கம் குறையவில்லை.
  மிக சந்தோசமான நேரங்களில் அதன் வெளிப்படு இருக்கும்.
  - "கரண்ட் வந்துட்டு", "ட்ரைன் வந்துட்டு"..

  ReplyDelete
 11. அன்பின் பரஞ்சோதி அண்ணாச்சி,
  நன்றி.
  //வள்ளியூரு பார்ட்டி இருக்காரு, அவர் பேசுற பேச்சை கேட்க எல்லோரும் அவரை நோண்ட, அவர் நம்ம பாசையில் நல்ல வைவாரு, அது கேட்க காதில் தேனா ஓடுற மாதிரி இருக்குமுல்ல :)//
  ஆகா! அப்படி போடும்.
  வசவு ல கூட ஒரு வாசம் இருக்குல்லா ... என்ன சொல்லுதீய? இந்த வாசனதானய்யா இப்படி மனுசனப் போட்டு "ஊர்ப்பக்கம் போவலியே"ன்னு ஏங்க வைக்கி.
  அன்புடன்
  க.சுதாகர்

  ReplyDelete
 12. அன்பின் மணியன்,
  நன்றி.
  நீங்கள் சொன்னது உண்மை. மொழிக்கு ரத்த சம்பந்தம் உண்டோ என சந்தேகிக்கும் அளவுக்கு, முன்பின் தெரியாத நபரிடம் அவர் பேசும் நமது மொழியால் காட்டும் அன்பின் ஊற்று எங்கிருக்கிறது?
  வட்டார வழக்கின்றி ஒரு மொழி நடைப்பிணமாகவே இருக்கக்கூடும். சமஸ்கிருதமும், லத்தீனும் வட்டார வழக்கின்றித்தான் இறந்த மொழியானதோ? போஜ்பூரி மொழியில் மீரா பஜன்கள் சுலபமாக மக்களை அடைந்த மாதிரி சமஸ்க்ருத இலக்கியங்கள் மக்களை அடையவில்லை.ஏன்,ப்ராக்ருத மொழியும் பிற்காலத்தில் இந்தியாகத் திரிந்ததும் இதனாலேயே இருக்கலாம். இது வட்டார மொழியின் வீச்சு எனலாம்.
  அன்புடன்
  க.சுதாகர்

  ReplyDelete
 13. அன்பின் துளசியக்கா,
  என்ன இப்படி கேட்டுட்டீய? நியூசிலாந்துல என்ன வட்டார வழக்கோ அதுல எழுதுங்க:)
  உங்க பதிவுல முன்னூறு பதிவு போட்டுட்டீய... நாங்க நூத்துக்கே திணறுதோம். உங்களுக்கு என வட்டார வழக்கே உண்டாக்கலாம்:)
  அன்புடன்
  க.சுதாகர்

  ReplyDelete
 14. நன்றி துபாய் ராஜா,
  எனக்கா "எந்தூரு"ன்னு கேக்கீய? சரியாப்போச்சு..
  சொந்தவூரு நாங்குநேரி. பொறந்து வளர்ந்தது தூத்துக்குடி. காலேஜ்ல தெர்மோடைனமிக்ஸ் கிளாஸ் பக்கத்து பானுமதி தியேட்டர்ல மலையாளப்பட பிட்-ல பாழாப்போச்சு.
  கொஞ்சம் பணம் கையில சேந்துச்சின்னா, திருநவேலில்ல படம்பாக்கப் போவம்.
  அது ஆடிக்கு ஒருவாட்டி அம்மாசைக்கு ஒருவாட்டிதான் நடக்கும். பணம் வேணும்லா..
  இருந்தாலும் நைட் ஷோ பாத்து, இட்லி துன்னுட்டு, பஸ் ஸ்டாண்டுல படுத்துக்கிடந்து முத பஸ் பிடிச்சு தூத்துகுடிக்கு தூங்கிகிட்டே போற சுகம் இருக்கு பாருங்க... தனிதான்.
  அன்புடன்
  க.சுதாகர்.

  ReplyDelete
 15. ஒங்களோட ஒவ்வோரு பதிவையும் படிச்சுண்டு வர்ரேன்!
  ரொம்ப அத்புதமா எழுதறேள்!
  நேக்கு ஒங்களை எப்படி ஸ்தோத்ரம் பண்றதுன்னே தெரியல்லே!
  க்ஷேமமா இருந்து இன்னும் நெறய விஷயங்களைப் பத்தி எழுதி அமோகமா பேர் வாங்கணும்னு அந்த ஈஸ்வரனை ப்ரார்த்திச்சுக்கிறேன்.
  திருனெவ்வேலி வட்டார வழக்குல, சங்கரங்கோவில்லயும், தூத்துகுடியிலேயும் கொஞ்ச நா பழக்கம் நேக்கு!
  நன்னா அனுபவிச்சு எழுதறேள் நீங்க!
  நீங்க சொன்ன அந்த பூண்டு சனியன் தூக்கலா இருந்த சட்னியை ஒரு தடவை தெரியாம சாப்டுட்டு, நா பட்ட அவஸ்த இருக்கே! .... சொல்லி மாளாது!
  சனியன், மூணு நாளைக்கு வயத்த கொமட்டிண்டு இருந்தது!
  இப்போ, உங்களோடத படிச்சவொடனே, திரும்பவும் ஞாபகம் வந்து தொலச்சுடுத்து!
  கர்மம்! கர்மம்!

  :-))

  ReplyDelete
 16. அன்பின் எஸ்.கே
  நன்றி. சங்கரன்கோவில்-ல படித்தீர்களா? அங்கிருந்த ஒரு ஸ்போர்ட்ஸ் ஆசிரியர் ஒருவரை எனக்கு நல்ல பரியச்சமுண்டு.தூத்துக்குடி பாசை கொஞ்சம் அலாதி...
  என்னங்க பூண்டு சட்டினியை சனியன் - சொல்லிட்டீங்களே! அடுக்குமா இது?
  அன்புடன்
  க.சுதாகர்

  ReplyDelete
 17. அன்பின் கார்த்திகேயன்,
  பின்னூட்டத்திற்கு நன்றி. இந்த "வந்துட்டு போயிட்டு" தூத்துக்குடி முத்திரைகள்... அங்கன வச்சி பாத்தேன் என்பதும் அதுபோலவே ( அதென்ன "வச்சிப்" பார்த்தேன்? என்று சொல்வது எனக்கேட்டால் விளக்கம் சொல்லத் தெரியவில்லை!)
  அன்புடன்
  க.சுதாகர்

  ReplyDelete
 18. Anonymous3:07 AM

  சுதாகரு அண்ணாச்சி,
  Nirvaaga Karanangalukkaga Thirunelveli Maavattathil irunthu Thoothukudi Chidambaranar Maavattam ena Pirikkapatathu 1988-89.Am I Right?.Athukku munnadi Thekka Paesura Paahai ellamae Thirunaveli Pashainu thaan solluvaanga.Sarithaanae ?.Aaama ungalukku Nanguneri thaan Sontha oora ?.illai Pakkatulae eathum giramamaa?.
  அன்புடன்
  துபாய் ராஜா.

  ReplyDelete
 19. துபாய் ராஜா அண்ணாச்சி,
  பாத்தீயளா... என் வார்த்தையிலேயே என்ன மடக்குறீயளே?
  நாங்குநேரிதானுங்க சொந்த ஊரு. அதுவே ஒரு கிராமம்:)
  "என்னல இன்னும் அப்படியே நோஞ்சானா இருக்கியே?, கொஞ்சமும் மாறாம.."ன்னு கேட்டாச்சின்னா என் நண்பன் சொல்லுவான், "நாங்களெல்லாம் நாங்குநேரி பஸ் ஸ்டாண்டுமாதிரி டே"ம்பான். காலாகாலத்துக்கும் அப்படியே மோசமாத்தான் இருக்கு.. அவன் மொகரை கணக்கா...
  இன்னிக்கும் திருநெவேலி பாசைந்னுதான் சொல்லுதாக.. தூத்துக்குடி பக்கம் கொஞ்சம் வேறா இருக்கும். இது இன்னும் கொஞ்சம் மாறும்... நம்ம ஒட்டப்பிடாரம்/கோவில்பட்டி பக்கமெல்லாம்... அந்தூரு ஆட்களுக்கு தெளிவாப் புரிஞ்சுரும்..
  பெரும்பாலோர் மதுர பாசையையே திருநெவேலி பாசைம்பாவோ.. அதுக்கெல்லாம் அருப்புக்கோட்டை தாண்டி வந்தால்லா புரியும்.. என்ன சொல்லுதீய?
  அன்புடன்
  க.சுதாகர்.

  ReplyDelete
 20. Anonymous7:21 AM

  சுதாகரு அண்ணாச்சி,
  சரியா சொன்னிய.ஊருக்கு ரைல்ல போம்போது நாங்குநேரி ஸ்டெசன் எரங்கிதான் போறது.நாகர்கோயில் போற பஸ் எல்லாம் ஒங்க ஊர் வழியா போனாலும் நாங்குநேரி பஸ் ஸ்டாண்டு காலாகாலத்துக்கும் அப்படியே மோசமாத்தான் இருக்கு.அதுவும் இரூட்டிட்டா பஸ் ஸ்டாண்டு உள்ள பஸ் வராது.அந்த முக்குல போயில்லா ஏறணும்.சரிதான நா சொல்றது.
  அன்புடன்
  துபாய் ராஜா.

  ReplyDelete
 21. எழுத்தின் வாசம் என்பது இதுதானா? ரொம்ப நல்லா இருக்கு. நான் கூட சென்னை அதிலும் சைதாப்பேட்டை தமிழைக் கண்டுப்பிடிப்பேன்

  ReplyDelete
 22. எய்யா ராசா,
  சரியா சொல்லிப்புட்டீயளே?! நாகர்கோவில் பை பாஸ் தான் முக்காவாசி நாளுக்கு பஸ் ஸ்டாண்டு - நாங்குநேரிக்காரவளுக்கு. ஒரு கடலை பொட்டலத்தை உரிச்சு தின்னுகிட்டே மெல்லிமா நடந்து வீடு போய்ச்சேரணும்.
  சின்னபயலா இருக்கும்போது நாங்குநேரி போயிட்டு , இந்த ராத்திரில நடக்க பயந்து போயி கத்தி பாடிக்கிட்டே நடந்துருக்கேன்.. ( பாட்டு என்பதை ஊளையிடுவது எனக்கொள்ளவும்). முக்குல பேயிருக்குமாம்லா?
  அன்புடன்
  க.சுதாகர்.
  சரி.. உங்களுக்கு எந்தூரு?

  ReplyDelete
 23. வாங்க உஷாம்மா,
  ஆசீப் அண்ணாச்சி பேசததயா நான் பேசிட்டேன்- கீய? அவரு வலைப்பதிவு பூராவே திருநவேலியால நிறைச்சு வைச்சிருக்காரு. நாம ஏதோ ஊர்ப்பாசம் வரும்போது இப்படி..

  ஆனா சென்னைத்தமிழ்ல வித்யாசம் கண்டுபிடிக்கணும்னா சாதனைதாங்க. ஒத்துக்கணும். எனக்கு ஒரு எழவும் புரியாது.. தமிழ்தான்ன்னு சொல்லிதீகளா அத?
  அடிக்கவராதீய.
  அன்புடன்
  க.சுதாகர்.

  ReplyDelete
 24. மேல எழுதியிருக்கிறதெல்லாம் தமிழா? சரியாப் போச்சு!

  எம்பளது பின்னூட்டம் தாண்டிடும் போலருக்கே உமக்கு!?!

  ReplyDelete
 25. அப்படி போடு அருவாள! நம்மூர் காரரா நீரு. அதான் இம்புட்டு வீச்சு உம்ம பேச்சுல. கல்லுதீர் போம். பெரகென்னா நம்மூர் காரம்லாம் ஒரு செட் சேந்துகலாம்டே. இப்பத்தான் பய புள்ளைக பொழைக்க போறேன்னு இங்கிலீஷ் பேசிகிட்டு திரியுதுக! என்னத்த சொல்ல!

  ReplyDelete
 26. வே பிரசன்னா ,
  என்ன படிச்சு என்னங்கேன்? நம்ம பாசைல நாலு வார்த்தை பே(ஏ)சுறமாரி சொகம் உண்டாவே? பனங்கிழங்கு திங்கறத்துக்கும் , பிட்ஸா துங்கறததுக்கும் வித்தியாசம் என்னமோ அது மாரித்தான நம்ம பாசல பேசறதும் இங்கிலீஷ்ல பேசறதும்.? என்ன சொல்லுதீய?
  இது என்னோட 100 வது பதிப்பு. இப்பத்தான் அதயே பார்த்தேன்.
  அன்புடன்
  க.சுதாகர்

  ReplyDelete
 27. வாழ்த்துக்கள்! யய்யா! என் பதிவுல உங்க பின்னூட்டம் இந்தா இப்படி இருக்கு. சரி செஞ்சு அனூபுங்க தயவு பண்ணி.
  வரட்டா!
  பிரசன்னா

  ReplyDelete
 28. Anonymous6:05 AM

  சுதாகரு அண்ணாச்சி,
  ஜமீன்சிங்கம்பட்டி தான் நம்ம ஊர். மணிமுத்தாறு டேம் இருக்குல்லா!!வந்திருப்பியளே!!அந்த மலை புல்லா நம்ம ஜமீனை சேந்ததுல்லா!!!

  அன்புடன்
  துபாய் ராஜா.

  ReplyDelete