Thursday, May 04, 2006

குஜராத் அனுபவம்

"பரோடா மீண்டும் எரிகிறது. ஒரு மனிதனை உயிருடன் வைத்து எரித்திருக்கிறார்கள்" செய்தி வரிகள் தொலைக்காட்சியில் சீராக ஓடிக்கொண்டிருக்க, "சே என்ன மனிதர்கள்.? நாமெல்லாம் அங்கே இருந்தப்போ இப்படியில்லையே?" என் மனைவி கேட்டாள். தொலைக்காட்சிப் பெட்டியை அணைத்துவிட்டு சன்னலின் வழியே வானத்தைப் பார்த்தேன். அன்றும் இப்படித்தான் இருந்தது.. மிக மெல்லிய நட்சத்திரப் படுகை.. ஆனால் அன்று கொஞ்சம் காற்று குளிராக இருந்தது மட்டும் வித்தியாசம்.

1993 ஜனவரி
பாவ்நகர் விட்டு நான் கிளம்பும்போது மணி ஐந்தாகிவிட்டிருந்தது. இன்னும் நாலு மணி நேரம் பயணம் ... அகமதாபாத் வரை. லாரிகள் போக்குவரத்து இரவு ஏழுமணிக்கு மேல் அதிகரித்து விடுமாதலால், பேருந்துகள் மெதுவாகவே செல்ல முடியும். சாலைகள் அப்போதெல்லாம் இத்தனை அகலமில்லை குஜராத்தில்.

கிடைத்த தனியார் பேருந்தில் அடித்து பிடித்து முன்னால் கிடைத்த பக்க இருக்கையில் அமர்ந்தேன். வீடியோ கோச் என்பதால் சரியாக தலைக்கு மேலே மாதுரி தீக்ஷித் "ஏக்தோ தீன்" என தேசாப் படத்தில் ஆடிக்கொண்டிருக்க நான் "விதியே" என முழித்துக்கொண்டு அக்காட்டுக் கூச்சலில் அமிழ்ந்து வந்துகொண்டிருந்தேன்.
நடு வழியில் பத்து நிமிடம் டிரைவருக்கு இலவசமாக சாப்பாடு கிடைக்கும் விடுதியில் நிறுத்தினார்கள். " தஸ் மினிட் ருக்கேகா." என எவருக்கோ வந்த வாழ்வாகச் சொல்லிவிட்டு குதித்து இறங்கிப் போனார். பீடி வெளிச்சம் மட்டும் சிவப்புப் புள்ளிகளாக அங்காங்கே தெரிந்தது.
அருகில் இருந்த ஒருவர் தன் மனைவியிடம் சொல்லிக்கொண்டிருந்தார் " மணிநகர் பக்கம் ஒரு கோயில இடிச்சுட்டாங்களாம். அகமதாபாத்துல ஊரடங்கு உத்தரவுன்னு சொல்றாங்க." அப்பெண்மணி தலையில் கைவைத்து சீட்டின் முன் சரிந்தார். "ஹே ராம். எப்படி வீட்டுக்குப் போவோம்?"
எனக்கு பயம் வயிற்றைக் கவ்வியது. பாப்ரி மசூதி இடிப்பின்போது சூரத்தில் இருந்து மும்பைக்கு deluxe ரயிலில் பயணப்பட்டிருந்தேன். தாதர் ரயில் நிலையத்திலிருந்து கிங் சர்க்கிள் வருவதற்குள் உயிர் போய்த் திரும்பி வந்திருந்தது. இப்போது அகமதாபாத்தில் மாட்டிக்கொள்ளப்போகிறேன்... எங்கே போவது?
நான் தங்கியிருந்த விடுதி காலுப்பூர் ரயில் நிலையத்தின் அருகே. போகவே முடியாது.
புதிய நகரில் இருக்கும் சாட்டிலைட் பகுதியில் இருக்கும் எனது கிளை அலுவலகத்தில் தங்கலாம் என முடிவு செய்தேன். அகமதாபாத் நகர் எல்லையில் இறங்கி ஆட்டோ பிடித்துப் போய்விடவேண்டும்...

இறங்கியபின் தான் எனது முட்டாள்தனம் தெரிந்தது. ஒரு ஈ, காக்கா இல்லை ரோட்டில். இறங்கிய இடம் எதுஎனத் தெரிந்ததும் இன்னும் பயம் கூடியது. ஜுவாப் புரா என்னும் பகுதி. முஸ்லிம்கள் பெருவாரியான பகுதி. அதன் எல்லையில் வேஜல்பூர் என்னும் இந்துக்கள் பெருவாரியான பகுதி. இரண்டுக்கும் எல்லையில் அடிதடி பயங்கரமாக இருக்கும். அந்த ஜுவாப்புரா பகுதியில் தனியனாக நான்...
மெதுவாக நடக்க ஆரம்பித்தேன்.. கையில் ஒரு ப்ரீஃப்கேஸ்.. நெஞ்சில் பயம்...
"ருக்கோ. கோண்?" மெல்லியதாகக் கேட்ட அக்குரலுக்கே வியர்த்தேன். பேசவில்லை
அருகில் வந்த உருவம் தெருவிளக்கொளியில் என்னைக் கூர்மையாகப் பார்த்தது. மெலிந்த உருவம். அழுக்கு ஜிப்பா. தலையில் தொப்பி..
" எங்கே போகிறாய்?"
உடைந்த குஜராத்தியில் " வேஜல்பூர்" என்றேன். அரை நிமிடம் மெளனமாக நின்றவன் "முட்டாள்தனமாக வந்திருக்கிறாய். ஜுவாப்புரா தாண்டுவாயா? அறிவு வேணும்" என்றபடி இருமித் துப்பினான்.
"எனக்கு மும்பை போகணும் நாளைக்கு. எப்படியாவது சாட்டிலைட் போனாப்போதும் இப்போ." உளறிக்கொட்டினேன். சிறிய மொளனத்தின் பின் என்னைத்தாண்டிச் சென்றான்.
"என்னோட வா" என்றபடி முன்னால் நடந்தான்.
ஏன் அவனுடன் நடந்தேன் எப்படி அவனை நம்பினேன் என்றெல்லாம் எனக்கு இன்றும் தெரியாது. பலியாடாகவே பின் தொடர்ந்தேன்.
ஜுவாப்புராவுக்கும் வேஜல் பூருக்கும் இணைப்பாக ஒரு தார் ரோடு உண்டு. நூறு அடி வரை இருபுறமும் ஒரு புல்பூண்டு இருக்காது. திடீரென இரு பகுதிகளிலும் நெரிசலாக வீடுகள் அடர்ந்திருக்கும். அந்த வெறுமையான இடைவெளியில் எவர் நடந்தாலும் இருபுறமும் தெரியும்.. அடிக்கத் தோதாக.
"எனது கடை இது" என மூடப்பட்டிருந்த ஒரு கடையைக் காட்டினான். அருகில் நெருங்க நெருங்க நிழல்கள் தெரிந்தன. இருளில் கத்தினான் " மாரு மித்ர சே" ( எனது நண்பன் இவன்)
தயங்கிய நிழல்கள் சுவரில் தொத்திநிற்க, திரும்பி என்னைப் பார்த்தான்.
" முன்னால் போ. திரும்பிப் பார்க்காதே. அந்தப்பக்கம் யாராவது கேட்டால் பதறாமல் உன் பெயரைச் சொல். அவசரப்பட்டு ஓடாதே." சொன்னவன் ஒரு சுவருக்குப் பின் மறைய, நான் தனியாக அப்பாதையில் தொடர்ந்தேன். சுவர்க்கோழிகளின் சப்தம் மட்டும் கேட்க, வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே நூறு மீட்டர் தூரம் மட்டும்..

நல்லவேளை எவரும் என்னைத் தடுக்கவில்லை. வேஜல்பூரில் ஆட்டோ கிடைக்காமல், மீண்டும் நாலு கி.மீட்டர் நடந்து சாட்டிலைட் பகுதிக்குச் சென்றேன். நிறையப் பேர் என்னைப்போலவே ஆட்டோ இல்லாமல் நடந்தனர் என்பதால் பயமின்றிச் சென்றேன்.

வெகுநாட்கள் கழித்து மீண்டும் அகமதாபாத் சென்றபோது அந்தப்பகுதி வெகுவாக மாறியிருந்தது. பெரும் கட்டிடங்கள் இருபுறமும். அகலவெறுமை குறுகியிருக்கிறது.. ஆனாலும் இருக்கிறது இன்னும்..

6 comments:

 1. Wow! Super!!

  Good narration!!

  Keep up!!

  ReplyDelete
 2. திக்-திக்-திக்!

  என்று மாறும் இந்நிலை!?

  ReplyDelete
 3. அன்பின் சுதாகர்.
  வணக்கம்.உங்களுடைய தூத்துக்குடி தெய்வங்கள் முழுவதும் படித்தேன்..முக்கால்வாசி அனுபவங்கள் எனக்கும் ஏற்பட்டவைதான்..என்ன பள்ளி மற்றும் கல்லூரி தான் வித்தியாசம்..மற்றபடி தமிழ் மீடியத்திலிரிந்து ஆங்கில மீடியம்..+2 முடித்த பின் இஞ்ஞினியரிங்..ஹார்பர் கடற்கரை..அனைத்தும் என் வாழ்விலும் வந்தது..
  இன்னுமொரு ஆச்சரியம் உங்களது குஜராத் பதிவு..ஆம் நானும் பூஜ்,பனந்தோரா நகரங்களில் இருந்து பணியாற்றிரிக்கிறேன்...

  எந்த பதிவுக்கு பின்னுட்டம் இடுவது என்று தெரியவில்லை...

  அருமையாக இருந்தது சுதாகர்..

  அன்புடன்
  மாயக்கூத்தன் கிருஷ்ணன்
  (SAV Tuty,,Kareepattai Tuty,,HCE Chennai,GMDC Gujarat,RANK Mumbai,
  Polaris Chennai,EDH Dallas USA)

  ReplyDelete
 4. நன்றி SK,
  செய்யும் பணி சிலசமயங்களில் ஆபத்தானதாக இருப்பினும் பின்னாளில் நினைவுகளில் அசைபோடும்போது அக்கணங்கள் படிப்பித்த பாடங்கள் ,தந்த மன முதிர்ச்சி வாழ்க்கையை முழுமையாக்கியதாகவே தோன்றுகிறது.
  குஜரத்தின் கொதிப்பு குறித்து நான் அறிந்தது குறித்து பகிர்ந்து கொள்கிறேன். தங்கள் பின்னூட்டத்திற்கும் , மனிதம் வதைபடுவதில் தாங்கள் காட்டிய வருத்தத்திற்கும் நன்றி. உங்கள் உணர்வு இங்கு பலராலும் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.
  அன்புடன்
  க.சுதாகர்.

  ReplyDelete
 5. நன்றி மாயக்கூத்தன் கிருஷ்ணன்,
  மாயக்கூத்தன் என்ற பெயர் எனக்கு மிகமிகப் பரியச்சமானது. எனது அண்ணனின் நண்பர் மாயக்கூத்தன் என்றொருவர் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்தார். அவரது பெரிய மீசையும் ஆஜானுபாகுவான தோற்றமும் இன்றும் என் மனதில் ஆழப்பதிந்திருக்கிறது.
  நான் எழுதியது பலருக்கும் நிகழ்ந்ததாகவே இருக்கும் சாத்தியம் இருக்கிறது. பெரும்பாலும் சிறு நகரத்தில் வளார்ந்தவர்களின் உள்மனப் போராட்டங்களே இவை. என்ன, இப்போ வெளியேறிவிட்டோம். காயங்கள் மறத்துப் போயிருக்கலாம்- அல்லது ஆழ்மனத்தில் புதைந்திருக்கலாம்.
  பனாந்த்ரோ ஜிஎம்.டிசி இல் இருந்தீர்களா? நான் அங்கு வந்திருக்கிறேன். அம்பாஜி சைட்டுக்கும் போயிருக்கிறேன். பனந்த்ரோ போகக் கிளம்பி வழி தவறி எங்கோ கட்ச் சதுப்பு நிலத்தில் ஒட்டகத்தில் பயணித்த நிகழ்வும் ஒன்றுண்டு!
  தங்கள் பின்னூட்டதிற்கு நன்றி.
  அன்புடன்
  க.சுதாகர்.

  ReplyDelete
 6. Thanks sivabalan,
  I had published your comment some time ago and now only it reflects!
  Sorry for the mess up .
  regards
  K.Sudhakar

  ReplyDelete