Monday, April 17, 2006

அமிழ்து அமிழ்து ... தமிழ்.

தூத்துக்குடி தெய்வங்கள் பதிவில் விட்டுப்போன தெய்வங்கள் பலருண்டு. வாழ்க்கையை சீர்படுத்திய தெய்வங்களைப் பற்றி மட்டுமே அங்கு பதிந்திருந்தேன். வாழ்வின் பன் முகப்பு குறித்து ஒரு தெளிவை ஏற்படுத்திய சிலர் குறித்து எழுதலாமென இருக்கிறேன்.

பள்ளிச்சிறுவனாயிருந்தபோது தமிழ் இலக்கியமென்றாலே அப்படியொரு வெறுப்பு இருந்தது எனக்கு . திக்குவாய் ஒரு காரணம். இரண்டாவது , செய்யுள்கள் படித்தால் எளிதில் புரியாது. இந்த லட்சணத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல் இரண்டு வினாத்தாள்கள்...
ஒன்பதாம் வகுப்பு, ரீசஸ் பீரியடில் சில நண்பர்களுடன் வாதம் செய்து கொண்டிருந்தேன். 'இந்த தமிழ் அறுக்குதுல. இதப் படிச்சு என்ன சாதிக்கப்போறம்..சொல்லு பாப்பம்." நான் சொல்லிக்கொண்டிருந்ததை பின்னால் நின்றிருந்த தமிழைய்யா சலைஸ் சார் கேட்டுவிட்டார்.
சலைஸ் சார் என்றால் வெள்ளைக் கதர்/பருத்தி அரைக்கால்சட்டை, தும்பைப்பூ போல் வெளுத்த வேட்டி, வெற்றிலை போட்டு சிவந்த வாய் , கோபத்தில் சிவக்கும் கண்கள் என கலர்கலராய் நினைவு வருகிறது. ஒன்பதாம் வகுப்பில் இரட்டைக்கோடு நோட்டில் தமிழ் எழுதிப் பழகச் சொன்னார். "தமிழ் எழுத்து சதுர வடிவத்துல இருக்கணும். தெரியுதா? வளைஞ்சி வளைஞ்சி இருந்தா அது மலையாளம்..முட்டாப்பயலுவளா'

"செத்தேன்" எனப் பயந்து கொண்டிருந்தபோது, " தமிழ் பிடிக்கலையா தம்பி?" என்ற மிருதுவான வார்த்தைகள் வினோதமாகமும், என்ன பெரிய அடி இருக்குதோ என்ற பயம் உண்டாக்குவதாகவும் இருந்தன.
"ஐயா, செய்யுள் வார்த்தையெல்லாம் கஷ்டமாயிருக்கு. இதுக்கு கத படிச்சுட்டுப் போயிரலாம்லா? இவ்வளவு கஷ்டப்பட்டு ஏன் செய்யுள் படிக்கணும்?" என்றேன்.
"நீ எந்த கிளாசு?"
"பத்து H " என்றேன்
" நாளைக்கு கோலியாத்து, தாவீது போர் பத்தி உன் வகுப்புல பாப்போம். அதுக்கப்புறம் ஏன் செய்யுள் படிக்கணும்னு சொல்லுதேன். என்னா? போ"
மதிய இடைவேளையில் டிபன்பாக்ஸ் கழுவிக்கொண்டிருக்கும்போது எனது சீனியர் (11ம் வகுப்பு) சண்முகத்திடம் காலையில் நடந்ததைச் சொன்னேன்.
" ஏல, அவருகிட்டயா இப்படிப் பேசின? கோவம் வந்தா பிச்சுருவாரு தெரியும்லா? அடிச்சாருன்னா டிராயர்லயே மோண்டுருவ. பாத்துல.." என அன்பாய் எச்சரித்தான்.
அடுத்தநாள் சலைஸ் சார் வகுப்பில் தயாராக அமர்ந்திருந்தேன்.
ஒவ்வொருவரையும் எழுப்பி ஒரு செய்யுள் படிக்கச் சொன்னார். விளக்கமும் கொடுத்து வந்தார்.
எனக்கு அடுத்திருந்த ஜேம்ஸ்-இன் முறை வந்தது. எழுந்தான்.
"கோலியாத்தின் கோப மொழி" என்று தலைப்பில் தொடங்கினான். அவர் கண்களை மூடினார் " ம்.. மேல படி"
"நீயடா எதிர்நிற்பதோ? மதம்பொழி கரிமேல்
நாயடா வினைநடத்..." அவன் முடிக்கவில்லை..
பளீர் என ஜேம்ஸ் முதுகில் அடி விழுந்தது. "எய்யா." என அலறினான்.
"கோபமொழியால படிக்கே? செத்தவன் கூட உரக்கச் சொல்லுவான். கோப மொழின்னா கோபமாயிருக்கவேணாம்?மூதி" கோபத்தில் அவர் மூச்சு ஏறித்தாழ்ந்தது. வகுப்பு உறைந்தது. நான் முன்னயே சண்முகத்தால் எச்சரிக்கப்பட்டதால் ஆவென வாயைப் பொளந்து பார்த்துக்கொண்டிருந்தேன்.
"எல்லாவனும் புத்தகத்தை மூடுங்க. முன்னால என்னப் பாரு"
அத்தனை புத்தகங்களும் மூடும் சப்தம் மட்டும் கேட்டது. மயான அமைதி.
"நல்லா கவனிக்கணும். கோலியாத்து யாரு?பெரீய்ய்ய அரக்கன். பிலித்தியர்களோட பெரும் வீரன். அவன் கூட பெரிய பெரிய சேனைகள் கூடத் தோத்துப்போயிருச்சு. அவ்வளவு பெரிய்ய அரக்கன் முன்னால எலிக்குஞ்சு கணக்கா யாரு போய் நிக்கா?"
"தாவீது' உற்சாகக் குரல்கள் வகுப்பு முழுதும்
"இந்த எலிக்குஞ்சி போய் "சண்டைக்கு வரியால?"ன்னு கேட்டு நிக்கி. கோலியாத்துக்கு அவமானமுல்லா?"
"ஆமா சார்" கோரஸ்
"கோலியாத்துக்கு கோவமும், ஆத்திரமும் பொங்கிப் பொங்கி வருது. அவன் எப்படிப் பேசியிருப்பான்? "நீயடா எதிர் நிற்பதோ?" என்ன ஆவேசமா வந்திருக்கணும் வார்த்தை? என்னடே?"
"ஆமா சார்" மீண்டும் கோரஸ்
"இந்தப்பய செத்தவன் கையில வெத்தலை பாக்கு கொடுத்தா மாதிரி புஸ்தகத்த எடுத்துகிட்டு எந்திச்சி நிக்கான். அப்பவே நினைச்சேன். பிறவு, நம்ம பெரியகோயில் சர்ச்சுல சங்கீதம் பாடறமாதிரி மெல்லமா இனிமையா நீட்டிப் பாடுதான்.. "நீயடா எதிர்நிற்பதோ?"ன்னு"....
"உக்காரு" என்றார் ஜேம்ஸை.
"தாவீது கோலியாத்து கதை உங்க எல்லாருக்கும் தெரியும். ஏன் செய்யுள்ல படிக்கணும்? ஒவ்வொரு வார்த்தைக்கும் உணர்வு, உயிர் இருக்கும். அது உணரணும்னா, முங்கி முங்கி முத்தெடுக்கற மாதிரிப் படிக்கணும். தமிழ் இலக்கியம் ஒரு கடல் மாதிரி. முத்து எடுக்கணும்னா மூச்சுத்திணறி முங்கினாத்தான் முடியும்.வெளங்குதா?
நான் திறந்த வாய் மூடவில்லை.
அடுத்தநாள் சலைஸ் சார் வகுப்புத் தாழ்வாரத்தில் என்னைப் பார்த்துப் புன்னகைத்தார். " என்னடே? செய்யுள் ஏன் படிக்கணும்னு வெளங்குதா?"
பீதியுடன் தலையாட்டினேன்.
"என்னமோ நான் சொல்லறது ஞாபகமிருந்தா சரி" வேட்டியின் ஒரு மூலையைக் கையால் சிறிது தூக்கிப்பிடித்தபடி அவர் சென்றுவிட்டார்.
கோலியாத்தின் கோப மொழியும், ஒரு தெய்வ மொழியும் என் மனதில் இன்றும் இருக்கின்றன.

No comments:

Post a Comment