Friday, April 14, 2006

தூத்துக்குடி தெய்வங்கள் 2 (1)

தூத்துக்குடி போன்ற சிறுநகரங்களின் பெரிய சாபக்கேடு 'போலித்தனம்" எனலாம். படித்தவர்கள் என ஒரு கூட்டம் இருக்கும். அவர்களுக்குள்ளேயே பேச்சுக்கள்,புத்தகப் பரிமாற்றங்கள்,கருத்துப் பரிமாற்றங்கள் நடக்கும். கிராமங்களிலிருந்து வந்தவர்கள் அதனோடு இணைய முடியாமல், புரிந்துகொள்ள இயலாமல் திணறுவதைக் கண்கூடாகப் பார்க்கலாம். இத்திணறல்கள், குமுறல்கள், எதிர்குரலாக எந்த வளர்முயற்சிக்கும் எதிர்ப்ப்பாக, கிண்டலாகவும் மட்டம்தட்டும் வேலைகளாகவும் வெளிப்படும்.
பள்ளிகள் 'சிறிய உலகம்' என்பதால் இத்தகைய இடையூறுகள் சகஜம்.

'சார் படிக்கச் சொன்னாரே' என ஒரு மூலையில் உட்கார்ந்து அக்கறையாகப்படிக்கத் தொடங்கும் பையனை,சக மாணவர்கள், " பாருலே மக்கா, இவன் படிக்கத் துவங்கிட்டான். ஸ்டேட் பர்ஸ்ட்தான்..இல்லடே?" என கிண்டலடித்துத் தொடங்கி, அவன் வரும்போதெல்லாம் " எய்யா.. படிப்பாளி வர்ரான்டே, இடம் விட்டு நில்லுங்கலே" எனத் தொடர்ந்து, அவன் குறைந்த மதிப்பெண்கள் எடுத்திருந்தால்.'என்னடே, புஸ்தகத்துலேயே முங்கிக்கிடந்த?மார்க்கெல்லாம் சாரு தொலைச்சுட்டாராங்கும்?" என புண்ணாக அடித்து அவன் வெறுத்து விடும்வரை நீளும். இது விளையாட்டுகளுக்கும், பாடம் சேரா போட்டிகளுக்கும் பொருந்தும். தானும் வளராமல், அடுத்தவனையும் வளரவிடாமல் இருக்கும் 'பரந்த மனப்பான்மை' சிறுநகரங்களின் பெரும் சாபக்கேடு. இதற்கு தூத்துக்குடி விதிவிலக்கல்ல.

இந்த லட்சணத்தில் ஆங்கிலத்தில் பேசப்போனால், கல்லெறியே விழும் என்பதை நான் நன்கு அறிந்திருந்தேன். ஒரு நண்பன், ரஷ்ய -தமிழாக்கப் புத்தகங்களைப் (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்-ன் மலிவு விலைப்புத்தகங்கள் தங்குதடையின்றி கிடைத்த நேரம் அது) படித்துவிட்டு, கம்யூனிசம் பற்றி தான் அறிந்ததை ஒரு படபடப்பில் என் நண்பர் குழுவில் சொல்லிவிட, அவனை " யோல, நீ பெரிய கம்யூனிஸ்ட்டுல்லா?" எனக் கிண்டலடித்து அவன் பேரையே ரஷ்யத்தனமாக அய்யாகுட்டியோவ் ( எதனோடும் யோவ், இஸ்கி சேர்த்தால் ரஷ்யப்பெயர்!) என மாற்றி வைத்து, அவனைக்கிட்டத்தட்ட பைத்தியமாகவே ஆக்கியது எனக்கு நல்ல நினைவிருந்தது. 'பட்ட அறிவினால்', பொதுவில் ஆங்கிலத்தில் பேசப் பயந்தேன்.

சிகாமணி சாரிடம் மீண்டும் சென்றேன் " ·பாதர் , ஒருத்தனும் இங்கிலீஷ்ல பேசமாட்டேங்கான் "
புத்தகங்களை அடுக்கிவைத்துக்கொண்டிருந்தவர், புன்னகைத்தார் " உன்னை மாதிரி நிறையப் பேர் மனசுக்குள்ளேயே பயந்துகொண்டிருக்கிறான். உன் நெருங்கிய நண்பன் ஒருத்தன்கிட்ட தனியே பேசிப்பாரு, தெரியும்" விடமாட்டார் எனப் புரிந்தது. மீண்டும் ஏமாற்றத்தோடு திரும்பினேன்.

'யாரிடம் கேட்கலாம்?' என யோசித்துக்கொண்டிருக்கையில்,குட்டி நினைவுக்கு வந்தான். குட்டி என்பது அவன் பட்டப்பெயர். பேருக்கும் அவனுக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது. ஆஜானுபாகுவாக அப்பவே 5 அடி இருப்பான். இயற்பெயர் சுந்தரராஜனான அவன் பாஸ்கெட்பால் விளையாட்டு வீரன். . கால்டுவெல் பள்ளியில் படித்துவந்த,மிக நெருங்கிய தோழன்.( இவன் பெயரையே எனது கதைகளிலும் வைத்து குட்டியென்ற கற்பனைப்பாத்திரம் படைத்தேன். என் மனத்தின் உள்ளொலியாக)

"லே, குட்டி, ஒண்டியா உங்கிட்ட பேசணும்டே" என்றேன்
அவன் 'என்னமோ ரகசியம் போலிருக்கு' என்ற ஆவலோடு கடற்கரைக்கு வந்தான்.
விஷயத்தைச் சொன்னேன்.
'போல..மூதி. வேற வேலையில்ல உனக்கு. இதுக்குத்தான் வரச்சொன்னியாங்கும்? உன்னை வைச்சு சைக்கிள்ள மிதிச்சு வந்தேன் பாரு..அதுவும் எதிர்காத்து"

தொடரும்..

2 comments:

  1. கடக்கரைக்கா.........வழக்கமா யாரும் போறதில்ல....ஆனா கரிநாளுக்குத் தண்ணி டேங்கியும், கடக்கரையும் முயல்தீவும் நெறஞ்சு போகும்.

    ReplyDelete
  2. ராகவன்,
    பின்னூட்டத்திற்கு நன்றி.
    உசுப்பி விட்டுட்டீயளே? முயல்தீவு கரிநாள் - ஒரு deadly combination. மத்த நாள்ல முயல்தீவுல ஈயாடாது. அங்கே அரிய கடற்சிப்பிகள், ஓடுகள் கிடைக்கும் அப்பெல்லாம். இப்போ பிளாஸ்டிக் பை, பிளாஸ்டிக் தட்டு என்று குப்பைதான் ஒதுங்குது.

    கடற்கரைன்னா தூத்துக்குடி நகர ரோச் பூங்கா பக்கம் கடற்கரை சொல்லலை. ஹார்பர் குவார்டர்ஸ்க்கு உள்ளே ஒரு கடற்கரை இருக்கு. ஸ்பிக் நகர் வரை நீளும் அது. அப்பெல்லாம் வெளியே இருந்து யாரும் வரமாட்டாங்க. தூய்மையா இருக்கும்.
    இப்ப....
    அன்புடன்
    க.சுதாகர்.

    ReplyDelete