Sunday, April 16, 2006

தூத்துக்குடி தெய்வங்கள் ( முடிவு)

திடீரென ஒருநாள் பிரதாப் சிங் சார் "என்.ஸி.ஸி தினத்திற்கு நாடகத்துல நடிக்கிறியா?" என்று கேட்டார். அதன் முன் நடித்திராத தயக்கம் இருந்தாலும், சரி என்றேன். '84ல் தூத்துக்குடியில் கல்லுரி அளவில் எதோவொரு அமைப்பின் சார்பில் போட்டிகள் நடைபெற்றன. திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நடத்திக்கொடுத்தனர்.அதிலும் நாடகத்தில் பங்கேற்க பேர் கொடுக்கப்போனேன்.
என் நண்பர்கள் எச்சரித்தனர். " வேணாம்ல. எதாச்சும் ஒரு ஃபீல்ட்ல இரு. நாடகம் எல்லாம் உனக்கு ஒத்துவராது. திக்குவாய் வந்துச்சி.. ... மவனே , மக்கள் உன்னை ஸ்டேஜ்-ல கல்லெறிஞ்சே கொன்னுருவாங்க"
பயப்பட்ட , பயப்படுத்திய விஷயங்களை தைரியமாக செய்யத் தூண்டிய பிரதாப் சிங் சார் அவர்களை நினைத்துக்கொண்டே என் பெயரைச் சேர்த்துவிட்டு வந்தேன்.
நண்பன் கிருஷ்ணன் கேட்டான் " நீ நடிக்கியா?வெளங்கினமாதிரித்தான்.. ஒழுங்கா தமிழ் வருமால உனக்கு?"
சைக்கிளை மிதித்தவாறே சொன்னேன் " தமிழ் நாடகம் இல்லடே. இது ஆங்கில ஓரங்க நாடகம்."

அவன் உறைந்து போனான். 'தமிழே உருப்படியா வராது.. இதுல இங்கிலீஷ்ல வேற..' போட்டி நடந்த நாளில் அவன் வரவேயில்லை. அழுகிய முட்டைகளும், கூவல்களும் கொண்டு கல்லூரியின் மானத்தை இவன் புடுங்கப்போகிறான் என்ற திடமான நம்பிக்கை அவனுக்கு. அதில் பரிசு பெறாவிட்டாலும் பாராட்டுகள் கிடைத்தன. ஒரு மாதத்தில் திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி நடத்திய FEMER (84 அல்லது 85 ..சரியாக நினைவில்லை) விழாவில் ஓரங்க நாடகத்திற்கான முதல்பரிசு அந்த நாடகத்திற்குக் கிடைத்தது.

முன்பு எங்கோ படித்திருந்த ஒரு கதையை( Spaniard and Red Indian) ஒரங்க நாடகமாக்கியிருந்தேன் மற்ற ஒரு நாடகம் ஆப்பிரிக்க விடுதலைக் கவி பெஞ்சமின் மொலா குறித்தது. இந்த நாடகப் பயிற்சியின் விளைவாக எனது உச்சரிப்பு சரியானது. பிழைகள் குறைந்தன. பின்னாளில் கொச்சி பல்கலைக்கழகத்திலும் இந்நாடகம் முதல்பரிசு வாங்கித்தந்தது. இதன் காரணமாகவே தன்னம்பிக்கை பலமடங்காக உயர்ந்தது.

எனது நிழல் எதிரிகளை அடையாளம் காணவும் அவற்றோடு போராடவும் கற்றுத் தந்த இத்தெய்வங்கள் இல்லாதிருந்தால் இன்னும் தாழ்வு மனப்பான்மையில் அழுந்தி எங்காவது கிடந்திருப்பேன். ஆண்டவன் இத்தெய்வங்களுக்கு நலமும் நீண்ட ஆயுளும் அளிக்கட்டும். மாணவர்களுக்கு வருங்காலத்திலும் இதுபோன்ற தெய்வங்கள் அமையட்டும் என்ற வேண்டுதல்களுடன்.
க.சுதாகர்.

4 comments:

 1. அன்பின் சுதாகர்,
  மிக அருமையான நடையில்.. அதீத உணர்ச்சிகளோடு உங்கள் ஆசிரியர்களின் ஊக்கத்தைச் சொல்லியிருந்தீர்கள். தொடர்ச்சியாக எல்லாமும் படித்தேன். பாராட்டுக்கள்..

  ஆமாம்.. தென்றல் நேர்காணலில் இந்திரா பார்த்தசாரதி சொல்லும் ஸ்ரீமங்கை நீங்கள் தானா?

  அவர் பேட்டியிலிருந்து...
  //11. இன்றைய தமிழ் நாடகச் சூழலில் தீவிரப் பங்காற்றுபவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்
  யார்?
  ந.முத்துசாமி, செ.ராமானுஜம், மு.ராமசாமி, இரா.ராஜு, வி.றுமுகம், வேலு
  சரவணன், முருகபூபதி, ஸ்ரீமங்கை, பிரளயன் இன்னும் பலரைச் சொல்லலாம்.

  //
  இந்த ஸ்ரீமங்கை தானா நீங்கள்?
  அவரது முழு பேட்டி
  http://blog.360.yahoo.com/blog-r7rBHjAib7TfthJ7_AAQOg1.?p=54
  இங்கு உள்ளது.

  என்றென்றும் அன்புடன்,
  சீமாச்சு...

  ReplyDelete
 2. நன்றி சீமாச்சு அவர்களே,
  எனது ஆசிரியர்களுக்கு நன்றியும் நினைவு கூர்தலும் இப்பதிவுத்தொடரால் செய்ய முடிந்ததே என்னும் ஆத்ம திருப்தி இப்போது நெஞ்செங்கும் நிறைந்திருக்கிறது. இ.பா சொன்ன ஸ்ரீமங்கை நானில்லை. அவர் மங்கை அவர்களைச்சொல்லியிருப்பார் என நினைக்கிறேன். மொளனக்குறம் நாடகம் படைத்தவர். பேராசிரியர்.§º.இராமானுஜம், முத்துசாமி வரிசையில் வரவேண்டியவர் அவர்தான்! எனது நாடக அறிமுகங்கள் பன்மொழி நாடகங்கள் பார்த்தலும் ( மலையாள, மராட்டி நாடகங்கள் குறிப்பாக),மலையாள நாடகங்களில் பங்குபெற்றதும், செ.ராமானுஜம் அவர்களின் நாடகங்கள் பார்த்ததும், படித்ததும் மற்றும் அவருடன் கலந்துரையாடிப் புரிந்துகொண்டதுமான நிகழ்வுகள். இந்திரா பார்த்தசாரதி அவர்களின் இராமானுஜர் நாடகம், பேராசிரியர் சே. ராமானுஜம் அவர்கள் கொண்டு இயக்குவதாக ஒரு திட்டம் இருந்தது. அது குறித்து பேராசிரியர் இராமானுஜம் அவர்களிடம் நான் எடுத்த பேட்டி ஒலிநாடாவில் முழுமையற்று இருக்கிறது. பின்னொரு நாளில் அதனை முழுதுமாக எடுத்து இடலாம் என இருக்கிறேன்.

  அன்புடன்
  க.சுதாகர்.

  ReplyDelete
 3. One small correction. MaunakkuRam was created by Prof. S.Ramanujam and Mangai directed play in early '90s. It was a widely acclaimed performance.In Subhamangala (Komal Swaminathan was the editor then) there was a very good article on that.
  Sorry for the mistake in my earlier comment.
  regards
  K.Sudhakar

  ReplyDelete
 4. Again there is a mistake. ( What is going on..?!)
  The line in my above comment " MaunakkuRam was created by Prof. S.Ramanujam and Mangai directed play in early '90s" should be actually read as "MaunakkuRam play was created by Prof. S.Ramanujam and Mangai. It was staged in early '90s."
  My English is not yet upto the mark... :)
  Sorry!
  anpudan
  K.Sudhakar

  ReplyDelete