Tuesday, April 11, 2006

தூத்துக்குடி தெய்வங்கள்-1

தூத்துக்குடி தெய்வங்கள்-1

கடவுள்/மதம் குறித்தான பதிவு என நினைத்துவிடவேண்டாம். 'எழுத்தறிவித்தவன் இறைவனாவான்' என்பது பழமொ
ழி. இறைவன் ஒவ்வொரு ஆண்டும் புது அவதாரமெடுத்து எனக்கு அருளியிருக்கிறான். எனக்கு பலமுறை வாழ்வைப்
புதிதாக உண்டாக்கித்தந்த ஆசிரியர்களைப் பற்றிய பதிவுத் தொடர் இது. பலர் இருப்பினும், மிக மிக முக்கியமான
திருப்பங்களை என் வாழ்வில் உருவாக்கிய சிலரைப் பற்றி மட்டும் இங்கே பதிகிறேன்.

தெய்வம் -1 தி..தி..திக்கு வ்..வ்வா..ய்ய்
___________________________________________

மிகச்சிறு வயதில் நான் பலமுறை பேச்சுப்போட்டிகளில் வென்றிருக்கிறேன். ( 1ம் 2ம் வகுப்பு அளவில்)" நேரு மாமா
வந்தாராம்.." என்னுமளவில் இருக்கும் பேச்சுகள் அவை.
மூன்றாம் வகுப்பில் இருக்கும்போது திடீரென எனக்குத் திக்குவாய் ஏற்பட்டது. கொன்னல் என்றால் மிகமிக மோசமான
அளவில் இருந்தது அது. பள்ளியிலும், சொந்தக்காரர்களிடம் பேசும்போதும் "அடப்பாவமே" என்னும் பச்சாதாபமே கி
ட்டியது.

சரியாகப் படித்திருந்தும், இந்தத் திக்குவாய் காரணமாகவே பல முறை பதிலளிக்க முயலாமல் உள்ளே குமுறியிருக்கி
றேன். 'என்னமோ படிப்பான். உருப்போட்டு எழுதுவான்' என்னுமளவிலேயே என்னைக்குறித்தான கணிப்பு ஆசிரியர்க
ளிடம் இருந்தது. ஒரு கல்வி சார்ந்த, கல்வி சாராத போட்டிகளிலும் நான் பங்கெடுத்துக்கொண்டதில்லை. நானே வி
லகியிருந்ததால், சீக்கிரம் விலக்கவும் பட்டேன். இந்த விஷச் சுழற்றலில் தாழ்வு மனப்பான்மை மட்டும் வளர்ந்துகொ
ண்டே போனது.இது பத்தாம் வகுப்பு வரை தொடர்ந்தது.

தூத்துக்குடி புனித சவேரியார் மேல்நிலைப்பள்ளி. பத்தாம் வகுப்பில் (10 H வகுப்பு)எனக்கு வகுப்பாசிரியராக வந்தார்
ஜோசப் ஜெயராஜ் சார். வகுப்பு ஆசிரியர் என்பதோடு இல்லாமல் ஆங்கிலமும் எடுப்பார். 10 B வகுப்பிற்கு அவர்
சரித்திரம் எடுத்தார். சிறிது தடித்த சரீரம். உருண்டு உருண்டு அவர் வகுப்பறை தாழ்வாரத்தில் நடந்து வருவதை எளி
தில் தெரிந்துகொண்டு, அவர் வகுப்பு ஆரம்பமாகுமுன் அவரவர் இடத்தில் போய் அமர்ந்துவிடுவோம்.
நான் முன்பெஞ்சு( 'கண்ணாடி போட்ட பையன்களெல்லாம் முன்னால வாங்கல' - என்று அவர்தான் முன்னால் உட்கார
வைத்தார். அதுவரை 2வது 3வத் பெஞ்சு ஒரு மூலையில் யார் கண்ணுலயும் படாம உட்கார்ந்திருப்பேன்).

Tempest ஒரு பாடமாக உரைநடையில் இருந்தது. ஒருநாள் கதை சொல்லிக்கொண்டே வந்தவர் திடீரென நிறுத்தினார்.
வகுப்பின் பின்பெஞ்சுகளில் சலசலப்பு காரணமாக இருக்கும்.
"இங்க்லீசு எல்லாம் படிச்சிட்டீய? பாடம் நடத்த வேண்டாம்.என்னலா? சரி. சரித்திரம் தெரியுதான்னு பாக்கேன்" அவர் சொல்லவும், விவகாரம் முத்துகிறது என அனைவருக்கும் புரிந்தது.

" வெள்ளைக்காரன் ஏன் இந்தியாவுக்கு கடல் வழி கண்டுபிடிக்கணும்-னு முனைப்பா நின்னான்?" வகுப்பு மெளனமா
னது.

பிரம்பைச் சுழற்றிக்கொண்டே பெஞ்சுகளுக்கு இடையில் நடந்தார் " எவனுக்குல தெரியும்? எந்திரி..பாப்பம்"

மீண்டும் மயான அமைதி.

எனக்கு பதில் தெரியும். மனசு மோதுகிறது..சொல்லிவிடவேண்டும்.. கையைத் தூக்கு...கையைத் தூக்கு...

வழக்கமான பயம் என்னை வென்றது. என் முகத்தில் அவர் ஏதோ கண்டிருக்கவேண்டும். நின்றார்.

" ஏல, கண்ணாடி.. எந்திரு."

எழுந்தேன். " நீ சொல்லு"

வாய் திறந்தேன். வழக்கம் போல வார்த்தைகள் வரவில்லை . உதடுகள் மட்டும் துடித்துக்கொண்டிருந்தன..

"இ..இ..இ..." இஸ்தான்புல் நகரை ஓட்டாமான் துருக்கியர் கைப்பற்றினர் எனச் சொல்லவேண்டும்- இஸ்தான்புல் இ..இ.இ
ய்ல் நின்றது

அவர் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார்.

" சார் அவனுக்கு திக்குவாயி. இன்னிக்கு பூரா அப்படியே நிப்பான்" பின்னாலிருந்து எவனோ சொன்னான். ஒரு சிரி
ப்பலை மோதியது.

கையை மேலே தூக்கி, கண்களைத் துடைத்துக்கொண்டேன். வாய் மட்டும் துடித்துக்கொண்டிருந்தது.

அருகே வந்தார். " சாயங்காலம் வீட்டுக்குப் போறதுக்கு முன்னால என்னைப் பாத்துட்டுப் போ. வெளங்குதா?'

சரியென தலையாட்டினேன். " உக்காரு" என்றவர் வகுப்பு முழுதையும் எழுந்து பெஞ்சு மேல் நிற்கச் சொன்னார். அந
னவருக்கும் கையில் இரண்டு அடி - செமத்தியாக..

"வெக்கமாயில்ல? உங்கூடப் படிக்கிற பயலுக்கு திக்குவாயின்னா சிரிக்கேங்களே? நீங்கெல்லாம் ஓவியமோ?அடுத்தவன்
கஷ்டத்தப்பாத்து சிரிக்கவால சொல்லிக்கொடுத்திருக்கு ? சோத்தத் திங்கீயளா ** யத் திங்கீயளா?" அவர் போட்ட
சத்தத்திலும் அடியிலும் வகுப்பு உறைந்து தலை குனிந்தது.

சாயங்காலம் , ஆசிரியர் அறையில் அவரைப் பார்க்கப் போனேன். கிளம்பியிருந்தார். சைக்கிள் ஸ்டாண்டு வரை
அவருடன் நடந்தேன்.

"நீ பேசணும்டா. நிறையப் பேசணும்.. தைரியமா பேசு.பேசப்பேசத்தான் நீ புத்திசாலின்னு தெரிஞ்சுக்குவாங்க?"

அவரது வார்த்தைகளில் விம்மினேன்.

"இல்ல சார். எனக்கு படிப்பு வராது. நான் மக்குளி சார்."

" இல்லடே. நீ படிப்பே. ஒரு நாளு நீ மேடைல பேசுவ. பெரிசா பரிசெல்லாம் வாங்குவ பாரு. " அன்போடு தோளில் கை போட்டு அழுத்தினார்.

"எங்கேந்துடே வார?"

"ஹார்பர் குவார்டர்ஸ் சார்"

" கடற்கரைக்குப் போ. தனியா நீ பாட்டுக்கு கத்தி கத்திப் பேசு. என்னதான் பேசணும்னு இல்ல. நீ படிச்ச பாடத்தை
உரக்கச் சொல்லிப்பாரு. உம்-முன்னால இருக்கிற மணலெல்லாம் ஆளுங்கன்னு நினைச்சுக்க."

என் தலையில் வலக்கையை வைத்தார் " என் பிள்ளேள் எவனும் சோடைபோனதில்ல. போவ விடமாட்டேன். கர்த்தர் இருக்காரு. தைரியமா இரு ராசா"

கிளம்பினவனை மீண்டும் நிறுத்தினார்

" திக்குவாயி நோயில்ல தம்பி. தைரியமாப் போராடு. ஓடியே போயிரும். முதல்ல உன்னை நம்பு"

மறுநாள் தனியே கடற்கரைக்குப் போனேன். அலைகள் சோம்பலாக அடித்துக்கொண்டிருந்தன.தெரிந்த கேள்வி பதில்களைச் சொல்லத்தொடங்கினேன். முதலில் வெட்கமாக இருந்தது. 'கோட்டிக்காரங்கணக்கா என்னல தனியா பினாத்திக்கிட்டு கிடக்கே?'ன்னு எவனாச்சும் கேட்டான்னா?

யாருமில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு, அருகில் இருந்த இராவணன் மீசை முட்களைப் பார்த்து கொஞ்சம்
கத்திப் பேசத் தொடங்கினேன்.

நானே கேள்வி கேட்டேன். நானே பதிலும் சொன்னேன். சில சமயங்களில் கையைத் தூக்கியும் "சார் சார்" எனக் கூவி
சொல்லிப்பார்த்துப் பழகினேன். கொஞ்சம் கொஞ்சமாக வெட்கம் விட்டு , சுவாரசியமாக ஆனது.

பேசுமுன் ஒரு முறை மனதுள் " பொறுமை.பொறுமை" எனச் சொல்லிக்கொண்டு நிதானமாகப் பேசத் தொடங்கினேன்.

இருநாட்களில் அம்மா ஆச்சரியப்பட்டாள். " என்னடா, இன்னிக்கு கொன்னலே இல்லையே?!" அண்ணன் சந்தோஷத்தில் முதுகில் தட்டினார். தனிமையான கடற்கரைப் பேச்சுப் பயிற்சி மறைமுகமாகத் தொடர்ந்தது. கொஞ்சம் கொஞ்சம
஡க என் பேச்சு தெளிவானது. திக்குவாய் நின்றே போனது.

இரு வருடங்கள் பின் கல்லூரியில் தமிழ், ஆங்கிலப் பேச்சுப்போட்டி, பட்டிமன்றம் என மேடையேறி பரிசுகளை
வென்றேன். ஒவ்வொரு முறையும் ஜோசப் ஜெயராஜ் சாரை மனத்துக்குள் நினைத்துக்கொள்வேன்.

இன்று வருடங்கள் பல கழிந்து, கோப்பைகளுடன் நான் இருக்கும் புகைப்படத்தைப் பார்க்கையில் அவர் நினைவு வந்தது. அதுதான் இப்பதிவின் உந்துதல்.

"இறைவனுக்கு எந்த மொழி தெரியும்?" என யாராவது என்னிடம் கேட்டால், சொல்லுவேன். " அராமிக்கோ, அரபியோ, சமஸ்க்ருதமோ அல்ல.

தமிழ்.. தூத்துக்குடித் தமிழ்”

20 comments:

 1. an absolute fantastic post Sudhakar.

  mEla enna solrathunnu theriyalai.

  the impact of this post would stay with me and would remind me of the wonderful teachers i had in Madras.

  Thanks!

  -Mathy

  p.s.: I was recommending your blog to some people. I am glad that you've come with a powerful post/series.

  ReplyDelete
 2. அருமை சுதாகர். இன்னுமொரு தூத்துக்குடிப் பிறப்பு தமிழ்மணத்தில் மணம் வீசத் தொடங்கியிருக்கிறது.

  எனக்கு நினைப்பெல்லாம் சேவியர்ஸ் ஸ்கூலுக்குள் போய் விட்டது. அங்கு சேர்ந்தது முதல்....அப்பா.....எத்தனை எண்ண அலைகள் வந்து வந்து மோதுகின்றன. நன்றி நன்றி.

  உங்கள் ஜெபராஜ் சார் உண்மையில் தெய்வந்தான். நம்பிக்கை என்னும் வெளிச்சத்தை இயலாமை என்ற இருட்டு நிறைந்த வாழ்க்கை என்னும் வழியில் ஏற்றி வைத்த பெருமகன் அவர். விளக்கு ஏற்றுவது போன்ற ஒரு அற்புதச் செயலைச் செய்திருக்கிறார். வாழ்க வளமுடன்.

  சோத்தைத் தின்னீங்களான்னு சொன்னீங்களே...

  இதே மாதிரி ஒரு வாத்தியாரு படிக்காத பயகள ஏலே...இவனுக ...த்திரத்தக் குடிங்கல...அப்பவாவது படிப்பு வெளங்குதாண்ட்டு பாப்போம்னு சொன்னது நினைவுக்கு வருது....ஒருவேளை பாட்டில்ல அடுத்த நாளு கொண்டாரனுமோன்னு வேற நானு அந்த வயசுல நெனச்சேன் ஹா ஹா ஹா

  ReplyDelete
 3. மிக மிக அருமையான பதிவு...
  தேசிபண்டிட்டில் இந்தப் பதிவை இணைத்துள்ளேன்.

  http://www.desipundit.com/2006/04/11/ezhutharivithavan/

  ReplyDelete
 4. நன்றி மதி,
  என்னமோ நான்கூட கொஞ்சம் உருப்படியா எழுத முயன்றிருக்கிறேன்!

  அன்பின் ராகவன்,
  பின்னூட்டத்திற்கும் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டதற்கும் நன்றிகள். சேவியர்ஸ் பள்ளி அனுபவங்கள் நிஜமாகவே மகத்தானவை. சில வாய்விட்டு சிரிக்கத் தக்கவை எனினும் பல பாடங்கள் வாழ்வைச் சீராக்கியவை. ஜோசப் ஜெயராஜ் சார் பத்தி எழுதலைன்னா, நான் சுவாசித்த உப்புக்காத்துக்கு அர்த்தமே இல்லாம போயிடும்.

  அன்பின் டுபுக்கு அவர்களே,
  தங்கள் பின்னூட்டத்திற்கும், தேசி பண்டிட் இணைப்பிற்கும் மிக்க நன்றிகள். மேலும் தொடர்வேன்.
  அன்புடன்
  க.சுதாகர்

  ReplyDelete
 5. அன்பிற்குரிய சுதாகர்,

  மனம் நெகிழ்ந்து போனது. உங்கள் ஆசிரியர் போற்றுதலுக்கு உரியவர். உங்கள் முயற்சி பலருக்கும் நம்பிக்கை ஊட்டக் கூடியது.

  தூத்துக்குடி என்னோடும் நிறைந்து போன ஊர். பெருமையாக இருக்கிறது.

  வாழ்க!

  அன்புடன்,
  இராம.கி.

  ReplyDelete
 6. நல்லதொரு பதிவு. எதோ இரண்டு வார்த்தைல சொல்லிட்டு போறதா நினைச்சுடாதீங்க.
  மனசத் தொட்ட பதிவு.

  அன்புடன்
  சாம்

  ReplyDelete
 7. சுதாகர்,

  அருமையான பதிவு.

  நானும் திடீர்னு 3 வயசா இருந்தப்ப இப்படித் திக்குவாய் ஆயிட்டேனாம். அப்புறம் என்னவோ மருந்து
  கொடுத்தாங்க போல. இப்ப இதை நான் சொன்னா யாராவது நம்பணுமே!

  பேசிப்பேசிக் கொல்றான்னு கோபால் சொல்லிக்கிட்டு இருக்காரு:-)

  ReplyDelete
 8. அன்பு சுதாகர், மிகவும் அருமையான பதிவு.

  நம்ம ஊர் பக்கம் தான் படிச்சீங்களா?

  ஜோசப் ஜெயராஜ் சார் உண்மையில் தெய்வம் தான்.

  எனக்கு ஆங்கில, சரித்திர வகுப்பு எடுத்த ஆசிரியர் பெயரும் ஜோசப் ஜெயராஜ் தான், அவருக்கு குழந்தை கிடையாது. நீங்க சொன்னவரும் அவரா என்று தெரியலை.

  நான் 10வது படிக்கும் போது தலைமை ஆசிரியராக வந்தவர் பெயர் ஹெர்பட் சாந்தப்பா, அவரையும் நாங்க தெய்வமாக நினைக்கிறோம்.

  எங்க வகுப்பில் தேறவே மாட்டாங்க என்று சொன்ன 7 பேரையும் அவர்களுக்கு கணக்கும் ஆங்கிலமும் சொல்லிக் கொடுக்க என்னையும் மாலையில் பள்ளிக்கு வரச் சொல்லி இரவு 12 மணி வரை பாடம் சொல்லி கொடுக்க சொல்வார், கூடவே இருப்பார், வீட்டுக்கு போய் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை காப்பி போட்டு கொண்டு வருவார்.

  அவரது முயற்சியால் 5 பேர் தேறி, கல்லூரியில் பட்டம் கூட வாங்கினார்கள்.

  தொடர்ந்து எழுதுங்கள்.

  ReplyDelete
 9. அன்பின் இராம.கி அவர்களே,
  தங்கள் பின்னூட்டத்திற்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி. தமிழ் குறித்து நீங்கள் எழுதிவருவதை பிரமிப்புடன் படித்துவருகிறேன்.
  நான் தமிழ் மேல் கொண்டிருந்த வெறுப்பை ஒரு காதலாகவே மாற்றிய ஒரு ஆசிரியர் குறித்துப் பின் எழுதுவேன்.

  அன்பின் சாம்,
  நன்றி. உணர்வுகள் வார்த்தைகளின் அளவிலல்ல, ஆத்மார்த்த வெளிப்பாட்டிலேயே இருக்கிறது என்று நான் நம்புகிறேன். பின்னூட்டதிற்கு நன்றி.

  நன்றி துளசியக்கா,
  நீங்க மரத்தான் ஓட்டம் ரேஞ்சுக்கு எழுதுவதின் காரணம் இப்பத்தானே புரிகிறது?! " கோபால் சாரின் நிலையைப் புரிந்து கொள்ள முடிகிறது என்னால்" என்கிறாள் என் மனைவி. இவங்க கதையை நாம எங்க போய்ச் சொல்ல?!

  அன்பின் பரஞ்சோதி,
  பின்னூட்டத்திற்கு நன்றி. நான் படிக்கும்போது ('79-'84) தலமையாசிரியர் தந்தை பெலிக்ஸ் ரோச் அடிகள், இணைத் தலைமையாசிரியர் தந்தை சிகாமணி அவர்கள். சிகாமணி சார் ஆங்கிலம் சொல்லிக்கொடுக்கும் விதமே தனி. ஜோசப் ஜெயராஜ் சாருக்கு ஒரு பையன் உண்டு ( போலியோவால் சிறிது முடமான சிறுவன் ) என நான் கேட்டிருக்கிறேன்.

  ReplyDelete
 10. நெஞ்சைத் தொடும், நெகிழ வைக்கும் பதிவு!

  முடிவு இன்னும் தொக்கி நிற்பது போல ஒரு உணர்வு!

  கடைசி பாராவை அழித்து விட்டீர்களோ?

  ReplyDelete
 11. தூத்துக்குடி என்ற பெயரைப் பார்த்தவுடன் என்னைப் படிக்கத் தூண்டியது. இல்லையெனில் மனம் நெகிழ வைத்த, அதே நேரம் பகுத்தறிவையும், தன்னம்பிக்கையையும் அளிக்கக்கூடிய இந்த பதிவைத் தவறவிட்டிருப்பேன். என்னுடைய நண்பர்கள் சிலருக்கும் அனுப்பி இருக்கிறேன்.

  கல்லூரி படிக்கும் பருவத்தில்தான் தூத்துக்குடி நகருக்குக் குடி பெயர்ந்தாலும், அதற்கும் முன்பே பல வருடங்களாகத் தூத்துக்குடிக்கு அருகிலுள்ள கிராமங்களில் வாழ்ந்தவன். தூத்துக்குடியின் உப்பும், புழுதியும் படிந்த காற்றின் ருசியை இன்னும் மறக்க முடியவில்லை. தூத்துக்குடியில் வாழ்ந்த இன்னும் சில பதிவர்களை எனக்குப் பிடிக்கும். இராகவனின் பதிவுகள் பலவும் எனக்குப் பிடித்தவை. அனைத்தையும் படிக்க முடியாவிட்டாலும், தமிழ் மணத்தில் நான் பார்க்கும் போது தவறவிட்டதில்லை.

  நீங்கள் படித்த அதே ஆண்டுகள்தான் என் தம்பியும் சவேரியார் பள்ளியில் படித்தார். இப்பொழுது சென்னையில் இருக்கிறார். விசாரித்துப் பார்க்கிறேன்.

  வாழ்த்துக்கள்!

  நன்றி - சொ. சங்கரபாண்டி

  ReplyDelete
 12. அன்பின் எஸ்.கே
  நன்றி. கடைசி வரிகள் அவைதாம்! ஜோசப் ஜெயராஜ் சார் எனது திக்குவாய் குறித்துஅவர் முதலும் கடைசியாகப் பேசியது அன்றுதான். அதன் பின் வகுப்பில் எப்பவாவது என்னிடமும் கேள்விகேட்பார். பதில் சொல்லும்போது அவர் முகத்தில் ஒரு புன்னகை இருக்கும் ( எனது அனுமானவாகவும் இருக்கலாம்). ஆனால் எனது பேச்சின் முன்னேற்றத்தை கவனித்திருந்தார். பலமுறை அவரிடம் பேசியிருக்கிறேன். கல்லூரியில் சென்றபின் அவரைக் கண்டு பேசியதில்லை.

  நன்றி சுடலைமாடன் அவர்களே,
  தூத்துக்குடி உப்புக் காற்றின் சுவை எத்தனை வருடமானாலும் மறக்க முடியாதது. உங்கள் தம்பிக்கு ஜோசப் ஜெயராஜ் சாரைத் தெரிந்திருக்கும். தமிழ், ஆங்கில வகுப்புகளுக்கு (9,10 ) பாடம் எடுத்திருந்தார்.மேல்நிலை வகுப்புகளுக்கு எடுத்ததில்லை.தங்கள் ஊக்கத்திற்கு நன்றிகள்.
  அன்புடன்
  க.சுதாகர்.

  ReplyDelete
 13. படிச்சி முடிச்சிட்டு ரொம்ப நேரம் உங்க பதிவையே பார்த்துக்கிட்டிருந்தேன். அவ்வளவு அருமையா முடிச்சிருந்தீங்க.

  தூ..டி யில நான் ரெண்டு வருஷம்தான் வேலை செஞ்சேன்.என் மனைவியி சொந்த ஊரும் தூ..டிதான். ஆகவே அதுவும் எனக்கு சொந்த ஊர் போலத்தான். நீங்கள் படித்த பள்ளிக்கு பலமுறை சென்றிருக்கிறேன்.

  நம்முடைய பள்ளி ஆசிரியர்கள்தான் நம்முடைய கண்கண்ட தெய்வங்கள். ஆகவே உங்களுடைய தொடருக்கு நீங்கள் வைத்துள்ள தலைப்பு மிக அருமை.

  தொடர்ந்து எழுதுங்கள்..

  ReplyDelete
 14. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 15. நன்றி ஜோசப் சார்,
  உங்கள்பதிவில் பின்னூட்டமிட்ட அன்றுதான் இதனைப்பற்றி நினைத்துக்கொண்டிருந்தேன். உங்கள் பதிவில் பின்னூட்டத்தில் தூத்துக்குடி ஆசிரியர்கள் குறித்து எழுதியதும் இதன் தாக்கம்தான்.
  அன்புடன்
  க.சுதாகர்.
  The earlier comment was in Tscii and had to be removed.

  ReplyDelete
 16. மிழ் தகவல் தொழில் நுட்பம் வளர்ச்சியடைய பிளாக்கர் மூலமாக பல அரிய கருத்துக்களை தந்து கொண்டிருக்கின்றீர்கள். உங்கள் கருத்துக்கள் தெளிவாகவும் அருமையாகவும் உள்ளது.

  ReplyDelete
 17. எனது திக்குவாய் அனுபவங்கள் நினைவிலாடின. நல்லாசிரியர்களிடம் பயின்ற நாம் கொடுத்து வைத்தவர்கள்

  ReplyDelete
 18. பாராட்ட வார்த்தைகளில்லை.. அந்த சாரின் வார்த்தைகள் மனதில் இன்னும்..
  அற்புதமான பதிவு சுதா..

  ReplyDelete
 19. அருமை.. மனசைத் தொட்டது

  ReplyDelete
 20. மனதை நெகிழ வைத்த, மற்றவர்களுக்கு தெம்பூட்டும் பதிவு. வாழ்த்துகள்.

  ReplyDelete