Saturday, April 15, 2006

தூத்துக்குடி தெய்வங்கள்-2 (2)

சைக்கிள் மிதித்ததால் மூச்சு இழைக்க,குட்டியின் ஏமாற்றம் எரிச்சலாக வெளிப்பட்டது.

'லே மக்கா, ஒரு வார்த்தை நமக்கு இங்கிலீஷ்ல பேசத் தெரியாமாடே. ஊட்டி ஞாபகமிருக்குல்லா?" பாயிண்டைப் பிடித்தேன். சட்டென அமைதியாகிவிட்டான்

ஊட்டிக்கு நானும் அவனும் மாவட்ட அளவிலான இறகுப்பந்து விளையாட்டுப் போட்டிக்காக திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டு சென்றிருந்தோம் ('81 என நினைக்கிறேன்). சென்னை, கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களிலிருந்து வந்த பையன்கள் பெண்கள் 'தஸ் புஸ்' என ஆங்கிலத்தில் பேசவும் , அரண்டே போனோம். நாங்கள் மட்டுமே தமிழில் பேசிக்கொண்டிருந்தோம் அறிமுகப்படுத்திக்கொண்ட நகரத்துப் பையன்கள் நாங்கள் ஆங்கிலத்தில் பேசத் தடுமாறுவது கண்டு, மெல்ல விலகினர்.
அதைவிடப் பெரிய தாக்கம்... பெண்கள் யாரும் எங்களிடம் பேசவே இல்லை. இங்கிலீஷ் பேசின பயல்கள் கிட்ட மட்டும் சிரித்து சிரித்து....

அந்த அனுபவம் குட்டியையும் என்னையும் மிகவும் தாக்கியிருந்தது எனக்கு அஸ்திரமாகப் பயன்பட்டது.

' ஆமால" என்றான் கொஞ்சம் சிந்தித்து.

"எங்க ஸ்கூல்ல எல்மர் சார் கூட 'இங்கிலீஷ்ல பேசுடே, இங்கிலீஷ் புக் படிடே'-ன்னு சொல்லுதாரு.என்னல செய்ய?" என்றான் கவலையோடு.

கடற்கரை பேச்சு அனுபவம் முன்பு இருந்ததால், அவனிடம் மட்டும் அதைச் சொன்னேன். யாரும் எங்களைக் கண்டு கொள்ள மாட்டார்களென்பதால் அவனுக்கும் அந்த யோசனை சரியாகவே பட்டது.

"நம்ம ரெண்டுபேரும் ஒருத்தருக்கொருத்தர் கடற்கரைல மட்டும் இங்கிலீஷ்ல பேசுவம். நீ சொல்றதுல எதாச்சும் தப்பு இருந்தா நான் உடனே சொல்லுவேன். நான் பேசும்போது நீ திருத்தணும்"
உடன்படிக்கை தயாரானது. 'தப்பைத் திருத்தினா சொணங்கக்கூடாதுடே' என்னும் rider உடனே இணைக்கப்பட்டது.

பேசுவதென்பது முடிவானதும் பெரிய இரு கேள்விகள் முன்நின்றன.

முதல் கேள்வி 'என்ன பேசுவது?'

இரண்டாவது மிக முக்கியமான கேள்வி ' எது தப்பு என எப்படி கண்டுபிடிப்பது?' எங்களது இங்கிலீஷ் இலக்கண அறிவு குறித்தான நம்பிக்கை இக்கேள்வியை மலையென மாற்றியது!

'முதல்ல பேசுவோம். அப்புறம் தப்பு பத்தி யோசிப்போம்' என முடிவு செய்தோம்.

குட்டிதான் முதலில் ." நான் ஆரம்பிக்கேன்" என்றான். ஐந்து நிமிடம் மொளனமாய் நடந்திருப்போம். அவன் பேசுகிற வழியாய்த் தெரியவில்லை.
"என்னலே?" என்றேன்
" என்ன பேசுறதுன்னு தெரியல மக்கா." என்றான் அழமாட்டாக்குறையாய்.
எதைப் பேச உந்தினாலும், ஆங்கிலத்தில் பேசப்போகிறோம் என்ற உள்ளுணர்வு, பேச்சு வருவதை அமுக்கிவிடுகிறது என்பதை உணர்ந்தோம். அதை எப்படி மீறுவதென்பது தெரியவில்லை.
'மக்கா ஒரு ஐடியா சொல்லுதேன். நம்ம பாடத்துல வரும்லா.. மனப்பாடப் பாட்டு. அதுல நீ ஒரு வரி சொல்லு. நான் சொல்லுதேன். என்னலா?" என்றான். இது கொஞ்சம் சுளுவாக இருக்கும் எனத் தோன்றியது.
நன்றாக ஞாபகமிருக்கிறது.. தாகூரின் கீதாஞ்சலியில் ஒரு பாட்டு மனப்பாடப் பாட்டாக 9ம் வகுப்பில் இருந்தது.அதனை நினைவுக்குக் கொண்டுவந்தோம்.
'This is my prayer to thee my Lord" என்றேன். பொங்கிய சிரிப்பை அடக்கியவாறே.

"Strike strike at the root of penury in my heart" என்றான் குட்டி.

இருவரும் ஒருவரையொருவர் பார்த்துவிட்டு,திடீரென அடக்கமாட்டாமல் சிரித்துவிட்டோ ம். 'என்ன கேணக்கூத்துல இது?' எனக் கேட்டுக்கொண்டாலும், இந்த ஆரம்பம், தயக்கம் என்னும் பனிச்சுவரை உடைத்தது என்பது உண்மை.

3 comments:

 1. எந்த ஒரு பெரிய முயற்சியும் ஒரு அடியில்தான் துவங்குகிறது என்பார்கள். அது போலத்தான் உங்கள் முயற்சியும். நல்ல பலன் கிடைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

  ReplyDelete
 2. அன்பின் ராகவன்,
  பெருமளவில் இது பயனளிக்கவில்லை. உச்சரிப்பும், இலக்கணப்பிழைகளும் திருத்தப்படவேண்டியிருந்தன.
  பேசமுடியும் என்ற நம்பிக்கை வளர்ந்தது என்பது மறுக்கமுடியாத உண்மை. பேசுவதில் கொஞ்சம் வெட்கம் விட்டுப்போனது. இருந்தாலும் பொழுத்போக்காக இதனைத்தொடர்ந்தோம்.
  இன்றும் என் நண்பன் ஓவ்வொரு முறை பேசும்போதும் இதனைக் குறித்துச் சிரிக்காமல் இருப்பதில்லை.!
  க.சுதாகர்.

  ReplyDelete
 3. அன்பின் எஸ்.கே,
  ஊக்கப்படுத்தியதற்கு நன்றி. இப்பதிவுத் தொடர் ஆசிரியர்களின் அருமை காட்டமட்டுமே எழுதத்தொடங்கினேன்.எவருக்கேனும் தன்னம்பிக்கையூட்டுவதாக இருந்தால் மகிழ்வேன். புத்தகம் எழுதுமளவிற்கு நான் இன்னும் சாதித்துவிடவில்லை. அந்த ஆசிரியர்களின் வார்த்தைகள் நினைவிலிருப்பதை கூடியமட்டும் அவர்கள் கூறிய முறையிலேயே எழுத முயற்சித்திருக்கிறேன்.
  அன்புடன்
  க.சுதாகர்.

  அன்பின் திருமலை,
  பின்னூட்டத்திற்கு நன்றி.
  சில ஆசிரியர்கள் மட்டுமே தெய்வங்களாக விளங்கினர். வகுப்பில் வந்து "வெண்படம் வரைக" என கரும்பலகையில் எழுதிப்போட்டுவிட்டு," ம். செய்யுங்கல" என குமுதம் படித்த வாத்தியார்களும் உண்டு!
  வ.உ.சி கல்லூரியோடு இத்தெய்வங்களின் வருகை நின்றுவிட்டது.
  அன்புடன்
  க.சுதாகர்

  ReplyDelete