Sunday, September 17, 2006

ஹீரோ பேனா

ஹீரோ பேனா

" ஏல, ஜான்சன் சட்டைப்பையில பாத்தியால?" கிசு கிசுத்தான் சரவணன். ஒன்பதாம் வகுப்பில் சரவணன் மிக நெருங்கிய தோழன். ரெண்டாம் பெஞ்சில் பெருமிதமாக ஜான்சன் அமர்ந்திருந்தான். அவன் சட்டையை உற்றுப்பார்த்தேன். ஒன்றும் தெரியவில்லை.
"என்னலா பாக்கச்சொல்லுத?" என்றேன் சரவணனிடம்.
'சட்' என புடதியில் ஒன்று போட்டான்." மூதி. கண்ணாடி போட்டும் கண்ணு தெரியாது உனக்கு. பளபளன்னு மின்னுது பாரு ஒரு பேனா -அவன் சட்டைப்பையிலெ"
அப்போதுதான் கவனித்தேன். ஜான்சனின் வெள்ளைச் சீருடை சட்டைப்பையில் தங்கமென மின்னியது ஒரு பேனாவின் கிளிப்.
"அது ஹீரோ பேனா- டே. நம்ம ஜஸ்டின் சார், ஹெட்மாஸ்டர் கிட்ட மட்டும்தான் இருக்கு. ஜான்சன் அப்பா கப்பல்ல வேலைபாக்கார்லா? அதான் வாங்கிவந்திருக்காரு அவனுக்கு" சரவணனின் குரலில் அந்தப் பேனாவின் மதிப்பும், அது நம்மிடமெல்லாம் இருக்காது என்னும் தாழ்வு மனப்பான்மையும் வழிந்தன.

ஹீரோ பேனாவை அப்போதுதான் முதன்முறையாகப் பார்த்தேன். ஜான்சன் தன் கையிலேயே வைத்துக்கொண்டு எல்லாரையும் தொட்டுப்பார்க்க அனுமதித்தான். நானும் தொட்டுப்பார்த்தேன்.
"என்னலா இதனோட நிப்பு உள்ளேயே இருக்கு? நம்ம பேனா மாதிரி வெளிய இருந்தாத்தானே எடுத்து கழுவிப்போட முடியும்? என்ற கணேசனை ஜான்சன் ஏளனமாகப் பார்த்தான்.
"மூதி. இதெல்லாம் பெரிய ஆட்களுக்கு உள்ளதுல. நிப்பு, நாக்கட்டை எல்லாம் கழுவ தனி ஆட்களே இருப்பாங்க"
நம்பினோம்.
ஜான்சன் பெரிய ஆளாக அன்று கருதப்பட்டான். மரியதாஸ் சார் கூட " எங்கடே வாங்கின?" என்று எடுத்துப் பார்த்ததும், நான் சத்தியமாக ஜான்சன் பெரிய ஆள்தான் என முடிவே கட்டிவிட்டேன்.

அதன் தங்க நிற மூடியை சட்டையில் தேய்க்கத் தேய்க்க பளபளப்பு ஏறிக்கொண்டே போனது கண்டு ப்ரமித்தேன். அதில் ஜான்சனின் முகம் விகாரமாக வளைந்து தெரிந்தது. " கண்ணாடி கணக்கால்லா தெரியுது?' என்றேன் வாயைப் பொளந்த படி.
"போதும்ல. கொடு" என்றான் ஜான்சன் அலுத்தபடி. பேனாவை என் கண்ணிலிருந்து மறைத்தான் -சட்டைப்பையின் உள்ளே இட்டவாறே.

ஒரு உத்வேகம் எழுந்தது.
வாழ்க்கையில் எப்படியும் ஒருநாள் இந்த ஹீரோ பேனா கொண்டு எழுதவேண்டும்.

பேனா மேலும் எழுதும்.

2 comments:

  1. இந்த சீனத் தயாரிப்பான ஹீரோ பேனாவுக்கு அப்போது பெரும் விஐபி ரேஞ்ச் மவுசு. அதன் பெல்லோஸ் டைப் ஆட்டோமேடிக் இங்க் பில்லிங் தனிச் சிறப்பு.

    நானெல்லாம் பைலட் பேனாவில் கழுத்தைத் திறந்து இங்க் பில் செய்து பத்து நிமிஷத்துக்கு ஒருமுறை இங்க் அலவு காட்டும் பிரத்ட்யேக கண்ணாடி ஜன்னல் வழியே பார்த்து பார்த்து பரீட்சை எழுதியது ஒருகாலம்.

    இப்ப எல்லாமே ரெனால்ட்ஸ் பால் பென் தானே!

    அன்புடன்,

    ஹரிஹரன்

    ReplyDelete
  2. அன்பின் அரிஅரன்,
    நன்றி. மையூற்றுப்பேனாவைப் பராமரிப்பதே ஒரு கலை... அதெல்லாம் ஒரு பொற்காலம் சார்.
    anpudan
    K.Sudhakar

    ReplyDelete