Saturday, September 02, 2006

கேரளப் பள்ளிகளில் லினக்ஸ்

கேரளப் பள்ளிகளில் லினக்ஸ்

கேரள மார்க்சிஸ அரசு, பள்ளிகளில் மைக்ரோஸாஃப்ட் மென்பொருள்களை அகற்றி இலவச லினக்ஸ் மென்பொருளை உபயோகிக்கும் படி ஆணையிட்டிருக்கிறது.

ஓப்பன் சோர்ஸ்கோட் ( open sourcecode software) லினக்ஸ் வேண்டுமெனச் சொல்லுவது வரவேற்கப்படவேண்டியதுதான்.. ஆனால் இதன் அரசியல் பின்னணிதான் உதைக்கிறது.

மைக்ரோசாஃப் மென்பொருள்களை அரசு உபயோகிப்பதை தான் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோதே கடுமையாக எதிர்த்தவர் அச்சுதானந்தன். இப்போது லினக்ஸ் வேண்டுமெனச் சொல்லுவது மைக்ரோசாஃப்டை துரத்தத்தானே என்பது "கடைஞ்செடுத்த அரசியல். என்னல கேணத்தனமா கேக்க?" என ஐந்து வயது பயல் கூடக் கேட்டுவிடுவான். எதில்தான் அரசியல் கொண்டு விளையாடுவது என்பது இல்லை. ஏற்கெனவே கேரளா மென்பொருள் உற்பத்தியில் அப்படியொன்றும் பேர் எடுத்துவிடவில்லை. இப்போதுதான் கொஞ்சமாக கொச்சியில் காக்கநாடு பகுதியில் I.T Park வர ஆரம்பித்திருக்கிறது.

முதலில் கோக், பெப்சி, இப்போது மைக்ரோசாஃப்ட் . சும்மாவே வெத்து வாயை மெல்லும் கேரள இடது சாரி அரசுக்கு பொரி கிடைச்சது போல... "இந்தியாவின் லினக்ஸ் மென்பொருள் திறம் கொண்ட மையமாக கேரளாவை உருவாக்குவதே என் லட்சியம்" என்று அச்சுதானந்தன் திருவாய் மலர்ந்தருளியிருப்பது, இந்திய அரசியல்வாதிகளின் தீர்க்கதரிசனத்தைக் காட்டுகிறது..:)

லினக்ஸ் வளர்ந்து வருவது உண்மை. ஆனால் பொருளாதார ரீதியில் ஒரு அரசு IT park வரும்படி பற்றி சற்று யோசிக்கவேண்டும். இந்த டெக்னாலாஜி சண்டையெல்லாம் வல்லுநர்களுக்கு விட்டுவிட்டு அரசியல் வாதிகள் திறப்பு விழாவில் ஒரு குத்துவிளக்கு ஏற்றி, மாலை வாங்கிக்கொண்டு அம்பாசிடர் காரில் கிளம்பிப் போய்க்கொண்டே இருக்கவேண்டும். அதுதான் எல்லோருக்கும் நல்லது. டெக்னாலஜி பத்தி அரசியல்வாதிகள் அதிகம் பேசுவது ஆபத்து..


சேட்டம்மாரே.. ஜமாயுங்கள்.

3 comments:

  1. Slashdot போன்ற சர்வதேசக் குழுமங்களிலெல்லாம் வெகுவாகப் பாராட்டப்பட்டிருக்கும் இந்நடவடிக்கை குறித்து நீங்கள் தெரிவிக்கும் ஆட்சேபணை என்னவென்று புரியவில்லை. தனது பள்ளிகளில் என்ன உபகரணங்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்று தீர்மானிக்கும் தகுதி ஒரு அரசுக்குக் கிடையாதா? அதுவும் இலவசமாகக் கிடைக்கும் மென்பொருள் இருக்க, அதிக விலை கொடுத்து அதே பயன்பாட்டைப் பெறுவதுதான் நீங்கள் கூறும் 'பொருளாதார' சாமர்த்தியமா? பொதுப்பள்ளிகளில் லினக்ஸ் பயன்படுத்தப்படுவதால் IT Parkகளில் வர்த்தகம் குறைந்து விடும் என்ற ரீதியில் அமைக்கப்பட்ட உங்கள் வாதம் எனக்கு சத்தியமாகப் புரியவில்லை. இது போன்ற அச்சத்தை வேறு யாரும் தெரிவிக்கவில்லை என்பதோடு, இத்தகைய (அதாவது IT parkகள் நசிந்து விடும் என்பது போன்ற) மிரட்டல்களுக்கெல்லாம் பணிய வேண்டிய அவசியமென்ன என்றும் யோசிக்க வேண்டியிருக்கிறது. அவர்களது பானங்களில் காணப்பட்ட பூச்சி மருந்து கலப்புக்காக Coke / Pepsi மீது நடவடிக்கை எடுத்தோமானால் நம் நாட்டின் அந்நிய முதலீடு பாதிக்கப்படும் என்ற வாதத்தை ஒத்ததே உங்களது வாதமும்.

    ReplyDelete
  2. சுதாகர், நீங்கள் லினக்ஸை எதிர்ப்பதன் காரணத்தை சரியாக குறிப்பிடவில்லை. IT parkகளுக்கும் திறந்த திறமூல மென்பொருளை பள்ளிகளில் பாவிப்பதற்கும் ஒரு தொடர்பும் இல்லை. இது வரவேற்க வேண்டியதே!

    ReplyDelete
  3. மணியன் மற்றும் வாய்ஸ் ஆஃப் விங்க்ஸ்,
    நன்றி.
    எனது பின்னூட்டம் மிக மிக விரிவாகச் சென்றதால் அடுத்தபதிவாக அதனை இட்டிருக்கிறேன்.
    அன்புடன்
    க.சுதாகர்.

    ReplyDelete