Saturday, March 01, 2014

நாட்டுப்புறத் தினவு - கோவா
 வாஸ்கோ பஸ் நிலையத்தை நெருங்குமுன்பே மழை சிறிதே வெறித்திருந்தது.ஆட்டோவிலிருந்து இறங்கி பயணச்சீட்டு வாங்க நிற்கும்போது , முன்னேஇருந்தவர் தலையைச் சிலுப்ப , கண்ணில் நீர் தெறித்தது.
"மன்னிக்கவும். தெரியாமல் .." திரும்பிப் பார்த்தவரின் கண்களில் நிஜமாகவே மன்னிப்புக் கேட்கும் பாங்கு தெரிந்தது."பரவாயில்லை" என்றவன் புன்னகைத்தேன். என்னைக்கேட்காமலே எனக்கும் சேர்த்து
பயணச்சீட்டு எடுத்தவர், என்ன சொல்லியும் பணம் வாங்க மறுத்துவிட்டார்.
அது வாஸ்கோவிலிருந்து கிளம்பினால் பன்ஜிம் வரை நிற்காமல் போகும்
கடம்பா ட்ரான்ஸ்போர்ட்-டின் வேகப் பேருந்து. மினி பஸ் போல இருக்கும்
அந்த வண்டியில் , பயணச்சீட்டு வாங்கி ஏறிக்கொண்டபின், கதவு அடைக்கபடும். பன்ஜியில் போய்த்தான் நிற்கும். ஒரு மணிநேரப் பயணம் போவதே தெரியாது. அருகருகே அமர்ந்தோம்

"நான் சிரீஷ் காமத்" என அறிமுகப்படுத்திக்கொண்டார். "வாஸ்கோவில் கடை வைத்திருக்கிறேன். இரும்புக் கம்பிகள் ஏஜென்ஸி.பான்ஜியில் பெண் இருக்கிறாள். இன்று போய் அவள் வீட்டில் இருந்துவிட்டு நாளை வீடு திரும்புவேன். முளுகாமல் இருக்கிறாள்..." இரு நிமிடங்களில் வெகு சகஜமாகப்பேசவாரம்பித்துவிட்டார். முன்வழுக்கையில் பளபளத்த தலையும், எடுப்பானநாசியுமாய் ,சிரீஷ் , என்றோ பரோடாவில் பார்த்த ப்ரவீன் ஜெயின் என்ற நண்பரை நினைவுபடுத்தினார். சிலரைப் பார்த்ததும் பிடித்துவிடுகிறது. மனது, நாம் அறியாமலே, நமக்கு அறிமுகமானவரோடு தொடர்பு படுத்திப் பார்க்கிறது. சிரீஷ் அந்த ரகம்.

மழை மீண்டும் தொடங்கியது. சாலையோரம் புதுப்பசுமை மழையில் கனத்துதலைவணங்கி நின்றன. சாலை, புது மழை வெள்ளத்தில் லேசாகப் பளபளத்தது திட்டுத் திட்டாக. "சன்னல் கண்ணாடியை மூடிவிடுங்கள்" என்றேன். அவர் மூடியபின்னும், ஓட்டுனர்அருகேயிருந்த சன்னலிலிருந்து அடித்த சாரலில், தொடையில் பேண்ட்டைநனைத்தது.

"இந்த வருசம் நல்ல மழை. போனவருடம் நீங்கள் பார்த்திருக்கவேண்டும். மிகக்குறைவு. ஜுவாரி நதி பெருகவேயில்லை. மங்கேஷ் நாதர் அருளில் இன்னும்பெய்யட்டும்" காமத் பேசிக்கொண்டேயிருந்தார். பேருந்து வேகம் குறைந்து சாலையோரம் நின்றது. ஓட்டுனர் குதித்து இறங்கினார்.
"ப்ரேக் சரியாக வேலைசெய்யவில்லை. வண்டி மேலே போகாது. அடுத்தடுத்துவரும் வண்டியில் ஏறிக்கொள்ளுங்கள்" என்றவரை சரமரியாக
வண்டியிலிருந்தவர்கள் திட்டிக்கொண்டே இறங்கினர்.
பலரும் குடைகளை விரிக்க, நிற்க இடம் கூடுதலாகத் தேவைப்பட்டது. அதிக தூரம் செல்லவும் மனமில்லை. பேருந்து முன்னேயே நிறுத்தி ஆட்களை ஏற்றிக்கொண்டுவிட்டால்நெரிசலில் குடைகள் இடித்துக்கொள்ள, நான் , காமத்தின் குடைக்குள் நின்றேன்.முதலில் வந்த பேருந்தில் அடித்துக்கொண்டு பலரும் ஏற முயற்சிக்க, சிரீஷ் என்னைத் தடுத்தார்." அடுத்த வண்டியில் போகலாம். நெரிசல் அதிகம் இதில்". கோவாவில், மக்கள் மெதுவாகவே எதையும் செய்யும் பழக்கம்.. மும்பையில் அடித்துக்கொண்டு ஓடும்என்னால் இதைப் பெரும்பாலும் சீரணிக்க முடிவதில்லை. சிரீஷ் சொன்னதுக்காக நின்றேன்.
அடுத்த வண்டி, சிரீஷ் சொன்னபடியே காலியாக வந்தது. ஏறி அமர்ந்ததும்,
என்னைப்பார்த்து சிரித்தார் " சொன்னேன் பார்த்தியா" என்படு போல. மழை
நிற்பதாகத் தெரியவில்லை.

"இங்கே கொங்கணி , மராட்டி தவிர சில கிராமங்களில் பேசும் மொழி
வித்யாசமாக இருக்கும். அவை வட்டார மொழிச்சொற்கள் என்றாலும்,
புரிந்துகொள்வது சற்று சிரமம்" என்ற சிரீஷ் காமத், நான் இலக்கியம் குறித்து கேட்டதும், உற்சாகமானார்.
"நான் கொங்கணியில் கவிதைகள் எழுதுவேன். கொஞ்சம் இலக்கிய ரசனை உண்டு”:என்றவர், மேலும் தொடர்ந்தார்.”போர்த்துகீசியர்கள் வருமுன் இருந்த மொழி பெரிதும் மாறிவிட்டது. Inquistion போது , பல அடக்குமுறைகளுக்கு உட்பட்ட மக்களோடு,மொழியும் மாறிவிட்டது" என்றார் பெருமூச்சுடன்.
நாட்டுப்புறப் பாடல்களின் இன்றைய நிலை என்ன என நான் கேட்டுக்கொண்டிருந்தபோது, கோவா மருத்துவக் கல்லூரியருகே பேருந்து நின்றது.ஏறிய மூவரில் இருவர் கணவன் மனைவி போல இருந்தனர். பின் ஏறிய வயதானபெண், அவர்களுக்கு முந்திய இருக்கையில் அமர்ந்தாள். மூவரின் முகத்திலும் சோகம் அப்பிக்கிடந்தது. கலைந்த ஆடைகளும், அழுக்கான தோற்றமும், அவர்களது பொருளாதார நிலையைச் சொல்லாமல் சொல்லியது.

பேருந்து கிளம்பியதும் , தொடங்கியது அவ்வழுகையொலி. பலரும் திரும்பி நோக்கினர். அம்மூதாட்டி, உரக்க அழுதுகொண்டிருந்தாள். சிலர் எரிச்சலில் உச் கொட்டினர். நடத்துனர் அவளருகே சென்றவர் , என்ன சொல்வதெனத் தெரியாமல், தயங்கி முன் சென்றார்.
சிரீஷ் காமத் " அவள் புலம்புவது மிகவும் அரிதான வட்டார வழக்கு மொழி.பலருக்கும் இங்கே புரியாது." என்றவர், அவளது புலம்பல்களை உன்னித்துக் கவனிக்கத் தொடங்கினார். சிறிது எட்டிக் குனிந்து, முன் சீட்டில் அமர்ந்திருந்த அம்மனிதனிடம் என்னமோ கேட்டார்.
"ச்.சே. பாவம்" என்றவாறே அமர்ந்து , என்னைத் திரும்பிப் பார்த்தார்.
" அவளது மகன் குறித்தான சோகம். மருத்துவமனையில் இறந்திருக்கிறான். சடலத்தை எடுத்து வர பணமில்லை. கிராமத்திற்குச் சென்று, உறவினருடன் வருவதற்காக , தன் மூத்த மகனோடும், அவன் மனைவியோடும் போகிறாள்." என்ற விவரம் சொன்னார்.

அப்பெண்ணின் அழுகை கூடிக்கொண்டே போனது. கூடவே என்னமோ சொல்கிறாள்.யாருக்கும் புரிபடாமல்,...திரும்பித் திரும்பிப் பார்த்தவர்களில், ஒருவர் எழுந்து வந்தார்.அப்பெண்ணிடம் ஏதோ சொல்லக் குனிந்தவர், மெதுவாகத் தன் இருக்கைக்குத்திரும்பினார்- ஒன்றும் சொல்லாமலே.
சிரீஷின் கண்களில் ஈரம் கசிந்தது. "என்ன சொல்கிறாள்?" எனக் கேட்டேன்..சோகம் எல்லாருக்கும் ஒன்றுதானே. மரணம் , இறந்தவனை விட இருப்பவர்களையே அதிகம் தாக்குகிறது.
" அவளது பிலாக்கணத்தின் ஆழம் என்னை அசைக்கிறது. என்னால் முழுதுமாக மொழிபெயர்க்க முடியாது. இருப்பினும் முயற்சிக்கிறேன் " என்றார் சிரீஷ் ஆங்கிலத்தில்.

" இந்த மாரிக்காலத்திற்கா
இத்தனை கோடைகளைத் தாண்டி வந்தேன்?
இந்தக் கண்ணீர்த் தாரைகளுக்காகவா
ஜூவாரியில் நீராடி கண்களில் நீர்சேர்த்திருந்தேன்?
நமது தென்னைகளுக்காக நீ வெட்டிய
கால்வாய்களில்,
குருதி மழை பெய்வதாக
நேற்றிரவு கனாக்கண்டேன்.
இக் கனாவின் மூலம்
என் கண்களெனில்
அவை உன் உடலோடு
எரிந்து போகட்டும்
கனவின் மூலம்
என் உயிரேயெனில்,
உன்சிதையில் அதுவும்
கருகட்டும்.
மகனே!
ஊருக்கு உன் மரணம் சொல்லிவிடுவேன்
என் மனதுக்கும் உன் மரணம் சொல்லிவிடுவேன்
வீட்டின் தெற்குமூலையில்
நீ போன வருடம் நட்ட
தென்னையின் புதிய ஓலைக்குருத்து
நான் வீடு போனதும்,
நீ எங்கேயென காற்றிலாடிக்
கேட்குமே?
அதற்கென்ன சொல்லுவேன்?"

சிரீஷ் ஒருநிமிடம் மெளனித்தார். அவர் குரல் கம்மியது. அப்பெண்ணோடு, அவள் மகனும் ,மருமகளும் இறங்கிச் செல்வதை மங்கலான பேருந்தின் உட்புற குழல்விளக்கின் ஒளியில் பார்த்தபடி உறைந்திருந்தேன்.

மழை மீண்டும் பலமாகத் தொடங்கியிருந்தது.

8 comments:

 1. சுதாகர்! நிச்சயமாக கோவாவைப் பற்றிய என்னுடைய நினைவுகளில் உங்களுடைய இந்தப் பதிவும் மறக்கவே மறக்காது.அந்த மழையும், அதனை சார்ந்த ஈரமும்,காமத் அறிமுகமும், அந்தத் தாயின் சோகமும்,உலகளாவிய பயணங்களும்,மும்பை வாழ்கையும் மாற்றமுடியாத உங்கள் ஹிருதயத்தின் மிருதுத் தன்மையுமே என்னை இதை பகிர வைத்தது. தென்னை மரத்தின் மஹிமை அந்த பிலாக்கணத்திலும் தெரிய வருகிறது.கோவா-வில் நான் சிறிது காலம் நாடோடி போல் வாழ்ந்திருக்கிறேன்.அப்போது தேங்காயையும், மீனையும் விற்றே பசி தீர்த்துக் கொள்ளும் அந்த மனிதர்களின் சுலபமான வாழ்க்கை முறையை அறிந்து பொறாமை கொண்ட காலமும் உண்டு.Bobby-ன் na mangu sona chandi, Kabhi Haan Kabhi Naa திரைப்பட வரிசையில் இந்த கோவா-நாட்டுபுறத் தினவு என்னை மிகவும் பாதித்தது. எல்லோரும் பயணம் செய்கிறோம். ஆனால் எல்லோராலும் இம்மாதிரியான நுட்பமான உணர்வுகளை பிரதிபலிக்க முடியாது.பாராட்டுகளை தாண்டும் வரிசையில் தாங்கள் இருக்கிறீர்கள். உங்களுடைய blogger இப்போதுதான் தெரியும். எழுதி குவித்துள்ளீர்கள் என்பதை உங்கள் 2005 வருடத்தைய புள்ளி விவரமே சான்று.சிறந்த இலக்கியவாதிகள் வெகு ஜனங்களால் படிக்கப்படாதவர்கள் தாம். இன்று ஓரு இனிய ஞாயிறு!

  ReplyDelete
  Replies
  1. நன்றி சார். சக மனிதர்கள் பால் உங்களுக்கு இருக்கும் உணர்வுகளை மிக வெளிப்படையாகப் பகிர்வதற்கு இந்த வலைப்பதிவும் பணி செய்திருப்பதில் மகிழ்ச்சி. கோவா மருத்துவக் கல்லூரியைத் தாண்டும்போதெல்லாம் அந்தத் தாயின் நடுங்கும் வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன. பெரும் கனம் சூழ்கிறது.

   Delete
  2. அருமை சார்! மறக்க முடியாத குரல் அது!

   Delete
 2. சுதாகர்! நிச்சயமாக கோவாவைப் பற்றிய என்னுடைய நினைவுகளில் உங்களுடைய இந்தப் பதிவும் மறக்கவே மறக்காது.அந்த மழையும், அதனை சார்ந்த ஈரமும்,காமத் அறிமுகமும், அந்தத் தாயின் சோகமும்,உலகளாவிய பயணங்களும்,மும்பை வாழ்கையும் மாற்றமுடியாத உங்கள் ஹிருதயத்தின் மிருதுத் தன்மையுமே என்னை இதை பகிர வைத்தது. தென்னை மரத்தின் மஹிமை அந்த பிலாக்கணத்திலும் தெரிய வருகிறது.கோவா-வில் நான் சிறிது காலம் நாடோடி போல் வாழ்ந்திருக்கிறேன்.அப்போது தேங்காயையும், மீனையும் விற்றே பசி தீர்த்துக் கொள்ளும் அந்த மனிதர்களின் சுலபமான வாழ்க்கை முறையை அறிந்து பொறாமை கொண்ட காலமும் உண்டு.Bobby-ன் na mangu sona chandi, Kabhi Haan Kabhi Naa திரைப்பட வரிசையில் இந்த கோவா-நாட்டுபுறத் தினவு என்னை மிகவும் பாதித்தது. எல்லோரும் பயணம் செய்கிறோம். ஆனால் எல்லோராலும் இம்மாதிரியான நுட்பமான உணர்வுகளை பிரதிபலிக்க முடியாது.பாராட்டுகளை தாண்டும் வரிசையில் தாங்கள் இருக்கிறீர்கள். உங்களுடைய blogger இப்போதுதான் தெரியும். எழுதி குவித்துள்ளீர்கள் என்பதை உங்கள் 2005 வருடத்தைய புள்ளி விவரமே சான்று.சிறந்த இலக்கியவாதிகள் வெகு ஜனங்களால் படிக்கப்படாதவர்கள் தாம். இன்று ஓரு இனிய ஞாயிறு!

  ReplyDelete
 3. Very touching Sudha...

  ReplyDelete
 4. சுதாகர்! நிச்சயமாக கோவாவைப் பற்றிய என்னுடைய நினைவுகளில் உங்களுடைய இந்தப் பதிவும் மறக்கவே மறக்காது.அந்த மழையும், அதனை சார்ந்த ஈரமும்,காமத் அறிமுகமும், அந்தத் தாயின் சோகமும்,உலகளாவிய பயணங்களும்,மும்பை வாழ்கையும் மாற்றமுடியாத உங்கள் ஹிருதயத்தின் மிருதுத் தன்மையுமே என்னை இதை பகிர வைத்தது. தென்னை மரத்தின் மஹிமை அந்த பிலாக்கணத்திலும் தெரிய வருகிறது.கோவா-வில் நான் சிறிது காலம் நாடோடி போல் வாழ்ந்திருக்கிறேன்.அப்போது தேங்காயையும், மீனையும் விற்றே பசி தீர்த்துக் கொள்ளும் அந்த மனிதர்களின் சுலபமான வாழ்க்கை முறையை அறிந்து பொறாமை கொண்ட காலமும் உண்டு.Bobby-ன் na mangu sona chandi, Kabhi Haan Kabhi Naa திரைப்பட வரிசையில் இந்த கோவா-நாட்டுபுறத் தினவு என்னை மிகவும் பாதித்தது. எல்லோரும் பயணம் செய்கிறோம். ஆனால் எல்லோராலும் இம்மாதிரியான நுட்பமான உணர்வுகளை பிரதிபலிக்க முடியாது.பாராட்டுகளை தாண்டும் வரிசையில் தாங்கள் இருக்கிறீர்கள். உங்களுடைய blogger இப்போதுதான் தெரியும். எழுதி குவித்துள்ளீர்கள் என்பதை உங்கள் 2005 வருடத்தைய புள்ளி விவரமே சான்று.சிறந்த இலக்கியவாதிகள் வெகு ஜனங்களால் படிக்கப்படாதவர்கள் தாம். இன்று ஓரு இனிய ஞாயிறு!

  ReplyDelete
 5. ஒரு பிலாக்கணம் அழகான கவிதையாக உருப் பெற்று மனதைக் கனக்க வைக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. நன்றி bena. பிலாக்கணத்தில் இருக்கும் சோக அழகு உலுக்கிவிடுகிறது. தமிழ்ப் பிலாக்கணப் பாடல்களைக் கேட்டோமானால் மனிதம் அதில் தெறிப்பதை உணரலாம்.

   Delete