"விமானம் கிளம்ப இன்னும் ஒரு மணி நேரமாகும். Technical Snag" என்ற ground staff விமானப் பணிப்பெண் நட்புடன் சிரித்தாள். இந்த சிரிப்பு இரண்டு மணி நேரம் அவள் என்போல் காத்திருந்தால் நட்புடனோடு இருக்குமா? என்ற சந்தேகத்தோடே மீண்டும் வந்து அமர்ந்தேன்.
“சாரி” என்று காலைத் தொட்டு கன்னத்தில் ஒற்றிக்கொண்ட மனிதர் அடுத்த இருக்கையில் அமர்ந்தார். நானும் அவரை லேசாகத் தொட்டு கன்னத்தில் ஒற்றிக்கொண்டேன். கால் இடறிய மனிதர் புன்னகைத்து “இன்னும் ஒரு மணி நேரம்” என்றார். “ குறைந்த பட்சம்” என்றேன்.
மயூர் சோலங்க்கி என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். விலை அதிகமான வேதியல்பொருட்களையும் அவற்றின்
பண்புகளை அளவிடும் கருவிகளையும் தயாரிக்கும் சொந்தக் கம்பெனி வைத்திருந்து, அதனை நல்ல விலைக்குக் கொடுத்துவிட்டு, இப்போது உற்பத்தித் துறையில் கன்ஸல்ட்டிங்க் செய்து கொண்டிருக்கிறாராம். என்னை விட இரு
வருடங்கள் இளையவர். உயரமாக , வாட்ட சாட்டமாக கம்பீரமாக இருந்தவரின் முகத்தில் ஏதோ ஒரு வருத்தம் இழையோடியதாகப் பட்டது. சிறிது பேசிக்கொண்டிருந்த பின் , பீன்ஸ்
& லீவ்ஸ் -ல் அவருக்கும் சேர்த்து காப்பி
வாங்கி வந்தேன்.
எனது புதிய நாவலில் பிழைகள் திருத்துவதில் மூழ்கியிருந்தேன். மெல்ல என் புறங்கையைத் தொட்டார்.’ படா பாய் தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கணும். ஏனோ சொல்லணும்னு தோணுது.தவறா இருந்தா மன்னிக்கணும்” என்று தொடங்கினார். லாப்டாப்பை மூடி வைத்தேன்.
“
இஞ்சினீயரிங்கில் கூடப் படித்த நண்பர்கள் சமீபத்தில் 20-ம் வருட get together நடத்தினார்கள். பல வருடங்களாகப் பார்க்காத பலரைப் பார்த்ததில் ரொம்ப மகிழ்ச்சி எனக்கு. போன் நம்பர்கள் , மின்னஞ்சல் முகவரிகள் எல்லாம் பரிமாறி, ஒரு கூகுள் குழுவும் அமைத்தோம். நாந்தான் அதை முன்னின்று முனைப்புடம் செய்யவும் செய்தேன்.” ஒரு கணம் நிறுத்தினார்.
“அதில் ஒரு பெண். எல்லாரோடும் மிக சகஜமாகப் பழகுவாள். இப்போதும் அப்படியே கலகலவென இருந்தாள். மின்னஞ்சல் குழுவில், அவளைக் குறித்து,
கிண்டலாகத்தான்
’கணவர் பெயரைப் பின்னால் போட்டிருக்கிறாயே? பாவம் அவர்’
என்று எழுதியிருந்தேன். அதற்கு அவள் “ நீ பெண்கள் பின்னால் அலைகிறாய். நீ மண வாழ்க்கையில் நிம்மதி இல்லாதவன்” என்று அனைவருக்கும் பொதுவாகக் கிடைக்குமாறு எழுதிவிட்டாள். “ மனிதரின் முகம் நினைவில் மேலும் கனத்தது.
சட்டென குளமான கண்களோடு என்னை ஏறிட்டார். உதடுகள் துடிக்க “ நான் அப்படிப் பட்டவனில்லை அப்படி நினைத்துக் கூடப் பார்க்கவில்லை எனக்கு நண்பர்கள் கிடைத்தார்களே என்ற உற்சாகத்தில், கல்லூரியில் இருந்தது போலவே அதே இளமை மனத்துடன் இருந்துவிட்டேன். அதுதான் தவறோ?”
“உங்கள் கருவியில் லேசர்
உபயோகிப்பீர்கள்
இல்லையா?” என்றேன்
“ஆமாம்.”
“அதில் ஒரு லேசர் கற்றை இரண்டாய்ப் பிரிக்கப்படும். அதுவரை இரண்டுக்கும் ஒரே அகடு, முகடுகள். ஒரே அலை நீளம், அதிர்வெண். இரண்டும் வேறு வேறு ஊடகங்களில் பயணித்து மறுபுறம் வந்து சேரும்போது ஒன்றாக இருப்பதில்லை. ஒன்றின் அலை நீளம் ஊடகத்தால் மாறியிருக்கும். ஒன்றாக சேராது. இதுதானே நீங்கள் பயன்படுத்தும் கருவியின் அடிப்படை தத்துவம்?”
“ஆம்” என்றார் “ எந்த அளவு அதன் நீளம் மாறுகிறதோ அதை வைத்து அந்த ஊடகத்தின் மூலக்கூறுகளை , அடர்வை அறியமுடியும்”
“நீங்களும் உங்கள் நண்பர்களும் கல்லூரியில் ஒரே அலைவரிசை கொண்டிருந்தீர்கள். அதன்பின் கிடைத்த, சமூக அனுபவங்கள் வேறுவேறு. இப்போது சேரும்போது எப்படி அதே ஒத்துப்போகும் அலைவரிசையை எதிர்பார்க்கமுடியும்?”
“அது புரிகிறது அண்ணா. ஆனால் ஏன் அப்படி ஒரு வெறுப்பை உமிழ வேண்டும்? அந்த அளவுக்கு நான் ஒன்றும் மோசமாக நடந்து கொண்டு விட வில்லையே? ”
“பெண்களுக்கு எச்சரிக்கை உணர்வு அதிகம். அதிகமான உரிமையோடு பேசினாலோ, பழகினாலோ அந்த எச்சரிக்கை மணி ஒலித்துவிடும். சில தவறான அபாய ஒலியாகவும் இருக்கலாம். விடுங்கள். மேற்கொண்டு, நிஜமாகவே உங்களை, உங்கள் நட்பை மதிப்பவர்களிடம் பேசுங்கள். முப்பது நண்பர்களில் ஓரிருவர் இப்படி நடந்து கொண்டால் இருவத்தி எட்டு பேரும் மோசமானவர்களல்ல. நீங்கள் என்ன பதில் கொடுத்தீர்கள்?” என்றேன்.
“ஒன்றும் செய்யவில்லை. விட்டுவிட்டேன். நாம ஏன் அந்த அளவுக்கு தரக்குறைவாப் போகணும்?-னு நினைக்கறேன்”
“அப்ப விடுங்க.”
“அதான முடியலை? என்றார் பரிதாபமாக. அவரை உற்றுப் பார்த்தேன். அவருக்கு ஏதோ சொல்லவேண்டும்போல இருக்கிறது. ஆனால் சமூக விதிகளை அனுசரித்து , ஒரு கனவானாக நடிக்க முயல்கிறார். அனுகணமும் தோற்கிறார்.
“இது
மாதிரி உங்களிடம் பேசுவது போல் பகிர்ந்து கொண்டால் ஆறிவிடாதா. அவள் அப்படியே நினைத்துப் போகட்டும். என் நண்பர்களுக்கு நான் யார் என்று தெரியும்:”
“
பகிர்தல் என்பது மூடிய குக்கரிலிருந்து சீட்டி ஒரு முறை இருமுறை மேல் தூக்கி, அதிகப்படியான அழுத்த்த்தை இறக்குவது. ஆனால், அடுப்பிலிருந்து சூடு கிடைக்கும்வரை, குக்கர் கொதிக்கத்தான் செய்யும்”
“என்ன செய்யணும் படா பாய்?” அவர் முகத்தைத்தில் கைக்குட்டை பரப்பி வியர்வையில் இயலாமையைத் துடைக்க முயன்றார்
“நீங்கள் ஒரு எதிர்மொழி கொடுக்கவேண்டும். அது காட்டமாக அவள் சொன்னது போலத்தான் இருக்கவேணுமென்பதில்லை. உங்கள் மனத்தின் இயல்புக்கு ஏற்றமாதிரி,மென்மையாகவோ, பூடகமாகவோ, சிரிப்பினூடே உள்குத்துடனோ, அல்லது சுடு சொற்களாலோ எப்படியோ .. தெரியப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் இந்த அழுத்தத்தில், உஷ்ணத்தில் நீங்கள்தான் வெந்து போவீர்கள் “
”அது நமது பண்பாடு இல்லை. அப்படி பெண்களிடம் கோபமாகப் பேசும்படி நான் வளர்க்கப்படவில்லை”
“பண்பாடு என்பதைத் தவறாகப் புரிந்துகொள்வதால் வரும் சிக்கல் இது. அந்தப் பெண்களை மட்டும் உங்களிடம் இழிவாகப் பேசும்படி வளர்த்திருக்கிறார்களா? இல்லையே? அவர் தவறும்போது அதனை இடித்துரைக்க வேண்டியது உங்கள் பண்பாடு”
அவர் சமாதானமாகவில்லை “ இல்லை படா பாய். இது கல்ச்சருக்கு ஒத்து வராத ஒன்று. என்னால் முடியாது”
“கொஞ்ச நேரம் முன்பு என் காலைத் தவறுதலாக எத்தியவுடன் என்ன செய்தீர்கள்?”
“வணங்கினேன். உடல் ஒரு கோயில் அண்ணா”
“உடல் கூட ஒரு கோயில் என்றால் அதிலிருக்கும் மனம் அதிலும் உயர்ந்தது இல்லையா? அதனை அவமதிப்பது பாவம் என்பதையும், அதன் மரியாதையைக் காக்க வேண்டியதும் பண்பாடு இல்லையா?” மீறினால் தட்டிக் கேட்கவேண்டியது நமது கடமை. அதைச் செய்ததாக நினைத்துப் போங்களேன்”
அவர் எழுந்தார் . “ரொம்ப நன்றி. படாபாய். யோசிக்கிறேன்”
விமான அழைப்பு வர, நானும் எழுந்தேன்.
முன்னிருந்த பளபளத்த பித்தளைப் பலகையில் என் முகம் தெரிந்தது. சில கணங்கள் உற்றுப் பார்த்தேன். மயூர் சோலங்கி தெரிந்தார்.
Nice episode..I fully agree with yr view of reverting and declaring ones character to all.
ReplyDelete