Wednesday, November 08, 2017

ஏழும் நம்பிக்கையும்

திருமண வரவேற்பு இன்னும் தொடங்கவில்லை. ட்ராஃபிக் இருக்குமே என விரைவாகக் கிளம்பியதால், விரைவாக மண்டபத்தை அடைந்து வருபவர்களை வெறுமே வேடிக்கை பார்த்திருந்தேன்.பலரும் அறியா முகங்கள். வாழ்வில் ஒரே முறை அணியப்போகும் வேஷத்துக்காக ,தொளதொளவென ஜிப்பாவும் டைட்டான பைஜாமாவும் பழகாத சிலர் , கைகளை அகட்டி வைத்துத் தடுமாறி, கோமாளிகளாக வலம் வந்து கொண்டிருந்தார்கள்.
”ஹலோ” என்ற குரலில் ஆசுவாசமடைந்தேன். தியாகராஜன் பின்னால் நின்றிருந்தார். “ எங்க மாமனார் “ என்று அவருக்கு அருகில் நின்றிருந்த பெரியவரை அறிமுகம் செய்துவைத்தார். “ ஊர்ல இருந்து வந்து பத்து நாளாவுது. போரடிக்குதுன்னாரு. சரி, இங்க வந்தா நம்ம ஆட்களாப் பாக்கலாமேன்னு”
பெரியவர் கை கூப்பினார். பேசவில்லை . பெரிய விபூதிப்பட்டை, நடுவே பெரிய குங்குமப் பொட்டு என சிவப்பழமாக நின்றிருந்தார். கொஞ்சம் பெண் முகக் கட்டு.
அப்படியே பவுடர் போட்டு, காவி கட்டி விட்டிருந்தால் “அரியது கேட்கின் வரிவடி வேலா” என்று பாடும் கே.பி.சுந்தராம்பாள் போல இருந்திருப்பார்.
”பெரியவளுக்கு நாளைக்கு எக்ஸாம். அதான் வீட்டுல விட்டுட்டு வந்துட்டோம். சாப்டதும் உடனே கிளம்பணும்” தியாகராஜன் அவர்பாட்டுக்கு எதோ பேசிக்கொண்டிருந்தார். எனக்கு என்னமோ ஒரு பிடிப்பு வரவில்லை. எல்லாம் பகட்டாகத் தெரிந்தது.
”எல்லாச் சடங்குகளுக்கும் ஏதாச்சும் காரணம் இருக்கும். ஆனா இந்த வரவேற்புக்கு பணமும், ஆடம்பரமும்தான் காரணமாயிருக்க முடியும்” என்றார் தியாகராஜன். முன் வரிசையில் இருந்த முரளி திரும்பிப் பார்த்தார். “ எல்லாத்துக்கும் காரணம் இருக்காது சார். சிலதெல்லாம் அப்படியே ஃபாலோ பண்ணியிருப்பாங்க. கேட்டுப்பாருங்க , பெரியவங்களூக்கே தெரியாது” என்றார் முரளி.
தியாகராஜன் ஆமோதித்தார். நான் “ தெரிஞ்சிருக்காதுங்கறதுனால காரணம் இல்லேன்னு சொல்லிட முடியாது இல்லையா?” என்றேன்.
முரளி எழுந்து எங்கள் வரிசையில் அமர்ந்தார் “ எங்க மாமி, எண்பது வயசாகுது. இப்பவும் அதச் செய்யாதே, இதச்செய்யாதேன்னு சொல்லிகிட்டே இருப்பா. கேட்டா” இப்படித்தான் எங்கம்மா சொல்லுவா” என்பாள். பாருங்க போனமாசம் ஊருக்குப் போயிருந்தோம். வீட்டுக்குப் பக்கத்துல ராமர் கோயில். அன்னிக்கு என்னமோ விசேஷம். சாயங்காலமா, எல்லாரும் போயிட்டு ஒரு அர்ச்சனை செஞ்சுடலாம்னு போனோம். நடை திறக்கலை. சன்னதிப் படியில உக்கார்ந்திருந்த அர்ச்சகர் , எங்கம்மா கிட்ட “ மூத்தவன் வரலையா?”-ன்னார். அம்மா பதில் சொல்றதுக்குள்ளே எம்பொண்ணு “ பெரியப்பா ஏழுநாள்ல வருவார்”ன்னுது.”
கே.பி சுந்தராம்பாள் சலனமின்றி அமர்ந்திருந்தார்.
“ மாமி அவள் தலையில சின்னதாக் குட்டினாள் “ அசடு. ஆறு நாள்னு சொல்லு” “இல்ல பாட்டி, ஏழுநாள்னுதான் இமெயில் எழுதியிருந்தார்”
மாமியின் கண்களில் லேசாக் கோபம் எட்டிப் பார்த்தது “டீ, இவளே, ஒண்ணு ஆறுன்னு சொல்லு, இல்ல எட்டுன்னு சொல்லு. சாரங்கன் சந்நதியாக்கும்”
சுந்தராம்பாள் சற்றே தலையைத் திருப்பினார். முரளி தொடர்ந்தார்.
“ என் பொண்ணுக்குக் கோபம். எல்லார் முன்னாலயும் குட்டிட்டுத் திட்டவும் செய்யறா இந்த மாமிப்பாட்டி. “ பாட்டி, வாட்ஸ் ராங் இன் ஸேயிங் செவன்? அவர் எழுதினதைத்தான் சொன்னேன். ஏன் ஏழு சொல்லக்கூடாது?”
” சார்ங்கம் விடாதுடீ. பாத்துண்டே இருக்கும். யாராச்சும் ஏழுன்னா அது எழுந்துடும். பாரு நடை திறந்தாச்சு. ஸ்வாமிகிட்டே வேண்டிக்கோ.” என்றவள் கன்னத்தில் போட்டுக்கொண்டு “ ராமா ராமா, குழந்தை தெரியாமச் சொல்லிடுத்து. க்‌ஷமிக்கணும்” ன்னா.” முரளி நிறுத்திச் சிரித்தார் “ ஏழுக்கும், சாரங்கபாணிக்கும் என்ன ஏழாம் படையா? ஆகாதுன்னுட்டு . கேட்டா, எங்கம்மா சொன்னா”ன்னுவா
சுந்தராம்பாள் முன்னே குனிந்தார். முரளியைப் பார்த்து “ உங்க மாமி இங்க வந்திருக்காங்களா?”
“இல்ல. ஊர்ல இருக்கா” என்ற முரளி சற்றே கலவரமடைந்தார்.
“இங்க இருந்திருந்தா, கால்ல விழுந்து வணங்கியிருப்பேன். என் துரதிருஷ்டம்” என்றார் மனிதர். நான் வியப்புடன் ஏறிட்டேன்.
“அவங்க சொன்னது கம்பராமாயணத்துல வர்ற காட்சி. வாலியுடன் போர் செய்யப்போகுமுன் சுக்ரீவன் ராமனின் பலத்தைச் சோதிக்கிறான். ஏழு பெரிய மராமரங்களை அம்பால் அடித்துக் காட்டச் சொல்கிறான். ராமன் தன் பாணத்தை விடுமுன் “ ஏழு தன்னை துளைத்து வா” என்று ஏவுகிறான். ராமபாணம் அந்த ஏழு மரங்களைத் துளைத்து , அதன்பின் கீழுலகங்கள் ஏழையும் ஊடுருவிப் பின் மற்ற ஏழு என்ற எண்கொண்டவற்றைக் காணாது ராமனின் அம்புறாத் தூளியில் வந்து நின்றது. ஏழு என்றால் அப்போது கிளம்பும் எத்தனிப்புடன் அது காத்திருக்கிறது” என்கிறான் கம்பன்.
“ஏழு மரா மரம் உருவிக் கீழ் உலகம் என்று இசைக்கும்
ஏழும் ஊடு புக்கு உருவிப் பின் உடன் அடுத்து இயன்ற
ஏழ் இலாமையால் மீண்டது, அவ் இராகவன் பகழி;
ஏழு கண்டபின் உருவுமால்,ஒழிவது அன்று, இன்னும்.”.

சந்தேகித்துச் சும்மா இருக்கறதை விட, அறியாது நல்லது செய்து போவதில் என்ன தவறு? எப்போவாவது உண்மை ஒரு தேரில் ஏறி வரும். அன்று நாம் தரிசிக்க, இன்றும் தேரின் வடத்தை விடாது பிடித்து இழுக்கிறார்கள் பாருங்கள், அவர்கள் வணங்கத்தக்கவர்கள்”
சுந்தராம்பாள் கண்களில் ஒரு ஒளி தெரிந்தது.
எழுந்து, நீண்ட வரிசையில் அடங்கினோம்.
மேடையில் ஏதோ ஒரு முதிய தம்பதிகள் ஏறிவர, மணமக்கள் அவர்கள் காலில் விழுந்து ஆசி வாங்கினர். முன்னே ஒரு வரிசையில் ஒரு இளைஞன் அதைப் பார்த்து சிரித்தபடி அருகிலிருந்தவளிடம் ஏதோ சொன்னான்.
அரங்கம் இப்போது செயற்கையாகத் தெரியவில்லை. இதற்கென எதாவது பாடல் இருக்கும். ஒரு சுந்தராம்பாள் இருப்பார்.
ஒரு மாமியும் இருப்பாள்.

No comments:

Post a Comment