Wednesday, November 08, 2017

வாடகை சைக்கிள்


பஸ்ஸ்டாண்டில் இருந்து சிவன்கோவில் ஐந்து நிமிட நடை. திருநெல்வேலிக்காரர்கள் பாஷையில் ”ரெண்டு எட்டு எடுத்து வச்சா வந்துரும்.”
“என்ன மெதுவா நடக்கீங்க? வேல கெடக்கு. நைட்டு சோறு யாரு பொங்குவா?” சீதாலட்சுமியின் குரலைப் பொருட்படுத்தாது வேண்டுமென்றே வேகத்தைக் குறைத்துப் பின்னே நடந்தான் சிவராமன். கோபத்தில் அவன் மூச்சு சீரற்று வந்தது.
சீதா ஒரு முறை திரும்பிப் பார்த்துவிட்டு தன் வேகத்தில் கோவிலை நோக்கி நடந்தாள். “இந்தாளு எப்பவுமே இப்படித்தான். மத்தியானம் பேசினோம்லா? அதான் வேதாளம் முருங்க மரம் ஏறிக்கெடக்கு. விடுடி. வருவாரு” அருகில் நடந்த தங்கையிடம் கடுப்புடன் பேசியபடி நடந்தாள்.
சிவராமன் தனிச்சையாகத் தலை திருப்பினான். முன்பு இங்கு தனராஜ் அண்ணன் கடை இருந்தது. ஆறுமுக நாடார் வாடகை சைக்கிள் கடை. என்று போர்டு போட்டு “ கடம் அன்பை முரிக்கும்” என்று இலக்கணத்தை முறித்துப்போட்ட சாக்பீஸ் எழுத்து எச்சரிக்கையுடன் போர்டு தொங்கியது
பச்சைக்கலர் ஹெர்குலிஸ், டபுள் பார் ராலே, முன் வீல் பக்கம் ட்புள் ஸ்ப்ரிங், காரியர் வைச்சது , வைக்காதது எனப் பல சைக்கிள்கள், பெயிண்ட்டால் எண் இடப்பட்டு வரிசையாக நின்றிருக்கும்.
சிறுவர்களுக்கு இரு குட்டையான சைக்கிள்கள் இருந்தன. “ஐஞ்சு பைசாக்கு அரை மணி நேரம்- சிகப்பு சைக்கிள், ரெண்டு பைசாவுக்கு - ஊதா சைக்கிள்” என்று தனராஜ் தன் இச்சைக்கு விலை வைத்திருந்தார். சில பசங்களுக்கு அரைமணி நேரம் முடிந்திருந்தாலும் அதிகம் வாங்க மாட்டார் .
சிலநேரம், பெரிய சைக்கிள் ஓட்டும் மிதமிஞ்சிய ஆசையில், சின்ன சைக்கிளை வைத்துவிட்டு, “அண்ணாச்சி இன்னும் ரெண்டு நிமிசம் இருக்குல்லா?. ஒரேயொருவாட்டி, அந்த திருப்பம் வரை அரைப்பெடல் போயிட்டு வந்துர்றேன்” என்று கெஞ்சினாலும் “போடே, ? பெரிய சைக்கிளெல்லாம் மீசை இல்லாத பயலுவளுக்குக் கிடையாது. ” என்று இரக்கமே இல்லாமல் மறுத்துவிடுவார். அவரை , இசக்கி ஆச்சியின் கெட்ட வார்த்தை வரிகளில் திட்டிக்கொண்டே சிறுவர்கள் திரும்பிப் போவார்கள். . (இசக்கி ஆச்சியின் கொடுவாய் மொழியை இங்கு பதிவு செய்ய முடியாது).
தனராஜ் அண்ணாச்சி கடை இருந்த இடத்தில் மொபைல் கடை ஒன்று முளைத்திருந்தது. சிவராமன் நின்று உள்ளே கவனித்தான். அந்த முதியவர்...தனராஜ்... தனராஜ் அண்ணாச்சியேதான்.
”தெரியுதா அண்ணாச்சி?” கேட்டு அறிமுகப்படுத்திக்கொண்டான். “ டே, நீ முரளி தம்பில்லா?! எப்படி இருக்க? ஒங்கண்ணன் எங்கிட்டிருக்கான்? முப்பது வருசமாச்சேய்யா பாத்து?!” அண்ணாச்சியின் கண்கள் லேசாகக் கலங்கியிருந்தன.
”ஒக்காருடே, அப்பா எங்கிட்டிருக்காரு?”
”அப்பா, போயாச்சி அண்ணாச்சி. பத்து வருசமாவுது”
தனராஜ் சற்றே மவுனித்தார் “அவர மாரி ஆட்களையெல்லாம் இனிமேப் பாக்க முடியாது. கடைமேல ஒரு கேஸ் வந்தப்ப, அவர்தான் முன்னாடி நின்னு முடிச்சுக்கொடுத்தாரு. இல்லேன்னா, வள்ளிசா கடை போயிருக்கும், கேட்டியா? ”
”ஆமா” என்றவர் தயங்கியபடி தொடர்ந்தார் “ ஒனக்கு முன்னாடி போச்சே, ரெண்டு பொம்பளேள்? அது ஒன் சம்சாரமும், அவ தங்கச்சியுமா?”
“ஆமாண்ணாச்சி. வடக்குத்தெருவுலதான் அவங்க அப்பா வீடு”
“தெரியும்டே” சிரித்தார் அவர் “ மணிகண்டன் சாரோட மூத்த மவ. கலியாணத்துக்குக் கூப்டிருந்தாரு பாத்துக்க. நான் அப்பப் பாத்து தென்காசிக்குப் போயிருந்தன். நீதான் மாப்பிளைன்னு தெரியாமப் போச்சே. சரி, எல்லாம் இந்தூர்ல நமக்குச் சொந்தந்தானேய்யா, என்ன சொல்லுத?”
சட்டென முகம் சீரியசானார் “ அதென்னா முகம் வாடி இருக்கே? அவளும் கோபமால்லா போனா? என்ன விசயம்? அண்ணாச்சிகிட்ட சொல்லலாம்னா சொல்லு”
“ஓண்ணுமில்லண்ணாச்சி. அவ தம்பிக்கு புல்லட்டு வேங்கணும்னா. நா ’இப்ப வேணாம். அவனா, கடன அடைக்கற புத்தியோட வர்றப்போ வேங்கித்தாறன்னேன். அதாம் கோபம். பயல்னா ஒரு பொறுப்பு வேணாமாண்ணாச்சி? சும்மா வேங்கிக்கொடுத்து குட்டிச்சுவராக்குதாங்க”
அண்ணாச்சி மவுனமாக இருந்தார் “நீ சொல்றது நியாயந்தான்.” சட்டென நிறுத்தி “ டே, ரெண்டு டீ போடுறே, தம்பி யாருன்னு தெரிதா? நம்ம முரளி தம்பி. சின்ன சைக்கிள் கேப்பாம்லா? ஆங், அவந்தான்!”
டீக்கடை அண்ணாச்சி வாயெல்லாம் பல்லாக “ டே, ஒம்பேரு மற்ந்திட்டு. முரளி நல்லாருக்கானா? நம்ம கடைல திருட்டு தம் அடிச்சு, கடம் வச்சில்லா டீ குடிப்பான் ஒங்கண்ணன்? அவ்னக்கிட்ட ”செல்லையாவப் பாத்தேன். ஒங்கணக்குல இன்னும் அம்பது ரூவா கடனா நிக்கி”ன்னாருன்னு சொல்லு. என்ன சொல்லுவியாடே?” இருவரும் சிரித்தார்கள்.
அண்ணாச்சி “ டே, நீ சொல்ற மாரி பயலுவளுக்குப் பொறுப்பு வரணும்தான். ஆனா, பொம்பளேள் புத்தி இருக்கே, அதுல பாசம் கண்ணக் கட்டிரும் பாத்துக்க. எந்தம்பிக்கு இல்லேன்னா சொல்லுதீரு?ன்னுதான் அவளுக்கு முதல்ல வருமே தவிர, நீ என்னத்துக்குச் சொல்லுதே?ன்னு தோணாது. இதெல்லாம் பதவிசா எடுத்துச் சொல்லணும்டே”
“என்னண்ணாச்சி சொல்ல? எளவு ஒண்ணும் புரியாம கத்துதாளுவோ. போட்டி-ன்னு வந்துட்டேன்.’ கோயிலுக்கு வேங்க’-ன்னு இழுக்கா இப்ப”
”மரியாதைக்கி அவ கூடக் கோயிலுக்குப் போயிட்டு வா. அதான் முறை”
“எப்படீண்ணே? மனசு கொதிச்சுக் கிடக்கு. என்னத்தையாச்சும் சொன்னாள்னா, இடம் காலம் பாக்காம, களுத கன்னத்துல ஒரு இளுப்பு இளுத்துருவேன்”
“டே” என்றார் அண்ணாச்சி “ அடங்கி இரி” கையைக் காட்டி அமர்த்தினார். ஒரு நிமிடம் மவுனமாயிருந்தனர் இருவரும்.
“டே, இப்ப நான் தனியாளு. ஒனக்குத் தெரியுமான்னு தெரியல. எம்பொண்டாட்டி பரமேஸ்வரி கண்ணாலம் கட்டி ஒருவருசத்துல பிரிஞ்சி போனா. அப்ப, நீயெல்லாம் சின்னப் பய. முரளிக்குத்தெரியும். அவம் பாத்திருக்கான்.
கோபம் இருக்கு பாரு, மோசமான குணம் பாத்துக்க. நாம என்னதான் நல்லது பண்ணி ஒரு்குடம் பால் மாரி இருந்தாலும், ஒரு நிமிச கோபம், அதுல ஒரு கள்ளிச் சொட்டா விழுந்துரும். பின்னென்ன, குடம் பூரா வெசம் தானே?
பரமேஸ்வரி அன்பாத்தான் இருந்தா பாத்துக்க.
ஒரு நாள் அவ கடைக்கு வந்து “ மாமா, தம்பி வந்திருக்கான். அம்பது ரூவா கொடுங்க. ” அன்னிக்கின்னு பாத்து எனக்கு என்னமோ சின்ன கோபம் .
“எதுக்குட்டீ?” ந்னேன்.
“கோளியடிச்சி குளம்பு வச்சிருதேன். கறி வேணும்னா, கடைல சும்மாவா தருவாக?”ன்னா. இவ்வளவுதான் சொன்னா பாத்துக்க.
எனக்கு வந்திச்சே கோபம் “ செருக்கியுள்ள, எனக்கா சொல்லித்தாரே? நானே இங்க ஓட்டாண்டியா நிக்கேன். நீயென்னன்னா, தம்பிக்கு கோழி குழம்பு வக்கணும்னு வந்து நிக்க, என்னட்டீ? நாயே, பிச்சிருவேம் பிச்சி”
சொன்னவன் சொன்னதோட நின்னிருக்கணும். கையை ஓங்கிட்டேன். அவ அழுதுகிட்டே என்னமோ சொல்ல, நான் அவளைக் கடையிலேர்ந்து தரதரன்னு தெருவுல , இந்தா இங்கதான், ஒரு மூங்கில் கம்பு இருக்கும்லா, நம்ம கடைக் கூரைக்கி? அதுல மோதவிட்டு அடிச்சிட்டேன்.
அன்னிக்கு அவ அம்மா வீட்டுக்குப் போனவதான். நான் போயிக் கூப்பிடல, எங்காத்தா அப்பா, மாமா.. யாரு பேசப் போவல சொல்லு? அவ அந்த மிருகத்தோட வாழ மாட்டேன்னுட்டா. நானும் ‘பொட்டச் சிறுக்கிக்கு இம்புட்டு கோவம், அங்? நான் போயிக் கூப்பிடமாட்டேன். வந்தா வீட்டுல இருந்து வாழட்டும் இல்ல, சிவம்பாறைலேர்ந்து ஆத்துல விழுந்து சாவட்டு” ந்னு விட்டுட்டேன்.
இருவத்தைஞ்சு வருசம் ஓடிட்டு. அவளுக்கு என்னமோ மார்ல கட்டின்னாங்க. புத்து நோய்னு மெட்ராஸ் கூட்டிட்டுப் போனாவ. அப்பத்தான் எனக்கு விசயம் தெரீயுது. அங்க போயிப் பாத்தம் பாரு.”
அண்ணாச்சியின் குரல் நடுங்கியது. “ லே, “ சட்டென அழுகையில் வெடித்தார் “ லே, ரெண்டு பேருக்கும் மத்தியில கிடந்த ஒரு சீலை கிழிஞ்சி தொங்கிச்சி அங்கிட்டு. “ஏம்மாமா, என்ன முன்னாலயே பாக்க வரல?”னு அவ கேக்கா... என்ன சொல்ல?
”சிறுக்கி மவளே, இந்த கூறுகெட்டவன் மனசுல நீதாண்டி இருந்த... ஆனா அதோட விசமா வீம்பு ஒண்ணு நின்னு போச்சே?”ன்னு விம்முதேன்.
அவ கண்ணுல நீரா வடியுது “ நாந்தான் மாமா தப்பு செஞ்சிட்டேன். ஒங்கள ஒ்க்காத்தி வச்சி, ஒரு வாய்ச் சோறு சமச்சிப் போடலயே ? எனக்கும்லா வீம்பு வளந்துகிடக்கு? அதான் ஆத்தா , ஈரமில்லா நெஞ்சுல ஒனக்கு எதுக்குட்டீ உசிரு?ன்னு எடுக்கா போலுக்கு. எல்லாம் என் பாவம். என்னோட போவட்டு”ன்னா. ரெண்டு வாரத்துல போயிட்டா.
இப்ப எனக்கு வீம்பு பிடிக்கக்கூட ஆளில்ல தம்பி. ஒங்கூட சண்டை போட பொண்டாட்டி இருக்கா. போ.. அவகூட சண்ட போட்டு, சமரசமா இரி.

வாடகை சைக்கிளை ஒருநாள் போட்டுட்டுத்தான் எல்லாரும் போவணும். நேரம் முடியறதுக்குள்ள வண்டி ஒட்டி வேலையப் பாக்கறவன் புத்திசாலி. அத விட்டுட்டு, ரோட்டுல சண்டை போட்டு நின்னு, சோலி முடிக்காம, வண்டியத் திருப்பிக் கொடுக்கறவன என்ன சொல்ல? வண்டி ஓட்டறப்ப அடிபடாம, சந்தோசமா ஓட்டணும். அதான் சூச்சுமம். 
சிவராமன் எழுந்து வீடு நோக்கி நடந்தான் . ஒரு நிமிடம் கழித்து அதே தெருவில் கோயிலைப் பார்த்துத் திரும்பி நடந்தான். அண்ணாச்சி கடை விளக்கு அணைந்திருந்தது.
கதையா? நிஜமா ? என்று கேட்காதீர்கள்.உங்கள் மனம், இது கதை என்றால் கதை. நிஜமென்றால் நிஜம்.

No comments:

Post a Comment