”யாரையெல்லாம் கூப்பிடப் போறீங்க?” என் கேள்வியின் பின் நின்ற கவலை சுந்தரத்திற்குப் புரிந்திருந்திருந்தது.
“ஈஸ்வரன் சாரைக் கூப்பிடல; ஆனா, அவரே வந்துடறேன்னு சொல்றாரு. என்ன சொல்ல முடியும்?” தயங்கினார் சுந்தரம். அனிச்சையாக என்னுள் ஒரு பெருமூச்செழுந்தது.
மாதம் ஒரு நாள் ஒருவர் வீட்டில் நாங்கள் நாலைந்துபேர் கூடுவோம். என்னதான் பேச்சு என்றில்லை. ஆனால், இலக்கியம் , வாழ்வு சார்ந்ததாக இருக்கவேண்டும். வெட்டிப்பேச்சு இருக்கக்கூடாது. என்று சில நிபந்தனைகளுடன் சிறு ரசிகர் வட்டம். சில நேரம் மதியச் சாப்பாடு, பல வேளை எதாவது உடுப்பி ஓட்டலில் காபி என்று இரு மணி நேரத்தில் முடிந்துவிடும் கூட்டம்.
தவறாகச் சேர்க்கப்பட்டவர் ஈஸ்வரன். எங்களில் பெரியவர் , கொஞ்சம் இங்கிதம் தெரியாதவர். எப்போது எப்படிப் பேசவேண்டுமெனத் தெரியாது. அதிரப் பேசுவார். திருவாசகம், கம்பன், பாரதி எனப் பேசினாலும், ஆழமற்ற பேச்சாகவே இருக்கும். போன முறை அவர் பேசியது ஒரு கசப்பையே ஏற்படுத்தியிருந்தது. எனவே தவிர்த்துவிடத் தீர்மானித்திருந்தோம். சிலர் அவர் வரட்டும் என்றார்கள். நானும் சிலரும் வேண்டாமென்றோம். இப்போ தானகவே வந்து நிற்கப் போகிறார்.
“எங்க வீட்டுலதான் மீட்டிங். நாளைக்கு மதியம் மூன்றரைக்கு வந்திருங்க. அப்பாவுக்கு உடம்பு சரியில்லை. காபிக்கு வெளியே போயிருவோம்”
சுந்தரம் ஏன் இப்போது தன் வீட்டில் அழைக்கிறான்?என்று தோன்றாமலில்லை.
சுந்தரத்தின் தந்தை, வெங்கடேசன், ரயில்வேயில் பெரிய பதவியிலிருந்தார். மனைவி நாகம்மாளைத் திடீரெனத் தள்ளிவைத்துவிட்டு கோவாவைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். அது நிலைக்கவில்லை. நாகம்மாளிடம் இருந்த தன் பெண்ணையும் பையன் சுந்தரத்தையும் அழைத்துக்கொண்டு மும்பை வந்துவிட்டார். நாகம்மாள் ஊரில் தன் சகோதரன் வீட்டில் வாழ்ந்து சில வருடங்கள் முன்பு இறந்து போனார்.
“அப்பாவுக்கு எப்படி இருக்கு?” என்றேன் வீட்டில் நுழைந்தபடியே .
“இருக்காரு.. நாம பேசினாக் கேக்குது புரியுது. பதில் பேச முடியலை. படுக்கையிலேயேதான் எல்லாமும். என் பொண்டாட்டி “ ஒரு நர்ஸ் வைங்க. என்னால எல்லாம் செய்ய முடியாது’ன்னுட்டா. இப்ப ஒருமாசமா ஒரு நர்ஸ் வந்துட்டுப் போறாங்க.”
” பக்கவாதம் சரியாயிருச்சுன்னாரே டாக்டர்?” என்றேன். அறையின் ஒரு கோடியில் வெங்கடேசன் படுத்திருப்பது தெரிந்தது. மிக மெலிந்து, எலும்புக்கூடாக உடல். பஞ்சடைந்த கண்கள் எங்கோ நிலைகுத்தியிருக்க, கழுத்து ஒரு ஓரமாக வளைந்திருந்திருக்க, வாயின் ஓரமாக கோழை வழிந்திருந்தது. ஒரு துர்நாற்றம் அறையில் மெல்ல பரவி, நாசியில் துளைத்தது.
”அப்பாவுக்குத் தொந்திரவாக இருக்காதோ?” என்றேன்.
“இல்ல, நாம பேசறதக் கேப்பாரு. இப்ப தூக்கம் வராது. வந்தாலும் தூங்கமாட்டார். என்ன கொஞ்சம் அதிரப் பேசக்கூடாது” சுந்தரம் , ஈஸ்வரன் வரவின் ஆபத்தைப் புரிந்துகொள்ளவில்லை
அடுத்த நிமிடம் வாசல் கதவு டமால் என அதிர, திடுக்கிட்டுத் திரும்பினேன். “ஸாரி” என்றார் ஈஸ்வரன். ‘கொஞ்சம் வேகமா அடைச்சுட்டேன்.”
“ஈஸ்வரன், வெங்கடேசன் சார் படுத்திருக்கார்” என்றேன் சற்றே கோபமாக . “ அதான் ஸாரின்னுட்டேனே?” இது என்ன பதில்?
வீட்டினுள்ளே இருந்தவர்கள் தூக்கக் கலக்கத்துடன் எழுந்து வந்து பார்த்து எரிச்சலுடன் திரும்பிச் சென்றனர்.
“அப்பா என்னமோ நினைச்சிகிட்டிருக்கார் போல. ரெண்டு நாளாவே சரியா சாப்பிடல, தூங்கலை. என்னமோ உளர்றாரு. என்னன்னு எங்கள்ல யாருக்கும் புரியலை” சுந்தரம் ஏதோ சொல்லி இறுக்கத்தைத் தளர்த்த முயற்சித்தான்.
பேச்சு எங்கெங்கோ சென்று இறப்பு, மோட்சமெனத் திரும்பியது.
“ இறப்பு நம் கருமத்தால் வருவது” என்றார் நமச்சிவாயம். ”அதுக்கப்புறம் சொர்க்கம் நரகம், பிறப்பு எல்லாம் நம் கருமந்தான் தீர்மானிக்கிறது. பட்டினத்தார் சொல்றாரு “ பற்றித்தொடரும் இருவினை புண்ணிய பாவமுமே”
ஈஸ்வரன் “ I beg to differ" என்றார் ஆங்கிலத்தில். நான் கவலையடைந்தேன். இந்தாள் எதையெதையோ பேசுவாரே? இன்னும் பத்து நிமிசம் நரகவேதனையாகத்தான் இருக்கும்.
“இறக்கும்வரைதான் நம் கருமங்களின் பலம். அதன்பின் எங்கே யார் போகவேண்டுமென்பதை அவன் தீர்மானிக்கிறான், அதுவும் கருமங்களின் வழியாக. அது நம் கருமமாகத்தான் இருக்கவேண்டுமென்பதில்லை”
“அப்போ, என் தாத்தா பல நல்ல காரியங்களாகச் செய்து, நான் ரவுடியாகத் திரிந்தாலும், இறுதியில் எனக்கு மோட்சம் என்கிறீர்கள் “ எனது நையாண்டியை அவர் பொருட்படுத்தவில்லை.
சுந்தரம் , ஏதோ சிறிய சிந்தனையின் பின் தொடர்ந்தான்
“இறைவன், நம்மை எப்படியும் தன்னிடம் வரச்செய்யவேண்டுமெனத்தான் பார்க்கிறான். ராமனை எடுத்துக்குங்க. ராவணனோட தீய செயலுக்குத்தான் அத்தனை அழிவையும் கொண்டுவந்தான்.
விபீடணன் இராமனிடம் சொல்கிறான், ”மொய்ம்மைத் தாயனெத் தொழத்தக்காள் மேல் தங்கிய காதலும், நின் சினமுமல்லால்- இராவணனை யாரூம் வென்றிருக்க முடியாது”. கருமத்திற்கு ஒரு காரணம் இருக்கவேண்டும்.”
“கரெக்ட்” என்றார் சுரேஷ் “ யாருக்காக, எதற்காக ராமன் போர்செய்தான்?
“மின்னனைய நுண்மருங்குல் மெல்லியற்கா(க) இலங்கை வேந்தன் முடிஒருபதும்,தோள் இருபதும் போயுதிர “ போர் செய்தான். இதே போல் “ பாரதப்போரில் யாருக்காக வந்தான்? பாண்டவர்களுக்கா ? இல்லை. “ பந்தார் விரலி பாஞ்சாலிகூந்தல் முடிக்கப் பாரதத்து ... சங்கம் வாய் வைத்தான்” , சுந்தரம் நம்ம கருமம் ஒழுங்கா இருந்தா ,வினைப்பயன் ஒழுங்கா வரும். இல்லேன்னா, இறைவன் மூலமாகவே கூட, நமக்குத் தீவினை வந்து நிற்கும்.”
“அஹ்ஹ்ஹ்” குரல் கேட்டுத் திரும்பினோன். வெங்கடேசன் தீனமாக ஏதோ குழறினார் .
“என்னமோ அவர் நினைப்புல ஓடுது. ஏதோ டென்ஷன்ல இருக்கார்போல” என்றார் சுரேஷ்.
“தெரியல. ஒருவேளை எங்கம்மா நினைப்பா இருக்கும்” என்றார் சுந்தரம் “ என்ன பாடுபடுத்தியிருப்பாரு அவங்கள? அம்மா ரொம்பப் பொறுமைசாலி. இவர் அடியெல்லாம் வாங்கிகிட்டு எங்களை அணைச்சுகிட்டுப் படுத்திருப்பாங்க. தூங்கும்போது அவங்க கன்னத்துல கை வைச்ச்ப்பேன். சிலநேரம் சூடா, கண்ணீர் விரலை நனைக்கும். இவர் கருமம், இப்படி படுக்க வைச்சிருச்சு. அது எங்கம்மா கண்ணீர்தான்.” என்றவர் எங்களை ஒருமுறை பார்த்தார் “ சொல்றேனேன்னு நினைச்சுக்காதீங்க. கருமமும் அதன் பயனும் இப்படித்தான் இருக்கும். எங்க அப்பாவாகவே இருந்தாலும், எனக்கு இப்ப ரொம்ப பாசமெல்லாம் ஒண்ணுமில்ல. இவருக்குச் செய்யவேண்டியது என் கடமை. செய்யறேன். அவ்வளவுதான். இவரெல்லாம் நரகத்துக்குத்தான் போவாரு”
“அஹ்ஹ்ஹ்ஹ்” குரல் வளையில் ஏதோ அடைக்கக் குழறினார் வெங்கடேசன். மூச்சு விட முடியாமல் திணற, சுந்தரம் அவர் தலையைத் தூக்கிப் பிடித்தார். சளி , குரல்வளையிலிருந்து இறங்க, அவர் மூச்சு சீரானது.
ஈஸ்வரன் “ நீங்க நினைக்கறது மாதிரி இல்ல” என்றார் தீர்மானமாக “ கொல்லும் வரையில்தான் இறைவனே கருமம், அதன் பலம் பார்க்கிறான். அதன்பின் தன்னிடம் அந்த ஆத்மா வந்து சேர எதாவது நற்காரியம் இருக்குமா?என்று பார்க்கிறான். பெரியாழ்வார் சப்பாணி பாடலில் சொல்கிறார்
“ இரணியன் உளம் தொட்டு, ஒண்மார்கவலம் பிளந்திட்ட கைகளால் “ ,
உளம் தொட்டு என்றால் என்ன? அவனது உள்ளத்தில் தேடிப்பார்க்கிறாராம். தன்னைக்குறித்த ஏதாவது நல்ல எண்ணம் இருக்குமோ? என்று. இருந்திருந்தால் அவனுக்கு மோட்சம். அப்படி ஒன்றும் இல்லாதததால், அவன் மார்பைப் பிளந்து வதை செய்கிறார்” என்று ஒரு வியாக்கியானம் உண்டு. “
“அய்யா” என்றேன் பொறுமையாக “ நீங்க சொல்றதெல்லாம் சரி. ஆனா, இதெல்லாம் வைச்சு, இறைவன் தண்டனை தருவான் அல்லது மாட்டான் என்று சொல்லிவிட முடியாது. ‘பாரமான பழவினை பற்றறுத்து”தான் எதையும் செய்வான். நாம் செய்வதன் பலனை அடைந்தே ஆகவேண்டும்”
“அஹ்ஹ்ஹ்ஹ்” இந்த முறை சற்று அதிகமாவே வெங்கடேசனின் திணறல் இருந்தது. கவலையோடு பார்த்தேன். சுந்தரம் ஒரு உணர்ச்சியும் இல்லாதிருந்தான். இது சகஜம் போலும்.
ஈஸ்வரனின் குரல் உயர்ந்தது “ புரியாம பேசாதீங்க. இராவணனை ராமன் கொல்கிற வரையில்தான் சினத்தோடு இருந்தான். “சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற” .. சினம் அதுவரையில்தான். அதோட ராமவதாரத்தின் முக்கிய பணி முடிந்தாச்சு. இப்ப இறைவனின் பணி தொடங்குது. ராமன் யோசிக்கிறான் இந்த ராவணனோட ஆத்மாவை எப்படி வானுலகு அனுப்புவது? எல்லாமே மோசமான வினைகள் செய்திருக்கிறான். அப்போது மண்டோதரி தென்படுகிறாள். மண்டோதரி கற்புக்கரசி. அவளது காதல் மிகத் தூய்மையானது. அவளது காதலுக்கு ஏற்றவனாக இருப்பதே இராவணனின் ஒரு தகுதிதான். ஒரு கற்புக்கரசியின் கணவன் எப்படி நரகம் போக முடியும். மண்டோதரியின் காதலன் என்ற ஒரு காரணம் கொண்டே , இராவணனை வானுலகு அனுப்பிவிடுகிறான்”
அடுத்த அறையில் உறங்கிக்கொண்டிருந்தவர்களின் எரிச்சலில் ப்ச் என்ற ஒலிகள் கேட்டன. “ மெதுவா, மெதுவா” என்று ஈஸ்வரனுக்கு சைகை காட்டினேன். கண்டுகொள்ளாமல் தொடர்ந்தார்.
“இதை கம்பராமாயணம் சொல்லலை. திருமங்கை ஆழ்வார் சொல்கிறார் “ வம்புலாங் கூந்தல் மண்டோதரி காதலன் வான்புக, அம்புதன்னால் முனிந்த அழகன்” பெரிய திருமொழியில் நாலாம் திருமொழியில் ஐந்தாவது பாசுரம். நீங்களே பாத்துக்குங்க, அங்” என்றவர் மேலும் குரல் உயர்த்தினார் “ ஒரு பத்தினிப் பெண்ணின் காதலுக்கு அவ்வளவு மதிப்பு. நாம செஞ்ச நல்வினையால்தான் அப்படி பெண்களை மனைவியாகப் பெறுகிறோம். அவர்களது நல்வினை நம்மை நிச்சயம் மோட்சத்துக்குத்தான் அனுப்பும். ராவணன் போலாம்னா, நாம போகமுடியாதா?”
சுந்தரத்தின் மனைவி சிவந்த கண்களுடன் எழுந்து வந்தாள் “ ப்ளீஸ், மெதுவாப் பேசுங்க, ராத்திரி பூரா இவர் தொல்லையால தூங்க முடியலை. இப்பத்தான் கொஞ்சம் கண்ணசர்ந்தேன்.தலை வலிக்குது”
”ஓ, சாரி சாரி’ என்றவாறே ஈஸ்வரன் எழுந்தார்.அனைவரும் வெளீயே சென்று உடுப்பி ஓட்டலில் காபி அருந்திக் கிளம்பினோம்.
“இனிமே யார் யாரைக் கூப்பிடறதுன்னு ஓட்டுப் போட்டு எடுக்க வேண்டியதுதான். யாரையும் குத்தம் சொல்லலை. ஆனா, மத்தவங்களுக்கு வீண் சிரமம் கொடுக்கக்கூடாது” என்றார் சுரேஷ். ஆம் எனத் தலையசைத்தேன்.
இரு நாட்களில் வெங்கடேசன் இறந்துபோனார் எனச் செய்தி வந்தது. சுந்தரத்தைப் பார்க்கச் சென்றோம். “ கடைசி இரண்டு நாளா அவர் முகத்துல ஒரு அமைதி. அதிகம் குழறலை. ஏதோ சொல்லுவார். அது நாகம்மா ந்னு எனக்குக் கேட்டது. அது ஒரு பிரமையாக இரூக்கலாம். அவர் கஷ்டப்பட்டாலும், இறப்பு அமைதியாக இருந்தது”
உடுப்பி ஓட்டலில் ஒரு மேசையில் சுரேஷும் ஈஸ்வரனும் அமர்ந்திருந்தார்கள். “அன்னிக்கு சத்தமாப் பேசினது எல்லாருக்கும் எரிச்சலா இருந்திருக்கும். தெரியும். தெரிஞ்சேதான் அப்படிப் பேசினேன்” என்றார் ஈஸ்வரன் . நான் சுவாரசியமானேன்.
“ நாம பேசறதுல , வெங்கடேசனுக்கு மேலும் மன உளைச்சல் வந்திருக்கும். பாவம் சொல்ல முடியலை. கடைசி நேரத்துல அல்லாடறார். அவர் மனைவிக்கு செஞ்ச கொடுமை, தனது தீயசெயலாலே எங்கே நரகமா அனுபவிப்போமோன்னு ஒரு பயம்.. மரணத்தை விட மரண பயம் கொடியது தெரியுமோ சுரேஷ்? அதான் , ஏதோ நம்மாலானதுன்னு ஒரு பாசுரத்தை விளக்கினேன். அதுல என்ன அமைதி கிடைச்சிருக்குமோ தெரியாது.”
“இருந்தாலும், இப்படி திரிச்சுச் சொல்லலாமா சார்?”
“ஒரு உயிர் அமைதியாப் போறதுக்கு, நம்ம அரைகுறை அறிவால ஒரு பயன் கிடைக்கிறதுன்னா, என்ன தப்பு? என்ன, என் தவறுக்கு எப்ப்படி தண்டனை வருமோ? வரட்டும் பாத்துக்கலாம். பாசுரம் பாடினதுக்கு ஒரு பலன்ன்னு ஒன்று இருக்கும். “
அடுத்த மாத மீட்ட்ங்க்கிற்கு ஓட்டு கேட்டு வந்தார் சுரேஷ். எனது வாக்கை பதித்தேன்.
No comments:
Post a Comment