Sunday, August 03, 2014

நிறக்குருடுகள்.

வினய் குப்தாவின் கார் தூரத்தில் வருவதைப் பார்த்துவிட்டு நிழற்குடையை விடுத்து மழையில் முன்சென்றேன். பின்னால் அலறும் வண்டிகளின் ஹார்ன் ஒலியில் எரிச்சலடைந்தோம். எரிச்சலை மாற்றப் பேச்சை மாற்றினேன்      
               
அந்த ராபர்ட்...அவனுக்கு வாடகைக்கு வீடு கொடுக்க ஹவுசிங் சொசய்ட்டி கடைசில அனுமதிச்சதா  இல்லையா?”

வினய்  சற்று மவுனத்தின் பின் “எங்க?”என்றார்.

இந்த சம்பவம் நடந்து ஆறு மாதங்கள் இருக்கும். வினய் குப்தாவின்  வீட்டிலிருந்து  ஒரு ஆபீஸ் பொருளை எடுத்து வர வேண்டியிருந்தது. அதற்காக அங்கு போயிருந்தபோது, சொசயிட்டி காரியதரிசி  ரங்கனேக்கர் லிஃப்ட்டிற்கு நின்றிருந்தார். குப்தாவிற்கு இரு வீடுகள் அங்கிருந்தன. ஒன்றை வாடகைக்குக் கொடுப்பதாகச் சொல்லியிருந்தார்.

யாருக்கு கொடுக்கறீங்க குப்தாஜீ? பாச்சலர் இல்லையே?”ரங்கனேக்கர் தொடங்கினார். 

 “அவர் பேரு ராபர்ட். ஒரு ஆப்பிரிக்கர். அவரும் அவர் மனைவியும் இருக்காங்க.. டாக்குமெண்ட்ஸ்  எல்லாம் கரெக்ட்டு...அதான் சரின்னு...”
ரங்கனேக்கர் இடைமறித்தார் “ சொல்றேனேன்னு நினைக்காதீங்க. நம்ம சொசயிட்டில இருக்கறதுக்கு அவங்கெல்லாம் சரி கிடையாது. “

கோபமாக இடைமறிக்கப் போன குப்தாவை அலட்சியப்படுத்தினார் ரங்கனேக்கர் “ சமத்துவம், நிறவெறின்னு ஆரம்பிக்காதீங்க. எனக்கும் தெரியும். நான் ப்ராக்டீஸிங் லாயர். பின்னால வரப்போற ப்ரச்சனைகளை நினைச்சுப் பாத்தீங்கன்னா, நீங்க வாக்குக் கொடுத்திருக்க மாட்டீங்க”

“அப்படி அந்தாளு என்ன செஞ்சுடுவாருன்னு நீங்க மறுக்கறீங்க?” என்றார் குப்தா. அவர் தர்மசங்கடத்தில் இருந்தார். அட்வான்ஸ் வேறு வாங்கிவிட்டார். இப்போ புதுத் தலைவலி, ரங்கனேக்கர் உருவில்.

“மும்பையில இருக்கற ஆப்பிரிக்கர்கள்ல தொண்ணூறு சதவீதம் போதைப்பொருள் கடத்தல், ஆன்லைன் பைனான்ஸ் ஏமாற்று வேலை, ஏ.டி.எம் ஃப்ராடுன்னுதான் இருக்காங்க. இவங்களைத் தட்டிக்கேட்க போலீஸ் போனா, எம்பஸி வந்துடும். இங்க வந்து ட்ரக்ஸ் வித்தான்னு போலீஸ் உங்க வீட்டுக்கு வந்தாங்கன்னு வைங்க...என்ன சொல்வீங்க?”

வினய் சற்றே சிந்தித்தார் “ அவர் ஒரு ஆப்பிரிக்க ஷிப்பிங் கம்பெனியில வேலை பாக்கறார்., நாம கேக்கிற ஆவணங்கள் எல்லாத்தையும் தந்திருக்கார். போலீஸ்ல போட்டோ கொடுத்து என்.ஓ.ஸி வாங்கிட்டேன். இனிமே மாட்டேன்னா நல்லாயிருக்கமா ரங்க்னேக்கர் சார்?”

ரங்கனேக்கர் சிரித்தார். “உங்களுக்கு மன அமைதி வேணுமா, இன்னிக்கு கொடுத்த வாக்கு , புல்ஷிட் முக்கியமா? வீட்டுக்கு அவன் குடி வந்தப்புறம் சுலபமாக் காலி பண்ண வைக்க முடியாது. அவங்க திருமணம்..அதுவேற தலைவலி.. நீங்களும் அடுத்த டவர்லதான் இருக்கீங்க. சொசய்ட்டி மக்கள் உங்களை ஒதுக்கிருவாங்க. பாத்துக்குங்க” நாலாம் மாடியில் ரங்கனேக்கர் சென்றுவிட, நாங்கள் அமைதியாக ஆறாம் மாடி வரை சென்றோம்.

குப்தாவின் மனைவி சாக்‌ஷி “ அவங்க ரெண்டுபேரும் மீரா-ரோடு ஸ்டேஷன்ல ராத்திரி 11.05 வண்டில வருவாங்க. ட்ரெயின்லயே ஆட்கள் அவங்களை ஒரு மாதிரித்தான் பாப்பாங்க.”

”ஏன் ?”என்றேன் டீயை உறிஞ்சியவாறே.

“அந்தப் பெண் இந்தியர். அந்தாளு ஆப்பிரிக்கர். ”

வியந்துபோனேன். இதுவரை மும்பையில் அப்படி ஒரு ஜோடியை நான் கண்டதில்லை.

குப்தா. மனைவியைப் பார்த்து “ இப்ப எப்படி அந்த ராபர்ட் கிட்ட சொல்றது?” என்று  சொல்லிக் கொண்டிருக்கும் போதே, வாசலில் அழைப்புமணி ஒலி கேட்டது. காவலாளி  “ சார் , இவர் உங்களைப் பாக்கணும்னு சொன்னார். சந்தேகமாயிருந்தது. அதான் நானே கூட வந்தேன்:” என்றபடி சற்றே விலகினான். பின்னால் ஒரு ஆப்பிரிக்கர் வெள்ளைப் பற்களைக் காட்டி சிரித்தபடி நின்றிருந்தார்.

“ஹலோ, நான் ராபர்ட்” என்றார் கனமான ஆங்கிலத்தில்.

“உள்ளே வாங்க” என்றார் குப்தா. மீண்டும் டீ ஒரு ரவுண்டு வர, தயங்கித் தயங்கி குப்தா மெல்லத் தொடங்கினார் “ ராபர்ட் , தப்பா எடுத்துக்க்க் கூடாது.”

ராபர்ட்டின் புருவங்கள் உயர்ந்தன “ ஓ, வீடு கொடுக்க சொசயிட்டி மறுத்துவிட்டதா?”

குப்தாவின் முகத்தில் தர்மசங்கடம் தெரிந்தது “ஆ...ஆம்மா..அதுவும் உங்க திருமணம் பற்றித் தெரியாம, குடும்பம் என்று சொல்லிவிட முடியாதுன்னு ஒரு எதிர் வாதம். இதற்கு நான் உங்ககிட்ட ஆவணம் கேட்க முடியாது.. இல்லாம நிரூபிக்கவும் முடியாது. சட்டப்படி திருமணமானவர்களுக்கு மட்டுமே வீடு கொடுக்கலாம். சொசய்ட்டி ரூல்ஸ்”

ராபர்ட் தனது தாடியைச் சொறிந்தார் “இதே கேள்வி, நான் வெள்ளையாக இருந்திருந்தால் வந்திருக்காது இல்லையா?”

கனத்த மவுனம் நிலவியது.

ராபர்ட் எழுந்தார் “ தாங்க்ஸ். பரவாயில்லை. பலதடவை இதக் கேட்டிருக்கேன். பழகிப்போயிருச்சு.. கொஞ்சம் டீஸண்ட்டா இடம் வேணும். என் மனைவிக்கு இப்ப இருக்கிற இட்த்துல ப்ரச்சனை. எல்லாம் எங்க நிறம் படுத்தற பாடு.”

அவர் சென்றபின்னும் பல நிமிடங்கள் இருவரும் அமைதியாக அமர்ந்திருந்தோம். இனம்புரியாத உணர்ச்சிகள். அவமானமாக இருந்தது.

”நம்ம பெண்கள் ஒரு வெள்ளைக்காரனைப் பிடிச்சிருந்தா,  மக்கள் அதனை ஒன்றும் சொல்லமாட்டாங்க.. இந்தாளு கறுப்பர். அதான் ப்ரச்சனை. நமக்கும் நிறவெறி இருக்கு சுதாகர். மத்த நாட்டுக்காரங்களைக் குறை சொல்றதுல அர்த்தமே இல்லை”

“ஆமா” என்றேன் எழுந்தவாறே.. அந்த ஆப்பிரிக்கர் என்ன பதவியில் இருக்கிறார், என்ன தொழில் செய்கிறார் என்பதெல்லாம் தெரியாமல், அவரையும், அவருடன் வாழ்வதால் அப்பெண்ணையும் குறைகூற நமக்கென்ன உரிமை? என்றெல்லாம் கேள்வி எழுந்தாலும், ரங்கனேக்கர் சொன்னதில் நியாயமான பயம் இருக்கத்தான் செய்த்து. நாளை ஒரு ப்ரச்சனை என்று வந்தால் யார் நிற்பது? யாருக்காக நிற்பது?

வினய் குப்தாவை அதன்பின் இன்றுதான் சந்திக்கிறேன். லேசாகச் சாரல்...

“ராபர்ட்டின் மனைவி , சாக்‌ஷி வேலைபார்க்கும் வளாகத்தில் ஒரு ட்ராவல்ஸ் கம்பெனியில்தான் வேலை பார்க்கிறாள்.. “

”அவங்களுக்கு வீடு கிடைச்சிருச்சா?” என்றேன் ஒரு குற்ற உணர்வு மேலோங்க.

“ கிடைச்சுருச்சு, விரார் மேற்குல. திடீர்னு ஒரு நாள் ராபர்ட் காணாமப் போயிட்டான். ஆபீஸ்லேர்ந்து மத்தியானம் வெளிய போனவன் திரும்பி வரலை. மாலையில இந்தப் பொண்ணு அவன் ஆபீஸ்ல தேடி, ரயில்வே ஸ்டேஷன்ல தேடி...ஒரு வாரமாவுது. இன்னும் அவன் வரலை. சொசயிட்டில அவளை வீட்டைக் காலி பண்ணச் சொல்றாங்க.”

“அடப்பாவமே” என்றேன் அதிர்ந்து.

“ அவளோட குடும்பம் மாலேகான்வ் பக்கத்துல இருக்கு. அவங்க மத உணர்வுல ரொம்ப ஊறினவங்க. இப்பத்தான் அவங்களுக்கு பொண்ணு இப்படி ஒரு கறுப்பரோடு வாழ்ந்திருக்கா-ன்னு தெரிய வந்திருக்கு. அவளைத் தலை முழுகிட்டாங்க. இவளுக்கு இப்போ போக்கிடம் இல்லை. நேத்திக்கு சாக்‌ஷி அவள ஆபீஸ் வளாகத்துல பாத்துப் பேசியிருக்கா. பாவம் கதறி அழுதுட்டாளாம்”

“இருக்காதா பின்னே?” என்றேன்.

“ ஏன் இப்படி உன் வாழ்வைச் சீரழிச்சுக்கிட்டே? -ன்னாளாம் சாக்‌ஷி. அதுக்கு அவ சொன்ன பதில்தான்..”

நான் மவுனமாக்க் கேட்டிருந்தேன். மழைச்சாரலுக்கு, கார் கண்ணாடியின் வைப்பர்கள் உயிர்த்திருந்தன.

“ ராபர்ட் என்னை விட்டுட்டுப் போகலை மேடம். அவனை நார்க்கோடிக்ஸ் , ட்ரக்ஸ் கேஸ்ல வேணும்னே பிடிச்சுப் போட்டிருப்பாங்க. அதுக்கு எம்பஸிலேர்ந்து ஆளுங்க வர்றதுக்குள்ள மிரட்டி ஒப்புக்க வைச்சு, ஊருக்குத் திரும்பி அனுப்பிருவாங்க. இல்ல...அடிச்சு ரயில் ட்ராக்ஸ்ல போட்டுருவாங்க”ன்னாளாம். அவ உடம்பு நடுங்கிச்சு-ன்னா சாக்‌ஷி.”

நான் முன்னே வெறித்திருந்தேன். மழை மெல்ல வலுத்திருக்க, வைப்பர்கள் மேலும் வேகமாக பக்கவாட்டில் அலைந்தன.

“ ஒருவருஷம் முந்தி வரை அவன் யாருன்னே எனக்குத் தெரியாது. என்னை யாருன்னு அவனுக்குத் தெரியாது. அவன் குடும்பம் என் குடும்பம்..சந்திச்சது கூடக் கிடையாது. ஆனா மனசு இணைஞ்சு போச்சு. எங்க கண்ணுக்குத் தெரியாத தோல் நிறம்  ரெண்டுபேருக்கும் நடுவுல பெருசா வந்துபோச்சு. எங்களுக்கு நிறக் குருடா, இல்ல இந்த சமூகத்துக்குத்தான்  நிறக் குருடா...தெரியலை. எனக்குக் கவலையுமில்லை. அடுத்த மாசம் வீட்டைக் காலி பண்ணறேன். ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு டெல்லி போறேன். அங்கேர்ந்து ராபர்ட்டைத் தேடப்போறேன். நிச்சயம் கிடைப்பான் மேடம், நீங்களே பாருங்க”

மழை ஒரு தகடு போலக் கொட்டிக்கொண்டிருக்க, வைப்பர்கள் வெறிபிடித்த மாதிரி வீசி ஆடின. க்றீச் க்றீச் என்ற் ஒலியுடன் அவை மழைப் படுகையைத் தள்ளத் தள்ள, முன்னே காட்சி , சற்றுதெளிவாகத் தெரிந்து பின் மழைத்திரையில் மங்கியது. மண்ணில் நீர் வீழ்ந்து, கலங்கி கருப்பாக , சில இடங்களில் சிவப்பாக சாலையோரத்தில் ஓடி வழிந்தது.
யார் யாருடன் இணையவேண்டுமென்பதை நிறமோ, மதமோ, மொழியோ தீர்மானம் செய்வதில்லை. எப்படி எந்த மழைத்துளி எந்த நிலத்தில் விழுந்து எந்த நிறச் சகதியை உண்டாக்குமென்பது மண்ணுக்கும் மழைக்கும் தெரியாதோ அதைப்போல...

குறுந்தொகையில், காதலன் , தான் சற்றும் அறியாத பெண் காதலியானதை வியந்து சொல்கிறான்.

”யாயும் ஞாயும்   யாராகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே”
- செம்புலப் பெயல்நீரார், குறுந்தொகை.

”எனது தாயும் , உனது தாயும் எவ்வகையில் உறவு ? எனது தந்தையும் நின் தந்தையும் எந்த முறையில் உறவினர்கள்? நானும் நீயும் இதன்முன் எவ்வாறு அறிந்தோம்? இவையெல்லாம் ஒன்றுமில்லாதபோது நமது நெஞ்சங்கள். செம்மையான நிற மண்ணில் மழைபெய்து தானும் மண்ணின் நிறம் கொண்டு, இரண்டும் ஒன்றையொன்று பிரித்தறிய முடியாதது போல ஒன்றாய்க் கலந்துவிட்டன. ”