Sunday, August 02, 2015

நீர் எழுதும் கதை

இருநாட்களாக செல்போன் சரியாக வேலை செய்யவில்லை. நிம்மதி என்று இருந்தேன்.
லேண்ட்லைன் -ல் காலை ஏழு மணிக்கு ஒரு அழைப்பு.
“தூங்கிட்டிருந்தீயளோ? எழுப்பிடலேல்லா?” ஆ, இவருக்கு எப்படி நம்பர் தெரிஞ்சது?
“இப்ப எழுப்பிட்டீய” என்றேன்.
“பொறவென்ன? அப்ப பேசலாம்” என்றார் அவர். சில மாதங்களாத்தான் தெரியும். போனில் பேசுவார்.  பூர்வீகம்.கடையமோ, அதுபக்கம் ஏதோ ஊரோ சொன்னார்.  “ அட, அம்பாசமுத்திரம் ஆர்ச்சு பக்கம் இருந்தீயளா? அங்கிட்டு ஒரு காய்கறிக்கடை இருக்குல்லா? அது எங்க சொந்தக்காரவ கடதான் கேட்டிய

நாங்கள் 79ல் அங்கிருந்து வந்தாயிற்று என்பதை பலமுறை அவருக்குச் சொல்லவேண்டியிருந்தது. என்னைவிட 10 வயது மூத்தவர். “ ரிடய்ர்மெண்ட்டுக்கு காத்திருக்கேன். எளவு சவம்,எப்ப விடறதுன்னு பாத்திட்டிருக்கேன் பாத்துகிடுங்க. ஊர்ப்பக்கம் போயி ஒரு மணுயிரும் நடக்கப்போறதில்ல. நிலத்தை எப்பவோ வித்தாச்சி. பய கூட்டிட்டிருக்கான். பாப்பம்”  நான் எப்ப, இவர் ப்ளான் பத்திக் கேட்டேன்? என்று யோசித்துக்கொண்டிருக்கும்போதே, மகளின் திருமணம் பத்திச் சொல்லத் தொடங்குவார்.
“நானே பேசிட்டிருக்கேன்னு நினைக்காதீய. நாம் பேசத்தான் கூட்டேன் விளங்குதா? நீங்க பேசணும்னா நீங்கதான் என்னைக் கூப்பிடணும்”
ஆகா. என்ன லாஜிக்கு. இதுக்கு நாந்தான் கிடைச்சேனா?

“காலங்காத்தால எதுக்குக் கூட்டேன்னுதானே நினைக்கீய? நாம்பேசப்போறதில்ல. அப்பா பேசணுங்காரு. அவரு தமிழ் டீச்சரா இருந்து ரிடையர்டு ஆனவுக. லைன்ல இரிங்க. “
“ஹலோ” என்ற குரல் கரகரப்பாக, வளைந்த தகரத்தில் மத்தாப்புக் குச்சி வைத்து சுரண்டினால் வருமே அது போன்ற ஒலியில்.
“வணக்கம் அய்யா, சொல்லுங்க”
“தம்பி, உங்க புக்கு படிச்சேன். நிறைய எழுத்துப் பிழை இருக்கே? திருத்த மாட்டீயளோ?”
“எந்த புத்தகம்யா? ”   வம்ஸி ஷைலஜா “ அப்பவே சொன்னேன். திருத்தியிருக்கலாம்னு” என்று சொல்வதாக ஒரு பிரமை.
“6174. ஒற்று மிகுகிற இடம், மிகா இடம்னு இருக்குல்லா? இட்லி சட்னி சாம்பார் எல்லாத்தையும் சேத்து குழப்பி கூழா குடிச்சா நல்லாயிருக்குமா? எந்த சொல்லு எப்படி வரணும்னு ஒரு விதி இருக்கு. அப்படி வந்தாத்தான் அதுக்கு உயிர் வரும். இல்ல சொல்லு ஒரு செத்த சவம்தான்”
“அய்யா, தவறுக்கு மன்னிக்கணும், திருத்திடறேன். எந்த இடம்னு சொன்னீயன்னா”
“வீட்டுக்கு வாங்க தம்பி. புத்தகத்துல பென்சில்ல கோடு போட்டு வச்சிருக்கன்”
நான் என்ன சொல்வதென்று தெரியாமல் திகைத்து நின்றபோது அவர் தொடர்ந்தார்
“உனக்கு எந்தூரு தம்பி?”
“தூத்துக்குடி” என்றேன். “சொந்த ஊருன்னா நாங்குனேரி. “
“அப்ப படிச்சது?”
“தூத்துக்குடிதான்”
“இருக்காதே? வேற எங்கெல்லாம் இருந்திருக்கே?”
நான் இருந்தது இவருக்குத் தெரியுமா, எனக்குத் தெரியுமா?
“அங். ஒரு நாலு வருசம் அம்பாசமுத்திரத்துல ... அது ஏழாப்பு வரைக்கும்தான் அய்யா”
“அம்பையிலயா? எந்தத் தெரு?”
“க்ருஷ்ணன் கோவில் தெரு”
“ஆத்துல முங்கிக் குளிச்சிருக்கியா? சின்ன பய அப்ப.. பெரியவங்க கூட்டிட்டுப் போனா உண்டும். என்ன?”
“ஆமா அய்யா. ஆத்துப்பாலம் படித்துறை, பாலத்தூண்லேர்ந்து குதிச்சு...”சிரித்தேன்.
“அதான்... இவன்கிட்ட சொன்னேன். இந்தப்பய எழுதலடே,  தாமிரபரணித் தண்ணி எழுதுது. . இப்படிச் சொன்னதுக்குக் கோவிச்சிக்கக் கூடாது” சிரித்தார்.
“உண்மை அய்யா” என்றேன் சிரத்தையுடன்.  “ஆனா எழுத்து சரியில்லன்னீங்களே?”
“டே, சொல் குத்தம் கண்டுபிடிக்க தண்ணில தவங்கின இன்னொருத்தன அது கொண்டுவந்துட்டுல்லா? நானும் அங்கனக்கிட்டத்தான வளந்தேன்? தெய்வம் பொய்க்கும். தண்ணி பொய்க்காதுடே.”
அட, நல்ல லாஜிக்கா இருக்கே?
அவர் முடித்தார் “ அந்த தண்ணில கிடந்த மீனுகூட எழுதும்டே, கையிருந்தா.. படித்துறைல நின்னு பாத்தீன்னா,  என்னமோ சொல்ல நினைச்சு வாய வாயத் திறந்து, செதிளை அடிச்சு அலைபாயும். எல்லா தண்ணிலயும் மீனு இப்படித்தானே?ன்னு கேக்காதே.அது சொல்றது எனக்குப் புரியும்”
இதைக் கர்வம் என்பதா, தரிசனம் என்பதா, விளங்கவில்லை.

No comments:

Post a Comment