Saturday, October 15, 2016

பாவம் ஓரிடம், பழி ஓரிடம் - சிறுகதை

முதுகில் யாரோ தட்டியது போலிருந்தது. திரும்புமுன்னே, கடகடவென குரல் யாரென்பதைக் காட்டிவிட்டது. ” மஞ்சுநாத், எங்க இந்தப் பக்கம்?” என்றேன்

திரும்பவிடாமல் தட்டித் தழுவியபடியே. சிரித்தார் மஞ்சுநாத். அவர் பேசினால், அக்கம்பக்கம் ஆட்கள் தங்களுக்குள் பேசிவிடமுடியாது. மனிதர் கொஞ்சம் உணர்ச்சி வசப்படும் ரகம். ஆறுமாதமே கழித்து கண்ணில் பட்டாலும்உங்களைப் பாக்கவே முடியலேய்ய்யாஎன்பார். கண்ணில் நீர் கோர்த்திருக்க.

செகந்திராபாத் மணிக்கூண்டுக்கு அருகில் ராவ்ஜி கடையில் மிளகாய் பஜ்ஜியும், ஸ்ட்ராங்க் காபியுமாக அன்று தின்றேயாக வேண்டுமென அவர் ஒற்றைக்காலில் நிற்க, நானும் காரமான மொளகாய் பஜ்ஜி திங்க வேண்டியிருந்தது.

அவரும் நானும் போட்டியாளர் கம்பெனிகளில் வேலைபார்த்தாலும், நல்ல நண்பர்கள். “வெங்கட் ராவ் எங்க இருக்கார்?” என்றேன், கடித்த பஜ்ஜியின் உள்ளேயிருந்து வந்த ஆவியை ஊதியபடியே.

சட்டென அவர் முகம் மாறியது “  தெரியாத மாரி கேக்கறீங்க?” என்றார் சற்று கோபத்துடன்.

தெரியாதுய்யா, கம்பெனி மாறிட்டாரா?”

அவர் துபாய் போயிட்டாரு. எதோ மெடிக்கல் ஷாப். அதுல இருந்துகிட்டு ப்ளட் ப்ரஷர் மானிட்டர், அது இதுன்னு ஏதோ வித்துகிட்டிருக்கார்

ஆச்சரியமாக இருந்தது. ராவ் எங்கள் வியாபாரத்தில் பெரிய பன்னாட்டு கம்பெனியின் மிகப்பெரிய பதவியில் இருந்ந்தவர். ஐம்பத்தாறு வயதிருக்கும் அவருக்கு.. இப்போ போய் ஏன் துபாய் மோகம்? கேட்டுவிட்டேன்.

தலைஎழுத்து சார். என்ன சொல்ல?” என்றவர், முன்னே ரோட்டின் மறுபக்கம் பார்த்து கை உயர்த்தினார். அங்கு ஒரு பெண்ணும் மூன்று இளைஞர்களும் நின்றிருந்தனர். அவர்கள் இவரை நோக்கி கையசைக்க, சட்டென என்னை நோக்கி மினர்வா க்ராண்ட் ஓட்டல்தானே தங்கியிருக்கீங்க?, ராத்திரி சாப்பாடு நேரத்துல பேசுவம்.” என்றபடி கிளம்பிப்போனார். நானும் மறந்துவிட்டேன்.

வெங்கட் ராவ், நெடிய, சிகப்பு உருவம். முகத்தில் சற்றே பெரிய கண்ணாடி. அதனை அடிக்கடி தூக்கிவிட்டுக்கொண்டே , மெலிதான சிரிப்புடன் பேசுவார். கண்ணீயம் என்றால் அவரிடம் கற்கவேண்டும். வாடிக்கையாளர்கள், அவரிடம் ஒரு கோரிக்கை வைத்தால், அதனை அவர் நிறைவேற்றிவிடுவார் என்பதில் மிக்க நம்பிக்கை கொண்டிருந்தனர். எத்தனை கோபமாக இருக்கும் கஸ்டமரிடமும், தம்மால் முடியாது என்று வந்துவிட்டால், அவர் ஜூனியர்கள்மதம்பிடித்த யானை முன் ஒட்டகத்தை நிறுத்துவது போல் அவரைக் கொண்டுபோய் நிறுத்துவார்கள்விசயம் சுமுகமாக முடிந்துவிடும்.

எனக்கு அப்படியொரு தலைமையதிகாரி இல்லையே? என வருந்தியதுண்டு. அவரிடம் பணி செய்யவேண்டுமெனவே அக்கம்பெனியில் விண்ணப்பம் செய்திருந்தேன். அவர், இளைஞர்களைத் தேர்ந்தெடுத்தார். ” அடுத்த ஜெனரேஷனை உருவாக்கணும்ல? நாமளே எத்தனை நாளைக்கு அலைஞ்சுகிட்டு, பழசையே [பேசிட்டிருக்கறது.? வேலை வாய்ப்பை அடுத்த தலைமுறைக்கு உருவாக்கறது நம்ம கடைமை.” என்பார். எனக்கு வாய்ப்பு போயிற்று.

நடுத்தர , ஏழ்மைக் குடும்பங்களிலிருந்து, சிறு நகரங்களிலிருந்து வந்த இளைஞர்களையே அவர் தேர்ந்தெடுத்தார். “என்ன பெரிய ஸாஃப்ட் ஸ்கில்? ரெண்டு மாசம் மார்க்கெட்ல நம்ம கூட அலைஞ்சா, கத்துகிட்டுப் போறான். பொறக்கும்போதே இங்கிலீஷ்லயேவா அழுதுகிட்டு பொறக்கறோம்? “ அவருடன் கஸ்டமரிடம் போவதற்கு அக்கம்பெனியில் அடிதடியே நடக்குமெனக் கேட்டிருக்கிறேன். என் கம்பெனியில் நான் தனியே செல்வேன். அவர் ஏன் திடீரென வேலையை விட்டுவிட்டு செல்லவேண்டும்?

சிந்தித்துக்கொண்டிருக்கும்போதே, செல்போன் சிணுங்கியது. மஞ்சுநாத்.
வெளிய போய் சாப்பிட்டுட்டு வரலாம். லாபியில நிக்கறேன், வாங்க” , நான் எதுவும் சொல்லுமுன்னே போனை வைத்துவிட்டார்.


அருகிலிருக்கும் தாஜ் ஓட்டலுக்கு நடந்தோம். தாஜ் என்றால் ஐந்து நட்சத்திரமென்றெல்லாம் நினைத்துவிடாதீர்கள். செகந்திராபாத் அறிந்தவர்களுக்கு ஹோட்டல் தாஜ் தெரியும், அதன் உப்புமா, மசாலா தோசையின் ருசி தெரியும். எண்பது ரூபாய்க்கு வயிறு நிறைய ரெண்டுபேர் சாப்பிட்டு வரமுடியும், இன்றும்.
உப்புமா ரெண்டு ப்ளேட்என்றார் என்னிடம் கேட்காமலே, மஞ்சுநாத்.” வெங்கட் சார்.. ப்ச்ச்.தலைவிதி

நான் ஒன்றும் சொல்லாமல் உப்புமாவை விண்டுகொண்டிருந்தேன்.

போன வருசம் ஒரு பாட்ச் இளைஞர்களை எடுத்தாரு. அதுல ரெண்டு பொண்ணுங்க. ஒண்ணு பெங்களூர் போஸ்ட்டிங்க் வேணும்னுது. இவர், ’கொஞ்ச நாள் ராஜமுந்திரில வேலைபாரு. அப்புறம் மெட்ரோ போஸ்ட்டிங்க் வாங்கிக்கோன்னாரு. அது அவளுக்கு பிடிக்கலை.

போன ஆகஸ்ட்...ஆகஸ்ட்தான்னு நினைக்கறேன். இந்த ஊர்ல ஒரு கேஸ். மூணு பசங்களையும் அவளையும் கூட்டிட்டு வந்திருந்தாரு. நானும் இருந்தேன்.  ப்ராஜெக்ட்-னா கொஞ்ச நேரம் முன்ன பின்ன ஆகத்தான் செய்யும். அந்தப்பொண்ணு, ஆத்திரத்துல கஸ்டமர்கிட்ட வாக்குவாதம் பண்ணி கொஞ்சம் சிக்கலாயிருச்சு. ஏர்ப்போர்ட் போயிட்டிருந்த வெங்கட் நாப்பது கிலோமீட்டர் திரும்ப வந்து, சமாதானம் பண்ண வேண்டியதாப் போச்சு. அவர், அவ கிட்ட மெதுவா பக்கத்துலஅப்புறமா என்னை வந்து பாருன்னு சொன்னதை பக்கத்துல .நின்னிட்டிருந்த நான் கேட்டேன்
அன்னிக்கு ராத்திரி அவ, அவருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருக்கா. அவர் பதில் எழுதியிருக்காரு. ரெண்டு நாள் கழிச்சு, மனித வளத்துறை அவரை கூப்பிட்டு, ரெண்டே நிமிசத்துல வெளிய அனுப்பிட்டாங்கலாப்டாப், பையைக் கூட எடுக்க உள்ள அனுமதிக்கலை. அப்படியே போகச் சொல்லிட்டு, அவர் உடைமைகளை மட்டும் எடுத்து வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. ஃபுல் அண்ட் ஃபைனல் செட்டில்மெண்ட்.

அதிர்ந்து போனேன்ஏன்?”

அந்தப் பொண்ணு போய் செக்ஷூவல் ஹராஸ்மெண்ட்-னு புகார் பண்ணியிருக்கா. ஆதாரமா அந்த எஸ் எம் எஸ்ஸை காட்டியிருக்காவிவரமா எழுதியிருக்கா

அவள் : “ சார், உங்களைப் பாக்க வரணும்னு சொன்னீங்களே?”
வெங்கட் : “யெஸ்
பயம்மா இருக்கு சார்.”
பயப்படாதே. இதுவெல்லாம் சகஜம். கத்துகிட்டாத்தான் இந்த பிஸினஸ்ல வளரமுடியும்

அவ, இதைச் சொன்ன விதம் வேற. வெங்கட் சொன்ன விளக்கத்தை அங்க கேக்க ஆள் இல்ல. விமன் ஹராஸ்மெண்ட் செல் -ன்னு ஒரு குழு இருக்கு. அதுல இருக்கறவங்க, இதை திரிச்சுப் பேசாதேன்னு அவளுக்கு அறிவுரை சொல்லியிருக்காங்க. அவநீங்க நடவடிக்கை எடுக்கலேன்னா, நான் மீடியாவுக்குப் போவேன்ன்னு சொல்லியிருக்கா. அதோட, கம்பெனியோட தலைமையகத்துல இருக்கிற மனிதவளத்துறைக்கு புகார் பண்ணப்போறதா மிரட்டியிருக்கா.

வேற வழியில்ல, ஒரு பலிகொடுத்துத்தான் கம்பெனி மானத்தைக் காப்பாத்த முடியும்னு வெங்கட்டை வெளிய அனுப்பிட்டாங்க. எப்படி உழைச்ச மனுசன்... ஒரு நாள்ல, மிகக் கேவலமான ஒரு காரணம் காட்டி.... அவர் பையன் பி.டெக் மூணாம் வருசம் ...
நான் வியர்த்திருந்தேன்... வெங்கட்..அவருக்கா இப்படி?

வெளிய தலைகாட்ட முடியல. வதந்தி பெரிசா பரவியிருச்சு. மத்த கம்பெனியில எல்லாம், ஹெச்.ஆர், தயங்கினாங்க. அவர்  ரெண்டு இடத்துல முயற்சி பண்ணிப்பாத்தாரு. விசயம் அரசல் புரசலா தெரியவந்து, சரி, இங்க கிடைக்காது,  வெளிநாட்டுக்குப் போயிடறதுன்னு கிளம்பிட்டாரு. ஏதோ ஒரு புண்ணாக்கு கம்பெனி, துபாய்ல.. நாலஞ்சு பேர் சேர்ந்து இருக்கற ரூம்ல இருந்துகிட்டு... ஏதோ காலத்த ஓட்டிகிட்டு..”

அந்தப் பொண்ணு? ”

அவ அடுத்த நாளே ரிசைன் பண்ணிட்டு பெங்களூர் போயிட்டா. ஒரு மாசத்துல கலியாணம். யூ.எஸ்ல செட்டில் ஆயாச்சி. ஒரு குடும்பம் சிதைஞ்சதுதான் மிச்சம்
சட்டென மஞ்சுநாத்தின் குரல் உயர்ந்ததுஇதான் இவளுகளுக்கு வேலையே கொடுக்கக்கூடாதுங்கறேன். “

அடங்குங்க, ப்ளீஸ்என்றேன். “ ஏதோ ஒரு பெண் செஞ்ச தவறுக்கு எல்லாப் பெண்களையும் குறை சொல்ல முடியாது. உங்க பொண்ணும் வேலைக்குப் போறா. பாத்துப் பேசுங்க:”

அதான் அவளுக்கும் சொல்லி வைச்சிருக்கேன். எதாச்சும் தகறாருன்னா எங்கிட்ட சொல்லு. உன் ப்ரெண்டுகள் கிட்ட சொல்லு. நிதானமா , கவனமா நடந்துக்க. எசகுபிசகா பழி வாங்க நினைச்சு, குடும்பங்களை சிதைச்சிறாத

மஞ்சுநாத்என்றேன் நிதானமாகபெண்களுக்கு தற்காப்புக்காக பல உணர்வுகள் தோன்றும். பெரும்பாலும் அவர்கள் ஊகிப்பது சரியாக இருக்கலாம். சிலநேரம் தவறுதலாகப் போய்விடும். என் கேஸையே எடுத்துக்குங்க.. ரொம்ப வருசம் நல்லாபழகிட்டிருந்த ஒரு பெண் ஒரு ஜோக்கை புரிஞ்சுக்காம, “ நீ ஒரு ஜொள்ளூன்னு எழுதிட்டாஎன்ன செய்ய. விலகி வந்துட வேண்டியதுதான். இவருக்கு இப்படி நடந்தது, துரதிருஷ்டமானது

துரதிருஷ்டமானதுஎன்றார் மஞ்சுநாத், என் குரலிலேயே வேடிக்கையாக எதிரொலித்து.. “ ஒரு குடும்பம் சிதைஞ்சு போனது உங்க கண்ணுல தெரியல? எப்படிப்பட்ட ஆளுமையை மண்ணுல போட்டு மிதிச்சிட்டா அவ? அவரை மாதிரி ஒரு மனுசன் நம்ம ஃபீல்டுல, அட , நாம பாத்த அளவுல இருந்திருக்கானாய்யா? எத்தனையோ அடுத்த தலைமுறை டெக்னிகல் டீம் உருவாகியிருக்கும். அத்தனையும் நாசமாப்போச்சே, ஒரு ஆங்காரி பண்ணின வேலையில.”

பொதுவா நாம ஒரு இனத்தையே வெறுக்கக்கூடாது மஞ்சுநாத். ஏதோ இந்த கேஸ்ல விபரீதமா ஒரு பழி வாங்கும் உணர்வு. “

 ”பாவம் ஒரிடம், பழி ஓரிடம். பொண்ணுங்க நல்லவங்க, இருக்கலாம்..”

மஞ்சுநாத் அழத் தொடங்கினார். உடல் குலுங்கி, அவர் குனிந்து அழுததை பக்கத்து சீட்டிலிருந்த ஒரு சிறுமி வேடிக்கை பார்த்து, கண் விரித்து, அம்மாவின் புடவையைப் பிடித்து இழுத்தது.

எழுந்துகொண்டேன். “ வாங்கஎன்றவாறே அவரை அழைத்துக்கொண்டு வெளியேறினேன். மனம் கனத்திருந்தது. ஏதோ டி.வி சீரியல் ஓடிக்கொண்டிருக்க வெகுநேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தேன். எப்போது உறங்கினேனெத் தெரியவில்லை.

மறுநாள் காலையில் , ரெஸ்டாரண்ட்டில் மஞ்சுநாத்துடன் இரு இளைஞர்கள் அமர்ந்திருந்தனர். அடுத்த டேபிளில்  அமர்ந்திருந்த என்னை அவர் அடையாளம் காணவில்லை. சற்றே உயர்ந்த குரலில்  அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தார்.

ஏவிஜி ப்ராஜெக்ட்ல உங்க மூணு பேரைத்தான் சேத்திருக்கேன். உங்க க்ரூப்ல வேற யாருக்கு ஸி ஷார்ப் தெரியும்ப்பா? ஒரு ஆள் வேணும்.”

சார்என்றான் அருகில் சிகப்பு டீஷர்ட்டில் இருந்தவன். “ஸ்ருதி ரெட்டி ரெண்டு ப்ராஜெக்ட் பண்ணியிருக்கா. ஃபார்மசூடிக்கல் ப்ராஜெக்ட் ஒண்ணு பண்ணணும்னு ஆசைன்னு சொல்லியிருக்கா. அவளுக்கு தெலுங்கு தெரியும். க்ளையண்ட் ரிலேஷன் ப்ரச்சனை வராது

தெரியும்என்றார் மஞ்சுநாத். “. பசங்க யாரு இருக்காங்க?”

சார்என்றான் சிகப்பு டீஷர்ட்அவ இங்க தங்கிக்க ப்ரச்சனை கிடையாது. ப்ராஜெக்ட் செலவு குறையும். தவிர, ஃபார்மா தெரிஞ்ச ஒரு ஆள் நம்மகிட்ட இருக்கறது நமக்கு  நல்லது

நமக்கு நல்லது”... சிரித்தார் மஞ்சுநாத்எனக்கு ஒரு குடும்பம் இருக்கு. விடு. அவளை விஜயவாடா ப்ராஞ்ச்ல அவளை இடமாற்றம் செய்யப்போறேன். டாக்குமெண்ட் தயாரிக்கற வேலை மட்டும் கொடுங்க போறும். அதிகம் வேலை தெரிஞ்சா...வேணாம்ப்பா.. எதுக்கு ரிஸ்க்?”

நான் இருப்பதைக் காட்டிக்கொள்ளவில்லை. அந்த இளைஞர்கள் எழுந்து போன ஒரு நிமிடத்தில் அந்தப்பெண் வந்தாள்குட்மார்னிங் சார்.” என்றாள் முகம்மலர.

உக்காரும்மாஎன்றார் மஞ்சுநாத்உனக்குக் லொகேஷன் தீர்மானிக்கணும். பெங்களூர்ல விலைவாசி அதிகம். ட்ராபிக்ல ஆபீஸ் வந்து போகவே உன் சம்பளம் போயிறும். ஹைதராபாத்லேர்ந்து நம்ம டீவிஷனை மூடறோம் வேலை அதிகமில்ல. கல்கத்தா ப்ராஞ்ச்ல போறியா? அங்க...”

வேணாம் சார் எனக்கு எக்ஸ்போஷர் கிடைக்காது. ” என்றாள் தயங்கி. “ அதுக்கு, நீங்க முந்தி சொன்ன மாதிரி விஜயவாடா போயிடறேன்.”

வெரிகுட் சாய்ஸ்.. அங்க உனக்கு நல்ல ப்ராஜெக்ட் கிடைக்கும் வாய்ப்பு இருக்கு. முதல்ல, ப்ராஜெக்ட் டாக்குமெண்ட் தயார் பண்ணு. உன்னை மாதிரி டாக்குமெண்ட் பண்ற ஆள் இங்க இல்லன்னு உன் டீம் லீட் சொன்னான்...” என்றார் மஞ்சுநாத் முகம் பிரகாசமாகி.

நிம்மதியான புன்னகையுடன் எழுந்து போன அந்தப் பெண்ணைப் பார்த்தபடி இருந்தேன்

பொதுவாழ்வில் பெண்கள் வளர்ந்து வருகிறார்கள். சில நேரம்  பாவம் ஓரிடம் பழி ஓரிடம்..


இருக்கலாம்

1 comment:

  1. nowadays even a much decent gentleman find difficult to work along with a n young lady... elderly gents also should be careful in their words ...
    this story should be an eye opener...

    ReplyDelete