Sunday, January 01, 2006

சாத்தான் ஓதிய வேதத்திலிருந்து

விஜெய் டி.வி "இதுவா புத்தாண்டு?" என பகலில் ஒரு நிகழ்ச்சி நடத்தியிருந்தது. கறுப்பு அங்கி அணிந்து பூதாகரமான வேஷம் போட்டு என்னமோ 10ம் நூற்றாண்டு ஐரோப்பிய எமன் போல ஒருவர் தொண்டை கட்டியதோடு புத்தாண்டு கொண்டாடுவர்களை " இதாடா கொண்டாட்டம்?" என்ற ஒருமைவிளியில் பேசியது கடுப்பாக இருந்தாலும் கொஞ்சம் உண்மை ஒட்டிக்கொண்டிருந்தது.

கிரிகேரியன் காலண்டர் புத்தாண்டை சீனர்களும், யூதர்களும் இஸ்லாமிய நாடுகளும் கொண்டாடுவதில்லை என்றார் வி.ஹெச்.பி பிரமுகர் ( அதானே பார்த்தேன்?). புத்தாண்டு கொண்டாடுபவர்கள் அனைவரும் ரோட்டில் சீட்டியடித்து, குடித்து ஆடுகிறார்கள் என்ற அளவில் அனைவரும் பேசியது வருத்தமளித்தது. முறைதவறி நடப்பவர்களை தண்டிக்கவேண்டுமென்பது சரி. அதற்காக கொண்டாடுவதே தவறென்பது எப்படி சரியாகும்? புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலாச்சாரம் போய்விடுகிறது என்பவர்கள் நவராத்திரி ஆட்டங்களின் பின் குஜராத்திலும் ,மும்பையிலும் கருக்கலைப்பு அதிகமாயிருக்கிறது என்ற புள்ளிவிவர ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதை எப்படி ஜீரணித்துக்கொள்ளப்போகிறார்கள்? கலாச்சாரச் சீரழிவு என்பது கொண்டாடுவதின் நடைமுறையாக்கலில் இருக்கிறது. கொண்டாட்டத்தில் அல்ல.

"கோயில்களில் நள்ளிரவு பூஜைகளும், விசேஷ ஆராதனைகளும் புத்தாண்டு தினத்ன்று நடப்பது ஆகம விதிகளுக்கு புறம்பானது." என்றார் அவர். சரியானதே.புத்தாண்டு என்பது பண்டிகையல்ல ( கிறிஸ்துவர்களைத் தவிர்த்து). அன்று என்ன விசேஷமென கோயில்களில் கூட்டமென்பது நல்ல கேள்வி.

அறிவுறுத்தப்படவேண்டுமென்பது ஒத்துக்கொள்ளப்படவேண்டியதுதான். அதற்காக வலிந்து " கொண்டாடவே கூடாது' என்று சொல்வதை சில நாடுகளில் இருக்கும் பழைமை வாத தீவிரவாதத்துடன் சரியாகவே ஒப்பிடலாம். தனிமனிதனாகப் பார்த்து திருந்துவதென்பது சாத்தியம். அதற்கான வழிமுறைகளை அமைத்துக்கொடுப்போம். மதுக்கடைகளை தணிக்கை செய்வதும், 18 வயது நிறையாத மாணவ மாணவியர் கூத்தாடுவதை தடுப்பதும் அவசியம்.

பெரியார்தாசன் சொன்ன கருத்து ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது. 'இன்னிக்கு இதைச்செய்தேன் எனச் சொல்வதைவிட இதைச் செய்யவிரும்புகிறேன் என திட்டமிடுவதாக நாட்குறிப்புகள் அமைவது நல்லது.' என்றார். சரியான ஆலோசனை.

"குடித்துவிட்டு கூத்தாடுவதும், ரோட்டில் கூவிக்கொண்டு போவதும், குப்பையாக்குவதுமாடா புத்தாண்டு?" என கறுப்புஅங்கி பூதம் கேட்டது சிந்திக்கவேண்டியது. அமைதியாக எதையும் ரசிப்பதென்பது நமக்கு தெரிவதில்லை. எதிலும் கூச்சலும், அமளியுமே நமக்கு கொண்டாட்டமெனத் தெரிகிறது போலும்.
ஒரு மாணவர் பொன்மொழி உதிர்த்தார் " கேர்ல் ஃப்ரெண்டோட சுத்தறதுதான் இன்னிக்கு முக்கியம்". என்ன தெளிவு?!

"போனவருஷம் இயற்கையின் சீற்றத்தில் தவித்தவர்களுக்கு ஒரு உதவியாச்சும் செஞ்சேன்னா , அதுதாண்டா புத்தாண்டு." என்றது பூதம். கொஞ்சம் ஓவர் என்றாலும், யோசிக்கவேண்டிய விசயம்தான்.

ஒரே ஒரு நபர் மட்டுமே கொஞ்சம் தெளிவாகச் சொன்னார் " போனவருடம் புத்தாண்டு உறுதிமொழியில், இரு குழந்தைகளை படிக்க உதவி செய்வேன் என எடுத்திருந்தேன். நிறைவேற்ற முடியலை. இந்த வருஷமாவது ஒரு குழந்தையை படிக்கவைக்கணும்-னு இருக்கேன்". இப்படி ஒருத்தர் சொல்வதற்காகவாவது, இத்தனை கும்மாளங்களை சகித்துக்கொண்டு ,ஒரு புத்தாண்டும் அதன் உறுதிமொழிகளும் வரவேற்கப்படவேண்டியவையே.

எல்லாம் சரி... இந்த அறிவுரைகளை அள்ளிவழங்கும் விஜெய் டி.வி , இன்றாவது மற்ற சேனல்கள் போல புத்தாண்டுநிகழ்சிகளில் இன்ன சினிமா நடிகர்/நடிகையுடன் பேட்டி, சினிமாப் பாடல்கள் என ஆபாசக்குப்பைகள் இல்லாமல், நாடக மேதை, விஞ்ஞானி, கணித நிபுணர், பொறியியல் நிபுணர் என ஒருத்தரைத் தேர்ந்தெடுத்து, அத்துறையில் இந்தியாவின் முன்னேற்றம் குறித்த நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினால், ஓதிய வேதத்தின் பின் இருப்பது சாத்தான் இல்லை என நிருபிக்கலாம். இல்லையென்றால் இது வெறும்
"ஊருக்குத்தான் உபதேசம்"

No comments:

Post a Comment