Sunday, January 06, 2008

சமூக இடைவெளி-2

சமூக இடைவெளி-2


1985 என நினைக்கிறேன். தூத்ஹுக்குடியில் இளநிலை இயற்பியல் படித்த காலம். துறைமுகக் குடியிருப்பு வளாகத்தில் ஒரு இளைஞர் குழு அமைத்து நாங்கள் தடுமாறி உலகம் கண்ட நாட்கள் அவை.
ஸ்பிக் கம்பெனியிலிருந்து திரு. ஜி.டி.ஷர்மா அவர்களை ஒருமுறை எங்கள் குழுவில் பேச அழைத்திருந்தோம். மெலிதான உடல். சீரான தாடியுடன் அவரது தோற்றம் எங்களை அசர வைத்திருந்தது. சிறிது காலம் முன்பு வினாடி வினா நிகழ்ச்சிகளை அவர் நடத்தியிருந்ததால் அவரைக் குறித்து சிறிது அறிந்திருந்தோம்.
ஜீன்ஸும், டீ ஷர்டும்மாய் ஒரு ஞாயிறு மாலை, துறைமுக பள்ளியில் ஒரு வகுப்பில் "எப்படி நேர்முகத்தேர்வுகளை சந்திப்பது?" என்பது குறித்து அவர் பேசினார். எப்படி உடை அணியவேண்டும், எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பது குறித்து அவர் சொன்னது எங்களுக்குப் புதியதாக இருந்தது.

இது நடந்து சில நாட்களில் கல்லூரி அளவிலான "சிறந்த மாணவ/மாணவியர்" தேர்வு ஸ்பிக் ரோடராக்ட் நடத்தியது. நானும் போயிருந்தேன். நேர்முகத் தேர்வு ... எனது முறை. எனக்கு முன் சென்ற பெண் சிரித்தபடி வெளியேறினாள். நான் பதட்டத்துடன் கதவைத் திறந்து நுழைந்தேன்... தட்டாமலே.. "உள்ளே வரலாமா? என்று கேட்காமலே..

ஷர்மா என்ன்னைக் கவனித்தார். அவர் முகம் சுருங்கியது. " வெளியே போய் , கதவைத் தட்டிவிட்டு, "உள்ளே வரலாமா?" எனக்கேட்டு விட்டு, அனுமதித்தால் மட்டும் நுழை.." என்றார். அவமானத்தில் சுண்டிப்போனேன். சுதாரித்தபடி வெளியேறி, மீண்டும் நுழைந்தேன், கதவைத் தட்டி, அனுமதி கேட்டபின்...

என்னை எவரும் இருக்கச் சொல்லுமுன் ஒருவர் எனது கால்களைக் கவனித்தார். " இண்டர்வியூ-ன்னு தெரியுமில்லே? பாத்ரூம் செருப்பு போட்டுட்டு வந்திருக்கே?"
ஷர்மா அவரை உடனே அடக்கினார்." இந்த தேர்வு நடத்துவதின் நோக்கம், இவர்களைக் குற்றம் சொல்வதற்கு இல்லை. சொல்லிக் கொடுப்பதற்கு . முழுமனிதனாக உருவாக்குவதற்கு" என்று கடிந்தவர், புன்னகையுடன் என்னைப்பர்த்தார். "இண்டர்வியூவில் உன் திறமையை மட்டுமில்ல, நீ உன்னை எப்படி மதிக்கிறாய், எப்படிக் உன்னைக் காட்டிக்கொள்கிறாய் என்பதும் முக்கியம். சும்மா அலட்டச் சொல்லலை. எளிமையாக , அதேசமயம் சுத்தமாக உன்னைக் காட்டவேண்டும். புரியுதா?" என்றார். மேற்கொண்டு கேட்ட பல கேள்விகள் நினைவில்லை. தோல்வியுடன் திரும்பியபின் என் நண்பன் குட்டியிடம் எல்லாம் சொன்னேன். கடற்கறை மணலில் கைகளைத் தலைக்கடியில் வைத்து அண்ணாந்து படுத்திருந்த சிறிது நேர அமைதியின் பின் கேட்டேன் " மக்கா, பாத்ரூமுக்கெல்லாம் செருப்பு போட்டு போவாங்களாடே?"
அவனுக்கும் அக்கேள்வி எழுந்திருக்கும்.
எழுந்து நடக்கையில், கடற்கரை மணல் உள் புக செருப்பு உறுத்தியது.
இன்னும் உறுத்துகிறது.

2 comments:

  1. ஒரு வேண்டுகோள் - இப்படித் துண்டுத் துண்டாக வெளியிடாமல் மொத்தமாக வெளியிட முடியுமா? முந்தைய பாகத்தின் நேர்முகச் சம்பவம் பற்றியும் முழுமையாகத் தெரிவிக்கவில்லை. இது பற்றிய ஆர்வத்தால் கேட்கிறேன், தவறாக எண்ண வேண்டாம்.

    ReplyDelete
  2. நன்றி வாய்ஸ் ஆஃப் விங்ஸ் அவர்களே,
    எழுதவேண்டும் என எண்ணம்தான். முடிவதில்லை. அலைச்சலில் எழுத உட்காருவதே பாடாய் இருக்கிறது.( நாய் வேஷம் போட்டா குரைச்சுத்தானே ஆகணும்?!). நீங்கள் என்னைத் தவறாக எண்ணவேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்:)
    அன்புடன்
    க.சுதாகர்

    ReplyDelete