சில நாட்கள் முன் மீண்டும் ரோஷனை சந்தித்தேன். சட்டென வாய்ஸ் ஆஃப் விங்க்ஸ் கேட்டிருந்தது நினைவுக்கு வந்தது.
" அந்தப் பையனை வேலைக்கு எடுத்த்தீர்களா? " என்றேன். சுத்தமாக அந்த நேர்முகத்தேர்வு நிகழ்ச்சியை மறந்தே போயிருந்தான்.
"ஆங்.. ஞாபகமில்லையே" என்று சிரமித்தவன், " அவன் பேர் தெரியுமா?" என்றான்.
"தெரியாது" என்றேன். "எத்தனையோ பேர் வர்றாங்க. யாருன்னு எப்படி கண்டுபிடிக்கறது" என்று அவன் முணுமுணுக்கவே, விட்டுவிட்டேன்.
அவன் விடவில்லை. கோப்புகளை வருவித்து ஒவ்வொரு படிவமாகப் பார்த்தான்.
இறுதியில் "இல்லை" எனத் தலையாட்டினான். "டெக்னிகல் அறிவு போறவில்லை" என அப்பையனது பயோடேட்டாவின் மேல் ஸ்டாப்லெர் செய்யப்பட்டிருந்த படிவத்தில் வேலை மறுப்பு காரணங்களில் டிக் செய்யப்பட்டிருந்தது. ஒரு நிமிடம் மனது சங்கடமாக இருந்ந்தது.
இதையும் கேட்கப் போனால் ,"டெக்னிகல் அறிவு இல்லைன்னு சொன்னா, எப்படிவே எடுக்க முடியும்?" என வாக்குவாதம் வளரும்.
ஆனால், எனக்கு என்னமோ , அவனுக்கு கேள்விகள் புரிந்திருக்காது எனவே பட்டது. ஆங்கில உச்சரிப்பு புரிந்திருக்காது போயிருக்கலாம். அல்லது ஏற்கனவே ரோஷன் "வள்" என விழுந்திருந்ததில் நடுங்கிப் போயிருக்கலாம். எதுவோ, அவன் அங்கு வேலையில் இல்லை...
நடுத்தர நகரங்களில் இருந்து வரும் மாணவர்கள் நேரிடும் தடைகள் பெரும்பாலும் புரியப்படாமலே போகின்றன. அவர்களது சமூக, பொருளாதார சிக்கல்களும், வந்த பாதைகளும் மறைக்கப்பட வேண்டியவையாக நகர வாழ்க்கை அழுத்தும்போது, அவை உணரப்படுவதில்லை.
நான் முன்பு பணியாற்றிய கம்பெனிகளில் பலர் சிறுநகரங்களில் இருந்து வந்து, மும்பையில் "நானும் உங்களில் ஒருவன் பார்" எனக் காட்டுவதில் திரிந்து வாழ்க்கையே போலியாக வாழ்ந்தது இன்னும் நினவிருக்கிறது. அவர்களின் பலரது வாழ்வு வெறுமையானதை இன்றும் பார்க்கிறேன் - வருத்ததோடு.
வேலைக்கு வெளியிடம் வரும் மாணவர்களுக்கு ஆயத்தப் பயிற்சிகள் கொடுக்கப் படாதவரை, அவர்கள் தங்கள் பொறுப்புகள் இன்னவென அறிந்து கொள்வது மட்டுமல்லாது, ஒரு நிஜ கார்டியனிடத்து தங்கள் கவலைகளை கலந்து ஆலோசிக்காதவரை இப் புண்படுதல்களும், அழுத்தங்களும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்.
No comments:
Post a Comment