முனைவர் பாகவத் எனக்கு தொழில் முறையில் பழக்கம் என்றாலும், எனது மானசீக ஆசிரியராகவே அவரை வணங்கி வந்திருக்கிறேன். எப்போதும் புன்னகையுடன், ஒரு தந்தையின் பரிவுடன் பேசும் அவர் மீது மரியாதையும் அன்பும் மிகுவது என்போன்று அறிவியல் பொறிகள் / மென்பொருட்கள் விற்பனையாளனாக மும்பையில் பணி செய்யத் தொடங்கிய அனைவருக்கும் இருக்கிறது என்றால் அது மிகையில்லை.
இன்று அவரை சந்தித்தபோது மும்பையில் அனீமியாவின் ( ரத்தச்சோகை?) தீவிரம் குறித்து விளக்கினார்.
.இளைஞர்கள் - குறிப்பாக கல்லூரி மாணவ மாணவியரிடம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் சுமார் 65% மாணவியரும் ஏறக்குறைய அதே விழுக்காடு மாணவர்களும் அனீமியாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
. பள்ளிகளில் - குறிப்பாக வசதி படைத்த/ நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த சிறுவர்/சிறுமியர் படிக்கும் பள்ளிகளில அனீமியா 70%க்கு மேல்..
இது சிறிது அதிர்ச்சியான தகவல்.
மருத்துவத் துறை வல்லுநர்கள் ( மருத்துவர்கள், செவிலியர்) ,அனீமியா குறித்து அறிந்தவர்கள் மத்தியில் இது எத்தனை விழுக்காடு என நினைக்கிறீர்கள்?
100% செவிலியர்கள் அனீமியாவால் பாதிக்கப்பட்டவர்கள் - மும்பையில்.
60% மருத்துவ வல்லுநர்கள்களுக்கு அனீமியா உண்டு.
45000 நபர்கள் பரிசோதிக்கப்பட்டனர். 2 வருடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இதனை முனைந்த நடத்திய ஆய்வாளர் " குப்பை உணவு " கல்லூரி,பள்ளிகளின் அருகில் கிடைப்பதே காரணம் என்றார். முதலில் இந்த கடைகளை அப்புறப்படுத்தவேண்டும் என்றவர்கள் பலர்.
தொலைக்காட்சி விளம்பரங்கள் "முன் தயாரிக்கப்பட்ட உணவுகளின் ஊட்டச்சத்து விகிதத்தை பொய்யாகச் சித்தரிக்கின்றன" என முன்பு ஒரு முறை நுகர்வோர் அமைப்புக் குழு ஒன்றின் ஆய்வு மையத்தில் கேள்விப்பட்டதை பகிர்ந்து கொண்டேன். "இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை" என்ற ஒரு ஆய்வாளர் , பிரபலமான ஒரு ஊட்டச்சத்து உணவில் இடப்படும் மாவுப்பொருள் கிடைக்கும் விதத்தைச் சொன்னார். வேண்டாம்.. விடுங்கள். கேட்டால் , அந்த பானத்தைக் குடித்தவர்கள், வாயில் விரலை விட்டு வாயிலெடுத்து விட்டே மறு வேலை பார்ப்பீர்கள்.
ஒரு வாரம் முன்பு பங்களாதேஷில் எனது டீலரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது பால் பவுடரில் மெலாமைன் கலப்படத்தைக் கண்டுபிடிக்கும் முறைபற்றிக் கேட்டார். " அது சீனாவில் அல்லவா வேண்டும்? உங்களுக்கு எதுக்கு?" எனக் கேட்டுத் தொலைத்தேன்... " அந்த சீனப் பால் பவுடர்கள் இங்கு படு சீப்பாக கிடைப்பதால் எளிய மக்கள் வாங்குகிறார்கள்- பாவம், தங்கள் குழந்தைகளுக்குத் தானே விஷம் கொடுப்பது தெரியாமல்.." என்றவர் சொன்ன விதம் நெடுநேரம் நெஞ்சைப் பிசைந்தது..
சிறிது விழிப்புணர்வு நமக்கு அவசியம். பெரிய பெரிய மால்களில் கிடைப்பதாலும், பெரிய நிறுவனங்களின் தயாரிப்பு என்பதாலும் மட்டுமே உணவு வகைகளை வாங்காமல், இது நமக்குத் தேவையா? எனப் பார்த்து வாங்குவது நலம். புரதச்சத்து வேண்டும் என்றால் செயற்கை புரதக்கலவைகளை டின் டின்னாக வாங்குவதை விட்டுவிட்டு, முளைகட்டின பயறுகளையும், பொட்டுக்கடலை போன்றவற்றையும் சிறிது சிறிதாக உணவில் சேர்க்கப் பாருங்கள்.
சோகைபற்றி பின்பு பார்ப்போம்..
விழிப்புணர்வு ஏற்படுத்தும் கட்டுரை. அழகிய மொழிநடை. பாராட்டுக்கள், நன்றி.
ReplyDeleteஒரு ஈழத் தமிழன்
நன்றி நண்பரே, தங்கள் சொற்கள் ஊக்கமூட்டுகின்றன.
ReplyDeleteஅன்புடன்
க.சுதாகர்