"என்னலே உளறுத? இவங்க ஊர்க்காரனுக்கு மட்டுந்தான் வேலைன்னா நாளைக்கு ஒன்னையும் ' ஊரைப்பாத்து ஓடுல மூதி'-ன்னு அடிச்சு வெரட்டிருவான் வெளங்குதா?"
- சொன்ன ராபர்ட்டு, "இன்னும் தண்ணீர் வேண்டும்" என பணியாளரிடம் சைகை காட்டினான்.
ஸீப்ஸ் ( seepz)க்கு அருகில் துங்கா பாரடைஸ் ஓட்டலில் அமர்ந்து நானும் எனது நண்பர்களும் குடித்துக் கொண்டிருந்தோம்( அப்படிப் பார்க்காதீர்கள்...வெறும் காபிதான்). மகாராஷ்ட்டிர அரசு உற்பத்தி நிறுவனங்களில் மராட்டியருக்கு 80% கட்டாய இட ஒதுக்கீடு கொள்கையை அறிவித்தது முதல் சில சலசலப்பு எங்கும் கேட்கப்படுகிறது. இது இப்போது எங்கள் காபி மேசையிலும்...
"என்னைப்பொறுத்ததவரை இது வரவேற்கத்தகுந்தது" என்று நான் சொன்னதுக்குதான் ராபர்ட் இன்ன குதி குதித்தான்.. தூத்துக்குடிப்பக்கம் சொந்த ஊர் என்பதால் " எந்தூரு உங்களுக்கு?" என நான் கேட்டதற்கு பல்லெல்லாம் தெரிய சந்தோஷப்பட்ட ஒரு வாடிக்கையாளர்& நண்பன்.
"சளம்ப்பாதவே" என்றார் சண்முகம். திருநெல்வேலிக்காரர் என்பதால் மரியாதை அவரது ஒவ்வொரு சொல்லிலும் விளையாடும்.வயதில் பெரியவர் எங்கள் எல்லாரையும் விட எனபதாலும், அவரது உரிமையாகப் பேசும் குணம் எங்கள் அனைவருக்கும் பிடித்துப்போனது என்பதாலும், அவரது (அரிதான) அத்துமீறல்களும்,கெட்டவார்த்தை பொழியும் திட்டுகளும் பொறுக்கப்படுகின்றன. “ என்ன சொல்லிட்டான்னு இப்படி எகிறுதே? ஒழுங்கா இருக்கணும்னா இரு, இல்லேன்னா பொத்திக்கிட்டுப் போ-ங்கான். இது தப்பால?” என்றவாறே “ ஒரு ப்ளேட்டு வடை” என்றார்.
ஆர்டர் கொடுத்த எல்லாம் வரும்வரை அமைதியாக இருந்தோம். ”டே, நம்ம ஊர்ல இவ்வளவு வெளியூர்க்காரன் வேலை கேட்டு வரமாட்டான். இந்தி நம்மூர்ல கிடையாதுல்லா? அதுலயே சுணங்கிருவான்.” என்ற சண்முகம் தொடர்ந்தார் “ தவிர, எத்தனை தொழிற்சாலை இருக்கு நம்மூர்ல வேலை கொடுக்க? அதுனால ந்ம்மூர்க்காரனுக்கு இந்த எரிச்சல் புரியாது. வெளங்குதா?” என்றார்.
எனக்கு அதுக்கும் மேலேயே காரணம் தேவைப்பட்டது. இதுக்கும்மேலே எதோ காரணங்கள் இருக்கவேண்டும்.இத்தனை வெறுப்பு ஒரு குறிப்பிட்ட இன மக்களிடம் மீது இருக்கவேண்டுமென்றால் அரசியலும், சமூக சூழ்நிலையும் மட்டும் போதாது. வேலையை அயலான் எடுத்துக்கொள்வது என்பது மட்டுமல்ல, அதனையே அரசியலாக்கும் ஒரு கட்சி மட்டுமல்ல, அதற்கும்மேலே ஏதோ காரணங்கள் வேண்டும்.. இத்தனை வெறுப்புக்கு.
ராபர்ட் பேசவில்லை. நீ சொல்வ்து நியாயமாகத்தான் படுது” என்றார் சண்முகம் சிறிது நேரத்திற்குப் பிறகு. “ ஏன்னா, வெறுப்பாப் பேசறது அடிமட்ட நிலையில் இருக்கும் மராத்தியர் மட்டுமில்லை, நடுமட்ட, மேல்மட்ட ஆள்கள்தான் அதிகம். அவனுக்கு என்ன வந்தது? “ என்றார்.
எனது நண்பனின் தந்தை சொன்னது நினைவுக்கு வந்தது. மும்பையின் நகரப்பேருந்து நிறுவனத்திற்கு “பெஸ்ட்” என்று பெயர். பேருந்துகளும் அதிகம். பயணம் செய்பவர்களும் அதிகம். இருப்பினும் அதில் சீட் கிடைத்துப் போவதென்பது மிக அரிது..குறிப்பாக் வேலைக்குப் போகும் பெண்களின் பாடு மிகவும் மோசம். நெரிசல்கள், அதில் ஆதாயம் தேடும் அற்பர்கள்... அவர் ஒருநாள் கேட்டார் “ நான் நடுமட்ட மும்பை வாசி. எனது வரிப்பணம் முழுதும் தவறாமல் கட்டுகிறேன். ஆனால், எனது நகரத்தில், ஒரு நகரப்பேருந்தில் என்னால் பயணம் செய்ய முடிவதில்லை. எங்கிருந்தோ உ.பி, பீஹாரிலிருந்து வந்தவன், ஒரு பைசா வரி கட்டாமல், இந்த சலுகைகளை அனுபவிக்கிறான். அவனது வருமானம் உ.பிக்கும் பிஹாருக்கும்,பங்களாதேஷுக்கும் போகிறது. நான் ஏன் அவர்களை வரவேற்கவேண்டும்?” இது கொஞ்சம் ஓவர் என்றாலும், அவரது வேதனை அவருக்குத்தான் தெரிகிறது. அரசியல் கூச்சலில், ஓட்டுச் சேகரிக்கும் இரைச்சலில் அவர்போன்ற முதியவர்களின் முனகல்கள் அழுந்தித்தான் போகிறது.
”எல்லா இடங்களிலும் குடியேறிகளின் பிரச்சனையும், குடியேறிகளால் வரும் பிரச்சனைகளும் ஒரு போலத்தான்” என்றேன். சமூகத்தின் பல மட்டங்களிலும் புதியவர்கள் வரவேற்கப்படுவதில்லை. அவர்களால் வரும் பிரச்சனைகள் பெரிதாகத்தான் தெரியும்.” இதே பெஸ்ட் பேருந்துகளில் ஏழை மராட்டியர்கள் செல்லவில்லையா?” எனக் கேட்டால் “ இந்த் மாதிரி பெண்களை தொல்லைப்படுத்தும் வக்கிரம் அவர்களுக்கு இல்லை” எனப் பதில் வருகிறது. ஒத்துக்கொள்ளவும் முடியவில்லை, மறுக்கவும் முடியவில்லை. ஏனெனில், அப்படி ஈனத்தனமாக நடந்து பிடிபட்டவர்கள் பலரும் வட மாநிலத்தவர். பெண்களும் இதனை உறுதிபடுத்துவது போலச் சொல்வதால், அவர்களது வாக்குமூலங்களும் வடமாநிலங்களிலிருந்து குடிபெயர்வர்களுக்கு எதிராகவே உள்ளது. ஒரு தமிழனோ, மார்வாடியோ, குஜராத்தியோ, ஒரியாக்காரரையோ இந்த மும்பை இப்போது தனிப்படுத்தி வெறுக்கவில்லை. ஏன் இருமாநிலங்கள் மட்டும்?
பீஹாரும் உ.பி யும் இப்படித்தான் இருப்போம் என மெதப்பில் இருந்தால், பல புறக்கணிப்புகள் மேலும் பெருகும். பெங்களூர், மும்பைபோலத் தொடங்கிவிட்டது. அஸ்ஸாமின் ஆத்திரம் அனைவரும் அறிந்தது.
இந்த மாநிலங்களில் மக்களுக்கு சமூக நடத்தை குறித்து தன்னார்வலக் குழுக்கள், அவர்களது சமூக நலச்சங்கங்கள் எடுத்துச் சொன்னால், அவர்களுக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது.
”எவன் செய்வான்?” என்றார் சண்முகம், சாப்பாட்டுக்குப் பணம் கொடுத்தபடி. சில கேள்விகள் பதிலுக்காகக் கேட்கப்படுவதில்லை. சில விளைவுகளுக்குக் காரணங்கள் முழுதும் அலச வேண்டியதில்லை. அவை நமக்கே தெரியும்.
Good brief and this fill someone in on helped me alot in my college assignement. Thank you for your information.
ReplyDelete