Tuesday, March 03, 2009

எங்கூரு பேப்பருலா!

போன வருடம் விநாயக சதுர்த்திக்கு இரு வாரங்கள் முன்பு சிவனே என சிக்னலுக்காகக் காத்திருந்தபோது , குறுக்காகச் சென்ற மும்பை நகரப் பேருந்தைப் பார்த்து என் மகன் கத்தினான் “ அப்பா , என்னமோ தமிழ்ல எழுதியிருக்காங்க”. கொட்டையெழுத்தில் “மும்பையில் விரைவில் வருகிறது - தினத்தந்தி” என விளம்பரம் பார்த்து வியந்தேன். அட, நம்மூரு சமாச்சாரம்..

தினமலர், மாலைமுரசு எனப் பல பேப்பர்கள் இருந்தாலும், தினத்தந்தி மேல் எனக்கு ஒரு தனிப் பாசம். எங்கூரு பேப்பருல்லா... சின்னவயதில்,காலங்கார்த்தாலே, அடுத்த தெரு மரக்கடைக்கு ஓடுவேன். நானும் என் நண்பர்களும் சேர்ந்து எழுத்துக்கூட்டி “சிந்துபாத்” படிப்போம்.(அதென்னமோ அன்றிலிருந்து இன்று வரைக்கும் லைலா ஒரு ஒற்றைக்கண் அரக்கன், பெரிய பாம்பு, பிரமாண்டமான கடல் விலங்கு என ஏதோ ஒரு கேணக்கிறுக்கிடம் மாட்டிக்கொண்டிருக்கிறாள்...). கூடுதலாக நீர்மட்டம் அட்டவணை பார்ப்பேன். பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணையில் எவ்வளவு அடி நீர் இருந்தா தூத்துக்குடி/அம்பாசமுத்திரத்தில் இருக்கும் எனக்கு என்ன? வாய்விட்டுப் படிப்பதால் பக்கத்தில் ஓசி பேப்பர் படிக்கவருபவர்களிடம் ஏச்சும் கிடைக்கும்.
“சவத்து மூதிகளா, சளம்பாம படிங்கலே..இன்னொரு தடவை சத்தம் வந்தது..**டியில ரெண்டு போடு போடுவம்” என தேவர் தாத்தா மரக்கட்டையை ஓங்கியதும்தான் அடங்குவோம். ”மூதிகளா, வெள்ளாமையா பண்ணுதீய? நீர்மட்டம் பாக்குறானுவ..கேணப்பயலுவ” எனச் சிரிப்பார்.இருந்தாலும் விடாமல் ஒவ்வொருநாளும் நீர்மட்டம் பார்க்கத் தவறுவதில்லை. எளிதில் புரியும் என்பதால் படித்தேன் என இன்று நினைக்கிறேன்.
ஆண்டிப்பண்டாரம் பாடுகிறார் என ஒரு கார்ட்டூன்.. அரைகுறை ஆடையோடு ஒரு பெண்...பக்கத்தில் ஒரு ஜொள்ளு.. எட்டிபார்த்தபடி ஆண்டியார்.. ஒரு விசயமும் இருக்காது.. இருந்தாலும் புரியாமலே சிரிப்போம். இப்ப அது ஆண்டியார் பாடுகிறார் என பரிமணித்திருக்கிறது.

ஆயினும் தினத்தந்தி எங்கள் தமிழ் படிப்பறிவை வளர்த்தது என்பது என்னமோ உண்மை. கொட்டையெழுத்தில் சிறு சிறு செய்திகள் படிக்க எளிது. நாலு வரி முதல்பக்கத்தில் படிக்குமுன்னேயே “ நாலாம் பத்தி பார்க்க” என வந்துவிடும். ஆர்வமும் போய்விடும். உடனே அடுத்த செய்திக்கு தாவுவோம். பள்ளியில் , படித்த செய்தியை பீற்றிக்கொள்வதும் நடக்கும். என்னமோ , வகுப்பில் சிறுமிகளுக்கு இதெல்லாம் ஒரு ஆர்வமாகப் படவில்லை. போங்கலே என சுளித்துவிட்டு “வாங்கடி, விளையாடுவம்” என கொடுக்காப்புளிக்கொட்டை, புளியாங்கொட்டைகளை வைத்துக்கொண்டு “ ஓரி உலகெல்லாம், உலகெல்லாம் சூரியன், சூரியன் தங்கச்சி, சுந்தரவல்லிக்கு..” என என்னமோ பாடிக்கொண்டு விளையாடுவார்கள். படிச்சதை வைச்சு பொண்ணுகளை இம்ப்ரஸ் பண்ணமுடியாது என்பதை அன்றே உணர்ந்திருந்தேன்.

”ஹிண்டு படிடே. இங்கலீஷ் நல்லாவரும்” என ஆசிரியர்களும், வீட்டில் பெரியவர்களும் வற்புறுத்தினாலும், ஆங்கிலத்தில் படிப்பது என்பது பெரும் அறுவையாக இருந்தது. ”ஒரு எழவும் புரியல மக்கா” என நண்பர்களுடன் மட்டுமே புலம்பித் தீர்த்துக்கொண்டிருந்தேன். சொன்னா அடிவிழும் “ சோம்பேறி மூதி. படிக்கணும்னா போர் அடிக்கோ?” என முதுகில் நாலு சாத்து சாத்துவார்கள் எனப் “பட்டறிவு” உணர்த்தியிருந்தது. என்ன செய்ய ? அதனாலேயே தினத்தந்தி ஒரு சொர்க்கமாக இருந்தது.

மும்பையில் வேலை பார்க்கும்போது தினத்தந்தி தேடினேன். கிடைக்கவில்லை. “ரெண்டுநாள் முந்தின பேப்பரு வரும் சார்” என்றனர் மாதுங்காவில். விட்டுவிட்டேன். இப்போது மும்பைப் பதிப்பு கிடைக்கப்போகிறது. கொஞ்சம் மகிழ்ச்சியாக இருந்தது.
முதல்நாள் எங்கள் பேப்பர்காரன் கொண்டுவரவில்லை. “ ஆமா சார் என்னமோ தமிழ் பேப்பர் வந்திருக்கு.. வேணும்னா சொல்லுங்க” என வியாபரமாகப் பேசிச் சென்றுவிட்டான். நான் விடவில்ல. பேப்பர் பிரித்து கட்டுக்கட்டாக சைக்கிளில் வைக்கும் இடங்களில் சென்று தேடினேன். கிடைக்கவில்லை. மலாட் ரயில் நிலையம் அருகே மதியம் செல்ல நேர்ந்தது. அங்கே ஒரு கடையின் உள்ளே... ஒரேயொரு தமிழ்பேப்பர்.. தினத்தந்தியா?
கேட்டால் அவனுக்குப் புரியவில்லை. “மதராஸிப் பேப்பர் ஏக் ஆயா ஹை” என்றான் சுரத்தில்லாமல். எடுக்கசொல்லி பார்த்தேன். ஆகா.. நம்மூரு பேப்பருல்லா கிடக்கு?!

படு விவரமாக, நெல்லை,தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டக்காரர்களைக் குறிவைத்தே அச்சடித்திருக்கிறார்கள். ஒரு முழுப்பக்கம் இந்த ஊர்க்காரர்களுக்கென்றே.. அந்த ஊர்ச் செய்திகள்.
“பணகுடி அருகே தந்தை மகன் வெட்டிக்கொலை. போலீசார் தீவிர புலன் விசாரணை”
“பாளை பேருந்து நிலையத்தில் பயங்கரம். ஓடஓட அருவாளால் வெட்டினர்”
“ஏரலில் பட்டதாரி இளம்பெண் காதலனுடன் ஓட்டம். போலீஸ் நிலையத்தில் சரணடைந்தனர்”
என நாட்டுக்கு மிக முக்கியமான, நல்ல செய்திகளுடன் உங்கள் காலை தொடங்கினால்... வெளங்கினாப்போலத்தான்.

“முடிவைத்தானேந்தல்ல நேற்று என் மருமவன் பால்குடம் எடுத்தான்லா” என்னுமளவுக்கு சிறுசெய்திகளின் கலவையாக ஒரு முழுப்பக்கம். என்னமோ கோஸு தின்றுகொண்டு, டீ கிளாசை கையில் பிடித்தவாறு , பெஞ்சில் ஹாய்யாக கால்மேல கால்போட்டு உட்கார்ந்து , பக்கத்துல இருப்பவரிடம் “ இந்த ஊரு வெளங்குமாடே?” என அரட்டை அடிக்கும் அனுபவம்,மும்பையில் உங்கள் வீட்டில் கிடைக்கும்போது “செய்தி என்னவா இருந்தா என்ன?” எனத் தோன்றி , அந்த அனுபவத்திற்காகவே படிக்கும் கோஷ்டியில் நானும் ஒருவன்.

என் மகனையும் எழுத்துக்கூட்டி படிக்க வைத்திருக்கிறேன். தமிழ்ப் புத்தகங்களை விட அவனுக்கு இது எளிதாகவும் இருக்கிறது. “இண்ட்ரஸ்டிங்க்” என்கிறான். முதல் பக்கத்தை விட்டு அவன் செல்வதில்லை. அதற்குள் எனது தணிக்கை வந்துவிடும்.. இல்லையென்றால் அதென்ன இதென்ன என ஆயிரம் கேள்விகள் வரும். நாயை அடிப்பானேன்...*யைச் சொமப்பானேன்? ( ”திரிஷாவின் கைகளில் என்ன? இதயத்திலேயே குடியிருக்கிறேன் என்கிறார் விஜய் ”என என்னமாவது சினிமா சில்மிஷங்களுக்கு நாம் விளக்கம் கொடுத்துக்கொண்டிருக்க முடியாது). இப்போது கொஞ்சம் வேகமாக வாசிக்கிறான்.

எனது அலுவலக மேலாளர் தேஷ்பாண்டே தனது கணனியில் மராத்தி பேப்பர் வாசிப்பவர். நான் வீட்டில் தினத்தந்தி வாங்குவதைச் சொன்னதும் “இணையதளத்தில் தமிழ்ப் பேப்பர்கள் இருக்குமே? எதுக்கு பேப்பர் வாங்குற?” என்றார். கையில் பேப்பர் வைத்து, காலையில் நம்மவூர் செய்திகளைப் படிப்பது சுகம் என்றேன். ஒத்துக்கொண்டார். ”அதெதுக்கு இந்த பேப்பர் செலக்ட் பண்ணினே?” என்றார். ஒரே பதில்தான்.

எங்கூரு பேப்பருல்லா!

3 comments:

  1. நீண்ட நாட்கள் கழித்து இன்றுதான் உங்க பதிவைப் பார்த்தேன். நாட்டுமணத்துடன் இதமான பதிவு.

    ஓபன் ஆபிஸ் இணைப்பைக் கண்டதும் மனதிற்கு இதமாக இருந்தது.மாறிட்டீங்களா ?

    ReplyDelete
  2. மணியன் சார்,
    நன்றி.
    லினக்ஸ்கும் கேரளாவும் குறித்து எனது பதிவுக்கு முன்போ நான் ஓபன் ஆஃபிஸ் பயன்படுத்தத் தொடங்கிவிட்டேன்.போர்டபிள் அப்ஸ் & நார்மல் ஓபன் ஆபிஸ் எனது கணனிகளில் எப்பவும் இருக்கும். லினக்ஸ் ஆதரவாளர்களில் ஒருவன் நான்.. ஆனால் லாபி ( மைக்ரோசாஃப்ட் ஆகட்டும் லினக்ஸ் ஆகட்டும்) பிடிக்காததால் எழுதினேன்.எப்படி இருக்கிறீர்கள்?
    அன்புடன்
    க.சுதாகர்.

    ReplyDelete
  3. சுதாகர் (அல்லது Srimangai!)
    தாங்கள் Zoho writer கூட முயற்சித்துப் பார்க்கலாம்! உங்கள் கோப்புகளை இணையத்தில் (கடவுச்சொல்லுடன் பாதுகாத்து) வைத்திருப்பதால் உலகில் எங்கிருந்து வேண்டுமானாலும் எடிட்டலாம்!

    மற்றபடி இருகையும் சுகம்!
    அன்புடன்
    வெங்கட்ரமணன்

    ReplyDelete