Saturday, May 16, 2009

தேர்தல் முடிவுகளும் இலங்கையும்

காங்கிரஸ் கூட்டணிகள் வெற்றி பெற்றுவிட்டதாக சரவெடிகள் அதிரத்தொடங்கிவிட்டன. மன்மோகன் சிங்கும் உப்புக்குக் நியாயமாக “ராகுல் காந்தியும் சட்டசபையில் இருந்தால் நல்லாயிருக்கும்” என நேரு குடும்பத்துக்கு வழக்கமான கும்புடு போட்டுவிட்டார். பிரதமர் பதவி நிச்சயம். எல்லாத் தொலைக்காட்சிகளும் நாளை முதல் வழக்கமாக அழுவாச்சி தொடர்களை நம்பி டி.பி.ஆர் ரேட்டிங் குறித்து கவலைப்படத் தொடங்கிவிடும்...

எல்லாம் சரிதான்வே....எவன் இலங்கை பற்றிக் கவலைப்படப்போகிறான்?

தேர்தலுக்கு முன்பு “தனி ஈழம்”, உண்ணாவிரதம் என அடித்த அந்தர் பல்டிகள் எல்லாம் இப்போது நின்றுவிடும். சாகிறவர்கள் செத்துக்கொண்டே இருப்பார்கள். புது அரசு எந்த அதிரடிச் செயலையும் செய்யாது... “அவங்க வூட்டுப் பிரச்சனை” என மன்மோகன் தேர்தலுக்கு முன்பேயே சொல்லிவிட்டார். தமிழ்நாடும் ஒன்றும் பெரிதாகச் செய்து விடாது... புலிகள் இந்தியாவில் புகுந்துவிடுவர் என்னும் சாக்கில் ,உதவிப்பணிகளும் ஒன்றும் நடக்காது. நடக்க விடமாட்டார்கள்.

ஐ.நாவும் செஞ்சிலுவைச் சங்கமும் “நினைக்கமுடியாத பெரும் அழிவு” என அறிவித்தும் ஒன்றும் நடக்கிறதாகத் தெரியவில்லை. சசி தாரூர் போன்ற ஐ.நா அறிந்த வல்லுநர்களும் திருவனந்தபுரத்தில் தேர்தல் வெற்றிக் களிப்பில். தமிழர்களில் ஒருவர்கூடவா உலகளவில் பிற அமைப்புகள்/நாடுகளின் கவனத்தை இலங்கை அழிவின்மேல் திருப்ப முடியவில்லை?

எனக்கு இது என்னமோ கையாலாகத்தனமாகப் படவில்லை. அரைமனத்துடன் செயல்படும் தமிழக அரசு, மெத்தனப்போக்கில் ஒரு மத்திய அரசு என இந்தியா உறங்கிக்கொண்டிருக்க, உலக அளவில் சில நகரங்களில் மெழுகுவர்த்திப் பேரணிகளும், சில சன்னல்கள் உடைப்பதும் மட்டும்தான் புலம்பெயர்ந்த தமிழர்களின் போராட்டமுயற்சியாகத் தெரிகிறது.

கொஸோவா போரின்போது பி.பி.சியும், சி.என்.என் போன்ற தொலைக்காட்சிகளும் அடித்துக்கொண்டு புலம்பியது இப்போது எங்கே? வெள்ளை நிற மனிதர்கள் அடிபட்டால் அழும் இவை, நிறவெறியின் காமாலை கொண்டுதான் இலங்கையைக் காண்கின்றனவோ? உலக அளவில் மனிதாபிமானத்தைக் காட்டும் வகையில் போர்க்கால நடவடிக்கையாக , அப்பாவி மக்களைக் காக்கும் வகையில் எந்த மீட்புப்பணியினை, இலங்கையில் யார் செய்கிறார்கள்? அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் ஒரு கண்ணில் வெண்ணை, மற்றொரு கண்ணில் சுண்ணாம்பு போலும்...
தமிழர்களில் யாரும் அமெரிக்காவின் பெரிய வங்கிகளை நிர்வகிக்கவில்லை என்பது இதில் தெளிவு.


நாம் ரியாலிடி ஷோக்களும், சீரியல்களுமே தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என வரையறுத்து வாழ்ந்துகொண்டிருக்கும் வரை, இலங்கை எரியத்தான் போகிறது.

3 comments:

 1. மக்களின் துயரத்தை முன்னிறுத்தி போராட்டம் நடத்தினால் உலகம் பார்த்து இருக்கும். தீவிரவாதிகளை காப்பாற்ற புலிக்கொடி ஏந்தி போராடினால் எவன் வருவான்?

  ReplyDelete
 2. Anonymous6:53 AM

  ilangai eriyattum engalukku enna nanga seithuvittom appuram ponga rasa poi vera velai iruntha parunga appu enga annan anja nejan valga...........

  ReplyDelete
 3. நீங்கள் சொல்வது புரிகிறது. புலிகள் மட்டுமல்ல இங்கு அடிபடுவது. அப்பாவி மக்கள் சாவது அறிந்தும், கண்டும் காணாமல் இந்தியா இருப்பது மன்னிக்க முடியாத குற்றம். மனிதாபிமானம் குறித்துப் பேச நமக்கு யோக்கியதை இல்லை. நமது தேர்தல் முடிவுகள் நாம் இலங்கையை ஒரு பிரச்சனையாகவே கருதவில்லை எனவே காட்டுகிறது.

  ReplyDelete