அந்த சப்தத்திற்கு நிச்சயமாக யாரும் உறங்க முடியாது. நான் விழித்திருந்தது வியப்பில்லை.
தாரை தப்பட்டைகளுடன் ஆடியபடி ஆணும் பெண்ணுமாக ஒரு கூட்டம். பின்னால் ஒரு சிறிய மாட்டுவண்டி., மின்விளக்குகள் பச்சை, ஆரஞ்சு, வெள்ளை, நீலமென பொருத்தமேயில்லாதபடி கன்னாபின்னாவென சொருகப்பட்டு, ஜெனரேட்டர் ( அல்லது பாட்டரி?) மின்சாரத்தில் அடிக்கவரும் நிறக்கலவையாக மின்னியபடி மெதுவாக அக்கூட்டத்தின் பின்னால் வந்துகொண்டிருந்தது. சிறுவர்களும் சிறுமியர்களும் அதிலிருந்து நிரம்பி வழிந்துகொண்டிருந்தனர்.
கணபதி பூஜை வருவதற்கு பல மாதங்களிருக்கின்றனவே? இது என்ன புதுசா இப்போது? என நான் யோசித்துக்கொண்டிருக்கையில், கீழிருக்கும் அப்பார்ட்மெண்ட்டில் இருப்பவர் அருகே வந்தார். “ அட, இவங்களா?” என்றார். நான் விழித்தேன்.
”இவர்கள் பூர்வீகக் குடியினர். முன்பு தாணே மலைப்பகுதியிலிருந்து பால்கர் கடற்கரை வரையிலிருக்கும் பரப்பளவில் வசித்தவர்கள். வேலை தேடி வந்தவர்கள் ,இப்போ சேரிப்பகுதியில் குடியிருக்கிறார்கள். அவர்கள் பண்டிகைகள் வேறு காலங்களில் வரும். நம்ம பக்கமும் இருக்காங்களா? “ என வியந்தார். * வேண்டுமென்றேதான் அக்குடியினரின் பெயர் சொல்லாமல் விட்டிருக்கிறேன். கூகிளில் தேடினால் கிடைக்கும்.
நானும் அவர்களைப் பார்த்திருக்கிறேன். பால்கர் ரயில் நிலையத்தில், இளநீர், சப்போட்டா , நாவல் பழம் என எதாவது காட்டில் விளைவதை விற்றுக் கொண்டிருப்பார்கள். பெண்களின் உடை சற்று வித்தியாசமாக இருக்கும். பெரிதாகப் பொட்டு நெற்றியில்...
சிவாஜி காலத்திலேயே சுதந்திரமாக இருந்த இம்மலைவாழ் மக்கள், ஆங்கிலேயர் காலத்திலும் அதிகம் பாதிக்கப்படவில்லை . சுதந்திரத்தின் பின்னே, அரசியல் வாதிகளால் அவர்கள் இருப்பிடம் கொஞ்சம் கொஞ்சமாக சுரண்டப்பட்டு, வேலை தேடி வேறிடம் குடிபுக நேர்ந்தனர்.
காலப்போக்கில் மும்பை கலாச்சாரத்தில் இணையவும் முடியாமல், தங்கள் வாழ்வுமுறையை முற்றிலும் மாற்றவும் முடியாமல் திண்டாடி, சிலர் திருடுவதைத் தொழிலாகக் கொண்டனர். பலர் தொழிற்பட்டறைகளிலும், சிறு சிறு வேலைகளிலும் ஈடுபட, வெகு சிலரே படித்து முன்னேறினர். எங்கள் அலுவலகத்தில் பணியாளராக இருக்கும் இருவர் இந்தக் குடியினர். அதில் சந்திரா என்பவன் கொஞ்சம் சகஜமாகப் பேசுவான்.
மறுநாள் சந்திராவை அழைத்து “நேத்து என்ன விசேஷம்?” என்றேன்.முதலில் தயங்கினான்.
பின்னர் காபி குடிக்கப் போனபோது பேண்ட்டரியில் தனியாக இருப்பதை உறுதிசெய்தபின்னர் மெதுவாகப் பேசத்தொடங்கினான். “ அது எங்க கிராமங்கள்ல எங்க கடவுள்களுக்கு செய்யிற மரியாதை. கிராமங்களெல்லாம் காட்டுப்பக்கமா இருக்குமா? பூஜை முடிந்து திரும்பிப் போகும்போது , காட்டுல எதாச்சும் மிருகங்க தாக்கும். அதுக்காக நாங்க கூட்டமாக, சப்தம் எழுப்பியபடியே போவோம். இந்தப் பயலுவ இங்கயும் வந்து இதச் செய்யறானுக?” என தர்ம சங்கடமாகச் சிரித்தான். தனது இனத்தவர் ஏதோ தவறு செய்த குற்றவுணர்வு அவன் குரலில் ஒலித்தது.
“ கணபதி ஊர்வலம் போவது உனக்குச் சரியாகப் படுகிறதா?’ என்றேன். “என்னடா இப்படிக் கேணத்தனமாக் கேக்கிறான்?” என்ற கேள்வி தொக்கிநிற்க, வேகமாக “ ஆமா”
எனத் தலையாட்டினான். “ அது சரிதான் என்றால், சந்திரா, இதுவும் சரிதான்” . என்றேன். அவன் நம்பியதாகத் தெரியவில்லை. தலையை அப்படியும் இப்படியுமாக ஆட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
மாலையில், சிறிது வேலையிருந்ததால் 7 மணி வரை அலுவலகத்தில் இருந்தேன். ஒவ்வொருவராகக் கிளம்பிப் போய்க்கொண்டிருக்க, எனது வேலையும் ஒருமாதிரியாக முடிந்தது. கிளம்பிக்கொண்டிருக்கையில் சந்திரா என் கேபின் வாசலில் மெதுவாக வந்து நின்றான்.
“ஸாப். ஒரு நிமிடம்.” என்றான். உள்ளே அழைத்தேன். அவன் அதிகம் வந்து தொல்லை செய்வதில்லை. கடன் கேட்பதெல்லாம் சுத்தமாகக் கிடையாது.
“ நீங்கள் சொன்னதை யோசித்தேன். சரியென்றே பட்டது. கணபதிக்கு நாங்களும் ஆடிச்செல்வோம். பைசா பிரித்து பெரிதாகப் பந்தல் போடுவோம். பிரசாதம் வினியோகிப்போம். ஆனால்...” எனத் தயங்கினான். மெதுவாகத் தலைநிமிர்ந்தவன் , மெல்லிய குரலில் தொடர்ந்தான்.
“ எங்கள் பண்டிகையை நாங்கள் மட்டுமே கொண்டாடுவோம். வேறு சாதியினர் யாரும் வருவதில்லை. சாமி கும்புடுவதில்லை. ஏன் பிரசாதம் கூட வாங்கிக் கொள்வதில்லை. மலைசாதி மக்கள் நாங்கள் பாருங்கள்.”
நான் சற்று குலைந்துதான் போனேன். மும்பைச் சேரிகளிலும் வித்தியாசமுண்டா? பண்டிகைகள் , கிராமங்களில் வேண்டுமானால் சாதி பிரிவினால் வேறுபடலாம். இங்குமா?
”உங்க பண்டிகை பிரசாதம் இருக்கா ? இருந்தா எனக்கு நாளைக்குக் கொண்டுவா” என்றேன். அவன் தயங்கினான். “ இல்லை சார். அடுத்ததடவை கண்டிப்பாக் கொண்டு வர்றேன்” என்றான். பொய் சொல்கிறான் எனத் தோன்றியது. தயக்கம், மற்றும் எனது இந்தக் கேள்வி எனது அனுதாபம் மட்டுமே கொண்டதுயெனும் நினைப்புமாக இருக்கலாம். அவனது சிந்தனைக்கும் , கலாச்சாரத்திற்கும் எனது மதிப்பும் மரியாதையும் இருக்கவேண்டும் என்பதால் நான் மேலும் வற்புறுத்தவில்லை.
“ நிச்சயமாக் கொண்டுவா. ரொம்ப தித்திப்பா இருக்காதுல்ல? எனக்கு சர்க்கரைவியாதி உண்டு. தெரியுமில்லையா?” எனச் சிரித்தேன். அவனும் சிரித்தான். இருவர் சிரிப்பிலும் ஒரு செயற்கை இருந்தது என் காதுகளுக்குக் கேட்டது. எங்கள் இருவருக்கும் இடையே இருந்த மேசையின் நாலு அடி அகலம் என்னவோ மிகப் பெரியதாகப் பட்டது.
No comments:
Post a Comment