காருக்குள் ’தொம்’ என்றமர்ந்த
ரமேஷ் மிஷ்ராவின் முகம் இறுகியிருந்தது. ஓட்டுநர் ஒன்றுமே பேசாமல் வண்டியைக் கிளப்பினார்.
இந்தூர்- பீதம்ப்பூர் சாலையில் ஐ.ஐ.எம் வளாகம் மலைமேல் தெரியும் இடத்தைத் தாண்டியபோது,
ரமேஷின் போன் கிணுகிணுக்க, வண்டியை ஓரம் கட்டச் சொன்னான். இறங்கி சாலையோரம் முன்னும்
பின்னும் நடந்தவாறே, கைககளை ஆட்டி நாடகபாணியில் பேசத் தொடங்கினான்.
“என்ன ஆச்சு?” என்றேன் ஓட்டுநரிடம்.
ரமேஷிடம் ஐந்து வருடங்களாக வேலை பார்ப்பவர். கண்ணாடியில் என்னைப் பார்த்தவாறே “ தங்கச்சி
சமாச்சாரமா இருக்கும். ரெண்டாவது தடவையா கோர்ட்டுல இழுத்திருக்காங்க, சார் பாவம்” என்றார்.
“என்ன?” என்று நானும் கேட்கவில்லை. ரமேஷின் சொந்த விசயம்
மீண்டும் ‘தொம்’. பீதம்ப்பூரில்
வேலையை முடித்துவிட்டுத் திரும்பி வரும்வரும்போது ரமேஷ் செருமித் தொடங்கினான். ‘சாரி.இன்னிக்கு கொஞ்சம் அப்ஸெட்டா
இருக்கேன். ஒழுங்கா உங்களோட டிஸ்கஷன்ல கலந்துக்க
முடியலை”
“பரவாயில்லை” என்றேன். ‘ எனக்கு
இது பழகிப்போன ஒன்று. வழக்கமா , பத்துபேர் கேள்வியில உரிப்பாங்க. இன்னிக்கு அஞ்சு பேர்தானே?”
அவன் சிரிக்கவில்லை. “ என் தங்கச்சி...கட்னியில
இருக்கா. வீட்டுல பங்கு வேணும்னு கேட்டா.அவ கல்யாணத்துக்கே நாந்தான் நிறைய செலவழிச்சேன்.
ரெண்டு வருஷம் கழிச்சு வரதட்சிணை பத்தாதுன்னு... அதுவும் கொடுத்தேன். உஜ்ஜையின்ல அப்பா,
பரம்பரைச் சொத்தா இருக்கிற வீடு.. அதை எம்பேருக்குக் கொடுத்தாரு. இவ அத வித்து ஒரு
பாதி கொடு-ங்கறா. ரெண்டு வருஷம் முன்னாடி வக்கீல் நோட்டீஸ்..” ரமேஷின் வார்த்தைகளில்
வலி தெரிந்தது. கைக்குட்டையால் முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டான்.
“ மாப்பிள்ளை வீட்டுல தூண்டறாங்கன்னா,
அவரு கிட்ட தனியாப் பேசிப் பாக்கலாமே?” என்றேன் பொதுப்படையாக.
“ அவரு தங்கமான மனுசன். அவங்க
வீட்டுல இதெல்லாம் கேக்கலை. கேட்டதெல்லம் இவதான்”
அதிர்ச்சியாக இருந்தது. “ நிசமாவா?”
“அவளுக்கு ஒரு காம்ப்ளெக்ஸ். அழகா
இருப்பா. மாப்பிள்ளை கொஞ்சம் சுமார்தான். ஆனா மனசு தங்கம். ஒரு குறையில்ல. இவளுக்கு,
நாங்க அவளை குறைவா கட்டிக் கொடுத்துட்டேன்னு ஒரு கோவம். பழி வாங்கறாளாம்.. இடியட்.”
”அடுத்த வாரம் கட்னி போறேன். வக்கீலையும்
கூட்டிட்டுப் போணும். மும்பை மீட் வேற இருக்கு. லீவு...” அவர் வார்த்தைகள் யதார்த்த
நிலைக்குத் திரும்பியிருந்தன. சொத்து என்று வந்துவிட்டால் அண்ணன், தங்கை உறவும் இப்படி
ஆகிவிடுகிறது போலும்.
” நாளைக்கு ப்ரோக்ராம் கேன்ஸல்
சார். இப்பத்தான் கஸ்டமர் போன் பண்ணினாரு” இரவு எட்டு மணிக்கு அவனது அழைப்பு வந்தது.
“ஓ.. சரி. வேற கஸ்டமர் யாராவது..”
“எல்லாம் கேட்டுப் பாத்துட்டேன்.
ஒருத்தரும் கிடைக்கலை. காலேலேயே நீங்க கிளம்பிறலாம்”
ஒரு விமான சேவையும் சரியான விலையில்
கிடைக்கவில்லை. 12000, 14000 ரூபாய்.. கம்பெனியில் கொன்னே போடுவார்கள்.
அடுத்த நாள் இரவுதான் எனது விமானம்.
அதுவரை இந்தூரில் என்ன செய்ய? ரமேஷ் மீண்டும் அழைத்தான் “ ஒண்ணு பண்ணுங்க. காலேல மகாகாளேஷ்வர்
பாத்துட்டு வந்துடுங்க. உஜ்ஜயின் போக ஒன்றரை மணிநேரம், வர ஒன்றரை.. அங்க கோயில் ரெண்டு
மணி நேரம் வைங்க. சாயங்காலத்துக்குள்ள வந்துடலாம்.”
விக்ரமாதித்யனும் வேதாளமும் -கதைகளில்
அவனது தலைநகராக வருவது உஜ்ஜயின். மிகப் புராதனமான நகரம். அதில் இருக்கும் மஹாகாளேஷ்வரர்
ஜோதிர்லிங்கம் மிகவும் ப்ரசித்தி பெற்றது. இத்தனை தூரம் வந்தாகிவிட்டது. வேற வேலை ஒன்றுமில்லை.
போய்த்தான் பார்ப்பமே என்று காலையில் கிளம்பினேன்.
உஜ்ஜயின் போகும் பேருந்துகள் வெளியே
இருபதாம் நூற்றாண்டிலும் உள்ளே விக்ரம மன்னன் காலத்திலுமாக உறைந்திருந்தன. அழுக்கான இருக்கைகள். குழந்தைகள்
வாந்திஎடுத்து அரைகுறையாக கழுவியதின் கறைகள், சிவப்பாக வெற்றிலைத் துப்பல்களாகக் கறைகள்
என அங்கங்கே இருந்தன. சொளதாகர், மேனே ப்யார் கியா என்று 90களின் பாடல்கள்...
போலீஸ் வளாகமருகே வண்டி நின்றது.
ஆட்டோவிலிருந்து இறங்கி ஒரு பெண்ணை இருவர் தலைமாட்டிலும், கால்மாட்டிலுமாகத் தூக்கி
வர, பஸ்ஸில் தடுமாறி அவளை ஏற்றினர். அனைவரும் கிராமத்தினர். குப் என ஒரு அழுக்கு வாடை.
முனகிக் கொண்டே இருந்த அவளை ஒரு நீண்ட இருக்கையில் கிடத்த முயன்றனர்.
நெடுநெடுவென ஒல்லியாக இருந்த ஒருவன்,
மற்றவனை “ ஸீட்டை தூசி தட்டு.” என்றான். மற்றவன் அவள் காலை பிடித்தவாறே தூசி தட்ட முயன்று
தடுமாறினான். “ருக்கோ” என்றான் நெடியவன் உயர்ந்த குரலில். அவளைத் தூக்கித் தன் தோளில்
போட்டுக்கொண்டு “ இப்ப தட்டு” என்றான்.
கீழே நின்றிருந்தவர்களில் சிலர்
பரபரப்பானார்கள். “அவளை நீ தூக்காதே, பையா” என்றான் ஒருவன். உள்ளே ஏறி விரைந்து வந்தவாறே.
நெடியவன் , நில் என்பது போல் அவனை கை காட்டித் தடுத்தான். சீட்டில் அந்தப் பெண்ணை படுக்க
வைத்துவிட்டு எனது அருகில் , போய்வரும் பாதையின் மறுபுறம் இருந்த சீட்டில் அமர்ந்தான்.
விரைந்து
உள்ளே வந்தவன், என் பக்கத்தில் உள்ளே சன்னலோரம் அமர்ந்துகொண்டான். சிறிது நேரம் கழித்து
”எங்கிருந்து வருகிறீர்கள்? என்ன வேலை?” என்று கேட்டான். சொன்னேன். இன்னும் சில நிமிடங்கள்
கழித்து “ பாவம் பையா. அவருக்கு ஏற்கெனவே முதுகுத் தண்டில்
அடிபட்டிருக்கிறது. அதில் இவளை வேறு தூக்கினால்.” என்று புலம்பிவிட்டு சற்றே எட்டி,
என்னைத் தாண்டி “ பையா, முதுகு வலிக்கிறதா?” என்றான்.
“இல்ல.
வலி இல்லை” என்றான் நெடியவன். சமாளிக்கிறான் என்று முகத்திலேயே தெரிந்தது. வயல்களில்
வெயிலில் காய்ந்து, கீறல்கள் பல விழுந்த முகம். காய்த்துப் போன கைகள், கால்கள். அவனது
சட்டை மட்டும் அதீத வெள்ளையாக இருந்தது.
அருகில்
இருந்தவன் என் தோளைத் தொட்டான். “மும்பைல டாட்டா ஹாஸ்பிட்டலாமே? அங்க போனா கான்ஸர்
குணமாகுமா?”
“யாருக்கு
கான்ஸர்?” என்றேன் திகைத்து.
“அவளுக்குத்தான்.
வயித்துல கான்ஸராம். ரத்தமா கக்கறா. வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயிடுங்க-ன்னு சொல்லிட்டாங்க
அரசு மருத்துவமனையில. ரொம்பவே அவ நிலமை மோசமாயிருச்சு. அவரு புலம்பிகிட்டே இருக்காரு.
அதான் கேக்கறேன். மும்பை,தில்லின்னு போனா...”
அருகில்
மறுபுறம் நெடியவனைப் பார்த்தேன். முன் இருக்கையின்
மேற்கம்பியை இறுகப் பிடித்து கைகளில் முன்புறம் சாய்ந்திருந்தான். கண்கள் மூடியிருக்க
வாய் அகலமாகத் திறந்து, எச்சில் சொட்டியது. அதுகூட உணராமல் அவன் முதுகு குலுங்கியது.மவுனமாக
அழுகிறான் போலும்.
இரு நிமிடங்களில்
நிமிர்ந்தான். ஜன்னலோரம் இருந்தவனை அழைத்தான். “டாக்ஸி சொல்லியிருக்கியா? இறங்கிட்டு,
நேரா என் வீட்டுக்கு..”
“பையா,
டாக்ஸி நாளைக்குத்தான் வரும்னான். ஆட்டோ ?
இல்ல சுக்லாஜி-யின் ட்ராக்ட்டர்..”
“வேணாம்”
என்றான் நெடியவன். “ தூக்கிட்டு, வயல் வழியாப் போயிருவோம். சீக்கிரம் போயிறலாம்”
அவன்
தயங்கினான் “ பையா. உங்களால தூக்கமுடியுமா. இங்க சரி.. ரெண்டு கிலோமீட்டர் போணும்.
நானும் , அவனுமாத் தூக்கறோம்” பேசிக்கொண்டே வந்தவன் சட்டெனப் பதறினான்.”பையா, உங்க
சட்டைல ரத்தம்..முதுகுப் பக்கம்”
நெடியவன்
,சலனமின்றி சட்டையை பஸ்ஸினுள்ளேயே கழற்றினான். “ தீபாவளிக்கு அவ எடுத்துத் தந்தது.
அவ ரத்தம்தான். பரவாயில்ல.”
ஜன்னலோரம்
இருந்தவனைப் பார்த்து ஆறுதலாகச் சொன்னான் “கவலைப் படாதே. தூக்கிறுவேன். பாரமாகவே இருக்காது.
அவ என் தங்கச்சி”
உண்மையில் உறவுகளைப்போல சிக்கலான விஷயம் வேறில்லை. எனது உறவினர்களில் அண்ணன், தங்கை பாசத்துக்கு ஏகப்பட்ட எடுத்துக்காட்டுகள். உழுந்த வடையைப்பார்த்தால் அழும் அக்காவைப்பார்த்திருக்கிறீர்களா? கல்யாணம் கட்டி மதுரைக்கு வந்த அக்காவுக்கு எங்கு உழுந்தவடையைப்பார்த்தாலும் ஆசையாய் சாப்பிடும் தம்பியின் ஞாபகம் வந்துவிடும். இன்னொரு அண்ணன் தங்கையை பார்க்க வருவார். தங்கையுடன் வீட்டில் இரு நாட்கள் இருப்பார். புறப்படும் அன்று அண்ணனும், தங்கையும் வெளிச்சொல்லாமல், சத்தம் வெளியில் வராமல் அழுவார்கள்.
ReplyDeleteஇது ஒரு ரகம்.
அண்ணனிடம் பணம் கேட்பதற்கு மட்டும் ஃபோன் செய்யும் தங்கைகள் உண்டு. தங்கையை காரனமின்றி தன் மனைவி திட்ட அதைக்கேட்டுக்கொண்டிருக்கும் அண்ணன்மார் உண்டு. கிராமத்து தங்கைகள் ஓரளவு கொடுத்து வைத்தவர்கள். கிட்டத்தட்ட 80% தங்கைகளுக்கு பாசமுள்ள அண்ணன் கிடைத்து விடுகின்றனர். நகரத்தில் பிழைக்க ஓடிவந்தவனே பிழைக்க அல்லாடும்போது உறவுகளை ரொம்ப நெருங்கினால் எங்கே பணம் கேட்பார்களோ எனப்பயந்தே ரத்த உறவுகளிடம் கூட சொந்தம் கொண்டாடுவதில்லை.
கருப்பும், வெள்ளையும் சேர்ந்ததுதான் உலகம். பாசமும்கூட அதிருஷ்டமிருந்தால் மட்டுமே கிடைக்கும் அபூர்வ பொருள்.
அருமையான பதிவு. நீதியென ஏதும் சொல்லாமல் நிகழ்வை பகிர்ந்ததில் நமக்கான செய்தியை நாம் எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்.
"மகாகாளேஷ்வர் பாத்துட்டு வந்துடுங்க" இனி அவரை எங்கும் போய் பார்க்க வேண்டாம், அவர்தான் உங்கள் அருகிலேயே அமர்ந்திருக்கிராரே.
ReplyDelete