Monday, January 12, 2015

ராமாயண கதை கேட்ட கதை.


எங்கே படித்தேன் என்று நினைவில்லை. பொது நூலகத்தில் கால் வலிக்க புத்தகம் மேய்ந்த்தில், ஒரு மூலையில் நின்றவாறே, ஒரு முட்டியை மடித்து சுவற்றில் உள் பாதம் பதித்து நின்று படித்த்தாக இருக்கலாம். பல முறை , சுவற்றில் கால் தட அழுக்கு படிந்த்தாக , லைப்ர்ரியனிடம் திட்டு வாங்கியிருக்கிறேன்.
ஆனால் வாக்குகள் சிறுவயதில் பட்டென மனதில் பதிந்து போனதுண்மை.  வால்மீகி ராமாயணம், நடேச சாஸ்திரிகள்” என்று பார்த்த மாத்திரத்தில் உடனே தடி தடியாக அனைத்து தொகுதிகளையும் வாங்கி கட்டு கட்டாக பையில் வைத்த்தன்பின்னே அந்த காரணமும் தொக்கி நின்றது.
“ மூதியளா, வீட்டுள்ளாற ஓடாதீயலே. “ காளியப்பனின் அம்மா நான்காவது முறையாக்க் கத்தியபோது, குரல் கீச்சென்றாகி பிசிறடித்த்து. கோபம் தலைக்கேறும்போது குரல் ஆளுமை போகும். பின்னே அவரும் எத்தனை தடவைதான் எங்களுக்குச் சொல்வார்? வீட்டுக்குள்ளே கல்லா மண்ணா? விளையாடியதில், ஆட்டுக்கல் மேலேறி நின்று அவன் ஒரு தடவை அடிவாங்கியாகி விட்ட்து. கள்ளன் போலீஸ்ஸில் அவன் தங்கை , பாய்ந்து ஓடியதில், தொங்க விட்டிருந்த முட்டைக் கூடையில் தலை இடித்து , முட்டை ரெண்டு சிதறி.. அதை கழுவி விட்டு நிமிர்ந்தால், இப்போ நான் சகதியோடு ஜோராக முன்கட்டு அறையில் பாதம் பதித்திருக்கிறேன். அவளும் மனுஷிதானே?
“ஏலே, காளி, இங்கிட்டு வாடா ராசா. ஓடாத, ஓடாத” சுப்பம்மா கிழவி பேசியதாக நினைத்து நடுங்கிய குரலில் ஏதோ சொன்னாள். புரிந்து கொண்டு நானும் அவனும் அவள் அருகில் செல்ல, மெல்ல நடுங்கும் கையால் இருவரையும் தொட்டாள்.
“இந்தாரு, செல்லம்லா ராசா.. அவ என்னதாஞ்செய்வா? அங்? வெளிய போயி வெள்ளாடு..இல்லாட்டி இங்கன அடங்கி இரி… என்ன? டே, ஒம்பேரென்னா சொன்ன? சுவா?”
“சுதாகர், பாட்டி”
“என்ன பேரோ. வீட்டுல தாத்தா பேரு விடலையாங்கும்? ஒங்க சாதி பேருல்லயேடே.. திருமலை, தெய்வநாயவம்.. அதெல்லாம் விட்டுட்டு எங்கேந்து இப்படி செத்த பேரு வச்சாவ? சுவா.. என்னலே சொன்ன? சுவா.. பெறவு என்னா?”
“சுதாகர் பாட்டி” பொறுமையாக மீண்டும் சொன்னேன். இது இரண்டாவது நாளுள் ஆறாவது தடவையாக நடக்கும் உரையாடல். பாட்டிக்கு என் பெயர் மறந்து போகும். முக்குக் கடையில் புகையிலை, வெத்தலை, பாக்கு, மூணாவது என்று வாங்கி வரச்சொல்லும் போதும் பேரில் தடுமாறுவாள்.
“காளி, லே ராசா. இங்கன அடங்கியிரி. என்னா? ஒனக்கொரு கத சொல்லுதேன். “
“பாட்டி , எனக்கு கத?”
“ஒனக்கும் உண்டும்லே. நீ இங்கன இரி. “ கிளவி மெலிந்த கால்களை நீட்டினாள்.
“யாத்தா. உசிரே போனாப்புல வலிக்கே. லே, ரெண்டுபேரும் பாட்டிக்கு முட்டிலேர்ந்து கீழ வரை பிடிச்சு விடுதீயளா?  அங்.. அங்.. அப்படித்தான். முருவா”
காளியின் அம்மா கடுப்போடு எட்டிப் பார்த்தாள். தன் பையன் , கிழவிக்கு கால் பிடித்து விடுவதில் அவளுக்கு விருப்பமில்லை போலும்.
“லே, போயி படி. நாளைக்கு பரிச்ச. ஆத்தா, அவனை கால் பிடிக்க சொல்லாத. வள்ளியக் கூப்பிட்டு சொல்லுதேன்”
“க்கும். பெரிய ஆம்பிள சிங்கத்த பெத்துட்டா. அவன் அப்பன் உனக்கு கால் பிடிச்சு விடுதான்லா, அப்பம் அவன் பையன் , பாட்டிக்கு கால் பிடிச்சா என்னாங்கேன்”
”அது போட்டு, லே, உங்க கையெல்லாம் குஞ்சா இருக்கே. பஞ்சாட்டம் வெரலு. டவுசரு போட்டா பெரிய பயலுவளாயிருவீகளோ? இன்னிக்கும் காளிப் பயலுக்கு குஞ்ச பிடிச்சு மோளத் தெரியாது. அழுத்தி அமுக்குங்கலே. அங் அப்படி..”
காளிக்கு வெட்கத்தில் முகம் சிவந்த்து. நான் அன்று மாலையே நண்பர் கூட்ட்த்தில் சொல்ல, எல்லாரும்  அவனை “அச்சகச்சோ, ஆடகச்சோ, காளிக்கு குஞ்சு பிடிக்கத் தெரியாது” என்று அவன் பாட்டுடைத்தலைவனாக மாற்றுவோம் என்பது தெரியும்.
கிழவி இதெல்லாம் பொருட்படுத்தவில்லை. “ லே, ராமாயணம் கத சொல்லுதேன். கேளுங்க, ஏவுட்டி வள்ளீ, நீயும் இங்கிட்டு வா. கேளு”
“போ, பாட்டி, போன வாட்டி கரெண்டு போனப்போவே இந்த கத சொல்லிட்ட”
“எத்தன வாட்டி கேட்டா என்னாட்டீ? பொட்டப் பிள்ள பேச்சப் பாரு. ராமஞ்சாமி கதை சொன்னாலும் கேட்டாலும் சன்ம சாபம் போவுமுட்டீ. நேரா மோச்சம்தான்”
“அப்ப நீயே சொல்லி நீயே கேளு. மோச்சத்துக்குப் போவ” காளியின் அம்மா முணுமுணுத்தாள்.
“ராமன் சொல்லுதான். ” குகனய்யா, நீ என் தம்பியாக்கும். “ யாரைப் பாத்து?”
“குகன்” இந்த கடைசி வார்த்தை கேள்வியாகவும், நாங்கள் பதிலாக பேசுவதும் ஒரு சடங்கு.
”அங்… லே காளி இரி.. இவந்தான் நல்ல பிள்ள. சுவா, உனக்கு அளகா ராசகுமாரி கணக்கா ஒரு பொண்டாட்டி வருவா. யாரு கணக்கா?”
“ போங்க பாட்டி” என்றேன் சிவந்து. இதுவும் சாயங்காலம் மீட்டிங்கில் பரிகசிக்கப்படும். வி ஹேட் கர்ள்ஸ்…அது ஒரு வயது.
பாட்டி உடல் குலுங்க சிரித்தாள் “அதெனாடே? உனக்கு வெக்கமா வருது. பொட்டப்பிள்ளயா ? வெக்கப்படுதக்கு? சரி. நீ , நல்ல நிலம் நீச்சு, வயக்காடுன்னு இருப்ப. இந்த காளியப் பாரு, காட்டுலதாம்ல நீ இருப்ப, இப்படி ராமாயணம் கேக்கச்சே எழுந்து போறீல்லா? சுவா,  சேட்ட பண்ணாம இருக்கான் பாரு”
எனக்கு வியர்த்த்து. செய்த காரியம் பாட்டிக்கு தெரியுமா? மெல்ல எட்டி பாட்டியின் வலப்புறம் பார்த்தேன். அங்க தான் இருக்கு.
“புவயிலை அம்பது பைசாக்கா கொடுக்கான். நாடாரை என்னான்னு போய் கேக்கணும். இல்ல, சின்னப் பய வந்து கேக்கான்னு ஏமாத்துதானோ?” பாட்டி புகையிலையை கிள்ளி வெத்தலை இடிக்கும் கிண்ணியில் சேர்த்தாள்.
“ன்ங், நங்…”
எனது இதயத் துடிப்பு அதிகமானது.
“குகன் அழுதாரு. ராசா ராமா போவாதீய்யா. இங்க்ன கூடி இருமய்யா. நான் தேனு தாறன், தின மாவு தாறன். மீனு தாறன். யாத்தா நீ எடுத்துச் சொல்லாத்தா-ங்கான் சீதயப் பாத்து
கிழவியின் குரல் தீனமானது. சட்டென அழுதுவிடுவாள்.
“என்னாத்த சொல்லுவேன்? அன்பா ஒருத்தன் இருங்கான். அவ பொண்டாட்டி, மோச்சத்துக்குப் போ-ன்ங்காளே? ராமன இரின்னு சொல்லுதான் குகன். அவம் பொண்டாட்டி வேணாம்னா சொல்லியிருப்பா? கதையில இல்லயே ராசா?”
பாட்டி சேலைத்தலைப்பில் கண்ணைத் துடைத்துக் கொண்டே, இடித்த புகையிலையை வாயில் போட்டாள்.
நான் எழுந்து பறந்துவிட்டேன். இனி இருந்தால் தாளாது.
“என்னாதிது? கசக்கு? யாத்தா, யாரு இதுல பொட்டு வெடி போட்டிருக்கா? கந்தகம், விசம்லா? ஏல, பாடையில போறவனே, காளி, இங்குட்டு வா, சொல்லுதேன்”
காளி , நிலமை என்னவென்று புரிந்து கொண்டு மிரண்டு ஓடுமுன் அவன் அம்மா முன்னே வர,… டூ லேட்
“ராமாயணம் சொன்ன பாட்டி வாயில வெசமா வைக்கீய? வாங்கல, &*&#ய அருமாமணைல வச்சு அறுக்கேன். காடுதாம்லே உங்களுக்கு வாசம், பதினாலு வருசம் ராமன் கணக்கா”
அன்று காளி வீட்டை விட்டு ஓடி வந்தவன்தான் அதன்பின் நான் அங்கு போகவில்லை. பொட்டு வெடி , காளியினுடையது, இட்டது, நான். பட்டது அவன். ஒரு குற்ற உணர்வில் காளியைத் தவிர்த்தேன். நல்ல வேளை அவன் என் பள்ளியிலும் இல்லை, எங்கள் தெருவிலும் இல்லை.
வெகு நாட்கள் கனவில் ஒரு அடர்ந்த காட்டில் , நிர்வாணமாக நிறுத்தி வைக்கப்பட்டு, அருமாமணை ஒன்றை  , சுருக்கம் நிறைந்த கைகள் நடுங்கியவாறே நீட்டி வருவது போன்று காட்சிகள் வரும். அலறி எழுவேன். விபூதி மந்தரித்து, கையில் யானை முடி கட்டி, யானையின் வாயில் நீர் கொடுத்து, தலையில் பீய்ச்சி அடிக்க வைத்து… ஊர் பெயர்ந்த்தும், கிழவியும் காளியும் கனவிலிருந்தும் மறைந்து போனார்கள்.
இப்போதும் வனவாசம்தான். காங்க்ரீட் வன வாசம். “ஊரா இது? கட்டிடக் காடு” என்று முணுமுணுப்பவர்கள் ‘ சுத்த காட்டுப் ப்யல்கள்யா உங்கூர்ல” என்பவர்கள் நான் இருக்கும் மும்பை காடு என்பதை உணர்த்தியபடி இருந்தார்கள். பாட்டியின் வெற்றிலை இடிக்கும் கிண்ணத்தில் பொட்டு வெடி போட்ட்தற்கு, இது அதிகபட்ச தண்டனைதான்.
ஒரிஜினல் வால்மீகி  ராமாயணத் தமிழாக்கத்தின், பாலகாண்டம் எடுத்தபடி, ஜன்னல் அருகே காலை நீட்டினேன். வெளியே பொறுமையற்ற கார், பைக் ஹாரன்கள் அலறுகின்றன – காட்டு மிருகங்கள் பிளிறுவதைப் போல…
“’இந்த ராமாயண கதையை எவன் சொல்கிறானோ,எவன் கேட்கிறானோ, அவர்களெல்லாம் இம்மையில் சாபங்கள் நீங்கக் கடவர். மோட்சத்தை அடையக் கடவர்.”
மோட்சம் கூட வேண்டாம். வனவாசம் நீங்கினால் போதும்.
நீங்கும்.
ஸ்ரீ வால்மீகி ராமாயணம். (100 ஆண்டுகளுக்கு முன் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட்து)
தொகுப்பாசிரியர் -நடேச சாஸ்த்ரீகள். வருடம் 1900
புத்தகம் தொடர்புக்கு : திரு. எஸ். வெங்கிட ரமணன்.9894661259

No comments:

Post a Comment