Saturday, January 24, 2015

உப்புமா டிப்ளமஸி

ஆறு மணி. மங்கை இன்னும் எழுந்திருக்கவில்லை. ஃபில்ட்டரில் டிகாக்ஷன் இறக்கி , ஜம்மென்று ஒரு காபியோடு இன்றைய டி.என்.ஏயில் அரைகுறை உடையில் அலியா பட் பார்த்துக் கொண்டிருக்கும்போது , மங்கை தீனஸ்வரத்தில் கூப்பிடுவது போலிருந்தது. மகன் அபி, அவளிடம் குனிந்து கேட்டுவிட்டு விரைந்து வந்தான்.
“அம்மாவுக்கு தலைவலியாம். காலேலைக்கு சாப்பாட்டுக்கு என்ன பண்றதுன்னு கவலைப்படாதீங்க. நீங்க வேணா , உங்களுக்கு மட்டும்னு எதாவது பண்ணிக்கோங்கப்பா, நான் மாகீ பண்ணிக்கறேன்”
அவனது இந்த அனுசரணையான வார்த்தைகளுக்குப் பின்னே ஒரு அனுபவம் அடங்கியிருக்கிறது, நான் அறிவேன்.
“வேணாம்டா. நான், ரெண்டு பேருக்குமா ஓட்ஸ் கஞ்சி போட்டுடறேன். உனக்கு உப்பா, ஜீனியா?”
அவன் முகம் பீதியில் வெளிறியது. இது கூட்டுத் தற்கொலை.
ஓட்ஸ் என்றாலே ஒரு காத தூரம் ஓடுவான். இதுல நான் வேற கஞ்சி போட்டு...
“வேணாம்ப்பா. க்ளாஸிக் ரெஸ்டாரண்ட் திறந்திருப்பான். ரெண்டு ப்ளேட் இட்லி..போன் நம்பர்.” எல்லாம் முன்னெச்செரிக்கையாத்தான் இந்த காலத்துப் பிள்ளைகள் இருக்கறதுகள்.
”வேணாம். சட்னி ரொம்ப உரைக்கும். நான் வேற எதாவது பண்றேன்”
‘சரி’ என்றான் வேகமாக. ஓட்ஸ் கஞ்சி என்ற சித்ரவதைக்கு , இவன் பண்ற எதுவும் கிலெட்டின் போல வேகமாக இறங்கும்.
இட்லி மாவு இருந்தால் வேக வைக்கலாம். இன்று பார்த்து இட்லி மாவும் இல்லை.
ரைட்டு. நாமே இன்று நமது சமையல் போருக்கு களப்பலி.
பையன் மெதுவாக சமையலறையில் எட்டிப் பார்த்தான்.”மே ஐ ஹெல்ப் யூ? என்றான். விஷக் கலவை என்ன ஃபார்முலேஷன் என்று பார்க்க விரும்பினான் போலும்.
“உப்புமா! ” என்றேன்.
“ஓ. அது எதுல பண்ணுவாங்க. ரைஸ்?!” என்னை மாதிரியே இருக்கானே?
“ரவை வேணும். ப்ரிஜ்ஜுக்குள்ள இருக்கா பாரு.” அவன் ப்ரிஜ்ஜை நோண்ட, நான் அலமாரிகளைத் திறந்து தேடினேன்.
கம்பு மாவு, கேழ்வரகு மாவு என்று கையில் கிடைதததையெல்லாம் வெளியே எடுத்து வைத்தேன். எல்லாப் பாக்கெட்டுகளூம் ரப்பர்பேண்ட் போடப்பட்டு நடுவே நசுங்கி, இருபுறமும் விரை வீக்கம் வந்தது போல் வீங்கியிருந்தன.
”ரவை ! கிடைச்சாச்சு. என்ன செய்யணும்?”
“அங்க வைச்சிருக்கேன் பாரு, எல்லா மாவும்.. அது பக்கத்துல வை. எல்லாத்தையும் ஒரே வரிசைல வை, பார்ப்போம்”
“அப்பா, இன்னொரு மாவு பாக்கெட் , அலமாரி மேல இருக்கு. என்னன்னு தெரியலை”
“சரி எடு. என்ன எழுதியிருக்கு, படி” . மாவுகளை எடுத்து ஒரு வாணலியில் வறுக்கத் தொடங்கினேன்.
“தமிழ்ல எழுதியிருக்கு.. க..ர...னா...ம் போ....ட்..டீ”
“டேய். எத்தன வருஷமா தமிழ் வார்த்தை படிக்கறே. டி.வி சேனல்ல பாடறவங்க பேரு மட்டும் மடமடன்னு வாசிக்கத் தெரியுது? ஒழுங்காப்படி”
அந்த பாக்கெட்டிலிர்ந்து எடுத்த மாவை போட்டு வைத்திருந்த தட்டை எடுத்துக்கொண்டே அவனைத் திட்டினேன். இதையும் ராகி, பாஜ்ரா, ரவை மாவுகளோடு சேர்த்துவிட்டால், ஒரு சத்து மாவு உப்புமா ரெடி.
“ஹோல்டான், டாட். அது.. கோனப் போடி”
“மை காட்” அதிர்ந்து போனேன். “ டேய். அது கோலப்பொடி. அத யார்டா வெளிய மாவு பக்கமா வைச்சது?” யாத்தீ, ஒரு நிமிசம் தாமதமாயிருந்தா, அதுவும் என் புது வகை உப்புமாவில் சேர்ந்திருக்கும்.
”மேல இருந்தது. நீங்கதான சொன்னீங்க, எல்லா மாவையும் எடுன்னு”
ரைட்டு. பேசப்படாது இனிமே.
வாணலியில் எண்ணெய் புகை வர அஞ்சறைப் பெட்டியில் கையில் கிடைத்ததையெல்லாம் எறிந்தேன். கட முடாவென்று சப்தத்தோடு, எக்ஸாஸ்ட் ஹூடில் புகை மயம்.
எக்ஸாஸ்ட் ஹூட் ஃபேனின் வேகத்தைக் கூட்டினேன். எளவு, புகை போவேனா என்கிறது. எச்சரிக்கையாக எட்டிப் பார்த்தேன். நல்லவேளை, படுக்கையறையின் கதவை மூடியிருக்கிறேன். மங்கை எழுந்து கொண்டு திட்ட மாட்டாள்.
பொடி மிக்ஸைப் போட்டு, தண்ணீர் ஊற்றினால்...
இறுகிக்கொண்டு, ரைட்டு உப்புமா இப்படித்தான் வரும்.
நரகத்தில் க்ளக் க்ளக் என்று அங்குமிங்கும் எரிமலைக் குழம்பு கொதிப்பது போல, அங்குமிங்கும் குமிழித்து வெடித்தது. கலக்கக் கலக்க இறுகிக்கொண்டு கோந்து மாதிரி..
மூடி வைத்து விட்டேன்.
மங்கை எழுந்து வந்துவிட்டாள். “என்ன கலாட்டா.அப்பாவும் பையனும்? கத்தாம, ஒரு பாத்திரத்தை உருட்டாம இருக்க முடியாதா? தலைவலி பிளக்கறது”
பையன் ஒரு ப்ளேட்டில் அந்த கோந்து போன்றிருந்த , கருஞ்சிவப்பு பேஸ்ட்டை கரண்டியில் எடுக்கத் திணறினான். உதறினாலும் கரண்டியில் உயிரோடு கலந்த உறவாக ஒட்டிக்கொண்டிருக்கிறது சனியன்.
ஒருமாதிரியாக அதை தட்டில் போட்டுக்கொண்டு ஒரு வாய் போட்டிருப்பான்.
“என்னடா, ஒரு மாதிரி பாக்கறே? நன்னாயில்லையா?”- என் மனைவி.
“நல்லா இல்லையாடா?”- நான்.
அவன் இருவரையும் மாறி மாறிப்பார்த்தான். உண்மையா, அப்பாவின் மானமா?
“இன்னும் நல்லாயிருந்திருந்தா, சூப்பர் செஃப் அப்பா நீங்க”
“நான் கேட்டதுக்கு பதில் சொல்லு. நல்லாயிருக்கா இல்லையா? யெஸ் ஆர் நோ?”
அவன் சற்றே மவுனித்தான்.. “ பரவாயில்ல. இன்னும் உப்பு இருந்திருந்தா, இன்னும் வெந்திருந்தா, இன்னும் மிளகாய் கம்மியா போட்டிருந்தா, இன்னும் நல்லாயிருந்திருக்கும்”
மங்கை அந்தப் பக்கம் போனதும் அவனிடம் சொன்னேன்,
“வாழ்த்துக்கள்.மகனே, நீ திருமணமாவதற்கு தகுதி பெற்றுவிட்டாய்”

4 comments:

  1. ha ha..
    very nice..
    i had similar episode in my life too.
    comparison of hydrocoele was fabulous....

    ReplyDelete
    Replies
    1. Thanks Tamilselvan Cardio, as a doctor you could look at the hydrocoele comparison with humor. I got a few brickbats for that!

      Delete
  2. Anonymous1:37 AM

    Very nice from a day to day episode at homes

    ReplyDelete
  3. உப்புமா, நகைச்சுவை கொஞ்சமா!!! சிரிக்காமல் இருக்க முடியுமா!!! அருமை அருமை.

    ReplyDelete