Friday, February 06, 2015

மின்னூலும் மனப்பாங்கும்

கடல் முரடாகக் கோபமாக இருந்தது.
விமானம் கிளம்பி , ஜூஹூ கடற்கரையைத் தாண்டும்போது வெள்ளைக்கோடுகளாக கீழே அலைகள் அடுக்கடுக்காகத் தெரிந்தன. சிறு சோப்பு டப்பா சைஸில் கப்பல்கள். அலைகள் பெரிதாகத்தான் இருந்திருக்க வேண்டும்.
மெல்ல சாய்ந்து, கிண்டிலை எடுத்து உயிர்ப்பித்தேன். Selfish Gene - நாலாவது அத்தியாத்தில் இருக்கிறேன். பயணம் முடியுமுன் முடித்துவிடவேண்டும். சட்டென நினைவு வர, 6174ன் மின்னூலை தேர்ந்தெடுத்தேன். இதனை திருத்தவேண்டுமென்று நினைத்து இரண்டு மாதமாகிறது. அடுத்த சீட்டில் வைத்துவிட்டு, பென்ஸிலையும் பேப்பரையும் , லாப்டாப் பையிலிருந்து எடுக்கக் குனிந்தேன்.
“யூ கேன் ரீட் லோக்கல் ஸ்டஃப் இன் கிண்டில்?”
ஓர சீட்டில் இருந்தவர் எனது கிண்டிலை எடுத்து வியப்புடன் கேட்டார்.
என்னைப்போலவே சற்றே நரைத்த குறுந்தாடி ( சரி, எனக்கு நிறையவே நரைத்திருக்கிறது..போதுமா?). சுருட்டை முடி. கருப்பு கோட் அணிந்திருந்தார். முகத்தை வைத்து எந்த ஊர்க்காரர் என்று சொல்ல முடியவில்லை.
“இல்லை” என்றேன். “அமேசான் இன்னும் அனுமதிக்கவில்லை. ஆனால் நன்றாகவே தமிழ் தெரிகிறது. “
”அப்புறம் எப்படி இ புக் கிடைக்கிறது?” என்றவருக்கு விளக்கினேன்.
“’ஒ. உங்க புக்கா?” என்றவர் “ ஐ ஆம் அஸ்லம்” என்றார். மறுபடி பெயர் வைத்து ஊர் சொல்ல முடியாத நிலை.
டெல்லிக்காரராம். ஹாங்காங் போய் அங்கிருந்து லாஸ் ஏஞ்ஜெலஸ். நான் பீஜிங் போகவேண்டும்.
”தமிழ் புத்தகத்துக்கு அமேசான் போட்ட தடை உத்தரவு” என்றேன். தடை பற்றி மேலும் பேச்சு வளர்ந்தது.
“ஹாங்” என்உக்கு ஒரு எதையோ நினைத்தபடி. “ இப்போ உங்க மொழியில வந்த ஒரு புத்தகத்தை தடை பண்ணியிருக்காங்களாமே? அதுனோட இ புக் என் நண்பர் ஒருவரிடம் இருக்கிறது. வேணுமா? சொல்லுங்க”
“வேண்டாம்” என்றேன்.
“ஏன்?” என்றார். புருவத்தை உயர்த்தியபடி.. இவன் ஒருவேளை அந்த புத்தகத்தை எதிர்க்கும் கட்சியோ? என்பதுபோல ஒரு பார்வை.
“ தவிர்த்து விடுகிறேன். வேறு புத்தகம் என்றாலும், பணம் கொடுத்து வாங்கிக்கொள்கிறேன். டிவிடி பைரஸி போலவே புத்தகங்களும் பைரஸியில் பல கோடி நாசம் விளைவிக்கின்றன”
“ஓ” என்றார் சற்றே எகத்தாளமாக. “எனிவே, இந்த புத்தகம் கிடைக்காது. திருட்டுத்தனமாக ப்ரிண்ட் போட்டு ப்ளாட்பார்மில் விற்பார்கள். அல்லது பிடிஎஃப் , ஒரு டாரெண்ட் ஸைட்டில் கிடைக்கும். உங்கள் ஒருவரால் நிற்கப்போவதில்லை”
“ டெல்லியில் பல இடங்களில் பெண்களிடம் வன்புணர்வு , அதற்காக நானும் அப்படி திரிய முடியாது.”
சிரித்தார் “ என்னமோ நாங்க டெல்லியில காலேல முதல்வேலையா ரேப் பண்ணத்தன் கிளம்பறோம்னு மாதிரியில்ல சொல்றீங்க?”
நானும் சிரித்தேன். “மும்பைக் காரன் இல்ல. அப்படித்தான் டெல்லி பத்தி சொல்லுவோம். இது ஆரோக்கியமான தாக்குதல்கள்”
“ நீங்க என்னை மாதிரி புத்தகம் படிக்கறீங்க. சந்தோஷம். நிஜமாவே உங்களுக்கு அந்த புத்தகம் வேண்டாமா? “என்றார்.
“வேண்டாம். அது கிடைத்துக் கொண்டிருக்கும் போதே நான் வாங்கவில்லை. அது தடையும் செய்யப் படவில்லை. மார்க்கெட்டிலிருந்து எழுத்தாளரே எடுத்துக்கொண்டார். கருத்துச் சுதந்திரத்தைக் காப்பாற்ற ஒரு பிடிஃப் இலவசமாகப் படிக்கப்ப் போவதில்லை” என்றேன்.
“ஏன்?” என்றார் சற்றே இடது புறம் என்னோக்கிச் சாய்ந்தவாறே. விமானம் ஒரு வட்டமடித்து அரபிக்கடல் மீது தெற்கு நோக்கிப் பயணித்திருந்தது. இறக்கை பக்கம் சீட் என்பதால் இரைச்சல் அதிகமாயிருந்தது.
“பல வருடம் முன்பு Satanic verses என்று ஒன்று வந்தது. லஜ்ஜா என்று ஒன்று அதன்பின் இரண்டும் அரசால் தடைவிதிக்கப்பட்டன. இரண்டும் ப்ளாட்பாரத்தில் படு சீப்பாக விற்கப்பட்டன. அவற்றையும் வாங்கவில்லை. படிக்கவில்லை.”
“அதான் ஏன் ? என்கிறேன்” என்றார்.
”ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு வருத்தம் அளிக்கிறது என்று தெரியவந்தால், அவனுக்கு என்ன ப்ரச்சனை என்பதை அறிந்து கொள்ளும் குறுகுறுப்பு ,கீழ்த்தரமான ஆர்வம் மட்டுமே அப்புத்தகத்தைப் படிக்கத் தூண்டுமே தவிர அதிலிருக்கும் இலக்கியமோ, அதன் கதைக்களன், கதை சொல்லிய பாங்கு என்பதெல்லாம் தோன்றாது. இது அடிமட்ட உணர்வுக்கு விலை போகும் சமாச்சாரம்.”
”பிறருக்கு துன்பம் என்பது அவரவர் மனப்பாங்கு. வாசித்தல் என்பது ரொம்ப சப்ஜெக்டிவ்.. எனக்கு வருத்தமளிப்பது , உங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமலிருக்கலாம். இதையெல்லாம் தாண்டி அதனைப் படித்துவிட்டு உங்கள் கருத்தை பதிவு செய்வதுதான் சரியானது. நீங்கள் சொல்வதும் ஒரு வகை சாய்வு நிலைதான்”
“ஓ.கே” என்றேன் சற்றே சாய்ந்தவாறே “ ரோட்டில் போய்க்கொண்டிருக்கிறீர்கள். எதிரே ஒரு ஸ்கூட்டரில் ஒரு குடும்பம் போய்க்கொண்டிருக்கிறது. திடீரென்று ஸ்கூட்டர் விபத்துக்குள்ளாகிறது. அதில் இருந்த பெண் நிலைகுலைந்து விழுகிறாள். சேலை சற்றே உயரத் தூக்கிப் போய்விடுகிறது. சிராய்த்து, ரத்தம் வழிய அவர்கள் கிடக்கிறார்கள். சிலர் அப்பெண்ணின் சேலையைச் சரிசெய்ய முனைகிறார்கள். நிலைகுலைந்து கிடப்பவளை வேடிக்கை பார்ப்பவர்களை என்ன சொல்வீர்கள்?”
“சொல்ல என்ன இருக்கிறது. Bunch of uncivilized animals" என்றார் கோபத்தோடு. டெல்லிக்காரர்களிடம் இது ஒரு வசதி.எளிதில் கோபமூட்டி விடலாம்.
“ஒரு சமுதாயம் , ஒரு புத்தகத்தில் வரும் வார்த்தைகளால் அவமானமாக உணர்கிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. சேலையில் என்ன மறைத்திருக்கிறாள் என்று குறுகுறுப்பாகப் பார்ப்பதற்கும், அந்த புத்தகத்தில் அப்படி என்ன எழுதியிருக்கிறர்கள்? என்று படிக்க குறுகுறுப்பதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது, அஸ்லாம்?”
அவர் மவுனித்தார்.
தொடர்ந்தேன் “கீழே கிடக்கும் பெண்ணிற்கு உதவாவிட்டாலும், குறைந்த பட்சம் விகாரமாக பார்க்காமலாவது நாம் இருக்கலாம் இல்லையா? அதுதான் நான் செய்வது. நான் கருத்துச் சுதந்திரம் என்றோ, டெமாக்ரஸி என்றோ ஜல்லியடிக்கவில்லை. திருட்டுத்தனமாகப் படிக்கும் ஒரு கயவானித்தனத்தை நான் ஆதரிக்கவில்லை. அது ஸாட்டானிக் வெர்ஸசாக இருந்தாலும், லொஜ்ஜாவாக இருந்தாலும், மாதொரு பாகனாக இருந்தாலும் சரி. என் நிலைப்பாடு என்பது எனது கேரக்டரில் இருக்கிறது. “
முன்னே ஸ்க்ரீனில் அவர் எதையோ பார்த்துக்கொண்டிருந்தார். திடீரென்று “ இன்னும் ரொம்ப தூரம் போகணும். இல்ல?” என்றார்.
நான் ஜன்னலின் வழியே கீழே பார்த்தேன்.கடல் மிக அமைதியாக ஒரு நீலப் போர்வையை விரித்தது போல இருந்தது. அலைகள், பொங்குதல் எல்லாம் கரையில் மட்டும்தான். கொஞ்சம் உள்ளே போனால் எல்லாம் அமைதியாகி விடுகிறது.

No comments:

Post a Comment