Sunday, May 10, 2015

வரவேற்பறை வன்முறைகள்


”இது யாருன்னு தெரியுதா?
கேள்வியின் உள்ளர்த்தம் ‘உனக்குத் தெரியாது என்று சொல்’ என்று தாக்குவதை உணர்ந்து ‘ தெரியலையே’ என்றேன்.
‘அங்” என்றார் நமசிவாயம் மாமா, ஒரு திருப்திப் புன்னகையுடன்.

நமச்சிவாயம் மாமா, என் நண்பனின் தந்தை. அரசு ஊழியர். சொந்தமாக கடை இருந்தது. அதோடு லாரி சர்வீஸ் கம்பெனியில் பார்ட்னர். இரண்டாவது பிஸினஸ் இருப்பதைக் காட்டிக்கொள்ளக் கூடாது என்றெல்லாம் கவலைப்படாமல் தைரியமாக ஆபீஸ் முடிந்ததும் கடையில் போய் அமர்வார்.

நண்பன் வீட்டிற்குப் போனாலே கொஞ்சம் உதறும். “வாங்க தம்பி.புதுசா போட்டோ மாட்டியிருக்கு, எங்கன்னு சொல்லு பாப்பம்’
வரவேற்பரையில் நாற்புறமும் சுவற்றின் மேலே சட்டம் அடித்து அதில் வரிசையாக போட்டோக்கள் மாட்டப் பட்டிருக்கும். மாமா ஒரு கம்பை எடுத்துக் கொள்வார் “ இவன் மூத்தவன். ரெண்டு பிள்ளைகள்.ரெண்டும் பொண்ணு பாத்துக்க. மூத்தவ ரொம்ப சாது. ரெண்டாவது இருக்கே.. பிடாரி”

ஹி ஹி என்பேன் இதுக்கு சிரிக்கலாமா கூடாதா? என்பதெல்லாம் தெரியாது. எழவெடுத்த பயல் சீக்கிரம் வந்து தொலைக்க மாட்டான்.

“ரெண்டாவது பொண்ணு. கோலார் பக்கம் இருந்தா. மாப்பிள்ளைக்கு ஜோலி மாத்தம் இருந்துகிட்டே இருக்கும். இந்தியாவுலேயே நாலு பேர்தான் அவர் வேலையச் செய்ய முடியும்னா பாத்துகிடுங்க. இங்க ,அங்கன்னு கூட்டுகிட்டே இருப்பான். ரொம்ப உழைப்பாளி, மூளை அப்படி”  நமச்சிவாயம் மாமாவுக்கு வீட்டுப் பெருமை அடிப்பதற்கு அரைமணி நேரம் ஆகும்.

எல்லா போட்டோக்களிலேயும், ஆண்கள் வடிவேலு ரேஞ்சுக்கு முழித்து நிற்க, பெண்கள் நேரே பார்த்துக்கொண்டிருப்பார்கள். சித்ரா ஸ்டூடியோவில் பாண்ட்ஸ் பவுடர் அப்பி, அங்கேயே முடிச்சிக்கல் நிறைந்த சீப்பில் லேசாகத் தலைவாரி, அங்கிருந்த பழுப்பு கோட்டு போட்டு எடுத்த போட்டோக்கள். அனைவருக்கும் ஒரே மாதிரியான கோட்டு.ஸாரி,, ஒரே கோட்டு.

நண்பன் ஹாலிற்கு நமட்டுச் சிரிப்புடன் வரும்போது பெரும்பாலும் நாலாவது பெண்ணின் கதை ஓடிக்கொண்டிருக்கும். “ போன வருசம் மூணாவது ப்ரச்வத்துக்கு வந்துர்ந்தால்லா? ஏ, உனக்கு ஞாபகமே கிடையாதோடே?”
நான் பார்க்கும்போதெல்லாம் மூன்றாவது பிரசவம் என்றுதான் சொல்லுவார்கள். இப்படியே ஐந்து முறை பார்த்திருக்கிறேன், அந்த அக்காவை.

ஒரு வருசத்தில் அவர்கள் வீட்டில் யார் யார்  எங்கெங்கு இருக்க்கிறார்கள், எத்தனை குழந்தைகள் என்பது ஓரளவு மனப்பாடம் ஆகிவிட்டது . இனி நமச்சிவாயம் மாமா எனக்கு பாடம் எடுக்க முடியாது.

ஒரு வருடம் முன்பு அவர் வழக்கம் போல அவர் ஆரம்பிக்கும்ப்போது நானே முந்திக்கொண்டேன். “தெரியுமே, முருகானந்தம் அண்ணன் தில்லியிலதான இருக்காங்க? மூத்த பெண் எம்.பி.பி.எஸ் முத வருசம்”
அவர் வாயடைத்துப் போனதில் எனக்கு ஒரு குரூர திருப்தி. இனி நம நம வெனப் பிடுங்கி எடுக்கமாட்டார்.

இந்த நார்ஸிஸம் 70களில் போட்டோவில் தொடங்கி, இப்போது பேஸ்புக் ஆல்பங்களில் , கூகிள் ட்ரைவ் ஃபோல்டர்களை ஷேர் செய்வதில் நிற்கிறது. இணையத்தில் அடைத்துக் கிடப்பவை செய்திகள், புத்தகங்கள் என்று நினைத்தால் தவறு. மிகவும் அதிகமாக அடைத்துக் கிடப்பவை செல்ஃபிகளும், நான் போன இடத்துல எடுத்தது என்ற அளவிலான போட்டோக்களும்.

யாராவது ’காஷ்மீர் போயிட்டு வந்தேன்’என ஆர்வமாகச் சொன்னால் ஓட எத்தனிக்கிறேன். மொபைலை எடுத்து, நூறு போட்டோக்களையாவது காட்டுவார்கள். இளம் தாய்மார்கள் இருக்கும் வீட்டிலோ, புதிதாக பாட்டி தாத்தாவானவர்களையோ சந்திக்குமுன் எனது அப்பாய்ண்ட்மெண்ட்களை இரு மணி நேரம் தள்ளி வைத்துவிடுகிறேன். குழந்தை குப்புறம் படுத்து டயாப்பர் காட்டுவதிலிருந்து , கொட்டாவி விடுவது வரை என பலப் பல போட்டோக்கள். ”இது ஆஸ்பத்திரியில , பிறந்து ரெண்டு நிமிசத்துல எடுத்தது” என்று தொடங்குவார்கள் பாருங்கள்..

அமெரிக்கா, ஐரோப்பா சுற்றுலா என்று மற்றொரு பயங்கரம். ’கேசரி ட்ராவல்ஸ்ல  ஒரு பாக்கேஜ் கொடுத்தான். மவுண்ட் டிட்டிலிஸ் போயிருந்தேன்’ என்று தொடங்கினால், முக்காவாசி போட்டோக்கள் சிவப்பு கலர் கேபிள் கார், பனிக்கட்டிகள் , இவர்கள் போட்ட குல்லாக்கள் என நீளும். போனதுக்கு அடையாளமாக ஓரிரு போட்டோக்கள் நமக்குப் போறாதா? இது ஒரு நார்சிஸ வெளிப்பாடே.

பயப்பட வேண்டிய மற்றொரு இடம் புதிதாக திருமணம் ஆகியவர்களின் பெற்றோர்களின் வீடு. த்ண்ணீர் கொண்டு வருமுன் யானை தண்டிக்கு ஒரு ஆல்பத்தைக் கொண்டு வருவார்கள். “இது சங்கீத்ல எடுத்தது” என்று நமக்கு சம்பந்தமே இல்லாத ஒரு பழக்கத்தில் , பெண்ணின் கையில் ஆலமர வேர்கள் படர்ந்த மாதிரி நவீன் டிசைன்களில் மெஹந்தி ( மருதாணி என்று சொல்லக்கூடாது)யின் க்ளோஸப்பில் தொடங்கும் போட்டோக்கள், பெண்ணின் அமெரிக்கா ரிடர்ன் அத்தையின் பெண் ஒன்றும் பிடிக்காமல் உர் ரென்று மூஞ்சியை வைத்துக்கொண்டு ஜீன்ஸில் நிற்பதை எடுப்பதில் நீளும். (  India is very hot ye know. But, It is cool to be with cousins, but.. ya...  yaa)

இப்போது ந்ண்பன் வீட்டில் அனைவருக்கும் கலியாணம் ஆகிவிட்டது. பேத்திக்கும் போனமாதம் நிச்சயம் ஆகிவிட்டது. அப்பாடா, ஒரு ஆல்பமும் வெளிவராது என்ற நிம்மதியுடன் போனேன்.அப்போது நடந்த உரையாடல்தான் முதல் இரு வரிகளில் நீங்கள் படித்தீர்கள். கூர்ந்து பார்ப்பதாக பாசாங்கு செய்து விட்டு ”அத்தை வழியில இருக்கறாபுல ஜாடை இருக்கு. அத்தை தங்கச்சி மகளோ?”

மாமா ஒரு கணம் விழித்தார் “  டே, அது என் மூத்தா பொண்ணு. அத்த மாதிரி இருக்காங்கியே?”
வெலவெலத்துப் போனேன். ‘ஓ.பாத்ததில்லையா, அதான். எங்கிட்டு வச்சு எடுத்தீய? அமெரிக்காவா?”

“ஆமா. எப்படித் தெரியும்?”

“ இல்ல ஏதோ ஜூ ல நிக்கீங்க போல. பின்னல ஒரு கரடி நிக்கே?”

“அது... சம்பந்திடே. அவ மாமனாரு கொஞ்சம் வாட்ட சாட்டமா இருப்பாரு. க்ருப்பா ஸ்வெட்டர் போட்டிருக்காரா.. அதான்”

என்  கணிப்பில் மண்ணள்ளிப் போட...

பேச்சை மாற்ற முயன்றேன்.” வேற எங்கிட்டுப் போயிருந்தீய? நாலு மாசமா ஊர்ல இல்ல போலிருக்கே? அமெரிக்காலதானோ?”

“இல்லடே, டென்மார்க் போயிருந்தம். அங்கிட்டுருந்து நார்வே ஸ்வீடன்ன்னு போனோம்லா. ஏ, அந்த ஆல்பம் எடுத்து வா”

1 comment:

  1. “ இல்ல ஏதோ ஜூ ல நிக்கீங்க போல. பின்னல ஒரு கரடி நிக்கே?”

    “அது... சம்பந்திடே. அவ மாமனாரு கொஞ்சம் வாட்ட சாட்டமா இருப்பாரு. க்ருப்பா ஸ்வெட்டர் போட்டிருக்காரா.. அதான்”

    என் கணிப்பில் மண்ணள்ளிப் போட...

    இந்த வரிகளில் சிரித்து சிரித்து !!!! கண்களில் நீர் கசிய மனம் லேசாகிப்போனது.

    ReplyDelete