Saturday, May 23, 2015

காலங்காத்தாலே கம்பராமாயணம்


ஐந்தரைமணிக்கே எழுந்துவிட்டால் இப்படித்தான் எதாவது நோண்டிக்கொண்டிருக்கத் தோன்றும். கம்பராமாயணம் பாலகாண்டம், அயோத்தியா காண்டம் என்று டீப்பாயில் போட்டு வைத்திருந்தேன்.
“என்னப்பா இது?” தூக்கம் வழிய எழுந்து வந்த மகன் புத்தகங்களை எடுத்தான். “கம்ப ராமாயணம்” அவனே படித்து “ தூங்கலையா?” என்றான்.
“படிக்க ஆரம்பிச்சதும் தூக்கம் போயிடுத்துடா. ஒன்னு சொல்றேன் கேக்கறையா?”
“உம்”
“இப்படியெல்லாம் கேக்கப் படாது. அந்த ஐ பேடை அந்தப் பக்கம் வைச்சுட்டு கவனமாக் கேக்கணும்”
“சரி”
“ராமன் மிதிலையிலே சீதா ஸ்வயம்வரத்துக்குப் போறான். அங்க இருக்கற பொண்களெல்லாம் இவன் அந்த பெரிய வில்லை வளைக்கணுமே? இல்லைன்னா, சீதை இவனுக்கு கிடைக்காமப் போயிடுவாளே? இந்த போட்டியை இந்த சின்ன பயலுக்கு வைச்ச ஜனகன் கொடியவன் இல்லையா?” என்று திட்ட ஆரம்பிச்சாங்களாம்”
“ம்ம்ம்”
சுரத்தில்லாமல் குரல் வருவதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்தேன்
“அடுத்த பாட்டுல நாகம்னு ஒரு வார்த்தை வைச்சு விளையாடறான் பாத்துக்கோ. நாகம்னா மலை, பாம்பு, யானைன்னு எல்லாம் அர்த்தம் இருக்கு. அந்த பாட்டுல சொல்றான்.
பொன்னாகமும் நாகமும் நாண நடந்தான்” பொன் மலையின் கம்பீரமும், யானையின் நடையும் தோற்குமளவுக்கு ராமன் அந்த வில்லை பார்த்து நடந்தானாம்”
‘ம்ம்ம்”
“ஏய். ஒழுங்கா கேளு. ஒரு சிரிப்போடு அந்த வில்ல எடுக்கறான். அடுத்த பாட்டுல

தடுத்து இமையாமல் இருந்தவர் தாளின்
மடுத்து அதுநாண் நுதி வைத்தது நோக்கார்
கடுப்பினில் யாரும் அறிந்திலர் கையான்
எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார்”


-அப்படீங்கறான் கம்பன்.
சபையில இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் கூட, ராமன் அதை எடுத்ததையோ, அதன் நாணில் ஒரு பாதம் வைச்சு வளைச்சதையோ பாக்கலையாம். அத்தனை வேகத்துல அவன் அதை எடுத்து வளைக்கறான். அதுக்கப்புறம் வில் ‘படீல்’ன்னு உடைஞ்ச ஓசைதான் கேட்டாங்களாம்.”
“ஓ. அப்ப அந்த வில்லுல அம்பு எல்லாம் ராமன் வைக்கலையா?”
“இல்லடா. அவனெடுத்து ஒரு வளை வளைச்சாம்பாரு, ஒடைஞ்சிடுத்து”
ஏதோ சிந்தனையில இருந்தான் பயல். ஏதோ புரிஞ்சிருக்கும் போல.
“என்னடா? என்ன யோசனை?”
“இல்லப்பா. இந்த வில் எங்க இருந்து வந்தது?”
”ஏன்?”
“இல்ல இது Made in China வா இருக்கும்பா. பீஹார் நேபால் பக்கம்தானே? சீனாலேர்ந்து வந்திருக்கும். ஒரு தடவை வளைச்சதுக்கே உடைஞ்சதுன்னா...”
கம்ப ராமாயணம் இன்னும் டீப்பாயில் கிடக்கிறது.

No comments:

Post a Comment