Saturday, June 13, 2015

முதலில் வந்தது நரகமா?பூமியா?


"முதல்ல வந்தது நரகமா? பூமியா?” அபிஜீத் கேட்டான்.
கொஞ்சம் யோசித்தேன். தோசை சாப்பிட்டுக்கொண்டே சிந்திக்கக்கூடிய விசயமல்ல இது. ஆனால் க்ளாஸிக் ரெஸ்டாரண்ட்டில் தோசை சாப்பிடுவதற்கு மாறாக என்னவேணுமானாலும் செய்யலாம். ஒரு அனஸ்தீஷியா  வேண்டும் அதற்கு.
“நரகம்தாண்டா. பூமி வாழற மாதிரி வர்றதுக்கு முன்னாடி ஒரே நெருப்புக்காடா இருந்தது. கொஞ்சம் கொஞ்சமா அதுல நீர் உருவாகி, அதுல நைட்ரஜன், ஆக்ஸிஜன் ,கார்பன் கலவைகள் உருவாகி.. உயிரினம்னு  ஒன்னு வந்தப்புறமும், எல்லா இடத்துலயும் உயிர் வாழ்ந்துட முடியலை.  வாழறதுக்கு ஏத்த இடம் எதுவா இருக்கோ அங்க உயிர் பெருகியது. இது பூமியின் , உயிரினத்தின் சரித்திரம்”
பையனுக்கும் தோசைக்கு அனஸ்தீஷியா வேண்டியிருந்திருக்கிறது. கேணத்தனமான கேள்விகளையெல்லாம் பசங்கள் அப்பாக்களுக்கென்றே ஒதுக்கி வைப்பார்கள் போலிருக்கிறது. அம்மாவிடம் பேசுவதற்கென ”வேறு மொழி, வேறு சொற்றொடர்கள்.

டேய், நீ மேஜர் ஆயாச்சு. உன் ஸ்டேட் பாங்க் அக்கவுண்ட்ல மாத்தணும்.போயிட்டு வரியா?
“சரி” என்று செருப்பை மாட்டிக்கொண்டு கிளம்பியவன் அஞ்சு நிமிடத்தில் திரும்பி வந்தான்.
“ஒரே கூட்டம்ப்பா. பெரிய க்யூ. யார்கிட்ட கேக்கறதுன்னே தெரியலை. கூர்க்காகிட்ட கேட்டா, நீயெல்லாம் படிச்ச பையன் தானே? எழுதியிருக்கிற போர்டை வாசி”ன்னு சொல்றான்.
‘வாசிச்சியா?”
“அங்க போர்டே இல்ல. கவுண்ட்டர் நம்பர்,க்ரீன் சானல்.. அவ்வளவுதான். நம்ம பெரியப்பா மாதிரி டை கட்டிக்கொண்டு க்ரகஹக் மித்ரா- ந்னு ஒருத்தர் நின்னாரு. கேட்டா பதிலே சொல்லலை. கோவமா வந்தது. வந்துட்டேன்.”
பொறுமை இல்லாமல் வளர்கிறதுகளே? என்று ஒரு புலம்பல் தோன்றினாலும் அடக்கிக்கொண்டு அவனை அழைத்துக்கொண்டு நானும் போனேன்.

ப்ரதான்மந்த்ரி ஜன் கன மன என்று ஒரு சேவைப்பிரிவின் கீழும், இன்ஸூரன்ஸ்க்காகவும் பலர் முண்டியடித்துக்கொண்டு நின்றிருந்த இடத்தில் ஒரு வழியாக நீந்திச் சென்றால், ஒரு கத்தை படிவத்தை எடுத்துத் தந்தார் , முகத்தையே பாராமல் ஒருவர்.
“இத நிரப்பி, போட்டோ, பேன் கார்டு, பாஸ்போர்ட்டு காப்பி/ எம்.டி.என்.எல் பில் கொண்டுவாங்க. ரெண்டு வாரம் ஆகும். கூட்டம் பாத்தீங்கல்ல”
” எம்.டி.என்.எல் பில், எப்படி இவன் பேர்ல இருக்கும் சார்? என் பேர்ல இல்ல வீட்டுக்கு வருது?”
“அப்ப கஷ்டம். பையன் பேர்ல எதாச்சும் ரெஸிடென்ஸ்  ப்ரூஃப் கொண்டு வாங்க”
“அதான் பாஸ்போர்ட் காப்பி இருக்கே?”
“ம்ம்ம். அது போதாதுன்னு நினைக்கறேன். ரெண்டாம் கவுண்ட்டர்க்குப் பின்னாடி  இருக்கற கேபின்ல ஒரு அம்மா இருப்பாங்க. அவங்ககிட்ட கேளுங்க”
அந்த கேபினில் ஒரு பாச்சாய்- கூட நான் பார்க்கவில்லை. வெகுநேரம் காத்திருந்து பின் கிளம்ப நினைத்தபோது அந்தம்மா வந்தார்.
“ பாஸ்போர்ட் காப்பி போதும். உங்க பேர்ல எம்.டி.என்.எல் பில், எலக்ட்ரிக் பில் கொண்டு வாங்க.”

“ரூல் என்ன சொல்கிறது?’ என்று கேட்க நினைத்து அடக்கிக்கொண்டேன். அது என் தாத்தாவின் எஸ்.எஸ்.எல்.ஸி சர்ட்டிபிகேட் கேட்டாலும் கேட்கும். இது எஸ்.பி.ஐ.
அடுத்த வாரம் பையன் போனான்.. போட்டோ காப்பி ஒழுங்காக இல்லை என்று திருப்பி அனுப்பினார்கள். ஒருவழியாக அதையெல்லாம் தாண்டி படிவத்தைக் கொடுத்து இருவாரம் கழிந்து மீண்டும் வங்கிக்குப்போனேன்.
“ அக்கவுண்ட் மேஜர் ஆயிருச்சு. ஆனா ரொம்ப நாள் பயன்படுத்தலை பாருங்க. இன் ஆக்டிவ் ல இருக்கு. நூறு ரூவாய் எடுத்துப் போடுங்க. ஆக்டிவ் ஆயிரும்”
“ஆனா, இவனுக்கு ஏ.டி.எம் கார்டு, இண்டெர்நெட் வசதி எதுவுமே தரலை நீங்க. கேட்டப்போ, மைனர் அக்கவுண்ட்டுக்கு இதெல்லாம் கிடையாதுன்னீங்க. ஹெச்.டி.எஃப் .ஸி பேங்க்ல என் அக்கவுண்ட்டோட இணைச்சுட்டு.கொடுத்தாங்க. ”
“அவனுக ப்ரைவேட் சார். கவெர்மெண்ட்டுன்னா ரூல்ஸ் இருக்கு. நாங்க நியமப்படி போறவங்க. சரி, வித்ட்ராவல் படிவம் நிரப்பி நூறு ரூவா எடுங்க”
ஏடி.எம் கார்டு, இண்டெர்நெட் எல்லாம் புதிய அக்கவுண்ட்டில் வேணுமென்று எழுதியிருந்தாலும் அவை வரவேயில்லை. மீண்டும் படிவங்கள்..
வித்ட்ராவல் படிவம் எடுத்தபடி மகன் வரிசையில் நின்றபொழுது “ இன்னும் உன் அக்கவுண்ட் மேஜர் ஆகலை. உங்கப்பா கார்டியன்ன்னு இருக்கு. நீ எடுக்க முடியாது” என்று திருப்பி அனுப்பினார்கள்.
வெளியே வந்து, கோபத்தில், க்யூவில் நின்ற அயர்ச்சியில் “ இந்த வங்கியே வேணாம்ப்பா. “ என்றான்.
அடுத்த நாள் நான் போனேன். அதே பெரிய வரிசை, அதே நெரிசல். “ அடடா. இன்னிக்கு உங்க பையன் அக்கவுண்ட் மேஜர்னு வந்திருச்சு. அவன் தான் வந்து எடுக்கணும்.”
“விளையாடறீங்களா? நேத்திக்கு அவனை அனுப்பிச்சீங்க”
“அது நேத்திக்கு. இது இன்னிக்கு. “
“சரி, ஒரு அலெர்ட் மெசேஜ் அனுப்பிருக்கலாமே? வேண்டாத க்ரெடிட் கார்டுக்கெல்லாம் குப்பை மெஸேஜ் வருது?”
“அது வேற டிபார்ட்மெண்ட் சார். ஸாரி. அக்கவுண்ட் ஆக்டிவேட் ஆகாது. அவன் வந்தாகணும்”
“அவன் ஊருக்குப் போயிருக்கான். ஒரு வாரமாகும்”
“நோ ப்ராப்ளம்” என்றார் கூலாக.” வந்து செய்யட்டும். ஒரு மாசமாயாச்சு இன்னும் ஒரு வாரம் தானே? அல்லது அவனை ஒரு லெட்டர் எழுதி, மேனஜருக்கு அனுப்பச்சொல்லுங்க. ஆக்‌ஷன் எடுக்கலாம்”
”கோர் பேங்க்க்கிங் வச்சிருக்கீங்க. அவன் அந்த ஊர்ல கொடுத்தா செல்லாதா?”
“செல்லாது. இங்க வரணும்” எனது வித்ட்ராவல் படிவம் கிழிபட்டது.

இரு வாரத்தில் ஹெச்.டி.எஃ.ஸி வங்கியிலிருந்து அவனுக்கு ஒரு கடிதம் “ ஐயன்மீர், நீங்கள் இப்போது 18 அகவை முடிந்து வாலிபராகிவிட்ட படியாலே, வங்கி, உங்கள் சேமிப்புக்கணக்கை மேஜர் என்ற தகுதிக்கு உயர்த்துகிறது. நீங்கள் ஒரு முறை எங்கள் வங்கிக்குடிலிற்குக் திருப்பாதம் பதித்து, திருக்கையாலே முத்திரை பதிக்க வேணுமாய் ப்ரார்த்திக்க்கொள்கிறேன். வாசக தோஷஹ, க்‌ஷந்தவ்யஹ” என்ற படிக்கு ஒரு ஆங்கில கடிதம். அவன் பெயருக்கு ஒரு கடிதம் என்பதில் டியர் ஸர் என்று அழைத்ததில் பெருமை பொங்க உடனே போனான். போனோம்.
“அபிஜீத்” என்றார் வங்கி அதிகாரி. குரியாக்கோஸோ, ஜோஸ் ஜோர்ஜோ எதோவொரு கோட்டயம் பக்கத்துப் பெயர்.
“ஸிம்ப்ளி ஒரு சைன் இடு” என்றார். பையன் ஒரு படிவத்தில் ஒரு ’கோர்னேர்’ல் கையெழுத்திட்டு நிமிர்ந்த போது ,
 PAN card கோப்பி ?” என்றார்.
“அடடா, ஜெராக்ஸ் எடுக்கலையே? ஒரிஜினல்தான் இருக்கு”
“நோ ப்ரோப்லம். ” என்றவர் ஒரு நகல் எடுத்து வந்தார்.
“போட்டோ ?”
“அட. அதுவும் கொண்டு வரலை. அதான் ஏற்கனவே இருக்கிற அக்கவுண்ட் தானேன்னு...”
“ லெட்டர்ல லிஸ்ட் கொடுத்திருக்கோம். பாக்கலை போலிருக்கு. பரவாயில்ல. போட்டோவோட ஸ்கேன் ஒன்று என் இமெயிலில் அனுப்பிருப்பா”
பையன் வேகமாகத் தலையாட்டினான். இது ஒன்னாம்கிளாஸ் சமாச்சாரம், இக்கால இளைஞர்களுக்கு.
“எப்படி அன்பா பேசறாங்க இல்ல? “ என்றான் வெளியே வந்தபோது.
“உன் அக்கவுண்ட்ல பைசா இருக்கற வரை அன்பாத்தான் பேசுவாங்க, நடத்துவாங்க. இது தனியார் வங்கிடா”
“இப்படி நடத்துவாங்கன்னா, எவ்வளவு பைசா வேணும்னாலும் போடலாம்ப்பா”

நடந்து வரும்போது கேட்டான் “ அப்பா,  ஸ்டேட் பாங்க் எத்தனை வருஷமா இருக்கு?”
”ரொம்ப புராதனமானதுடா அது. இம்ப்பீரியல் வங்கின்னு ஆங்கிலேயர் காலத்துல இருந்தது. அதுதான் இப்ப ஸ்டேட் பாங்க். “
” ஹெச்.டி.எஃப் ஸி?”

“ என்ன.. பதினைஞ்சு , இருவது வருஷமிருக்கும்.”

சில நிமிட மவுனத்திற்குப் பின் சொன்னான்” அப்பா, நீ சொன்னது சரிதான். நரகம் முதல்ல வந்திருக்கு. அப்புறம்தான் வாழற பூமி வந்திருக்கு”

உயிர்கள் , தங்களுக்கு சாதகமான பூமிப்பகுதியில் பெருகி வளர்கின்றன. இயற்கை மட்டும் உயிரினங்களைத் தேர்வு செய்வதில்லை. உயிரினங்களும் தங்கள் இயற்கையைச் சூழலைத் தேர்வு செய்கின்றன.

No comments:

Post a Comment