Tuesday, August 11, 2015

அப்துல் ஹமீதும் , அமராவதி ரெஸ்டாரண்ட்டும்

”அமராவதி சாப்பாட்டுக்கடை முன்னாலேயே இருக்கிறது பாருங்கள்” என்றார் யூனிஃபார்மில் இருந்த மனிதர். “உங்கள் நாட்டு சாப்பாடு எல்லாம் அங்கு கிடைக்குமென்று நினைக்கிறென்.
கொழும்பு-வில் நண்பர் உடன் வராத மாலைப் பொழுது ஒன்றில் கால்லே வீதியில் நடந்தபோது, பசியெடுக்க, ஒருவரைக்கேட்ட போது கிடைத்த பதிலில் , வேறொன்றும் யோசிக்காமல் அமராவதியில் நுழைந்தேன்.

அதென்னமோ இந்திய ரெஸ்டாரண்ட் என்றாலே முட்டாக்கு போட்ட ராஜஸ்தானி பெண்களும், தலைப்பாகை சுருட்டி வைத்து, மேல்நோக்கி வளைந்த மீசையுடனான முறைத்து நிற்கும் ஆண்களுமான ஓவியங்கள்தாம் சுவற்றில் மாட்டியிருக்க வேண்டும் என விதி இருக்கிறது போலும். கொத்து பரோட்டா என எதோ ஒன்றை ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தபோது, மூன்று பெண்கள் இரு ஆண்கள் என ஐந்து பேர் நுழைந்தனர்.

அவர்கள் அனைவரும் இருக்க இடம் இல்லாத நிலையில் சுற்றுமுற்றும் பார்த்த ஒரு சுருட்டை முடிக்காரர் , அர்த்தத்துடன் என்னைப் பார்க்க, எழுந்து அடுத்த டேபிளில் அமர்ந்து கொண்டேன். ஆறு பேர் அமரக்கூடிய மேசையின் ஓரத்தில் நான் ஒருவன் மட்டும் இருந்தது சரியில்லைதான்.

“ நன்றி” என்றார் புன்னகைத்து. அவருடன் இருந்த மற்றொருவர் மிகவும் பருமனாக இருந்தார். அவர் கால்களை அகட்டி, கைகளை பக்கவாட்டில் வீசி, மூச்சுத் திணறி நடப்பது போலிருந்தது. தொப்பென ஒரு சீட்டில் அமர்ந்தவர், பெருகும் வியர்வையைத் துடைத்தவண்ணம் இருந்தார்.

வாழ்வில் இத்தனை மோசமான பரோட்டாவை நான் தின்றதே இல்லை. வேண்டா வெறுப்பாக பில்லை கேட்டபோது, “ நான் கட்டிட்டேன்” என்றார் சுருட்டை முடிக்காரர். “ எங்களது மாலைப்பொழுது இனிமையாகக் கழிய உதவினீர்கள். நன்றி. ஸோ,இட்ஸ் ஆன் மி”

“இது அதிகம்” என்றேன். “நான் ஒரு தியாகமும் செய்துவிடவில்லை. ஒரு அடி தள்ளி அமர்ந்தேன் . அவ்வளவுதான். பைசாவை வாங்கிக்கோங்க”

அவர் முதலில் மறுத்தார். பருமனான நண்பர் எழுந்து வர, அப்பெண்கள் சீரியசாக ஏதோ உரையாடிக்கொண்டிருந்தனர். “ வாங்க வெளிய போய் கொஞ்சம் நடந்துட்டு வரலாம். எனக்கு கோக் குடிக்கோணும்” என்றார் பருமனானவர். மூன்று பேரும் வெளியே வந்தோம்.
சுருட்டை முடிக்காரர்” என் பெயர் சிவா” என்றார். பருமனாக இருந்தவர் ஒன்றுமே சொல்லாமல் ரோட்டைப் பார்த்தபடி, தனக்குள்ளோ, சிவா மட்டுமே கேட்கும்படியோ எதோ பேசிக்கொண்டே வந்தார்.

“ இலங்கைக்கு இதுதான் முதல் முறையா ?”

“ஆம். ஆனா பல்லாண்டுகாலமாக இலங்கை பரியச்சம் உண்டு. ரூபவாஹினியும், அதன் முன்னாலேயே ரேடீயோ சிலோனும் பழக்கப்பட்டவை. “

“அட, ரேடியோ சிலோன்... தமிழ்ச்சேவை கேட்டிருப்பீங்க”

“குறிப்பா தமிழ்ச்சேவை இரண்டு. அப்துல் ஹமீது, ராஜா.. இவர்கள் குரல்தான் தமிழ் ரேடியோ குரல்களாக நான்கேட்டு வளர்ந்தது. அதுவும் அப்துல் ஹமீது..”

குண்டு நண்பர் எங்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டே வந்தார். ஒரு முறை கூட பேசவில்லை.
”அவர் சொன்ன வரிகள் என எதாவது நினைவிருக்கா” என்றார் சிவா, சிரித்தபடியே.
“ஏன் இல்லாமல்?” என்றேன் புன்னகைத்து “ இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், தமிழ்ச்சேவை இரண்டு. நேரம் டிங். டிங்... ஐந்து மணி முப்பத்தைந்து நிமிடம். பற்களை வெண்மையாக வைத்திருக்க கோபால் பற்பொடி பாவியுங்கள்”

சிவா கடகடவெனச் சிரித்தார்.

“இவர் சொன்னதைக் கேளுங்க” என்றார் குண்டு நண்பரை அருகில் அழைத்தவாறே . “மீண்டும் ஒரு முறை சொல்லுங்க. ப்ளீஸ்”

சொன்னேன். சிவா வாய்விட்டு சிரித்தார். குண்டு நண்பரின் உடல் குலுங்கியது. கண்களை மூடியப்டி, அவர் சிரித்தார். கரிய முகத்தில் வெண்மையாக வரிசையான பற்கள் பளீரென மின்ன, குலுங்கிக் குலுங்கி சிரிக்க, அவர் மூச்சு திணறியது.

‘ மெல்ல மெல்ல “ என்றார் சிவா, அவர் தோளில் தட்டியபடி.

அவர் சிரிப்பதை நிறுத்தாமல், கண்ணீர் வழிய வழிய என்னைத் தோளில் தட்டினார்.. எனக்கு தர்மசங்கடமாகிவிட்டது. சற்று பயந்துபோனேன். இந்த மனுசனுக்கு எதாவது ஆகித் தொலைத்தால்.?
மூன்று பெண்களும் ரெஸ்டாரண்ட்டில் இருந்து வெளி வருவதைப் பார்த்ததும் நிம்மதியானேன்.

சிவா அவர்களையும் அழைத்து “ இவர் இப்ப ஒரு விளம்பரம் சொல்லிக்காட்டினார். பழைய விளம்பரம். இன்னொரு முறை சொல்லுங்கள்” என்றார். குண்டு மனிதர் வேண்டாம் என்பது போலக் கையசைத்தார். சிரிப்பதும், உடல் குலுங்குவதும், கண்களிலிருந்து நீர் வழிவதும் நிற்கவேயில்லை. திணறித் திணறி, மீண்டும் வேண்டாமென்றார். பிறகு கை குலுக்கிவிட்டு , பேசாமல் முன்னே நடந்தார். பெண்கள் அவருடன் நடக்க, பத்து அடி தூரம் அவர்களுடன் நடந்து போன சிவா , திரும்பி வந்தார்.

“மன்னிக்கவேண்டும். ஆனால் அவர் உண்மையில் சிரிக்கவில்லை” என்றார்.

“தெரியும் “ என்றேன்.

கால்லே வீதியில் புதிதாகப் பளபளத்த பலகையில் செல்ல முத்து அவெனியூ என்று நடுவே எழுதியிருந்தது. குறுகிய சந்தினுள் " செல்லமுத்து ஒழுங்கை” என்று பழைய பலகை தெரிந்தது.

1 comment:

  1. ஒரு சின்ன செய்தியில் மனதைக் கனக்கவைக்க முடியுமா?

    ReplyDelete