Monday, May 16, 2016

சகாய மேரி டீச்சர்

கடந்த ஞாயிறு காலை ஜெபா போன் செய்தார் “ ஏ, ஒண்ட்ட ஒன்னு சொல்லணுமே? மூணு மணி வாக்குல துங்கா ஓட்டலுக்கு வாரியா? ” என்றார்.  ஜெபா ஒரு பேங்க்கில் மேனேஜர்.  என்றோ அவர் வங்கியில் செல்லப்போக, முதல் நாளே “டே, நீ தூத்துக்குடிக்காரனா? நம்மூர் பக்கம்லா?” என்று உரிமையாக தோளில் தட்டினார்.

துங்கா ஓட்டல் வெறிச்சோடியிருந்தது. கோடையில் பெரும்பாலும் மக்கள் மதியம் வருவதில்லைபோலும். ஜெபா வியர்வை பெருக நாற்காலியில்  மல்லாந்திருந்தார். அவர் அருகே மற்றொருவர் தொந்தியைத் தடவியபடி அமர்ந்திருந்தார். “ இவன் ஜெரால்டு. நவிமும்பைலதான் இருக்கான். ” பரஸ்பர அறிமுகத்தின் பின் உள்ளே சென்று ஏஸியில் அமர்ந்துகொண்டோம்.

“எதுக்கு கூப்பிட்டேம்னா.. ஊருக்குப் போயிருந்தேம் பாத்துக்க. இந்த கிறுக்கனும் வந்திருந்தான். ஊர்ல ரெண்டுநாள்ல போரடிச்சிருச்சி. பேஸ்புக்குல பாக்கேன்.. காலேஜ் வாத்தியார் பத்தி ஒன்னோட பதிவு இருந்திச்சி. டக்-க்குனு தோணிச்சி பாத்துக்க. ப்ரெண்டுக்கெல்லாம் போன் பண்ணி எங்க சகாய மேரி டீச்சரை பாக்கலாம்னேன்.”

ஜெரால்டு “ சகாய மேரி டீச்சர் எங்க கிராமத்துல மிடில் ஸ்கூல் டீச்சர். நாங்கெல்லாம் அவங்க கிட்ட படிச்சவங்க” என்றார் குறுக்கிட்டு.

“டீச்சர் இப்ப தூத்துக்குடில இருக்காங்கன்னு கேள்விப்பட்டம். ஊர்ல கேட்டு எப்படியோ அவங்க மொபைல் நம்பர் வாங்கிட்டேன். அவங்க ஸ்டூடண்டு ஆறு பேர் போறதா இருந்தது. கடைசில நாலு பேரு போனோம். ஒரு இன்னோவா எடுத்துட்டு தூத்துக்குடி போனம்.” இஞ்சி தூக்கலாக இருந்த டீயை உறிஞ்சினார்.

“நானு, இவன் -ஜெரால்டு, ப்ரின்ஸு . ஜோ குடும்பம் வைஃப், சின்ன பிள்ளை மட்டும். அவன் கடையில என்னமோ பாக்கணும், தனியா வர்றேன்னுட்டான்.”
மசாலா டீ கமகமவென வந்தது.
ஜெபா ஒரு மயக்க நிலையில் நடந்ததை நினவு கூர்ந்தார்.
*************************************
“காலேல பதினோரு மணிக்குப்போயிட்டோம். . ஒரு சின்ன இருட்டடைந்த ஹால், ஒரு பெட்ரூம், பாத்ரூம் இவ்வளவுதான்..

மெல்ல நடந்து வந்து கதவைத் திறந்த டீச்சர் முகத்தில் சுருக்க வரிகளூடே புன்னகை ஓடியிருந்தது.

“டீச்சர் என்னைத் தெரியுதா?” என்றேன்.

“டே.. எத்தன பேரைப் பாத்தாலும் என் பிள்ளேகளை எனக்கு அடையாளம் தெரியாதாங்கும்?. வவ்வாலு தன் குஞ்சை ஆயிரக்கணக்குல இருக்கற கூட்டத்துல கரெக்டா கண்டுபிடிக்கறா மாரி.. எங்கிட்டயா  கேக்க?” செல்லமாக தலையில் குட்டினார்.

ஜோவின் மனைவி அசந்து போயிட்டா. “ எத்தனை வருசம் இருக்கும் இவங்க உங்களைப் பாத்து? எப்படி கரெக்ட்டா?”

“வாம்மா, ஜோ பொண்டாட்டியா நீயி? சரி.. அவன் எங்க? ஏ யாரு பிள்ள இது?

ஒம்பேரென்னாடா, ராசா?” என்றார் டீச்சர் கனிந்த குரலில் சிறுவனைப் பார்த்து.
அவன் நெளிந்து, அம்மாவின் பின்னால் ஒளிந்துகொண்டான்.

உள்ளே தடுமாறி நுழைந்தோம். இருட்டு. ஒரு சீலிங் பேன் மெல்ல சுற்றிக்கொண்டிருந்தது. “பாத்து வாங்க. வலது பக்கம் சோபா இருக்கு, சேர் ரெண்டு கிடக்கு” என்றவர் தடுமாறி சோபாவில் அமர்ந்தார்.

“டீச்சர், இருட்டா கிடக்கே? லைட் எரியலையோ?”

“அதேன் கேக்க? ட்யூப் லைட்டு மாட்டியிருக்கேன். அது ஃப்யூஸ் ஆச்சின்னு சொல்லி ரெண்டு மாசமாச்சி. இந்த இஞ்ஞாசிப் பய வந்து மாத்தித் தாரேன் டீச்சர்னு சொல்லிட்டுப் போனவந்தான். இன்னும் காங்கல பாத்துக்க”

“எந்த இஞ்ஞாசி?” என்றான் ப்ரின்ஸு திகைப்புடன்/ ‘அந்த கிறுக்கன் ஒரு வேலையும் ஒழுங்கா செய்யமாட்டானே?”

“வீடே அவன் பிடிச்சுக் கொடுத்ததுதான் ப்ரின்ஸு.  திட்டாத. கர்த்தர் அவனையும் ரட்சிக்கட்டு”

இப்படி ஒரு வீட்டை டீச்சருக்கு விற்றதற்கு ... நான் கோபத்துடன்  ஏதோ சொல்ல நினைக்கையில் ஜெரால்டு “ பழுக்க காச்சின ப்ளையரை வச்சு அவனைக் காயடிக்கணும் மாப்ள” என்று காதில் கிசுகிசுத்தான். ஏற்கெனவே கால் அகட்டி நடக்கும் இஞ்ஞாசி காயடிக்கப்பட்டால் எப்படி நடப்பான் என்று யோசித்துப் பார்த்தேன். பென்குவின் ஒன்று கால் இடுக்கில் கார் ஒன்றை இடுக்கிக்கொண்டு நடப்பது போல் தோன்றியது.
சீ என்று தடுத்தேன். டீச்சர் முன்னாடி என்ன கெட்ட எண்ணங்கள்?

வாசலில் நிழலாடியது. “ ஜோ வந்திருக்கேன் டீச்சர்”

“ லேட்டா வந்திருக்கான்.டீச்சர். வாசல்ல முழங்கால் போட வைங்க”
டீச்சர் லேசாகச் சிரித்தார்.

”அதுவும் உப்பு மேல முழங்கால் போடணும்னு சொல்லுங்க டீச்சர்”

அவர் “போங்கடா போக்கத்த பயலுவளா” என்றார் உடல் குலுங்கி சிரித்தபடி. நாலு பற்கள் காணாமல் போயிருந்தது.

“லே ஜோ, உள்ளாற வாடே. யாரெல்லாம் வந்திருக்கா பாரு”

உள்ளே வந்த ஜோ, சிரமப்பட்டு மண்டியிட்டு டீச்சர் கால்களைத் தொட்டு வணங்கினான். “ ஆசீர்வதிங்க டீச்சர்”

“உனக்கு எப்பவுமே ஆசி உண்டும்ல. நீன்னு இல்ல, எம்பிள்ளேள் எல்லாருக்கும் தினமும் வேண்டிக்கிடுதேன். சேசுவே ரட்சியும்” அவர் அன்பாக ஜோவின் கரடுமுரடான தலைமுடியைத் தடவினார்.

”டீச்சர், இப்பவும் முடி வெட்ட மாட்டிக்கான். பாருங்க, எம்புட்டு முடி இருக்குன்னு” ப்ரின்ஸு போட்டுக் கொடுத்தான்.

ஜோ அவனை ஏறிட்டான். அவனது தடித்த உதடுகள் அசைந்த விதத்தில் இருந்து வரவிருந்து அழுந்திய சொற்கள் தா**ளி என்பதாக ஊகித்தேன்.


டீச்சர் ஜோவின் மனைவியை ஏறிட்டார் “ ஏ, ஒம்பேரென்ன சொன்ன?”

”ஜோஸஃபைன், டீச்சர்”

“இவன் மாசாமாசம் ஒரு ஞாயித்துக்கிளமை பையனைக்கூட்டிட்டுப் போயி முடி வெட்டிட்டு வரலைன்னு வையி.. வீட்டு வாசல்ல ஏத்தாதே. சோறு தண்ணி காட்டாதே.. அப்பத்தான்  புத்தி வரும்.” ஜோவின் தலைமுடியைக் ஒரு கொத்தாகப் பிடித்து ஆட்டினார். “ எம்புட்டு முடி பாரு.பொம்பளைப் பிள்ளேளுக்கு இருக்கறா மாரி”

“ஒரு வார்த்த கேக்க மாட்டிக்காரு டீச்சர். புத்திமதி சொல்லுங்க” என்றாள் ஜோசஃபைன், நேரமும் நல்ல ஆளும் கிடைத்த தருணத்தில்.

“இவனுக்கு என்ன புத்தி மதி சொல்ல? எம்பிள்ளேள் எல்லாருமே நல்லவனுங்க கேட்டியா? கொஞ்சம் கிறுக்குத்தனம் அப்பப்ப இருக்கும். சொல்ற விதத்துல சொல்லணும்.”

“உங்க பிரம்பு எங்க டீச்சர்?” என்றான் ஜோ எழுந்தவாறே.

“அங்கன பெட்ரூம்ல பாரு.  மூலைல சாத்தி வைச்சிருக்கேன். இப்பப்ப, சில பிள்ளைகளுக்கு தமிழு, இங்கிலீஷ் சொல்லிக்கொடுக்கேன். முடியமாட்டேக்கி. வேர்த்துவேர்த்து வருதா, அதான் பெட்ரூம்ல வைச்சேதான் சொல்லிக்கொடுக்கேன். பிரம்பு கைப்பக்கம் இருக்கும். ” என்றவர் சற்றே நடுங்கினார். கலவரமானோம்.

“டீச்சர், டீச்சர்,” மெல்ல உலுக்கினான் ஜோ. “டாக்டர்ட்ட போவம்”
”வேணாம்’ என்பதாக அவர் கையசைத்தார். தட்டுத்தடவி, மேசை மேல் இருந்த கிண்ணத்தில் இருந்த சீனியை வாயில் போட்டுக்கொண்டார். இரு நிமிடத்தில் ஆயாசமாக புன்னகைத்தார் “ லோ ஷுகரு. அட கிறுக்கா, இதுக்குப்போயி டாக்டர்கிட்ட போமுடியுமால? “

மெல்ல எழுந்து, பெட்ரூமில் படுக்கையில் சாய்ந்துகொண்டார். ஒக்காருங்க என்றார் தீனமாக. அவர் கட்டிலின் ஓரத்தில் சிலர் அமர்ந்துகொள்ள. நானும், ஜெரால்டும் தரையில் அமர்ந்துகொண்டோம். அவர் தடுமாறி ரிமோட் கொண்டு ஏஸியை இயக்கினார். “போன வருசம்தான் வாங்கிப்போட்டேன். புழுக்கம் தாங்கல”

ஜெரால்டு ஏஸியைப் பார்த்தான். மிகப் பழைய மாடல். செகண்ட் ஹேண்ட். அவன் ஜோவைப் பார்த்தான் . ஜோ புரிந்ததாகத் தலையசைத்து இடது உள்ளங்கையில் பேனாவால் ஏஸி என்று எழுதிக்கொண்டான். ஏற்கெனவே ஹால்- ட்யூப்லைட், பேன் என எழுதியிருந்தான். இதையெல்லாம் நாம் மாற்றவேண்டும் என்பதை யாரும் சொல்லாமலே அனைவரும் புரிந்துகொண்டோம்.

டீச்சர் சாய்ந்து அமர்ந்து கொண்டார் “நீ என்னடே செய்யுதே?” என்று ஒருவர் ஒருவராகக் கேட்டுத் தெரிந்துகொண்டார். “ஜெரால்டு, பன்னாட்டு கம்பெனின்னா சொன்னே? நீ கோட்டும் சூட்டுமா நிக்கற போட்டோ பாக்கணுமேய்யா? எங்கிளாஸு பையன் எப்படி பேசுதான்னு கேக்கணுமே?”

“கக்” என்று ஒரு சத்தம் கேட்டது. முகத்தைத் திருப்பிக்கொண்டு  அழுகையை அடக்கியவாறே ஜோஸஃபைன் விரைவாக வெளியேறினாள்.

ஜெரால்டின் விழிகள் துளிர்த்தன. “காட்டறேன் டீச்சர்” என்றவன் ஐபோனில் யூ ட்யூபைத் திறந்தான் “ இது அமெரிக்காவுல பேசினது டீச்சர். இது கனடாவுல”
டீச்சர் வாயைத் திறந்தவாறே அதிசயமாக, பெருமையாக அந்த வீடியோக்களை முழுதும் பார்த்தார்

“ நல்லாயிருடே. கர்த்தரு நாளைக்குக் கனவுல  எங்கிட்ட கேப்பாரு. மரியாளே, சொர்க்கம் வேணுமா ?”  அப்ப சொல்லுவேன் “ சேசுவே, நேத்தி எம்பிள்ள பேசுறதப் பாத்தேன். அது போதும்”

ஜோ கண்களை கை விரல்களால் அழுத்தி குனிந்திருந்தான்.

“என்னடே வேணும் எனக்கி இனிமே? அங்? . மேய்ப்பரு கேப்பாரு , மரியாளே. என் ஆடெல்லாம் நல்லாயிருக்கா? எல்லாம் நல்லாயிருக்கு சேசுவே.. எனக்கு இனி ப்ரார்த்திக்க ஒண்ணுமில்ல.“

ஜோ செருமிக்கொண்டு பேசினான் “ டீச்சர், நீங்க சொல்லிக்கொடுத்தும் அந்த gerundனா என்னன்னு இன்னிக்கும் புரியலையே?”
”கிடக்கு விடு. அது அன்னிய பாசைல்லா. நீ பேசறது மத்தவனுக்கு புரியுதுல்லா? அது போதும்.” சூழ்நிலை சற்றே இளகியது.

“ஆனா” என்றார் டீச்சர் “ தாய்மொழி அப்படி இல்லடே. அது சரியா இருக்கணும். தமிழ் தப்பா பேசறது, அம்மா சேலை கசங்கற மாதிரி. இந்தா இப்படி” தன் சேலையை மடித்து நீவினார் “இப்படி நீவிவிட்டு கசங்கலை எடுத்துறணும். ஜோ, ஒன் பையன் என்னடே பேசவே மாட்டேக்கான்? பயமா?”

“எங்க நீங்க பிரம்ப வச்சி அடிச்சிருவீங்க்ளோன்னு பயம் போல” என்றான் ஜோ.

“அடிக்க மாட்டேன். சும்மா பயமுறுத்தறதுக்குத்தான் அது. பிரம்பு  தீ மாதிரி. சுட்டுறக் கூடாது. பயம் இருக்கணும்.  டே இங்க வாய்யா” பையனை இழுத்து அணைத்துக்கொண்டார்.

”தமிழ்ல படிப்பியா, எழுதுறியா?”

“அவங்க ஸ்கூல்ல தமிழ் கிடையாது டீச்சர், இங்க்லீஷ், ப்ரெஞ்ச்..”

டீச்சர் உடல் குலுங்கியது. “என்ன கிறுக்குத்தனம்? நீயும் உன் பொஞ்சாதியும் எங்க போனீங்க? வீட்டுல சொல்லிக்கொடுக்க வேண்டியதுதானே?”

“நேரமில்ல டீச்சர். அதுவும் இத்தனை படிக்க வேண்டியிருக்கு ச..ரி பொறவு பாத்துக்கலாம்னு”

“தாய்ப்பாலு , பொறந்த குழந்தைக்குத்தான் கொடுக்கணும். அஞ்சு வயசுக்கு அப்புறம் இல்ல. தாய்மொழி தாய்ப்பால் மாரி.. பின்னாடியெல்லாம் பயனே கிடையாது. அது அப்புற்ம மற்றொரு மொழி அவ்வளவுதான். “ அவர் எழுந்தார். அங்குமிங்கும் தேடி ஒரு சிறு நோட்டுப் புத்தகத்தை எடுத்து வந்தார்.
“நாலு கோடு நோட்டு. இதுல எழுத வையி. ஒவ்வொரு நாளும் ஒரு பக்கம். எதையோ எழுதட்டும், ஆன எழுதறது தமிழ்ல இருக்கணும்”

“ஜோசஃபைன், இவனுக்கு தமிழ்ல எழுதத்தெரியுமா?”

“இல்ல” என்றாள் ஜோசஃபைன் சிவந்த விழிகளுடன், மூக்கை உறிஞ்சியபடி.
டீச்சர் கட்டிலின் தலைமாட்டில் இருந்த ஒரு பொத்தானை அழுத்தினார். வெளியே ஒரு அழைப்பு மணி கேட்டது. ஒரு இளைஞன் உள்ளே வந்தான்.
”லே ஓடிப்போயி, நம்ம ராவுத்தர் கடைல டீச்சர் சொன்னாங்கன்னு கேட்டு ஒரு பவுண்டன் பேனா வாங்கிட்டு வா. அதுல் நீல மையி நிரப்பியிருக்கணும், ஓடு”

பவுண்டன் பேனா புது ப்ளாஸ்டிக்கின் வாசம் அடித்தது. தன்னருகே ஜோவின் மகனை அமர வைத்துக்கொண்டார் மரியா டீச்சர் “ நான் பிடிச்சிக்கறேன். எழுது பாப்பம். அ..ம்...மா.. உள் கோட்டுல எழுதணும். ஆங். கரெக்ட். இப்ப எழுது த...மி...ழ்   ஆங். அந்த வால் வருது பாரு, அத கீழ சேப்பு கோடு வரை இழு.. அப்படித்தான். ம-வுக்கு மேலே சேப்பு கோடு வரை வளைச்சு ,,நல்லா வளைச்சு,..ஆ அப்படித்தான். இப்ப ஒன் பேரு எழுதுவமா?”
***************************************

டீ ஆறியிருந்தது. மெய் மறந்து கேட்டிருந்தேன். ஜெரால்டு மவுனத்தைக் கலைத்தார். தனது சாம்ஸனைட் முதுகுப் பையிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்தார்.

“கோடு போட்ட நோட்டு. தினமும் பத்து நிமிசம் எழுதுதேன். அந்த பத்து நிமிசம் நானும் தமிழும் மட்டும். ஸ்ட்ரிக்க்டா வீட்டுல சொல்லிட்டேன். யாரும் தொந்தரவு செய்யக்கூடாது. ஏற்கெனவே ஒரு நாலுகோடு நோட்டு, ரெண்டு கோடு நோட்டு முடிஞ்சு போச்சு. “

ஜெபா சிரித்தார் “ எத்தனை நாளைக்கு இது , ஜெரால்டு?”

ஜெரால்டு அந்த நோட்டை பையின் உள்ளே வைத்தார்   ” இந்த வாயில தமிழ் வர்ற வரைக்கும். ’ஜெரால்டே, உனக்கு என்ன வேணும்?’னு கர்த்தர் கேக்கயிலே சொல்லுவேன்.. டீச்சர்கிட்ட திரும்பவும் தமிழ் படிச்சேம். அது போதும்”

3 comments:

  1. கலையாத நினைவுகள். அழியாத கோலங்கள். Fan, A/C வாங்கித் தரப்பட்டனவா இல்லையா?

    பல வருடங்களுக்குப் பின் தஞ்சை சென்றபோது நான் படித்த பள்ளி சென்று விசாரித்தபோது நான் பெயர் சொல்லிக் கேட்ட யாருமே உயிரோடு இல்லை.

    ReplyDelete
  2. ரொம்பப் பிடிச்சிருந்தது. இப்போதான் வாசிச்சேன்.ஜோசபின் ஏன் அழுதார்கள் என்று புரிந்துகொள்ள முடியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. அவளால் டீச்சரின் அந்த எளிய அன்பான ஆசையைத் தாங்க முடியவில்லை. நெகிழ்வு என்று மட்டும் கொள்ளலாம்.

      Delete