Tuesday, May 31, 2016

ஆபீஸ் வாசல் அண்ணாச்சி

”ஒரு டீ குடுங்க”
"சார் எந்தூரு?” என்றார் அந்த அண்ணாச்சி. எங்க ஆபீஸ் கேட் பக்கம் ஒரு சைக்கிளின் கேரியரில் பெரிய சிலிண்டர் சைஸில் டீ ப்ளாஸ்க், முன்புறம் ஒரு ப்ளாஸ்டிக் கூடையில் , இட்லி சட்னிப் பொட்டலங்களுடன் அவர் நாலு வருடங்கள் முன்பு வந்து நின்றபோது இரண்டாம்நாள் அவர் கேட்டது இது.

சிரித்து வைத்தேன்

“நான் தமிழுன்னு எப்படி கண்டுபிடிச்சீய?” என்றார் வெகுளியாக.  சீனாக்காரன் நான் சீனன்னு எப்படி தெரியும் என்பதைக் கேட்பது போல.

“உங்க மொபைல்ல அல்லேலூயா பாட்டு ஓடுதே, காலேலேர்ந்து? அதுவும் நீங்க பேசற இந்தி.. “

அவர் நெர்வஸாகச் சிரித்தார். “ எங்கிட்டுப் போனாலும் ஆண்டவரை விடறதில்ல பாத்துகிடுங்க. நாலு பேரு கேட்டா நல்லாயிருவாங்கல்லா? என்ன நாஞ்சொல்லறது?”
“வெளங்கும். அவனவன் நொந்து போய் டீ குடிக்க வர்றான். நீரு என்னடான்னா.. சரி ஒரு டீ போடுங்க அண்ணாச்சி. காலாகாலத்துல குடிச்சிட்டு சோலி மயித்தப் பாக்கப் போவணும்”

“ஆ.. அண்ணாச்சி நம்மூரா? “ என்றார் மூக்கில் விரல் வைத்து.

“பொறவு? தூத்துக்குடிக்காரன்வே. சொந்தூரு நாங்குநேரி”

“நீங்க அசப்புல நம்மூர் மாரி இல்ல பாத்துகிடுங்க. மலயாளின்னு நினச்சேன்”
இந்த ஒரு வார்த்தைக்காகவே அவர் மனைவி விதவையாயிருக்கவேண்டும்.

“எனக்கு வீரவநல்லூரு.. இரிங்க. ஒரு வட சாப்புடுதீயளா? விடிக்காலேல ஊறப்போட்டு அரச்சது. ப்ரெஸ்ஸ்ஸ்ஸ்ஸா இரிக்கி “

அதைப்பார்த்து தவிர்த்தேன் “வடை ஒவ்வொண்ணும், ஒருலிட்டரு எண்ணெய் குடிச்சிக்கிடக்கே?. பிழிஞ்சி எடுங்க. நாளைக்கு அடுத்த ஏடு போட உதவும்”

அவர் முகம் சுருங்கினார் “ ஊருல இருக்கறவா மாரியே பேசுதீயளே? இந்தூரு பருப்புக்கு இதுதான் வருஞ்சாமி”

“அத இந்தூரு  ஆளுகளுக்கே கொடுங்க. வடா பாவ் தின்னு தின்னு வட மாரியே இருக்கான் ஒவ்வொருத்தனும்”

இத்தனையில் இரண்டாவது மாடி கால்செண்ட்டரில் இருந்த பெண்கள் இருவர் வந்து வடை வாங்கிச் சென்றனர். அண்ணாச்சி மர்மமாகப் புன்னகைத்தார் “ பாத்தியளா? பொம்பளேள் வாங்கிட்டுப் போறாளூவோ. நீங்க கரச்சல் பண்ணுதீய”

அண்ணாச்சி நல்ல நண்பராகிப்போனார். காரில் வந்து கேட் அருகே காத்திருக்கையில், பெருமையாக சல்யூட் அடித்து புன்சிரிப்பார். அன்று டீ குடிக்கப் போகையில் அடுத்திருப்பவரிடம் “சாரு,எங்கூரு தெரியுமில்லா?” என்பார் பெருமையாக. பொதுவாகவே, ஒரு திருநெல்வேலிக்காரன் அருகே மற்றொரு திருநெல்வேலிக்காரர் எப்போதும் ஒரு வேலையும் செய்யாது நின்றிருப்பார். அண்ணாச்சி அருகே யாராவது நம்மூர்க்காரர்கள் நின்றிருப்பார்கள். உடனே தொடங்கிவிடுவார்கள்“ சார்வாள் தூத்துக்குடியா? அங்கன மீளவிட்டான் பக்கத்துல எங்க மாமா இருக்காரு..”

ஆக்டிவா புதியதாகக் கொண்டுபோனதில் அண்ணாச்சிக்கு அவ்வளவு சுகமில்லை. ‘என்ன சார்வாள்? கெத்த்த்...தா கார்ல வரவேணாமா? இங்கன ஸ்கூட்டர்ல ... அந்தா அங்க பாருங்க, அந்தப் பொம்பளப்பிள்ளயும் இந்த வண்டிதான் ஒட்டுது” பெண்ணியம், சமத்துவம், பெண் விடுதலை என்று கொதிப்பவர்கள், அண்ணாச்சியை விரும்பமாட்டார்கள்.

ஆனாலும், வண்டியை அவர் அருகிலேயே வைக்க இடம் ஒதுக்குவைப்பார் “ தாயளி, எல்லாவனும் கோணலா நிப்பாட்டிட்டுப் போயிறானுவோ. நீங்க விட்டுட்டுப் போங்க,. நாம்பாத்துகிடுதேன்”
அவரை நம்பி விட்டு விட்டுப் போவது ஆபத்து என்பது பின்னர் தெரிந்தது. ஆர்.டி.ஓ வந்து வண்டியைத் தூக்கிப்போனபோது “ ஒண்னுக்கடிக்க போயிர்ந்தன் சார். அந்த அஞ்சு நிமிசத்துல ...”
ஆனால் கேட்டது வேறாயிருந்தது. ஆர்.டி.ஓ குண்டர்கள் வண்டியைத் தூக்கியபோது அண்ணாச்சி பம்மிக்கொண்டு ஒரு மூலையில் யாருடைய வண்டியோ? என்பதாக வேடிக்கை பார்த்திருந்தார் என்று ஏ.டி.எம் வாயிற்காவலர் சொன்னார். அண்ணாச்சியின் இந்த அந்நியன் split personalityஇன் பின்புலம் அன்று புரியவில்லை.

முந்தாநாள் சொன்னார் ”ஒரு வாரம் காய்ச்சலு. வேலை நடக்கல. என்ன செய்ய? சம்பாரிக்கறதுல 50% இங்க தாதா எடுத்துர்றான். இல்லன்னா நம்ம சைக்கிளையும் தூக்கி ஆர்.டி.ஓ கொண்டுபோயிருவான். செருக்கியுள்ளேள்..அவனவனுக்கு கொடுக்க வேண்டியிருக்கி.  ஊர்ல பொழக்க்க முடியலன்னு இங்கிட்டு வந்தா, இவனுவ வேற மாரி கொள்ளயடிக்கானுவோ. பையன் பத்தாப்பு இந்த வருசம். அவனாச்சும் பொழக்கட்டும்னு  நாய் மாரி லோல் படுதேன். என்னிக்காச்சும் ஆண்டவரு இரங்குவாரு.”

இந்த நம்பிக்கையில்தான் மும்பையில் பலருக்கு டீ கிடைக்கிறது.

2 comments: