Wednesday, July 27, 2016

நான் பாடும் பாடல் - அண்ணாச்சி உரையாடல்

நேற்றிரவு ஏதோ பாடலை முணுமுணுத்துக்கொண்டிருக்கையில் வாசல் கதவை யாரோ தட்டினார்கள்.

“பாடினே கொன்னுருவேன்” என்று மிரட்ட ஐந்தாம் மாடி சர்தார்ஜி வருகிறானோ? என்ற சந்தேகத்தில்தான் திறந்தேன். ச.வ.ச(ச*..ளவு வளர்ப்போர் சங்கம்) காரியதரிசி வாயெல்லாம் பல்லாக நின்றுகொண்டிருந்தார்.

“அட” வியந்தேன்”வே, போனவாட்டி “ நீர் பாடினா கழுத வரும்னீரு’.. உம்ம வாக்குப் பொய்க்கலைய்யா ”
சிரிப்பு உறைந்து போக “இந்தாரும், என்னக் கழுதன்னு சொல்ற வேலயெல்லாம் வச்சுக்காதீரும். கெட்ட கோவம் வரும் சொல்லிட்டேன்” என்றார்.
“உள்ளாற வாரும்” என்றேன். எப்படியும் இன்னும் அரைமணி நேரத்துக்கு ஒன்றும் வெட்டி முறிக்கப் போவதில்லை. பாட்டு, விருதுன்னு பொழுதை வீணடிக்கலாம்.

“எங்காளுக்கு விருது கிடைசிச்ருக்கு தெரியும்லா?” என்றார் பெருமையாக.
‘பாட்டுக்கா? அப்ப சரிதான்.”

“அட, பாட்டு எவம்வேணும்னாலும் பாடிறலாம்வே. கணக்கா நேரத்துக்கு பேசத்தெரியணும்லா? எங்காள் கரெக்டா எல்லாரும் அடிக்கற இடத்துல அடிச்சாரு. பொங்கறதா சீன் போட்டாரு. கொடுத்துட்டானுவோ”

”அங். அப்ப திறமைக்கெல்லாம் மதிப்பில்ல”
“அது இருந்தா மட்டும் போறாதுவே.  பாட்டு பத்தி பேசறத விட்டுட்டு பார்ப்பனியம்னு ஏசி எழுதணும்..”
“எழுதினா எவன் போடுவான்?”
“அட,  இத வெளியிடறதுக்குனே எளவு பத்திரிகை நடத்துதோம்லா? நாலு பக்கத்துக்கு போட்டுறுவம். கழுத விட்டை கை நிறையன்னு , எக்கச்சக்கமா பத்திரிகை வைச்சிருக்கம். வாராந்தரி, மாசாந்தரி என்ன வேணும்னு சொல்லுங்க”

”வே, பாடகன்னா பாட்டுதாம்வே பெரிசாத் தெரியும். எழுதினா எவம் படிப்பான்?”

சிரித்தார் “இப்படி இருக்கீயளேன்னு நினைச்சா பாவமா இருக்கு. கலை, இலக்கியம்னு எவம் பாக்கான் சொல்லுங்க? ஜாதியம் பார்க்கும் பார்ப்பனீயர்கள்னு தம் பாட்டைக் கேக்க வர்றவங்களையே ஏசணும். இவங்களுக்கு டிக்கட் கொடுக்கற சபாவுல பாடமாட்டேன்னு வீராப்பா அறிக்கை விடணும்”

“அவங்க கோவிச்சுக்க மாட்டாங்களா? போயிட்டாங்கன்னா, ரசிகர் குறைஞ்சுருவாங்களேய்யா?”

“வே, அது ஒரு கேடு கெட்ட ஜென்ம கூட்டம் பாத்துகிடும். என்ன அடிச்சாலும் தாங்குவாங்க. என்ன சொன்னா என்னா, அவம் பாட்டு நல்லாயிருக்குன்னு வெக்கமே இல்லாம கேக்கற கூட்டம் அது. இத்தனை நடந்தப்புறமும் பாருங்க, பேஸ்புக்ல, ட்விட்டர்ல “வாழ்த்துக்கள்”ன்னு முதல்ல எழுதறது அந்த கூட்டம்தான்.”

“ஏம்வே அப்படி ஒரு டிசைனு?”

“எங்கள என்ன சொன்னாலும் கேட்டுகிடுவோம், அறிவுசீவியாக்கும் நாங்கன்னு காட்டிக்கிற போலித்தனம் அதுங்களுக்கு. போவட்டு. நீரு என்ன செய்யுதீரு?”

“டல் அடிச்சு கிடக்கு” என்றேன் சோகமாக “ நம்ம புக் எல்லாம் ஒரு பய சீந்த மாட்டக்கானே? வாங்கினவங்க இருக்காங்கன்னாலும் ஒரு பைசா வரலியே இன்னும்?”

“இதான் ப்ரச்சனையா? எண்ட்ட விடும். பாத்துகிடுதேன். விருது வாங்கிக் கொடுக்கறது என் வேல”

”வே” என்றேன் திகைப்புடன் “ வாங்கிக் கொடுக்கீயளா? விருது தானா வரணும்வே. வாங்க- எல்லாம் கூடாது”

“எந்த ஊர்ல இருக்கீய?” என்றார் எரிச்சலுடன். “ விருதுக்கு நீர் விண்ணப்பம் போடணும், பைசா கட்டணும். இடது சாரித்தனம் இருக்கணும். அப்புறம் பெரிய ஆளுங்க சிபாரிசு வேணும்.”

“சரி, அப்ப எதுக்கு மக்கள் கிட்ட இப்படி பீலா விடணும்? சபா இல்லேன்னா பைசா போயிரும்வே”

“ஹஹ்ஹ” என்றார் “ இங்கதான் பாடமாட்டேன்னு சொல்லச்சொன்னேன். அமேரிக்காவுல பாடமாட்டேன்னா சொன்னேன்? இங்க ரூபாய் கொடுத்து வாங்குவீய. அங்க டாலர்லா? அது போதும்வே. பேருக்கு பேர் ஆச்சி, பைசாவுக்கு பைசா”

“ஆஹா” வியந்தேன். ”இந்த அமெரிக்க இடதுசாரித்தனம் இத்தனை நாளா எனக்கு வெளங்கலையே?”

“உடனே நீரும் அறிக்கை விடணும் கேட்டியளா?” என்றார் சீரியசாக. ஒரு காகிதத்தில் மடமடவென்று எழுதி நீட்டினார் . ”இதை உடனே பேஸ்புக்ல போடும்வே.”

படித்துப் பார்த்தேன் “ இனி ஆழ்வார்பேட்டை, மைலாப்பூர் பகுதியில் இருக்கும் நண்பர்கள் வீட்டிற்கு செல்லமாட்டேன் . போலித்தனமாக ஒரு பில்டர் காபி, அடை என்று கூடும் நண்பர்களை விட , அமெரிக்காவில் ஒரு குப்பத்தில் சென்று கதை பற்றி பேசலாமென நினைத்திருக்கிறேன்”

“இது விவகாரம் பிடிச்ச வேலைல்லா? கிளம்பும்வே” என்றேன் கறாராக.

“விசயம் தெரியாம நிக்கீரேன்னு மனசுக்கு விசனமா இருக்கி” என்றார் சோகமாக. “என்ன செய்ய. ஒம்ம தலையெழுத்து அறிவியல், அண்ணாச்சின்னு எழுதியே போயிரணூம்னு இருக்கு. சரி, போற வழிக்கு ஒரு திருநவேலி கொலைவெறி வெண்பா சொல்லும். கேட்டுகிடுதேன்”

”மக்களை திட்டிய சொல்லினில் நிச்சயம்
டக்கெனத் கிட்டும் விருது”

Sunday, July 24, 2016

முத்துசாமி

இந்தூரில் நண்பரது அபார்ட்மெண்ட்டிற்குப் போகும்போதெல்லாம், அவரது வீட்டின் அண்டை வீட்டை சற்றே பயத்தோடு கவனிப்பேன். கதவு அடைத்திருந்தால் ஒரு நிம்மதி. பல முறை அப்படி கவனித்து, சற்றே நிம்மதியுடன் விரைவாகத் தாண்டிப் போகும்போது..

“சார், எங்கே பாத்தும் பாக்காம போறேள்?” முத்துசாமி சார் ஜன்ன்னல் வழியே எட்டிப் பார்ப்பார்.

“ஹி.ஹி” வழிவேன்“ சொளக்கியமா சார்? கண்ணன் இருக்கானான்னு பாத்துட்டு உங்களைப் பாக்க வரலாம்னு இருந்தேன்”

“இப்படித்தான் சொல்லுவேள். அப்புறம் நைஸா கிளம்பிப் போயிடவேண்டியது. ஏர்ப்போர்ட்ல வந்து பிடிச்சுறுவேன். ஆமா, பாத்துக்கோங்கோ” கதவை அவர் இன்னும் திறக்கவில்லை என்பதே நிம்மதியாக இருக்கும்.

“ஹ ஹா” “ கண்டிப்பா வர்றேன் சார். கண்ணன்...”

“அவா எல்லாம் மெட்ராஸ் போயிருக்காளே? அத்தைக்கு உடம்பு சரியில்லைன்னு ரெண்டு நாள் முன்னாடி போன் வந்தது. இவன் மட்டும் ரத்லாம் பக்கம் டூர் போயிருந்தான். அங்கேர்ந்து ராஜ்தானில பாம்பே போயி அங்கேர்ந்து ப்ளைட். நாந்தான் ஐடியா கொடுத்தேன்.உள்ள வாங்கோ”

யப்பா, தொடங்கியாச்சு..

முத்துசாமி ரயில்வேயில் என்ன வேலை பார்த்தார் என்று தெரியாது. கேட்கவில்லை. கேட்டால் அது ரெண்டு நாள் கதை ஓடும்.
“ ராஞ்ச்சியில ரெண்டு வருஷம் தூக்கி அடிச்சான். என் தப்பு என்னன்னு கேளுங்கோ. காண்ட்ராக்டர்ட்ட லஞ்சம் வாங்கினதை போட்டுக் கொடுத்துட்டேன். அப்புறம்னா தெரிஞ்சது, அந்த டிவிஷனல் ஆபீஸருக்கும் அதுல கட் இருக்குன்னு? அவன் பாத்தான். “மிஸ்டர். முத்துஸ்வாமி, வி வாண்ட் ஹானஸ்ட் எம்ப்ளாயீ லைக் யூ இன் ராஞ்ச்சி”னுட்டு...”
இன்னும் முப்பது வருஷக் கதை பாக்கியிருக்கிறது.
முத்துசாமி தனியாக இந்தூரில் இருக்கிறார். பையனும் பெண்ணும் பெங்களூரில். அவளும் சமீபத்தில்தான் லண்டனில் இருந்து வந்தாள் என்று சொன்ன நினைவு.

“லக்‌ஷ்மி போனப்புறம் ஒரு வெறுமை.. யார்ட்டயும் போய் இருக்கவேண்டாம்னு ஒரு நினைப்பு வந்துடுத்து. பொண்ணு “ அப்பா, you talk too much ’ங்கறா. பையனா? அவம் பேசவே மாட்டேங்கறான். மாட்டுப் பொண் அவ வேலையப் பாக்கறதுக்கே சரியா இருக்கு. பேத்தி , தாட் பூட்னு என்னமோ பேசறது. வந்துட்டேன்”

முத்துசாமியின் ப்ரச்சனை, பல முதியவர்களின் ப்ரச்சனைதான். தான் பேசவேண்டும். பிறர் கேட்கவேண்டும்.

“பல்பீர் சிங்னு ஒரு சர்தார்ஜி.. சார், கேக்கறேளா?”

“அங்? சொல்லுங்க” என்பேன் ஏதோ நினைவில். எனது வாடிக்கையாளர் நாளைக்கே சர்வீஸ் எஞ்சினீயர் இந்தூரில் இருக்கவேண்டுமென்கிறான். அதை எப்படி சமாளிக்கப்போகிறேன்?என்று நினைத்துக்கொண்டிருக்கையில், பல்பீர்..

“எங்கயோ பாத்துண்டு இருக்கேள். போரடிக்கறேனோ?”

“இல்ல சார்” சமாளிப்பேன்.. “நாளைக்கு ஒரு மீட்டிங் இருக்கு. என்ன சொல்றதுன்னு யோசிச்சிண்டிருக்கேன்”

“ஹா! இதுக்கெல்லாம் கவலைப்படப்படாது. எனக்கு எத்தனை ப்ரஷர் வந்ததுங்கறேள்? ராஞ்ச்சில யூனியன் லீடர், சூப்பிரண்டண்ட், பெரிய அதிகாரியெல்லாம் நாக்கைப் பிடுங்கிக்கற மாதிரி கேப்பான்கள். சே, என்ன வேலை விட்டுறலாம்னு தோணும். ரெண்டு கொழந்தைகள், பொண்டாட்டி ஊர்ல இருக்கா. வயசான அம்மா . எப்படி சார் சமாளிப்பேன்?”

“கஷ்டம்தான்”

”எவன் என்ன வேணாலும் சொல்லிட்டுப் போகட்டும். நான் என் வேலையச் செய்யறேன்னு இருந்துட்டேன். ரெண்டு பேர் கஷ்டம் கொடுத்துண்டே இருந்தான்கள். ராய்ப்பூர்க்கு ட்ரான்ஸ்ஃபர். அப்புறம் ராஞ்ச்சிக்கு ஒரு தடவ போனப்போ, அவன்களே வந்து சொன்னான்கள் “ சர்ஜி, நீங்க போனப்புறம்தான் உங்க அருமை தெரியுது”ன்னான். அதுவும் தலையில ஏறிடப்படாதுன்னுட்டு, வெறுமனே சிரிச்சுட்டு, போன வேலையப் பாத்துட்டு வந்தேன்..”

“ம்ம்”

“எதுக்கு சொல்றேன்னா.. வேலைல வர்ற மாற்றமெல்லாம், உள்மனசுல சலனம் கொண்டு வந்துடப்படாது. ஒரு காபி சாப்படறேளா? இப்பதான் டிகாஷன் இறக்கியிருக்கேன்”

அதன்பின்னும் ராஞ்ச்சி, ராய்ப்பூர், அஸன்ஸோல் என்று அவரது நினைவு ரயில்வண்டி ஓடிக்கொண்டே இருக்கும். இரு மாதங்கள் முன்பு மாட்டினேன்.

”இப்படித்தான் பல்பீர் சிங்குன்னு ஒரு சர்தார்ஜி..”

“சார், தெரியும், போனதடவ சொல்லிட்டீங்க”

“அப்படியா? பல்பீர் வாஸ் எ பெக்கூலியர் மேன்.. ஒரு தடவ”

அந்த சர்தார்ஜியை தேடிப்பிடித்து ஏன்யா இந்தாளுகூட வேலை பாத்தே?ன்னு திட்டிட்டு வரலாமா என்று ஆத்திரம் பொங்கும். சிரமப்பட்டு அடக்கிக்கொள்வேன்.

”ஒரு தடவகூட என் ஹானஸ்டியை விட்டுக் கொடுக்கலை சார். ஸ்கூல்ல பீஸ் கட்டணும், அம்மா ஆஸ்பிட்டல்ல அட்மிட் ஆயிருக்கான்னு ஊர்லேந்து போன் வர்றது. அவளால எஸ்.டி.டி.கூட அதிகம் பண்ண முடியாது. ராத்திரி 10 மணிக்கு மேல பண்ணினா பைசா குறையும். ஆனா தெருவுல எப்படி ஒரு பொம்மனாட்டி 10 மணிக்கு மேல தனியா நிக்க முடியும் சொல்லுங்கோ? இப்படித்தான் ஒரு தடவ”

”சார் ஹானஸ்டி பத்தி சொல்லிட்டிருந்தீங்க”

“அங்? யெஸ்! ஆமா, அப்ப ஒரு காண்ட்ராக்டர் பத்தாயிரம் தர்றேன். என் பில்லை பாஸ் பண்ணி விட்டுருன்னான். அது ரெண்டு லெவல்ல பாஸ் பண்ற பில். ரெண்டு நாள்ள சீனியர் ஆபீஸர் ஒருத்தர்ட்டேர்ந்து போன் வர்றது. அந்த பில்லை பாஸ் பண்ணு முத்துஸ்வாமி’ன்னுட்டு. “ஸாரி சார்”ன்னேன் “ ப்ரொசீஜர் படித்தான் போவேன். வேணும்னா என் மேல ஆக்‌ஷன் எடுத்துக்கோ”ன்னுட்டேன். பகவான் இருக்கார் பாத்துக்கோங்கோ. தம்பி வந்து ஸ்கூல் பீஸ் அடைச்சான். அம்மா , பாவம் பரமபதிச்சுட்டா.. நல்ல ஆஸ்பிட்டல் கொண்டுபோயிருக்கலாமே அண்ணா?ன்னு தங்கை அழுதா. கேக்கறப்போ ரம்பமா நெஞ்சு அறுந்தது.” சட்டென கலங்கின கண்களை துடைத்துக்கொண்டார்.

“ஸாரி சார்”

“விடுங்கோ. என்ன செய்யறது. அந்த பைசா வாங்கி, அம்மாவை குணப்படித்தியிருந்தேன்னு வைச்சுக்கோங்கோ, அவளுக்கு தெரிஞ்சிருந்தா, அப்பவே ப்ராணனை விட்டிருப்பா. அவ உடம்பு குணமாயிருக்கும். ஆத்மா ரணமாயிருக்கும். வேணுமா எனக்கு?”

“சார், காபி”

“ஓ. முக்கியமான ஒண்ணை மற்ந்துட்டேன் பாருங்கோ. ஒரு ஹெல்ப் வேணும். என் வாழ்க்கையில பாத்த ரெண்டே ரெண்டு, சாஸ்த்ரம் சொன்ன படி வாழ்றது, அன்பாயிருக்கறது. இத ரெண்டு நோட்டு புஸ்தகத்துல அனுபவமா எழுதி வைச்சிருக்கேன். புக்கா போட முடியுமா? கேட்டுச் சொல்றேளா? கம்ப்யூட்டர்ல டைப் பண்ண முடியலை.”

“பாக்கலாம் சார்” என்று ஏதோ சாக்கு சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.
சில நேரங்களில் இந்தூரில் அவருக்கு பயந்தே, ஓட்டல் அறையில் அடைந்தேன்.

சமீபத்தில் அவர் இறந்து போனதாக அறிந்தேன். கண்ணன் வீட்டுக்குப் போகும்போது அடைத்துக்கிடந்த அடுத்த வீட்டுக்கதவு என்னவோ செய்தது. ”என்ன ஆச்சு அவருக்கு?”என்றேன் நண்பனிடம்.

“அப்பா தனியா இருக்க வேண்டாம் என்று பையனும் பொண்ணும் தீர்மானிச்சு அவரை ஒரு முதியோர் இல்லத்துல சேர்க்க முடிவெடுத்தார்கள். அவர்கிட்ட சொன்னப்போ, சட்டுனு அமைதியாயிட்டார். அதுக்கப்புறம் எங்க கிட்ட கூட அதிகம் பேசலை.”

ஒரு குற்ற உணர்வில் நெளிந்தேன்.

“ஒரு ராத்திரி, கொஞ்சம் காய்ச்சல் மாதிரி இருக்குன்னார். லலிதா, ரசம் சாதம் வைச்சுக் கொடுத்தா. நாங்க ரெண்டுபேரும் அவர்கிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டிருந்தோம். “கடை விரித்தேன் கொள்வாரில்லை. கட்டி விட்டோம்”ன்னார். அடுத்த நாள் காலேல போயிட்டார்”

”எதாவது நோட்டு புக் உங்க கிட்ட கொடுத்தாரா? ”

“இல்லையே? எல்லாத்தையும் பழைய பேப்பர், சாமான் எடுக்கறவன்கிட்ட அப்படியே போட்டுட்டு, வீட்டை வாடகைக்கு கொடுத்தாச்சே? லீவுன்னு அவங்க எல்லாம் ஊருக்கு போயிருக்கா.”

வள்ளலார் பாடல் வரிகள் எப்போதும் மென்மையானவை அல்ல.

Tuesday, July 05, 2016

நிஜ வரலாறும் நாம் கற்ற வரலாறும்



திருநெல்வேலி எழுச்சி (Tinneveli uprising) பற்றி சில கேள்விகளும், எதிர்வினைகளும் வந்தன. பலரும் சொன்னது”இப்படி ஒன்று நடந்ததே தெரியாது”. அது ஆச்சரியமல்ல. நமது கல்வித்துறைகளின் பாடத்திட்டம் அப்படி.

’கானிங் பிரபு ஏன் கருணையுள்ள கானிங் என்று அழைக்கப்படுகிறார்? துருக்கியின் கிலாஃபத் இயக்கத்தில் காந்தியடிகளின் கருத்து யாது?’ என்பது போன்றவற்றை மட்டுமே அவை கற்றுக்கொடுத்தன. சந்திரசேகர் ஆஸாத், திங்க்ரா, சவர்க்கர், சிட்டகாங் புரட்சி என்பது பற்றி அவை பேசுவதே கிடையாது என்பது கசப்பான உண்மை.

நமது சுதந்திரப் போராட்டம் பல கட்டங்களில் (Phase) நிகழ்ந்த ஒன்று. ஒரே சீராக ஒரே தலைவரின் ஆணையில் நடந்த போரல்ல. 1857, 1882-1918, 1918-1947 எனப் பெருவாரியாக இக்கட்டங்களை வகுக்கலாம். இதுவும் ஒரு தன்னிலைப் பார்வை (subjective view) யாகவே கொள்ளமுடியும். வரலாற்றிஞர்கள் இன்னும் சிறப்பாக, சுதந்திரக் கிளர்ச்சியின் காரண, காரணிகளையும், அணுகுமுறையையும் கொண்டு பிரிப்பார்கள். 

அன்னிய ஆடை தயாரிப்புகள் புறக்கணிப்பு, சுதேசி பொருட்களை பயன்படுத்தல், காதியை ஆதரித்தல் என்பது 1918ன்பின் காந்தியின் வருகையின் பின்னான கட்டத்தில் என்று பொதுவாகக் கருத்து இருக்கிறது. அது 1900களில் உதித்த சிந்தனை. அந்நிய பொருட்களை புறக்கணிப்பதை ஒரு அடையள நிமித்தமாக  அந்நிய நாட்டுத்துணிகளை 1905ல் சவர்க்கர் பூனாவில் எரித்தார். முதலில் அத்திட்டத்தை  ஆதரிக்காத திலகர், அன்று அங்கு வந்து பாராட்டி வாழ்த்திய  ஒரு செயல். காதியை அணியவேண்டும் என்பதை 1900களில் நமது சுதேசி தலைவர்கள் முன்னிறுத்தினர். 

இதெல்லாம் கண்டவர் காந்தி. அதன் உள்ளிருந்த நாட்டுப்பற்றையும், நாட்டில் அனைவரையும் சென்றடையக்க்கூடிய தீவிரத்தையும் அறிந்தார் அவர். இதனை தன் போராட்டத்தில் முன்வைத்தார். அதில்  தனக்கு முன்னிருந்தவர்களின் செயலைத் தனதாக்கும் முயற்சி எதுவுமில்லை.

ஆனால் பின்னாளில் வந்த அரசியல்வாதிகள், அவர்கள் ஆதரித்த வரலாறு புனையும் அறிஞர்கள், காந்திக்கு முன்பிருந்தவற்றை படுபுத்திசாலித்தனமாக இருட்டடிப்பு செய்ததன் விளைவுதான் நமது கோணலாக வளர்ந்து நின்ற பாடத்திட்டங்கள். 

தென்னிந்தியாவில் ஏதோ ஒன்றுமே நிகழாததுபோல ஒரு கருத்து அதில் காணலாம். அதுவும் இந்திய தேசிய காங்கிரஸ் மட்டுமே போராடியது போன்ற ஒரு கணிப்பை நம்மில் ஏற்படுத்தியதும் கண்கூடு. உண்மையில், பொலிகர் புரட்சி, வேலுத்தம்பி, வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், வ.உ.சி, சுப்பிரமணிய சிவா, பாரதி, மாடசாமிபிள்ளை, நீலகண்ட ப்ரம்மச்சாரி, அரவிந்தர், வ.வே.சு ஐயர் என்பவர்களின் தியாகத்தை தமிழக பாடநூல்கள் முன்வைக்கவே இல்லை. வாஞ்சிநாதனின் தியாகம்,  ஜாதிய வெறியால் விளைந்த ஒன்று என்பதாகக் காட்டும் அவலம்தான் இப்போது நடக்கிறது. நாம் அதிகம் அறியாத சுதந்திரப் போராட்ட வீர்ர்கள் சிலரைப்பற்றி இங்கு வாசிக்க இயலும்.

http://www.thebetterindia.com/…/unsung-heroes-freedom-figh…/


உண்மையில் அன்று இருந்த தலைவர்கள் ‘இந்திய அளவில்,உலக அளவில்’ நிகழ்வுகளைத் தெளிவாக அறிந்திருந்தனர். அதனை மக்களிடம் அடையாளங்கள் மூலம் பரப்பவும் முயற்சித்தனர். பாரதி “மாகாளி உருசிய நாட்டின்கண் கடைக்கண் பார்வை வைத்தாள்” என்று தொடங்குவதும் “ கரும்புத்தோட்டத்திலே” என்று வெளிநாட்டில் அடிமைகளாக வாழ்பவர்களுக்கு வெம்புவதும் இதன் வெளிப்பாடுதான். 

இந்த திருநெல்வேலி எழுச்சி , பிப்பின் சந்திரபால் (B.C.Pal) விடுதலையானதைக் கொண்டாடுவதாக, மக்களிடம் சுதந்திர உணர்வைப் பரப்ப வ.உ.சியும், சிவாவும், பத்மனாப ஐயங்காரும் திட்டமிட்ட ஓரு பேச்சுக்கூட்டத்தின் எதிர்விளைவால் வந்த எதிர்ப்புதான். இக்கூட்டத்தில் ஆங்கில அரசுக்கு எதிராக மக்களைத்தூண்டினார்கள் என்பதாகத்தான் வ.உ.சி பிள்ளை, சுப்பிரமணிய சிவா கடும் சிறை தண்டனை பெற்றனர். வ.உ.சி பெற்றது இரட்டைத் தீவாந்தரத் தண்டனை - 40 ஆண்டுகள். அந்தமான் சிறையில் இடம் இல்லாததால், கோயமுத்தூர் சிறையில் வைக்கப்பட்டார். செக்கிழுத்தார். இன்னலுற்றார்.

சவர்க்கர்  பெற்றது 50 ஆண்டுகள் சிறைத்தண்டனை. இந்திய சுதந்திர வரலாற்றிலேயே அதிகபட்சமான தண்டனை பெற்றவர் சவர்கர்.( நாகலாந்து ராணி கைடின்லியு ஆயுள்தண்டனை பெற்றார். அதுதான் அதிகபட்ச தண்டனை என்றும் கருத்து நிலவுகிறது. இவர்களது உயர்ந்த லட்சியத்தை மட்டும் எடுத்துக்கொள்வோம். யார் அதிக தண்டனை பெற்றவர்? என்பதல்ல இங்கு பேச்சு). அந்தமான் சிறையில் 11 வருடங்கள் அவர் சிறு அறையில் அடைக்கப்பட்டார். அவர் கண்ணெதிரே, தியாகிகள் தூக்கிலிடப்படுவார்கள். இது அவர் பெற்ற சித்திரவதைகளில் ஒன்று.

இதையெல்லாம் நாம் பள்ளியில் வரலாற்றுப் பாடத்தில் படித்திருக்கிறோமா? இல்லை. விளைவு? இன்று பேஸ்புக் பதிவுகளில் “ சவர்க்கர் யாரு?” என்ற கேள்விகள் வருகின்றன. மிகுந்த மன உளைச்சலைத் தரும் கேள்விகளில் ஒன்று அது. 

தலைவர்களை மட்டுமே சொல்லமுடியும் என்பது சரியான வாதமல்ல. ஒரு தலைவர் கீழ் இந்நாடு விடுதலையடையவில்லை. அப்படிப்பேசுவது என்னமோ ஒரு வலிமையான படைத்தலைவனின் கீழ் போரிட்டு நாடு விடுதலைபெற்றது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது. நமது ஜனநாயகத்தைப் போலவே, பல தலைவர்கள் பல கட்டங்களில் பல காரணங்களுக்காக உரிமைப்போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். அதனை முறையாக மதித்து, அடுத்த தலைமுறையிடம் உண்மையாகச் சேர்ப்பதே நமது தலையாய கடமை. 

இனியாவது இக்கல்வித்திட்டங்கள் சரிசெய்யப்படவேண்டும். அரசியல் காரணமாக, ஓட்டுகள் சேகரிக்கும் எண்ணத்துடன் எழுதப்பட்ட போலித்தனமான வரலாறுகள் திருத்தப்படவேண்டும். அரசு மட்டுமல்ல, தனியார் ஊடகங்கள் இதில் ஈடுபட்டால்தான் முடியும்.