Friday, March 30, 2018

நேரா யோசி அத்தியாயம் 14 – பல்முனை இயக்கம்.


”கணேசன் மாதிரி வேலை பாக்கணும். நம்மகிட்ட பேசிட்டிருக்கறப்பவே, லெட்ஜர்ல எண்ட்ரி போட்டுருவாரு. நாம வேலைய ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே அவர் வேலையை முடிச்சுட்டு, பாஸ் கேபின்ல போய் ஒக்காந்துருவாரு. ஏன் ப்ரமோஷன் கிடைக்காது?”

கைக்கு கை: வாய்க்கு வாய்-ன்னு இருக்கணும். பேசிக்கிட்டே இருக்கும்போது நம்ம வேலையைப் பாத்துகிட்டே போணும்

ஒரே நேரத்தில் பல்வகை இயக்கத்தைச் செய்பவர்க்களை உலகம் வியக்கிறது. முன்னேறும் தகுதியில் இது ஒன்று எனச் சிலாகிக்கிக்கிறோம்.காணும்போது, அவர்கள் பல வேலைகளை ஒரேநேரத்தில் செய்து முடித்துவிடுவதைப் போலத் தோற்றமளிக்கிறது.
ஆனால் இது ஒரு பிறழ்வு என்கிறார்கள் வல்லுநர்கள். மல்ட்டி டாஸ்க்கிங் என்பது மூளையையும் உடல் உறுப்புகளையும் அதிகப் பளு தந்து அயர்வடையைச் செய்யும் தவறான பழக்கம் என்பது பல உளவியல் ஆய்வாளர்களின் முடிவு.

அஷ்டாவதானி, தசாவதானி என்று எட்டு / பத்து வேலைகளை ஒரே நேரத்தில் செய்பவர்களை வியக்கும் நமக்கு, அவர்கள், அந்த்த் திறமையால் பெற்ற பயன்களைப் பற்றித் தெரியாது.  வாழ்வில்  ஒரே வேலையைத் தடுமாற்றத்துடன் செய்பவர்க்ளைப் போல சராசரியான வெற்றிகளையே அடைந்திருக்கிறார்கள். பல வேலைகளை ஒரேநேரத்தில் செய்வதிலுள்ள சிக்கல் என்ன?

ஒரு வேலையை நம் மூளை கிரகிக்கும்போது, ஹிப்போகேம்பஸ் என்ற பகுதி முன் அனுபவங்கள், முன்பு பெற்ற தகவல்களை முன்னெடுத்து, சமீபத்தில் பெற்ற தகவல்களோடு ஒப்பிட்டுப் பார்க்கிறது. புரிதல், அறிதல், புரிதலின் வேறு பரிணாமங்கள்,  முன்பு தவறாகப் புரிந்ததினை, அல்லது தற்போது தவறாக வரும் தகவல்களை இவ்வொன்றையும், மூளை படுவேகமாக கிரகித்து எதிர்வினையாற்ற முயல்கிறது.

ஆனால் மூளை என்பது ஒரு சோம்பேறி. எத்தனை குறைவான ஆற்றல் செலவிட்டு, அதிகமாக பலன்கிடைக்கும் ? என்ற கணக்கிலேயே எப்போதும் அது இருக்கும். எனவே பல சமிக்ஞைகள் ஒரே நேரத்தில் கிடைத்தால், தானியங்கு நிலையில் எத்தனை பணிகளைச் செய்ய முடியுமென தீர்மானித்து, அந்தந்தப் பகுதிக்கு அனுப்பி வைக்கும். இயல்பாக காபி டம்பளரை எடுத்தபடியே மில்லியன் டாலர் ப்ரச்சனைகளை அலசுபவர்களுக்குக், கை செய்யும் வேலை பற்றிய கவனம் அதிகமிருக்காது. சிலர் போனில் பேசும்போது, காகித்த்தில் ஏதோ வரைந்தபடியே இருப்பார்கள். அல்லது தலைக்கு மேல் கையைத் தூக்கி, நெற்றியை வருடியபடி.. இந்த ஆக்க நிலை அனிச்சைச் செயலை மூளை தானியங்கி நிலைக்குத் தள்ளி விடுகிறது.

எல்லாச் செயலையும் இப்படி மூளையால் அனிச்சைச் செயலுக்குத் தள்ள முடியாது. உணர்வும், மூளையின் சில பகுதிகளும் கவனத்தினை அதிகம் கையாள வேண்டியிருக்கிறது.

உதாரணமாக,  ஒருவரை ஒரு போன் உரையாடலின் போது,  நாலிலக்க எண்கள் இரண்டைப் பெருக்கிக் காட்டச் சொல்லுங்கள். மிகக் கடினம்.

சமையலறையில், பொருட்களைத் தேடும்போது, இந்தப் பெருக்கலோ, கூட்டலோ கடினம். ‘இருடா, வேலைல இருக்கேன்லஎன்று பதில் வரும். அதேநேரம், உப்புமாவுக்கு ரவை வறுத்துக்கொண்டிருக்கையில், மூளையால் இந்தப் பெருக்கலைப் போட்டுவிட முடியும். மூளை, ஆக்க நிலை அனிச்சைச் செயலாக, ஒரு தானியங்கி நிலையில் கைகளை, வாணலியில் வேலை பார்க்க விட்டுவிடுகிறது. தேடும்போது, கவனம் வேண்டியிருக்கிறது. காண்பதை கிரகித்து, முன் நினவுகளின் தகவல்நிலையில்,அந்தப்பொருளைப் பொருத்திப்பார்த்துஇதுதான்/ இது இல்லைஎன்று சொல்லவேண்டியிருக்கிறது. இதற்கு மூளைக்கு கவனம், ஆற்றல் குவியம் தேவைப்படுகிறது. எனவே பெருக்கல் அந்த நேரத்தில் இயலாத ஒன்று.

இதனை கானேமான்சிஸ்டம் 1 மற்றும் சிஸ்டம் 2ன் வேலைத்திறன்என்பதாகத் தனது நூலில் குறிப்பிட்டார். எதனை சிஸ்டம் 1க்குத் தரவேண்டும், எதனை 2க்குத் தரவேண்டுமென்பதை சிறுபாலர்கள் அறியமாட்டார்கள். அவர்களது மூளை இந்தப் பதப்படுத்தலில் இன்னும் ஈடுபடாத நிலையில், சிஸ்டம் ஒன்றிலிருந்தே பதில் சொல்ல எத்தனிப்பார்கள்.  எனவே, கேள்வி கேட்டால், டக்கென தவறாகப் பதில் சொல்லும்போது, “அவசரக் குடுக்கை, நல்லா யோசிச்சுப் பதில் சொல்லுஎன்றெல்லாம் சொல்லவேண்டியிருக்கிறது. இது அவர்களது மூளை பல்திறம்பட்ட வேலைகளில் ஒரே நேரத்தில் ஈடுபட எத்தனிப்பதால் வருவது மட்டுமல்ல; அவர்களுக்குத் தூண்டும்பொருளின் ஆழம் புரியாத்தால், எந்த நிலையிலிருந்து பதில் சொல்லவேண்டுமெனத் தெரியாத்தில் வரும் குழப்பம்.

அனுபவம் பெற்ற பின்னும் இது தொடர்வதற்குக்க் காரணங்கள் இரண்டு.

1. எதிர்வினையாற்ற வேண்டிய பதட்டம், அழுத்தம், உணர்வுக் கொந்தளிப்பு, நம்மை ‘child’ மனநிலையிலிருந்து பதில் சொல்ல வைக்கிறது. இந்த அநிலையில் கேள்விகளை உள்வாங்கி, சரியாகப் புரிந்து, பகுத்தாய்ந்து, நிலைத்தகவல்களிலிருந்து தகவலைத் தேடி, பொருத்திப் பார்த்து,நிலமைக்குத்தக்கவாறு எதிர்வினையாற்றும் முதிர்வு அந்த நேரத்தில், சைல்ட் மன நிலைப்பாங்கால் மழுங்கடிக்கப் படுகிறது. இது உணர்வு பூர்வமான மன நிலை எதிர்வினை. இது பற்றி விரிவாகப் பின் ஆராய்வோம். 

2. பல்திறம்பட்ட செயலாற்றம்.  ஒரே நேரத்தில் பலதரப்பட்ட வேலைகளில் மூளை ஈடுபடும்போது, அது குவியத்துடன் ஆற்ற வேண்டிய வேலை ஒன்றினை மட்டுமே முக்கியமாக ஏற்றுக்கொண்டு, பிறவற்றைத் தானியங்கி நிலையில் தள்ளிவிட எத்தனிப்பதை சற்று முன் கவனித்தோம்.  எனவே, ஒரு நேரத்தில் ஒரு வேலையை மட்டுமே மூளையால், குவியத்துடன், உணர்வுடன் ஒருங்கிணைந்து செயலாற்ற முடியும். ஒரே நேரத்தில் குவியம், உணர்வு வேண்டிய பலவேலைகள் வரும்பொழுது, மூளை சிலவற்றைக் கவனத்திலிருந்து கழற்றி விட்டுவிடுகிறது. இதன் விளவு, தோல்விகள், ஏமாற்றம், கோபம். இயலாமை உணர்வு.

ஒரே நேரத்தில் பல வேலைகள் வரும்போது, நாமே தன்னுணர்வுடன் எதனை முக்கியமாக, உடனுக்குடன் செய்யவேண்டிது? எனத் தீர்மானித்து, ஒரு பட்டியலிடுவது நன்று. அடுத்தடுத்த சவாலான வேலைகளை, மூளை தானே நினைவிலிருந்து மறக்கச் செய்கிறது. எனவேதான், பட்டியலிடுவது அவசியம்.

பல் வேலைகள் வரும்போது, அவற்றின் முக்கியத்தின், அவசியத்தின் அடிப்படையில் பட்டியலிட்டுச் செயலாற்ற முனைவது, நேரா யோசிப்பதின் ஒரு இன்றியமையாத அங்கம்.

Reference:


Sunday, March 25, 2018

குரு


காலை 8.55.  சாரதி இன்னும் வரவில்லை. அதுவே சரியான சகுனமில்லை. மீட்டிங் 9மணிக்குத் தொடங்க வேண்டுமென்றால் 8.45க்கு  அங்கு இருப்பார்.

9 மணிக்கு  உள்ளே வரும்போதேரோஹன்என்றார். அவன் எழுந்து நிற்குமுன்நொய்டா சந்திராவோட கம்பெனிக்கு ஒரு ஆர்டர் கிடைச்சிருக்காமே? ஏன் உன் ரிப்போர்ட்ல இல்ல?”

ரோஹன் உதடு உலர்ந்தான். எது வேண்டுமானாலும் மன்னிக்கப்படலாம். சந்திராவின் கம்பெனிக்கு ஆர்டர் போனது மன்னிக்க முடியாத குற்றம். அது தெரியாமலிருப்பது தூக்குத் தண்டனை விதிக்கக்கூடிய அளவிலானது.

சந்திரா என்ற சந்திரசேகர், எங்கள் கம்பெனியிலிருந்து விலகிப் போய்ப் போட்டிக்கம்பெனி ஆரம்பித்து இருவருடங்களாகிவிட்டது. அதுவும் எங்கள் வாடிக்கையாளர்களையே குறிவைத்துப் புது மென்பொருள் விற்பது, நிறுவுவது, சேவை தருவது என்பதில் முனைப்பாக இருந்தார். ஒரு உட்பூசலில், ஒரே மணி நேரத்தில் வெளியேறியவர் எப்படி இரு மாதத்தில் ஒரு கம்பெனியை முழுமூச்சாகக் கொண்டு வந்தார்? என்பது புதிராகவும் அச்சமாகவும் இருந்தது.

இதெல்லாம் கவலைப்படாமல் சாரதி , ஒவ்வொரு பிரச்சனைக்கும் மகாபாரதம், இராமாயணம் என்பதிலிருந்து மேற்கோள் காட்டி, ஆலோசனை சொல்லுவார். போரடித்து நிற்போம். இப்போதைக்கு, கம்பெனிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல், அவரது அடுத்த நிலையிலிருந்து வெளியேறி இருக்கும் சந்திரா. போகும்போதேஇந்த கம்பெனியையும், அந்த ஆன்மீக சொற்பொழிவாளரையையும் மார்க்கெட்லேர்ந்து வெளியேற்றி விட்டுத்தான் வேறவேலைஎன்று சூளுரைத்துப் போயிருந்தார். அதன்படியே நடக்கவும் செய்கிறார்.

 சந்திரா நம்முடைய விலையை விட 10% குறைத்துக் கொடுக்கிறார். நாம இன்னும். 20% குறைத்து விற்றால் ஆர்டர் கிடைக்கும்என்றான் ரோஹன்.

இன்னும் 10 % குறைத்தாலே, நமது லாபங்களில் அடிவிழும். லாபமில்லாம விற்பது தற்கொலைக்குச் சமம். நம்மை நம்பி இருக்கிறவங்க வேலை போகும். அது கொலைக்குச் சமம்.  வேற ஐடியா இருந்தா சொல்லுங்க

ரோஹன் கைகளை இயலாமையில் விரித்தான். சாரதி போர்டில் இந்திய வரைபடத்தின் எல்லைக்கோடுகளை வரைந்தார். ”இங்க சொல்லுங்க. நம்ம வாடிக்கையாளர்கள் எங்கெங்க இருக்காங்க?”

நாங்கள் சொல்லச்சொல்ல அவர் புள்ளி வைத்துக்கொண்டே வந்தார். “ ஆக, மேற்கு, வடக்குல கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருக்கோம். இப்ப , சந்திராவின் ஆர்டர்கள் கிடைத்திருக்கும் இடங்களைச் சொல்லுங்க.” புள்ளி வைத்ததும் சற்றே விலகி நின்றார்

வடக்கே நொய்டா, கிழக்கே அஸ்ஸாம், கொஞ்சம் மேற்குப்பக்கம், நம்ம கஸ்டமரையே அடிச்சு எடுத்தது.. இதுதவிர ஒரு பொதுத்தனம் ரெண்டு கம்பெனிக்கும் தெரியுதா?”
சிவஞானம்தெற்கே நாமளும் வீக், அவனும் வீக்என்றார்.

எக்ஸாக்ட்லி! ஆர்ட் ஆஃப் வார்’- சன் ஸூ ( Sun Tzu) சொல்றான்உன்னை அறியும் அதே அளவு எதிரியை அறிந்துகொள்.” இப்ப ரெண்டு இடத்துல புது ப்ராஜெக்ட் வருது. கொச்சி, குவஹாத்தி. ரெண்டு இடத்துலயும் பாத்தா, நாமும் அவனும் பலத்துல சரியாக இருக்கறது தெற்கே மட்டும்தான். கிழக்குல அவன் ஸ்ட்ராங். அந்த டெண்டர் நாம பங்கெடுக்க வேண்டாம்

ஏன்? ‘ என்றார் கல்கத்தா ப்ராஞ்ச் மேனேஜர் முகர்ஜீ கொதித்தெழுந்துஎங்களுக்கு ஒரு ஆர்டரும் வரலை. இந்த டென்டருக்கு நீங்க ஒத்துழைக்கணும், சாரதி ஜி

முகர்ஜீஎன்றார் சாரதிசன் ஸூ சொல்றான், ”எங்கு நீ 10 பேரும் எதிரி 1000 பேரும் இருக்கிறீர்களோ,அங்கு போர்செய்யாது விலகிவிடவேண்டும்; எங்கு நீயும் அவனும் சமபலத்துடன் இருக்கிறீர்களோ, அங்கு அவனை தந்திரமாக வளைத்து தாக்க வேண்டும்; எங்கு நீ பலத்தில் அதிகமிருக்கிறாயோ, அங்கு அவனை முழுதும் அழிக்க வேண்டும்.” நாம் கிழக்கில் பலவீனர்கள். நமது பலத்தைத் தெற்கே கூட்டி அங்கு அடிப்போம்.”

தொடங்கிட்டான்யாஎன்று முணுமுணுத்தார் முகர்ஜீ.

எனக்கு ஒன்று உறுத்திக்கொண்டே இருந்தது. அகமதாபாத், பரோடா, சண்டிகார்.. எத்தனை ஆர்டர்களில், நம்மை எடுத்துவிட்டு, மிகக்குறைந்த விலையில் சேவை ஆர்டர்களை சந்திரா எடுத்திருக்கிறான்? ஒரு மூச்சுப் பேச்சில்லை, அது குறித்து..

இருநாட்களில் கொச்சி ஆர்டர் சந்திராவுக்குச் சென்றதாகத் தகவல் கிடைத்தது. சாரதியின் கேபினில் அனைவரும் கூடினோம்.

ஆட்களின் தேவை அதிகம் இருக்கு சந்திராவுக்கு. புதுசா 20 பேர் பணியில் எடுத்திருக்கிறார். டெல்லி, கவுஹாத்தி..” என்றார் மனித வள அதிகாரி கோம்ஸ்.

கூட்டுறவு வங்கி ஒன்றில் 4கோடி கடன் எடுத்திருக்கிறார்சாரதி சற்றே தலை நிமிர்ந்தார். ” எந்த வங்கி? “ விவரத்தைச் சேகரிக்கச் சொன்னார். கடுப்பானேன். இது முக்கியமா இப்போ?

 கோம்ஸ், எத்தனை பேர், எந்த மாசம், வருஷம் சேர்ந்திருக்கிறார்கள்?”

கோம்ஸ் கொடுத்த விவரப்படி ,சாரதி ஒரு காகிதத்தில் கிராஃப் வரைந்தார்.

மொத்த ஆட்கள், போன வருசம் மார்ச்ல 20, மே – 35, ஜூன் – 45 – மிக அதிகமாக ஆளெடுத்த மாதங்கள். “ஆனா இதே நேரம் அவனது புது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.”

தெரியும்மனதுக்குள் சொல்லிக்கொண்டேன்அந்த நேரம்தான் நீங்கள் முட்டாள்தனமாக மும்பை, சண்டிகார், அகமதாபாத் ஆர்டர்களை இழந்தீர்கள் சாரதி. மஹாபாரதமும், இராமாயணமும் சோறுபோடாது. வேலை பார்க்கணும்

நன்றாகக் கவனியுங்கள்என்றார் சாரதி . ஆட்கள் பலம் Y அச்சிலும், காலத்தை Xஅச்சிலும் இட்டு, ஒரு கிராஃப் வரைந்தால், அவன் பலம் சீராக கூடி வளர்ந்திருக்கிறது..

இது ரொம்ப முக்கியம்என்றேன் மனதுள். எப்ப இந்த சாரதி போகிறாரோ அப்போதான் கம்பெனி உருப்படும்.

குரியாக்கோஸ்சாரதி அழைத்தார்,அந்த கிளையண்ட்டுகிட்டே, நாங்க 15 நாளில வேலையை ஆரம்பிக்கறோம். சந்திராவோட விலைக்கு 5 % மட்டுமே அதிகமா இருக்கோம்என்று சொல்லுங்கள்

குரியாக்கோஸ் முழி பிதுங்கினார்ரெண்டு பேர்தான் கொச்சியில இருக்காங்க சார். நாம எப்படி அந்த ப்ராஜெக்ட்ல? குறைஞ்சது 20 பேர் வேணும்.”

தெரியும்என்றார்  சுருக்கமாக. “நான் நாளைக்கு ப்ளைட் பிடிச்சு வர்றேன். அந்தக் கம்பெனி டைரக்டர்கிட்ட எனக்கு அப்பாயிண்ட்மெண்ட் வாங்குங்க

சந்திரா அங்கும் முந்தினார். இன்னும் 20% விலைகுறைத்து ஆர்டரை எடுத்தார். இரு மாதங்களின் பின் சாரதியின் அறையில் கூடினோம்.

சார், ஒரு தகவல்என்றார் மனிதவள மேலாளர்.  நொய்டா, குவஹாத்தியிலிருந்து கொச்சி கம்பெனிக்கு ஆட்களை அனுப்புகிறார் சந்திரா. வேலை சங்கனாச்சேரியில். நிறைய ஆட்கள் நமது கம்பெனியில் வேலைக்கு அப்ளை செய்திருக்கிறார்கள்

சாரதி புன்னகைத்தார்வடக்கு,கிழக்கு மாநிலத்தவருக்குக் கேரளா உணவு ஒத்துக்கொள்ளாது. கல்ச்சர் வேறுபாடு அதிகம். மொழி ப்ரச்சனை. ஒரு வாரத்தில் எத்தனை பேரை அப்படி கொச்சிக்கு அனுப்பிருக்கான்?”

”15 பேர். மொத்தம் இருவது பேர் அந்தப்ப்ராஜெக்டுக்கு வேண்டும்

சாரதி எழுந்தார். ”இப்போ கிராஃப் வரைவோம். ஒரு வார காலத்தில் 15 பேர்.” திடீரென , அந்த் கிராஃபில் கோடு எழுந்திருந்தது.

இதற்கு முன் கோடுகள் சாய்நிலையில் மெல்ல மெல்ல உயர்ந்திருந்தன. பலத்தை அவன் வெளியிலிருந்து கூட்டுகிறான் என்பது தெளிவு. பணபலம்- அந்த வங்கி, ஆட்கள் சேர்த்தல் - அவனது முதலீடு. அந்த நிலையில் அவனது போர் ஆற்றல் அதிகம்.

இப்போது திடீரென பலம் உயர்வது வெளியிலிருந்து வரும் உதவியில்லை. வேலை அழுத்தத்தினால், தனது பலத்தையே ஒரு இடத்தில், ஒரு காலத்தில் திரட்டுகிறான். இது  அவனால் பல நாள் நின்று தாக்கிச் சமாளிக்கக் கூடிய வலிமையல்ல.”

சாரதி , கொச்சியை அழைப்பார் என எதிர்பார்த்தேன். சண்டிகார், குவஹாத்தியில் சந்திராவின் கஸ்டமர்களைத் தொடர்பு கொண்டார்உங்கள் வேலை நின்றுவிட்டதா? அடடா! கவலைப்படாதீர்கள். நாங்கள் செய்து தருகிறோம். என்ன, அவனுக்குக் கொடுத்ததை விட 5% அதிகம் தந்தால் போதும். அட, நாளைக்கே தொடங்குகிறேன். குவ்ஹாத்திக்கு மட்டும் ஒரு வாரம் கொடுங்க

 கோம்ஸ், அந்தக் கம்பெனியில் அஸ்ஸாம், டில்லிலேர்ந்து எவனெல்லாம் அப்ளை பண்ணியிருக்கானோ,  அதே இடத்துல  வேலைக்கு எடுங்க. ஒரு வருஷம் பாண்ட் எழுதி வாங்கிருங்க

ஒருவாரம் கழித்துகொச்சியில, சந்திராவோட ஆர்டரைக் கேன்ஸல் பண்ணி நமக்குக் தர்றாங்க. நான் மறுத்துவிட்டேன். தெற்கே ஆளில்லைஎன்றார் சாரதி.

அப்புறம் ஏன் கொச்சிக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுத்தீர்கள்?” என்றேன்.

அது மாரீசன். மாயமான். குவஹாத்தியை விட்டு நாம அங்க போறோம்னதும், துரத்திக்கொண்டே வந்து ஏமாந்தான் சந்திரா. கொச்சியை நான் எப்பவுமே கணக்கில் எடுக்கவில்லை. குவஹாத்தி,டெல்லி நமது பலம். தெற்கே மெல்லப் போவோம்என்றார் சாரதி.

மதியம் இருவரும் உலாவச் சென்றோம். “சந்திரா திவாலாகிவிட்டான்என்றார் சாரதிசொத்து முழுதும் போய்விட்டது. கம்பெனிகள் அவன் மீது வழக்குத் தொடர்ந்திருக்கின்றன

சற்றே பெருமூச்செறிந்தார்என் தம்பி மாதிரி அவனை கம்பெனியில வளர்த்தேன். கொஞ்சம் நிதானமாக நடந்திருந்தால் என் போஸ்ட்டுக்கு இப்ப வந்திருப்பான்.”

நீங்க கம்பெனி விசுவாசம் பாத்தீங்க. அடிச்சுப்போட்டு, இப்ப  அழறீங்க?” என்றேன்.

ஆம்என்றார் சாரதிஇது அர்ஜூன்னும் பீஷ்மரும் எதிரெதிரே போரிட வந்த துர்ப்பாக்கிய நிலை. நான் அவனை அடிக்கக் காலம் தாழ்த்திய்தை நீங்கள் நகையாடினீர்கள். தெரியும்.. எப்போது ஒருவனுக்கு திடீரென வலிமை திரள்கிறதோ, அது அவனது உள்வலிமையாக மட்டுமே இருக்க முடியும். அந்த நேரத்தில் அவனை அடித்தால் , அவன் மீண்டெழுவது கடினம்.

லக்ஷ்மணனும், இந்திரஜித்தும் கடுமையாகப் போரிடுகின்றனர்.  இந்திரஜீத்தின் ,ஆயிரம் குதிரைகள் கொண்ட தேர் சிதைபடுகிறது.  அவன் தேர்ப்ப்பாகனை லக்ஷ்மணன் கொல்கிறான்.   இந்திரஜித்தின் கை வெட்டுப் படுகிறது.

திடீரென இந்திரஜித் அனைத்து சக்தியும் ஒருங்கிணைத்து எழுகிறான். லட்சுமணன் அந்த கோலத்தைக் காண்கிறான். ’இவன் தலையைக் கொய்யும் காலம் இதுவேஎன ஒரு சக்திவாய்ந்த அம்பினை அவன் தலைமீது எய்கிறான்.  

காற்று என, உரும் ஏறு என்ன, கனல் என, கடை நாள் உற்ற
கூற்றம் ஓர் சூலம் கொண்டு குறுகியது என்ன, கொல்வான்
தோற்றினான்; அதனைக் காணா, 'இனி, தலை துணிக்கும் காலம்
ஏற்றது' என்று, அயோத்தி வேந்தற்கு இளையவன் இதனைச் செய்தான்

இதுவே தகுந்த தருணமென அவனுக்குத் தோன்றியதன் காரணம், திடீரென சக்திகொண்டு எதிரி எழுந்ததுதான். லட்சுமணன் போர் உத்திகளில் விற்பன்னன். இந்த நிகழ்வில் அவன் முடிவு செய்துவிடுகிறான்.

எப்போ, கொச்சிக்க்கு , மற்ற இடங்களிலேர்ந்து ஆட்களை அனுப்பினானோ, அப்போ சந்திரா  இறுதிக்கட்டத்துக்கு வந்துவிட்டான் என்பதை அறிந்தேன். அவனது மற்ற சக்தி இருப்பிடங்களை நம் வசமாக்கினேன்.

இராமாயணமும், மகாபாரதமும் எத்தனையோ சொல்லிக்கொடுக்கின்றன. நாம்தான் கவனிப்பதில்லைசொல்லிக்கொண்டே வந்தவர் , செல்போன் அடிக்க , எடுத்து விலகி நடந்தார்.

சற்று தொலைவில் அவர் பேசுவது கேட்டதுகாயத்ரி, அழாதே. மங்களூர் நல்ல ஊர்தான். சந்திரா, கடும் உழைப்பாளி. முன்னேறிவிடுவான். கொஞ்சம் பொறுமையாக இரு. என் தங்கைதான் சரஸ்வதி வித்யாலயாவின் ஹெட் மிஸ்ட்ட்ரஸ்.  உன் குழந்தைகளுக்கு அங்கே ஸீட் சொல்லியிருக்கேன். நீ புத்திசாலி. சமாளித்துவிடுவாய் டீச்சர் வேலைக்குப் போவியா? சொல்லட்டுமா?”

”….”

அவனை எதிர்ப்பது என்  தொழில் தருமம், காயத்ரி. துரோணனோ, பீஷ்மனோ அர்ஜூனனை நோக்கி விட்ட அம்புகளிலும் அன்பு இருந்தது.இல்லேன்னா, அம்புப்படுக்கைல இருந்தும் பீஷ்மன் ,எப்படி ஆட்சி நடத்தணும்னு, தருமனுக்கு அறிவுரை சொல்லுவானா?”

சாரதியை அன்றுமுதல் வித்தியாசமாகப் பார்க்கத் தொடங்கினேன்.

பி.கு : வரைபடங்கள் எடுத்துக்காட்டுக்கு மட்டுமே. இவை இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை.