Saturday, March 24, 2018

மூவண்ணக்கொடியும் அம்மாவும்

கல்கத்தா விமானதளத்தில் அதிகாலையிலேயே பாதுகாப்பு சோதனையில் நின்றிருந்த எனது போர்டிங் பாஸைப் பார்த்து, “ நீங்க ரொம்ப சீக்கிரமே வந்துட்டீங்க, சர்ஜீ” என்ற காவலரின் சொல் மிகவும் மகிழ்வித்தது.

”நன்றி “ என்றேன் பல்லெல்லாம் காட்டி. “நான் ரொம்ப பங்க்சுவல் ஜீ. கடைசி நிமிடத்தில் ஓடுவது பிடிக்காது. இப்படித்தான் பெங்களூர்ல ஒருதடவ…”

அவர் கையை உயர்த்தித் தடுத்தார் “ ரொம்ப சீக்கிரம் என்றால், ஒரு மாசம் முன்னாடியே வந்திருக்கீங்க. உங்க போர்டிங் 24 ஏப்ரல் 2018க்கு உள்ளது. எப்படி ப்ரிண்ட் பண்ணீங்க? எப்படி உள்ள விட்டான்?” கடுப்புடன், அவரது சீனியரை அழைக்க, அவர் என்னைக் கோபத்துடன் முறைத்தார்.

“மன்னிக்கணும்” என்றேன் வெலவெலத்து. ”நானும் பார்க்கவில்லை.வீணாப்போன அந்த அமெரிக்கன் எக்ஸ்ப்ரஸ் ட்ராவல் சர்வீஸ் பையன் அன்று குடித்திருந்தானோ என்னவோ”
என்ற எனது புலம்பலையெல்லாம்  அவர் கண்டுகொள்ளாமல், திருப்பியனுப்புவதில் குறியாக இருந்தார்.

கோ இண்டிகோவின் பெரிய வட்ட முக, மஞ்சள் அழகி தேப்ஜானி என்பவள், முகத்திற்கும் பெரியதான உருண்டை விழிகளை அகல விரித்து “ஓ! சர்ஜீ, நீங்கள் ஏர்ப்போர்ட்டிற்கு வெளியே போய், கவுண்ட்டரில் அடுத்த டிக்கட் வாங்கி வரவேண்டும்” என்றபடி மிகப்பதவிசாக வாசல் வரை அழைத்துவந்து “ அஷோக், அவங்களை வெளிய தள்ளி, கதவை மூடு” என்ற காதலிக்க நேரமில்லை வசனம்போல எதோ பெங்காலியில் வாசற்காப்போன்களுக்குச் சொல்லி, புன்னகையுடன் வெளியே தள்ளினாள்.

அதென்னமோ, கோ இண்டிகோ விமானப் பணிப்பெண்கள் என்ன சொல்வதாயிருந்தாலும், ஒரு புறங்கையைத் தங்கள் பின்புறம் வைத்துக்கொண்டேதான் பேசுகிறார்கள். என்ன பழக்கமோ போ…
 அமெரிக்கன் எக்ஸ்ப்ரெஸ்ஸில் ஒரு சுனில் அடுத்த விமானத்தைத்திற்கு சீட்டு பிடிக்க முயன்றுகொண்டிருக்கையில், எனது அபிமானக் காட்சியை மீண்டும் கண்டேன்.

தகதகவென மின்னும் சூரியப் பொற்கதிர்களில், மிகப் பெரிய தேசியக்கொடி காற்றில் மெல்ல அசைந்துகொண்டிருப்பது எங்கும் அழகு என்றாலும், கல்கத்தா ஏர்ப்போர்ட்டில் அதன் அழகு, கம்பீரம் தனி.  ”ஓங்கி வளர்ந்ததோர் கம்பம், அதன் உச்சியிலே வந்தே மாதரமென்றே…”

முதுகில் யாரோ தட்டுவது போலுணர்ந்து திரும்பினேன். என் வயதிருக்கும் ஒருவர் புன்னகையுடன் நின்றிருந்தார். “உங்கள் போன் மணி அடித்துக்கொண்டிருக்கிறது.”

சுனில்தான். “ ஜெட் ஏர்வேஸ் 8 மணிக்கு.. பி என் ஆர் நம்பர் நோட் பண்ணிக்கோங்க, ஆல்ஃபா, காமா, ரோமியோ…”

உள்ளே மீண்டும் நுழைந்து, செக்யூரிட்டி கடந்து , மேலேறி, லவுஞ்சில் அமர்ந்திருக்கையில், அருகில் அதே நபர். “ஹலோ” என்றார் புன்னகைத்து. ”நான் டெல்லி செல்கிறேன். ஜானகிராமன்”

பேசிக்கொண்டிருக்கையில், திடீரெனப் பேச்சு தாய் பற்றித் திரும்பியது. “டெக்ஸாஸ்ல பதினைஞ்சு வருஷம் இருந்தேன். அம்மா தனியா சென்னைல இருந்தா. உடம்பு முடியலை. பாத்துக்க ஆளெல்லாம் வேணாம். நானே வர்றேன்னு வந்துட்டேன்” ஜானகிராமனும் மனைவியும் சென்னையில். மகள் டெக்ஸாஸில் படிக்கிறாள்.

“வேலை?” ‘இல்லை” என்றார் “தேடிக்கொண்டிருக்கிறேன். இல்லாவிட்டாலும், சமாளித்துவிடுவோம் சார். என்ன காலேல ரெண்டு இட்லி, மத்யானம் ஒரு பிடிச்சபிடி சாதம். ராத்திரிக்கு ஒரு கரண்டி தயிர்சாதம். போறும்”

“நீங்க திருநெல்வேலியா?” என்றேன். “அம்மா திருநெல்வேலிப்பக்கம். ஏன்?”

“இல்ல, இந்த பிடிச்சபிடி அரிசி என்பதெல்லாம் என் அம்மா சொல்லுவாள்”

சிரித்தார் ‘ நாம் எல்லாரும் ஒரே மொழியில் ,வித்தியாசமாகப் பேசுகிறோம்  இல்லையா? We speak in same language, differently.  அதுதான் தாய்மொழி என்கிறார்கள் போலும். தமிழ் என்பதை விடத் தூக்கலாகத் தாயின் மொழிச்சாயல்தான் நம்மில் ஏறியிருக்கிறது”
“உண்மை”என்றேன். அதான் ’தாயின்’ மணிக்கொடி பாரீர் என்றான் பாரதி. எல்லாருக்கும் கொடி ஒன்றுதான் என்றாலும், நான் பார்க்கிற கொடி, என் தாயின் மணிக்கொடி .அது தனி. என் கண்ணினால் நோக்கக் காணீர்…

”ஓ! அந்த கொடியைத்தான் பார்த்து நின்றிருந்தீர்களா? நான் ஏதோ சிந்தனை வயப்பட்டிருக்கிறீர்கள் என நினைத்தேன்”

“அது தாயின் மணிக்கொடி” என்றேன். எத்தனையோ இடங்களில் அதே கொடியைப் பார்த்திருப்போம். ஆனால் சில இடங்களில், சில தருணங்களில் அது அலாதி என்றேன்.

“புரியலை” என்றார் “ கொடி எல்லா இடத்திலும் ஒரே அளவு , ஒரே உயரமான கம்பத்தில்தான் பறக்கிறது. அதில் மும்பை, சென்னை ,கல்கத்தா என எப்படி பிரியத்தில் தரம் பிரிக்கிறீர்கள்?”

“இப்படிப் பார்ப்போம் “ என்றேன் “ உங்கள் மகள் சிறியவளாக இருக்கையில் அம்மாவின் உடை பற்றி எதாவது சொல்லுவாளா?”

“ம்..” யோசித்தார் “ அவ சொன்னதில்லை. நான் சொல்லியிருக்கேன். அம்மா ஒரு பச்சைக்கலர் புடவை வைத்திருந்தாள். கோபுரம் கோபுரமா அதில் டிசைன் போட்டிருக்கும். அதில் மிக அழகாக இருப்பாள். வெளிய போனா  அம்மா அதைத்தான் கட்டணும்னு அடம் பிடிப்பேன். ” சிரித்தார் “ அம்மாவுக்கு வெளியே போகணும்னா,அது யூனிஃபார்ம் மாதிரி ஆகிப்போனது. எல்லாக் கலியாணத்தீலேயும் ‘விஜயா, இன்னிக்கும் அதே பச்சைப் புடவைதானா? ஏண்டி உம் பிள்ளை இப்படி அடம்பிடிக்கறது?” என்பார்கள் பெரியவர்கள்!”

”அம்மா எந்தப்புடவையிலும் அழகாத்தான் இருப்பாள். ஆனா அந்தப் பச்சைப்புடவை,கோபுரஙக்ள் நிறைந்தது… அதில் இன்னும் அழகு இல்லையா? அதுபோலத்தான், எல்லா ஊர்லயும் கொடி அழகு. இந்த கல்கத்தா விமான நிலையத்தில் அதிகாலை சூரியனில் அதீத அழகு”

அவர் சற்றே திகைப்புடன் பார்த்தார். “  You have reminded me of my mother … of those days” என்றவர் சட்டென திரும்பி,  டிஷ்யுவில் கண் துடைத்தார். அழுவது தெரியாமலிருக்க, வேகமாக மூக்கைச் சிந்தினார். “ஸாரி எனக்கு இது அலர்ஜி”  எது அலர்ஜி? என்பது சொல்வதற்கு அங்குமிங்கும் நோக்கினார்.

அம்மாக்களின் நினைவு என்பது ஆண்களை அசைத்துவிடும் வலிமை கொண்டது. அதுவும் அந்தப்  பச்சைப் புடவை, அந்த கோபிப் பொட்டு, சின்ன மூக்குத்தி, ,நம்  சிறு நெஞ்சைத் தட்டியவாறே மெலிதான குரலில் “ ஆத்மா ராமா, அனந்த சயனா” தாலாட்டுப் பாடல்கள்… ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனி, பெர்ஸனல் அம்மா.. பெர்ஸனல் கடவுள் , இஷ்ட தேவதை என்பதுபோல்.

மவுனமாக எழுந்து, இல்லாத ஃபில்டர் காபியைத் தேடப்போனேன். ஆண்களுக்குப் பிற ஆண்கள் அழுவதைப் பார்ப்பது தர்மசங்கடம்.

அவருக்கும் சரி, எனக்கும் சரி.

No comments:

Post a Comment